சந்திர சேகர்
- R.P. ராஜநாயஹம்
பாரதிராஜாவின் பதினாறு வயதினிலே பார்த்து விட்டு நாடக நடிகர் சந்திரசேகர் அவர் வீட்டை கண்டு பிடித்து பாராட்டி விட்டு அடுத்த படத்தில் நடிக்க தனக்கு வாய்ப்பு கேட்டிருக்கிறார்.
பாரதி ராஜா சரி என்று சொல்லியிருக்கிறார்.
கிழக்கே போகும் ரயிலில் சேகருக்கு வாய்ப்பு பாரதி ராஜா தரவில்லை.
அடுத்து சிகப்பு ரோஜாக்களிலும் வாய்ப்பு கிடைக்கவில்லை. ஏமாற்றம் தான்.
ஒரே இனம் தான். அப்படியிருந்தும் சேகருக்கு நல்லது நடக்கவில்லை.
சேகர் மனம் தளராமல் பாரதி ராஜாவிடம் அடுத்த புதிய வார்ப்புகளில் வாய்ப்பு கேட்டு கெஞ்சியிருக்கிறார். பாரதி ராஜா பதில்
"சரிய்யா".
தெரிந்தவர்களிடம் எல்லாம் பாரதி ராஜா புதிய வார்ப்புகளில் உறுதியாக வாய்ப்பு தருகிறார் என்று நம்பிக்கையோடு சந்தோஷத்தை பகிர்ந்திருக்கிறார்.
அசிஸ்டெண்ட் டைரக்டர் மனோபாலா
இவருடைய அண்ணன் பாண்டியனுடன் காலேஜ் ஆஃப் ஆர்ட்ஸில் படித்தவர். இவர்கள் வீட்டிற்கு வந்திருக்கிறார். " சேகர், ஒம்பேரு நடிகர்கள் லிஸ்ட்ல இல்லடா. " என்று உண்மையை உடைத்திருக்கிறார்.
மறு நாள் அவுட் டோர் ஷுட்டிங். பாரதி ராஜா யூனிட்டே கிளம்புகிறது.
Shock, pain, grief.
அந்த மாலை நல்ல மழை. சந்திர சேகர் சைக்கிளை எடுத்துக்கொண்டு பாரதி ராஜா ஆஃபிஸ் போகிறார்.
மழையில் சொட்ட சொட்ட நனைந்து கொண்டே வந்த சேகரை பார்த்த பாரதி ராஜா
" யோவ் என்னய்யா "
" சார், எனக்கு நடிக்க சான்ஸ் கிடச்சிருக்கு"
" Congratulations, என்ன படம்"
சேகர் பதில் "டைரக்டர் பாரதிராஜா எடுக்கிற புதிய வார்ப்புகள்"
" என்னய்யா சொல்ற? "
கடுமையாக உடைந்த நிலையில் இருந்த சேகர்
சொன்ன பதில் பற்றி சொல்ல என்ன இருக்கிறது?
"புதிய வார்ப்புகள்ள ஒரே ஃப்ரேம்லயாவது நான் கட்டாயம் வருவேன்"
பாரதி ராஜா" சரி வாய்யா "
அவுட் டோரில் பல நாட்கள் ஷூட்டிங் நடந்து கடந்த பின் பாரதி ராஜா
ஃபீல்ட்ல சேகரை இயக்கியிருக்கிறார்.
" மாமோவ் இந்த ஊர நான் பாத்திருக்றேன்"
ரதியை பெண் பார்க்க வந்து
எல வாங்க குடுத்த காசோட ஓடிப்போற மாப்ள ரோல்.
இந்த சின்ன ரோலோடு முடிந்து விடவில்லை.
Cinema is the most beautiful fraud.
கூத்து சீன். 'நீ நடி'
சேகர் கூத்து பாட்டில தோரணை
" பாத்தா தெரியலயா பணக்கார வர்க்கமுன்னு"
ஷாட் ப்ரேக்கில் பாரதி ராஜா" அசல் கொட்டுக்காரன் மாதிரியே பண்றியேடா "
இரண்டு பாத்திரங்களும் புதிய வார்ப்புகளில் ரசிக்கும் படியாக.
சந்திர சேகருக்கு அடுத்த நிறம் மாறாத பூக்களில் எலக்ட்ரீஷியன் கதாபாத்திரம்.
கல்லுக்குள் ஈரம்
"ஈட்டி பைத்தியம்"
பாக்யராஜ் முதலில் இயக்கிய சுவர் இல்லாத சித்திரங்களில் கவுண்ட மணி டெய்லர் கடையில் தலை காட்ட வாய்ப்பு.
ஈட்டி பைத்தியமா நடிச்ச பிறகு தான்
ஒரு தலை ராகம் ரிலீஸுக்கு பிறகு சேகரை தற்செயலாக பார்த்து சந்தித்து அறிமுகம்.
தி.நகர் பஸ் ஸ்டாண்ட் எதிரில்
மீரா சாஹிப் சேம்பர் வாசியாக இருந்த போது
அங்கு ஸ்ரீநதி மூவிஸ் ஆஃபிஸ். அதற்கு மேலே முதல் மாடியில் தான் ராஜநாயஹம் அறை.
மிக குறுகிய கால பழக்கம்.
" என்ன சேகர் நேத்து கீழ ஆஃபிஸ் வந்திருக்க போல."
" ஆமா, கேபி. கேபிய பாக்றதுன்னா ஒரு நாள் ஒதுக்கனும்."
அந்த அளவுக்கு உரையாடியிருக்கிறோம்.
மதியம் லஞ்ச் மூன்று முறை கீழே இருந்த நான் வெஜ் ஓட்டலில் சேகருக்கும் மட்டன் பிரியாணி, ஒரு டீ.
அப்பல்லாம் தினமும் மதிய உணவு பிரியாணியும் டீயும் தான். கூட யார் இருந்தாலும் அதே பிரியாணி, டீ தான் சாப்பிட வேண்டியிருக்கும்.
சந்திர சேகர் " கேபிக்கு இப்படி வினோதமா பழக்கம்.
மதியம் பிரியாணி, டீ"
சாப்பிட்டு கொண்டிருக்கும் போது ஓட்டலில் சாப்பிட வந்தவர் யாராவது சேகரைப் பார்த்து " சார், நீங்க நிறம் மாறாத பூக்கள்ள ரெண்டு சீன் நடிச்சிருக்கீங்கள்ள?"
"கேபி, ஒரு தலைராகத்தில கடைசியா சீரியஸா பேசியிருக்கேன். எப்படி ரசிப்பாங்களோ தெரியல. ரிலீஸப்ப நான் நூலறுந்த பட்டம் அவுட்டோர் ஷூட்டிங்ல இருப்பேன். படம் பார்த்து சொல்லு"
குமுதம் 'ஒரு தலை ராகம்' விமர்சனத்தில் :
" 'கல்லுக்குள் ஈரம் ஈட்டி பைத்தியம்' கலக்கி விட்டது"
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.