வலைத்தளத்தில் முதல் முறையாக வெளியாகிறது
தி. ஜானகிராமன் - ஓர் அறிமுகம் ::
R.P. ராஜநாயஹம்
இந்த கிருஷ்ணபரமாத்மா
பல சிசுபாலர்களால் அவமானப்படுத்தப்பட்டார்.
ஒரு இலக்கியப் பாரம்பரியத்தையே துவக்கி வைத்து இந்த துரோணர் ஏகலைவர்களாலேயே கூட
உதா சீனப்படுத்தப் படுகிறார்.
வீழ்ந்த பின்னும் மறைந்த பின்னும் சிகண்டிகளால் அம்புத் துளைப் படுகிறார் இந்த பீஷ்மர்.
தி. ஜானகிராமன் ஓர் அறிமுகம் என்ற இந்தத் தலைப்பில் ஜானகிராமன் என்ற இலக்கியமகான் சென்ற பாதையை வரைந்து காட்டமுடியுமா?
''ஞானி சென்ற பாதையும் மீன், குருவி சென்ற பாதையும் வரைந்து காட்ட முடியாது" என்று ஒரு பெரியவர் தன்னிடம் கூறியதாக பிரமிள் என்ற தர்மூ சிவராம் எழுதியுள்ளார்.
நவீன தமிழ் இலக்கியத்தில் ஜானகிராமன் என்ற மாபெரும் சக்தியின் தாக்கம் எத்தகையது? பாரதிக்குப் பின் தேஜஸோடு வந்த இலக்கியவாதி இவர்தான். பாரதிக்கு வாரிசும் கவிஞனாகத்தான் இருக்க வேண்டும் என்று விதி எதும் உண்டோ? பாரதி ஒரு மகத்தான சக்தி. ஜானகிராமனும் கூடத்தான். இரண்டு பேருமே சக்தி உபாசகர்களாயிருந்தும், பெண்மையைக் கனப்படுத்தியவர்கள்
என்பதும் அவர்களிடையேயிருந்த ஒற்றுமை எனில் வேற்றுமைகள் அதிகம்தான்.
பாரதி இறந்தபிறகு அவரது அருமையை உலகுக்கு எடுத்துச் சொல்ல நிறையப் பேர் புறப்பட்டார்கள். ஜானகிராமனுக்கு அப்படியில்லை என்பது மிக முக்கிய மான வேற்றுமை.
தலைப்பைத் தொடுவோம்.
தி. ஜானகிராமனைப் பற்றி முதுபெரும் எழுந்தாளர் தி. ஜ. ரங்கநாதன் சொல்வார் ''சிவந்தமேனி, சிரித்தமுகம், விதயமும் விதரணை யும் மிகத் தெரிந்தனர். நண்பர்களின் அன்பைக் கொள்ளை கொள்ளும் சுபாவம் அமைந்த குரல்"
தஞ்சை மாவட்டம் தேவங்குடியில் 28-06-1921- இல் இராமாயணக்கதை சொல்லும் பாகவதரின் மகனாகப் பிறந்து தஞ்சையில் பள்ளிப்படிப்பு, குடந்தைக்
கல்லூரியில் நான்காண்டு படித்தபின் இந்திய இளைஞர்களின் விதிப்படி ஈராண்டு சும்மா இருந்திருக்கிறார். அதன்பின் சைதையில் ஆசிரியர் கல்லூரிப் பயிற்சி முடித்து பதினொரு ஆண்டுகள் பள்ளி ஆசிரியராக, சென்னையில் ஒரு வருடமும், தஞ்சை மாவட்டம் அய்யம்பேட்டை, குத்தாலத்திலுமாகப் பணிபுரிந்திருக்கிறார்.
பின் பதினான்கு ஆண்டுகள் சென்னை அகில இந்திய வானொலியில் கல்வி ஒலிபரப்பு அமைப்பாளராக இருந்து, புதுடெல்லியில் அகிலஇந்திய வானொலியில் பிரதமக் கவ்வி ஒலிபரப்பு அமைப்பாளராக பணியாற்றி ஓய்வு பெற்றார்.
பின்னும் ஆகாசவாணி Emeritus Producer பதவி கொடுத்து அவரைக் கௌாவித்தது.
1979 -ஆம் வருடம் சாகித்ய அகாடமி இவருடைய "சக்தி வைத்தியம்' சிறுகதைத் தொகுப்பிற்குப் பரிசு கொடுத்ததும்
சிறு நிகழ்ச்சி.
