Share

Jun 27, 2012

தி,ஜா பிறந்த நாள் -ஜூன் 28

” மலர் மஞ்சம்” நாவலில் தி.ஜானகிராமன்

- சமுத்திரத்தை எத்தினி நேரம் உட்கார்ந்து பாத்துக்கிட்டிருந்தாலும் அலுக்காது.சூரியோதயம், அஸ்தமனம்,தூரத்து மலை இதுங்களையும் எத்தினி  நேரமானாலும் உக்காந்து பார்த்துக்கிட்டேயிருக்கலாம். நினைவு, மனசிலே ஓட்டம், அசைவு- ஒண்ணுமேயில்லாம சூன்யமா, நிம்மதியா இருக்கும்.

- அவ்வளவு நறுக்குத் தெறிச்சாப்பல,நம்ம இஷ்டப்படி நம்ம ஜன்மம் அமைஞ்சதுன்னா அப்புறம் பிறவியெடுத்ததுக்கு என்ன தான் அழகு இருக்கு?..

-நம்மை நாமே தான் தேத்திக்க முடியும், உசத்திக்க முடியும். நமக்கு நாமே தான் காவல்,பலம் எல்லாம்

-பூஜை அலமாரிக்கு முன் குத்து விளக்குச் சொர்ணச்சுடருடன் நிச்சலமாகக் கை கூப்பிக்கொண்ட்டிருந்தது.

-நிசப்தமாயிருந்தது.கடல் அலை மட்டும் அந்த மௌனத்தின் மீது ஏறி மோதி, கலைந்து விழும் ஓசை கேட்டுக்கொண்டிருந்தது.

- திடீரென்று இழைகிற சிநேகம் எல்லாம் இப்படித் தான் திடீர் என்று அறுந்து விடும் போலிருக்கிறது.அரை மணியில் வெந்து, அரை நாளில் ஊசிப் போகிற சமையல் மாதிரி தான் விறுவிறுவென்று நெருங்குகிற நட்பு.

- கோயில் மணியோசை எழுந்து வானத்தில் தங்க மேகமாகப் போய் வடிந்து தொங்குவது போலிருந்தது.

- அந்த ஆனந்தம் நெஞ்சின் திடத்தை உடைத்துக்கொண்டு,தழதழப்பாக நெகிழ்ந்தது.

-மனசு எங்கோ போய் தொலைவில் நின்று மேய்ந்துகொண்டிருந்தது.

- நல்லதுக்கு எத்தனையோ முகம் உண்டு. ஒண்ணு தான் நல்லதுன்னு யார் சொல்லமுடியும்? அந்த மாதிரி ஏதோ சிலதுங்க தான் நல்லதுன்னு நாலு ஆசாரங்க சேந்து கத்திப்பிடுத்து. அதுகளுக்கு செல்வாக்கு இருந்துது.செலாவணி இருந்துது.மத்ததெல்லாம் கெட்டதுன்னு பேர் கட்டிப்பிடுத்து...அதுங்களுக்கு பயந்துகிட்டிருந்தா நாம இப்படியே குட்டையிலே அளுக வேண்டியது தான்.

- போய் பத்து பேருக்கு நடுவிலே ஆடனுமா என்ன ?  வீட்டுக்குள்ர சாமி கதவைத் திறந்து வச்சிட்டு தனியா ஆடினாலே போதும். சாமி கதவைக் கூடத் திறக்க வேணாம். சும்மா ஆடினாலே போதும். என்னைக் கேட்டா ஆடக்கூட வாண்டாம். ஆடறாப்பல நெனச்சிட்டிருந்தாலே போதும்.

- அவர் ஒரு அரை நிமிஷம் ராகம் பாடினாலே  தனி அழகு. என்னமோ பிழிந்து பிழிந்து இனிமை அமர்ந்து போன துளிகளாக வடித்துக் கொடுக்கிறார் போன்ற ஒரு அனுபவம். கோயில் கல்லில் நீள வாக்கான ஒரு கல்லில் சின்னச் சின்னதாக அழகு அழகாக நூறு வடிவங்களைச் செதுக்கினாற் போல ஒவ்வொன்றும் ஒரு அழகு.


