வீரன் மணி பாலமுருகன் :
பொங்கல் விடுமுறைகளில் கிடைத்த இந்த வேலையற்ற நாட்களில்
நான் வாசித்த புத்தகங்களில் ஒன்று
பன்முக கலைஞர் R.P. ராஜநாயஹத்தின் "டிசம்பர் மார்கழி ஜனவரி"
எனும் கலை, இலக்கிய, அரசியல், வாழ்வியல் கலைக் களஞ்சியம்.
சுவாரஸ்யமான அழகியல் மிகுந்த பத்திகள் அடங்கிய தொகுப்பு இது.
தி. ஜா., திலீப்குமார், ஆ. மாதவன், சா. கந்தசாமி, இந்திரா பார்த்தசாரதி, கிருஷ்ணன் நம்பி, முதல் ஆல்பர் காம்யு வரை அலசும் இந்த பத்திகள் இலக்கியத் தாகத்தின் நன்னீர் சுனைகள்.
தன் அனுபவங்களின் நிழல் பாதையில் வாசகனையும் இளைப்பாறச் செய்யும் உபகாரம் கொண்டது
R.P. ராஜநாயஹத்தின் எழுத்துக் கலை.
மேலும் இசை, சினிமா, அரசியல் என அவர் தொட்டதெல்லாம் வாசகனின் பசிக்கு தீனியாகும் அமுதசுரபிதான்.
இந்த தொகுப்பில் எதை சிலாகிப்பது எதை விடுவது என குழப்பம் ஒரு வாசகனுக்கு வந்து விடும்.
"இந்த டிசம்பர் மார்கழி ஜனவரி" தொகுப்பில் 88 வது பத்தியாக "சுப்புடு தட்டிப் பார்த்த கொட்டாங்குச்சி" என்றொரு ரசமான பத்தி உண்டு.
அதை கீழே தருகிறேன்.
நண்பர்கள் அந்த பருக்கை ஒன்றை சுவைத்துப் பாருங்கள்.
ராஜநாஹத்தின் அள்ள அள்ள குறையாத தானியக் களஞ்சியத்தின் மகத்துவத்தை உணர்ந்து கொள்வீர்கள்.
------------------------------------------------------------------------------------
சுப்புடு தட்டிப் பார்த்த கொட்டாங்குச்சி"
தன் 80வது வயதில் சொன்னார். “ இன்னும் ஒரு நாற்பது வருடங்கள் தான் நான் உயிரோடு இருப்பேன்.”
90 வயதில் இறந்தார்.
சுப்புடுவின் கறாரான சங்கீத விமர்சனங்கள். அவருடைய ஹ்யூமர்.
பாலமுரளி, வீணை பாலச்சந்தர் ஆகியோரையெல்லாம் கிண்டி கிழங்கு எடுத்தவர்.
வித்வான்களிடம் சுப்புடுவின் கடுமையான கண்டிப்பான வார்த்தைகள்.
"ரொம்ப சபாக்களில் காரியதரிசிகள் அரங்குக்கு வெளியே தான் நிற்பார்கள் . 'உள்ளே நடக்கும் அக்கிரமங்களுக்கு நான் பொறுப்பு இல்லை' என்பது போல."
” வயலின் கன்யாகுமரி இடத்தை கொடுத்தால் மடத்தை பிடுங்குகிற பேர்வழி. விட்டால் கதரி கோபால் நாத்தின் மடியிலேயே உட்கார்ந்து விடுவார்.”
சங்கீத பாடகர்கள் சினிமாவில் பாடக்கூடாது என்பது பற்றி நிறைய எழுதியவர். 1940களில் இருந்த சினிமாப்பாடல் கர்நாடக சங்கீதத்தோடு ஒன்றியது. அதைக்காரணம் காட்டி சுப்புலட்சுமி சினிமாவில் பாடவில்லையா? ஜி.என்.பி பாடவில்லையா? என்று சப்பை கட்டு கட்டி, 1990களில் கூட சினிமா பாட்டு பாடலாமா? என்று கறாராக கேட்டார்.சினிமா பாடல்கள் பாடிவிட்டு சங்கீதமும் பாடமுடியாது என்பது சுப்புடு சித்தாந்தம்.சினிமாவில் பாடுவதை கொடிய வியாதியாக சித்தரித்தார்.
ஆனால் உறுத்தும் ஒரு விஷயம். 1983ல் திடீரென்று டி.ராஜேந்தர் பாடிய சினிமாப்பாடல் ஒன்று பற்றி புல்லரித்தார். செடியரித்து மரம் அரித்துப்போனார். தும்பிக்கய ஊனி, நாலு காலையும் தூக்கி, சங்கு சக்கரமா சுத்தி, ’பேஷ், பலே’ என்று ’ஆஹா’காரம் செய்தார்.
இத்தனைக்கும் 1980களில் தரமான எத்தனையோ இளையராஜா பாடல்கள் நூற்றுக்கணக்கில் இருந்தன.
1960களில் விஸ்வநாதன் ராமமூர்த்தி, கே.வி.மஹாதேவன் பாடல்கள்? சௌந்தர்ராஜன்,சுசிலா, பி.பி.ஸ்ரீனிவாஸ் பாடிய பாடல்கள்?
ஆனால் சுப்புடு நெகிழ்ந்து போன அந்தப்பாடல் எது தெரியுமா? டி.ராஜேந்தர் இசையமைத்துப்பாடிய
”தட்டிப்பாத்தேன் கொட்டாங்குச்சி, தாளம் வந்தது பாட்டவச்சி. “
தங்கைக்கோர் கீதம் படத்தில் இந்தப் பாடலை கேட்டு விட்டு கண்ணீர் விட்டு அழுததாக சுப்புடு சொன்ன அபத்தம் இங்கு நடந்திருக்கிறது.அதற்குப் பிறகும் கடைசி வரை கர்னாடக சங்கீத பாடகர்கள் சினிமாவில் பாடிய போது முகம் சுளித்துக்கொண்டே தான் இருந்தார்.
Once in a while, A consistency comes forward that is both sublime and foolish!
நூல் : டிசம்பர் மார்க்கழி ஜனவரி
ஆசிரியர் : R.P. ராஜநாயஹம்
பதிப்பகம்: ஜெய்கிரி
விலை: ரூ 300.