கணையாழி இதழின் கௌரவ ஆசிரியர் பதவியில் சிரத்தையோடு இலக்கியப் பணியாற்றிக் கொண்டிருக் கும்போது உடல்தலம் குன்றி 1982 ஆம் வருடம் நவம்பர் (18 ஆம் தேதியன்று வியாழக்கிழமை பகலில் நல்ல வெய்யில் நேரத்தில் அவரது மரணம் நிகழ்ந்து போனது.
இடைப்பட்ட அவருடைய வாழ்க்கையிலே பள்ளியாசிரியராக இருந்தபோதும், வானொலியின் உயர்ந்த பதவி வகித்தபோதும், சென்னையில், டெல்லியில் வாழ்த்த நேரத்திலும், செக்கோஸ்லாவாகியா, ரொமானியா, ஜப்பான், அமெரிக்கா, பிரிட்டன் என்றெல்லாம் சுற்றுப்பயணம் சென்று வந்த காலையிலும் அவருடைய வேர்கள் தஞ்சைக் காவேரிக்கரையிலேயே இருந்தன என்பது மகத்தான விஷயம்.
அவருடைய நாவல்களில் மோகமுள், மலர்மஞ்சம், செம்பருத்தி, (உயிர்த்தேன். அம்மா வந்தாள். மரப்பசு, நளபாகம் ஆகிய ஏழு நாவல்கள் உள்ளதமானவை.
மோகமுள்ளை இந்திய நாவல்களின் சிகரமாகக் கருதும் வெங்கட்சாமிநாதனால் மலர் மஞ்சத்தையும் சிலாகித்துக் கூறமல் இருக்கமுடியவில்லை.
எந்த கோணத்திலிருந்து பார்த்தாலும் 'மோகமுள்' எல்லாவற்றையும் மிஞ்சி ராஜ கோபுரம் போல் ஓங்கி உயர்ந்து நிற்பதாகச் சொல்லும் சிட்டிக்கு, தான் விருப்பிய சிறந்த பத்து நாவல் பட்டியலில் அம்மா வந்தாளையும் சேர்க்காமல் இருக்க முடியவில்லை.
அசோகமித்திரன் 'அம்மா வந்தாளையும் மோகமுள்ளையும் விட
'உயிர்த்தேன்" தான் சிறந்த நாவல் என்று சொல்லுகிறார்.
க.நா.சு. "மோக முள் நாவலைப் பிரமாதமாகப் புகழ்ந்த நான் அவருடைய மிகமிக வெற்றி பெற்ற அம்மா வந்தாளைப் பாராட்டவில்லை' என்ற செய்தியைத் தருகிறார்.
சுந்தரராமசாமியின் எழுத்தைக் கடுமையாகச் சாடும் தி.க. சி க்கு ஜானகிராமனின் எல்லா நாவல்களுமே ரொம்பப் பிடிக்கிறது. அன்பே ஆரமுதே உட்பட .
அம்மா வந்தாள் தொடர்கதையாக எழுதப்படாததால் முழுமையாக வந்திருப்பதாக நேர்ப்பேச்சில் கி. ராஜநாராயணன் கூறுகிறார்.
மோகமுள் போன்ற முழுமையான நாவலை நான் அதன்பின் தமிழில் படிக்கவில்லை என்று சுஜாதா சொல்லி விட்டார்.
தமிழ் நாவல்களை விமச்சித்த சி மோகன் தமிழின் சிறந்த நாவல்களில் ஒன்றாக மோகமுள்ளையும், நல்ல நாவல்களில் ஒன்றாக அம்மா வந்தாளையும், குறிப்பிடத்தக்க நாவல்களில் ஒன்றாக செம்பருத்தியையும் சுட்டிக்காட்டுகிறார்.
மரப்பசுதான் அவருடைய Master Piece என்று சொல்லும் வாசகர்கள் ஏராளம்.
அம்மா வந்தாளும், மோகமுள்ளும் மலையாளத்திலும் அம்மா வந்தாள் ஆங்கிலத்திலும் வெளியாகியிருக்கின்றன. காவேரி என்ற பெண் எழுத்தாளர் மரப்பசுவை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருக்கிறார்.
பார்க்கப்போனால் அவருடைய முதல் நாவல் அமிர்தம் மட்டுமே நோல்வியடைந்த நாவல். தொடர்கதைகளாக எழுதப்பட்டவைகளில் பாதிக்கப்பட்டது அன்பே ஆரமுதே.