- வெளியே தோட்டத்தில் நாகணவாய்கள் நாலைந்து உரக்கக் கத்திக்கொண்டிருந்தன. மர நிழலில் பதுங்கி, அதன் குளிர்ச்சியைச் சுவைத்துக் கத்தின.....
வானம் ஒரே கப்பு நீலமாக அவளை ஜன்னல் வழியே பார்த்தது.அந்த நீலத்தின் குரல் போல, கழுகு ஒன்று நீளமாகக் குழைந்து எங்கோ உயரத்தில் குரல் கொடுத்தது.

-வெயில் வெண்மஞ்சளாகத் தணிந்திருந்தது.

- தாங்கமுடியாத கொடுமையும் எல்லையில்லாத இரக்கமும் அந்தக் கேள்வியில் இருமுகக் கடவுள் மாதிரித் தலையை நீட்டிக்கொண்டிருக்கும் காட்சியைக் கண்டு பாலி திகைத்துப் போய் உட்கார்ந்திருந்தாள்.

-இருதயத்தில் குப்பலாக தாமரை மொட்டுக்களை வைத்து அடைத்தாற்போலிருந்தது அவளுக்கு. அந்த புஷ்பத்தின் மெல்லிய கந்தமும் மிருதுவான அடைவும் நெஞ்சத்தில் புகுந்து திணிந்து கொண்டன.

- தங்கச் சங்கிலி போட்ட அந்தக் கடிகாரம் வெல்லக்கட்டியை எறும்பு உருட்ட முயல்வது போல, காலத்தை டிக்கு டிக்டிக்கென்று அவசர அவசரமாக எண்ணிக்கொண்டிருந்தது.

- ஸ்வர்க்கத்திலே யிருந்த கங்கையை மண்ணிலே போட்டுப் புரட்டணும் என்று ஒரு தபஸ் பண்ணுகிறானே. மண்ணிலே இருக்கிறதை மேலே அனுப்ப ஆசைப்படுவார்கள். இவன் பாடம் தலை கீழாயிருக்கிறது........நம்ப தேசத்து வேதாந்தியில்லை அவன்.கருணை இருந்தது அவனுக்கு. அது தான் கங்கையாப் பொழிஞ்சு,மண்னணக் குளிரப் பண்ணித்து.....
....கங்கை பூலோகத்துக்கு வந்தாச்சு.

.........


”உயிர்த்தேன்” நாவலில் தி.ஜானகிராமன்

- மெல்லிய குளிர் காற்று, சுடாத செவ்வெயில், பச்சை இலைகள், நாலு குருவியின் இனிமை, மாசுகளனைத்தும் இருளோடு அகன்று, துடைத்துத் துப்புரவு செய்து நல்லதுகளும் படைத்தவனும் வந்து உட்காரக்கூடிய மன நிலை- இத்தனையும் சேர்ந்த இளங்காலை மாதிரி இருக்கும்.

-இந்தக் குடும்பத்தோடு குடும்பமாக ஒன்றி அவள் உழைத்துக்கொண்டிருக்கிறாள்.....இவள் ஒன்றியது- அதை எப்படிச் சொல்கிறது? தலையில் ஒரு கூடைப் பூவைக் கொட்டினாற் போலவா? வைர ஊசி ஊசியாக, ஆனால் பஞ்சின் மென்மையுடன் பனியின் தண்மையுடன் விழுகிறது போலவா?

- எதற்காக இப்படி மனத்தைக் கொட்டிக் கொட்டி அன்பாக அளந்துகொண்டிருக்கிறாள்.

- கோவில்லே கொட்றதுக்கு முன்னாலே ஊருக்கில்ல கொட்டனும்.

- கருணை எங்கே இருந்தாலும் பகவத்ச்வரூபம்.

........

மோகமுள் நாவலில் தி.ஜானகிராமன்

- தந்தி ஒலிக்க, வாய் பாட , செம்பை ஏந்தி பிட்சை ஏற்ற தியாகய்யர், தெருவிலா நடந்தார்? திக்கை நிறைத்த நாதத்தில் தானே அலைந்த அவர் செம்பை ஏந்தியது அரிசிக்கா? ஊர் ஊராக காசிக்கும்,தில்லைக்கும், தீர்த்தங்களுக்கும் தீட்சிதர் அலைந்ததெல்லாம் நாதத்தில் அலைந்தது தானே.