"சம்பாஷணைத் திறனை நாவல் எழுத உபயோகித்தவர்கள் இந்த அளவுக்கு
தி. ஜானகிராமனைத் தவிர வேறுயாரும் இதுவரை தமிழில் இல்லை. என்று எனக்குத் தோன்றுகிறது" என்று நாவல்கலை நூலில் க.நா.சு. குறிப்பிடுகிறார்.
கோவை ஞானி தன்னுடைய "மார்க்சியமும் தமிழ் இலக்கியமும்" நூலில் சொல் வதைப் பாருங்கள். "ஒரு நாவலில் வரும் அனைத்துப் பாத்திரங்களையும் அவற்றின் வாழ்தலுக்கான உரிமையோடு படைப்பவர் தி. ஜானகிராமன் ஒருவர்
மட்டுமே"
தி. ஜானகிராமன் சிறுகதைகள்
ஈடு இணையில்லாதவை. ஒரு ஆவேசமான கலைஞனை வெளிப்படுத்திய சிறுகதைகள் கிட்டத்தட்ட நூறு அற்புதமான சிறு கதைகள்.
அவரது பன்முகப்பட்ட அக்கறைகளை இக்கதைகளில் காணமுடியும். எத்தனைமுறை படித்தாலும் மீண்டும் மீண்டும் வாசகனை பிரமிக்கவைக்கும் சிறு கதைகள்.
அவருடைய எழுத்தின் அக்கறையையும் நோக்கத்தையும் சுலபமாக தீர்ப்பிட்டுவிடுவது நுனிப்புல் மேய்பவர்கள் இயல்பு. ஆனால் அது அப்படியல்ல.
சிறுகுழந்தைகள் இவருக்கு ரொம்பப்பிடிக்கும், மலர்மஞ்சம் நாவலிலும் அவலும் உமியும், நாலாவதுசார் குறுநாவல்களிலும் குழந்தைகள் உலகத்திற்கே அழைத் துச்செய்கிறார்.
சிறுகதைகளில் சிலிர்ப்பு, சத்தியமா, சக்திவைத்தியம், பாட்டியா வீட்டில் குழந்தைக்காட்சி போன்ற கதைகளைப் படித்துப்பாருங்கள். கிருஷ்ணன் நம்பியின் கதைகளைப் போல அற்புதமானவை.
நம்பிக்கைத்துரோகம் பற்றி கடன்நீர்ந்தது, கங்காஸ்நானம் கதைகளில், முதுமையின் துர்ப்பாக்கிய நிலையை வேண்டாம பூசனி'' 'கழுகு', 'விளையாட்டுப் பொம்மை' கதைகளில்,
முதியவர்களின் மனக்கோளறுகளை ‘பாயசம்' 'குளிர்' போன்ற கதைகளில் நுட்பமாகக் காட்டுவார்,
சங்கீதத்தின் உன்னதத்தை அவர் சொன்னதுபோல யார் சொல்லி யிருக்கிறார்கள். பவழமல்லிப் பூவைப் பார்த்தாலே அவருக்கு தன்யாசி ராகம் தான் ஞாபகம் வரும்.
இயல்பாகவே அவர் சங்கீதப்பயிற்சியும், நல்ல ரசனையும் கொண்டிருத்தார் என்பது நமக்குத் தெரியக்கிடைக்கும் செய்தி.
சமையலையும், சமையல்காரர்களையும் பற்றி கமலம் குறு நாவலிலும், கண்டாமணி சிறுகதையிலும் நளபாகம் நாவலிலும் அனுபவித்து எழுதிய ஜானகிராமன் சமையற்கவையிலும் வல்லவர் என்பது முக்கியமான விஷயம்.
ஏழ்மையின் துயரத்தைப்பற்றி, கடை வீதியில் வேலைபார்க்கும் சிறுவர்களைப்பற்றி, வரப்புக் குறும்பூக்களைப் பற்றிக் கூட கவலைப்பட்ட மகாதிமாவைச் சுலபமாகத் தீர்ப்பிடுவது எந்தவிதத்திலும் நியாயமில்லை.
அவருடைய நகைச்சுவை பிரத்யேகமான அம்சம். ' சின்ன வாக்குவாதம்' என்ற கதையைப் படித்து பாருங்கள்.
மேலும் 'தி. ஜானகிராமனின் பல சிறுகதைகளில் பொய்ம்மையும், போலி அனுஷ்டானங்களும் தர்மத்தின் உச்சமாகக் கௌரவம் பெறும் அவலத்திற்கெதிரான கோபச்சிரிப்பு இழையோடக் காணலாம் என்று ஆதவன் சொன்னது நினைவிற்கு வருகிறது.
அப்புறம் அந்தப் பெண்கள்.
“கடவுளைக் காதலியாகப் பாவிக்கப் பழகியிருந்தால் பெண்ணின், ஹிருதய அழகையெல்லாம் முழுதும் பார்த்திருக்க முடியும்' என்ற தி. ஜா. விள வார்த்தைகள் நினைவிற்கு வருகிறது.
யமுனா, புவனா, பாலி, குக்கு, சந்திரா, டொக்கி, செங்கம்மா, அலங்காரம், அம்மணி.
ந. ஐயபாஸ்கரன் சொல்வதுபோய 'மறக்கமுடியாத வியக்திகள் இவ்வளவு அன்பும், அனுசரனையும் உலகில் கொட்டிக்கிடக்கிறதா என்று பிரமிக்கவைக்கும் பெண்கள்'.
அவருடைய பயணக்கட்டுரைகள் மூன்று. உதயசூரியன் பயணக்கட்டுரையை முடிக்கும்போது பிளேனில் தான் சந்தித்த அமெரிக்கச் சிறுவனுக்கு மூங்கில்
பொம்மையொன்றைப் பரிசளித்ததை நினைவு கூர்ந்து, 'அவன் ஊர் பெயர் கூடக் கேட்டு வைத்துக் கொள்ளவில்லை. பையா! இன்னும் அதை வைத்திருக் கிறாயா? கெட்டுப்போக்கி விட்டாயா?'' என்று முடிக்கிறார்.
கருங்கடலும் கலைக்கடலும் நூலில் ரொமானியாவில் ஒருவர் 'நீர் பிராமணரா?" என்று கேட்க ஜானகிராமன் சொல்கிறார். 'பிராமண யோக்யதை ஒன்றும் கிடையாது. பிறந்தது அந்த ஜாதியில். ஆனால் பகுத்தறிவுவாதிகளும், அரசாங்கம், கல்லூரி அதிகாரிகள் எல்லாம் என்னை, பிராமணன் என்றுதான் கூறுகிறார்கள். பகுத்தறிவுவாதிகளுக்குக் கூட மூடநம்பிக்கைகள் சாத்தியம்'.
சிட்டியுடன் அவர் சேர்ந்து எழுதிய 'நடந்தாய் வாழி காவேரி' யில் காவேரியைப் பார்த்து ‘தண்ணீர் குழாயிலும்தாள் வருகிறது. ஆனால் ஒரு ஆற்றில் ஓடும் போது இப்படியா பாட்டாகக் கேட்கும். கோவிலாக உயரும். கவிதையாகச் சிரிக்கும். கூரறிவாக ஊடுறுவும்' என்று ஆச்சரியப்படுகிறார்.
உதயசூரியன் முன்னுரையில் 'நம்நாட்டில் இன்று நோன்றியுள்ள பிரச்சனைகள் குறைகள் எல்லாம் தற்காலிகமானவை. வெளிநாட்டுச் சிந்தனைகளின் தாக்குத லாலும், உலகப்போக்கின் கிறுக்குகளாலும் ஏற்பட்டவை, இத்தனையையும் சமாளித்து நிற்கிற ஆத்மீக பலமும், பாரம்பர்யத் தொடர்ச்சியும், போலிகளை உண்மையென்று மயங்காத அமைதியும் நம்நாட்டிற்கு உண்டு'.
இது அவர் நமக்குத் தரும் முக்கிய செய்தி.
மற்றொன்று, ஒரு கடிதவரிகள் ''வாழ்க்கை. கலை, தத்துவம் அனைத்திலும் Positive Attitude - ஐ ஏற்படுத்தி நிலைநிறுத்துவதுதான் நல்லது என்று நினைக்கிறேன். நம்பிக்கையும் தைரிய மும் விடாமுயற்சியும் தளராமையும், அதேசமயம் மூர்க்கத்தனமான Violence - ன் பிடியில் சிக்காமலிருப்பதும் நம் இளைஞர்களுக்குத் தேவை. சுப்ரமண்யபாரதியின் கவிதைகள் இதற்கு மிகவும் உதவும். நல்ல இளமையில் நம்மைவிட்டுப் போனார் அவர்".