- “சுவாமி கிட்ட போய் மண்ணாசை,பொன்னாசை, பெண்ணாசை எல்லாம் ஒழியனும்னு கேட்கனும் போலிருக்கு. அவர் நிச்சயமாக் கேட்டதைக் கொடுத்து விடுவார்னு தெரிஞ்சிருந்தா என்னடா ஆகும்.”
  “சுவாமி கிட்டவே போகமாட்டோம்” என்று குரல் வந்தது.


..............


தி.ஜா சிறுகதைகளிலிருந்து

மனிதனுக்கு அற்பத்தனம் வர நேரம் போது ஏது?
                                          
- கோதாவரிக்குண்டு

ராமாயண சாஸ்திரிகள் கதையில் சொன்னார்: சேற்றுத் துளி தெளித்த தாமரை போல் சீதை பிரகாசமாகவும் இருந்தாள். பிரகாசமாக இல்லாமலும் இருந்தாள்.

- ஆரத்தி

அப்பனே! ஏழையாகத்தான் படைத்தாயே சச்சலாக, கருவலாக, நாய் பிடுங்கினாற்போல் படைக்கப்படாதோ!இப்படியா வாட்டசாட்டமாக, மீசையும் வடிவுமாக ப் படைக்கவேண்டும்! தானம் கொடுக்கிறவனுக்குக் கொஞ்சமாவது இரக்கம்,அனுதாபம் வரவேண்டாம்!அச்சாரம்கொடுத்துப் பண்ணினாற்போலப் படைத்து விட்டு, அதிர்ஷ்டத்தையும் புத்தியையும் கழித்து விட்டு, சை ! கடவுள் இவ்வளவு சராசரிக்குக் குறைவான் படைப்பாளியா?

- கோதாவரிக்குண்டு

மீனாட்சி லட்சணம் தான். சமையற்கார முத்து பெண்டாட்டி என்று யார் சொல்ல முடியும்? நூத்தம்பது வேலி பண்னண வீட்டு எஜமானி எண்ணெய் ஸ்நானத்துக்காக நகை நட்டுகளைக் கழற்றி வைத்தாற்போலிருக்கும்.

- சாப்பாடு போட்டு நாற்பது ரூபாய்

http://rprajanayahem.blogspot.in/2008/07/blog-post_23.html


http://rprajanayahem.blogspot.in/2008/09/blog-post_08.html

http://rprajanayahem.blogspot.in/2008/10/blog-post_3967.html


http://rprajanayahem.blogspot.in/2009/09/blog-post_2603.html
http://rprajanayahem.blogspot.in/2008/10/blog-post_16.html

http://rprajanayahem.blogspot.in/2009/11/blog-post_18.html






2 comments:

  1. இந்தப் பதிவில் பகிரப்பட்டுள்ள குறிப்புகளைப் படித்தது முதல் தி.ஜா எழுத்துக்கள் மீது ஈர்ப்பு ஏற்பட்டுள்ளது. அவர் புத்தகங்களைப் படிப்பதை தள்ளிப்போட்டுக் கொண்டே வந்த எனக்கு வித்தியாசமான பாணியில் கிடைத்துள்ள ஆவலைத் தூண்டும் அறிமுகம் இது. நன்றி.

    ReplyDelete
  2. வாழ்க, R P ராஜநாயஹம்!

    யார் இருக்கிறார்கள் இன்று இப்படி ரத்னங்களை மீட்டெடுத்துக் காண்பிப்பதற்கு? ஒரு படைப்பாளியைத் தன் ஜாதிக்காரனாக மட்டுமே பார்த்து உயர்த்துபவர்களால், அல்லது தன்னை உயர்த்திக் கொள்வதற்காக மட்டுமே பிற படைப்பாளிகளையும் உயர்த்துபவர்களால் ஏலாத காரியம் இது!

    வாழ்க தி.ஜானகிராமன் புகழ்!

    ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.