எழுத்தாளன் ஓரளவு, அனார்கிஸ்ட் ஆக இருப்பது நல்லது என்ற அபிப்ராயம் கொண்ட தி. ஜா. தன்னுடைய எழுத்துபற்றிக் கூறுவது
'சிறுவயது முதலே என்னுடைய மனதில் "கன்வென்ஷன்' என் சொல்லப்படும்படியான கட்டுப்பாடுகளை எதிர்க்கும் மனோபாவம் உருவாயிற்று. நம்முடைய மக்கள் மரபையும் (Tradition) கட்டுப்பாட்டையும் ஒன்றுசேர்த்துக் குழப்பிக்கொள்கிறார்கள் என்று நினைக்கிறேன். கட்டுப்பாடுகள் காலத்துக்கு ஏற்றபடி மாறும் தன்மையுடையன. ஆனால் அவைகளுக்கு நம்முடைய அன்றாடவாழ்வில்
நிரந்தரமான இடத்தை அளிக்க முற்படும்போதுதான் தனிமனித சுதந்திரம் வெகுவாகப் பாதிக்கப்படுகிறது.
சமுதாய நாகரீகத்தின் உயிர்ப்புச்சக்தியுடன் கூடிய ஜீவனாவது இம்மாதிரியான கட்டுப்பாடுகளிலே நசித்துப் போக ஏது இருக்கிறது. மனித உணர்ச்சிகளைப்பற்றி, மன விகாரங்களைப்பற்றி எழுத முற்படும் போது கட்டுப்பாடுகளை அறுத்தெறிய வேண்டியிருக்கிறது."
கு. ப. ரா. வின் சிஷ்யர்களாக
தி. ஜானகிராமன், எம். வி. வெங்கட்ராமன். கரிச்சான் குஞ்சு, ஸ்வாமிநாத ஆத்ரேயன், அ.கி. ஜயராமன், கம்பதாஸன் என்று பலரும் தங்களைப்பற்றி பெருமைப்பட்டுக் கொள்வார்கள்.
கு. ப. ரா.வின் கடைசி நாட்களையும் அவரது மரணத்தையும் பற்றி, தானும் கரிச்சான் குஞ்சுவும். அனுபளித்த வியாகுலத்தைப்பற்றி யெல்லால் 'வழிகாட்டி'
என்ற தலைப்பில்
எழுதிய கட்டுரை வாசகர் வட்டம் வெளியிட்ட கு. ப. ரா. வின் 'சிறிதுவெளிச்சம்' என்ற நூலில் வந்துள்ளது. ஜானகிராமனின் சுயத்வமான வீரியமிக்க நேர்த்தியான கட்டுரை அது.
கணையாழி நவம்பர் 1988- இதழில் திருப்பூர் கிருஷ்ணன்: தி. ஜானகிராமன் நல்ல சிறுகதையாசிரியர். நாவலாசிரியர், அவரைச் சிறந்த நாடகாசிரியர்
என்று கூடச் சொல்லமுடியுமா?
கோமல்சுவாமிநாதன் : சந்தேகமில்லாமல் அவரின் நாலுவேலி நிலம், வடிவேலு வாத்தியார் டாக்டருக்கு மருந்து போன்றவை அற்புதமான படைப்புகள்.
இது கோமலின் கருத்து என்றாலும் தி.ஜா. வின் நாடகங்கள் சாதாரணமானவை தான். நான் நாடகாசிரியன் இல்லை. என்னுடைய இலக்கியத்துறை வேறு என்று தி.ஜா,வே. கூறியுள்ளார்.
"தமிழ் இலக்கியத்திற்கு அவர் செய்த மற்றொரு சேவை மொழிபெயர்ப்புகள்." 'நாவல் கலை' நூலில்
"க. நா. சு. இப்படி சொல்கிறார்.
க. நா. சுப்ரமணியம், தி. ஜானகிராமன் போன்றவர்கள் பல ஆங்கில ஐரோப்பிய நூல்களை மொழிபெயர்த்து, தமிழுக்கு வளமூட்டினர்."
ஜானகிராமன் மொழிபெயர்த்து சிரேஸியா டெல்ட்டாவின் "அன்னை" நாவல்,
போலந்து கவிஞர் டெட்மேஜரின் கதைகளடங்கிய 'கிரிஸ்' என்ற தொகுதியும் வெளிகத்துள்ளதாகத் தெரிகிறது.
பர்லாகர் க்விஸ்ட் எழுதிய ஸ்வீடிஷ் நாவல் "குள்ளன்" இவர் மொழி பெயர்ப்பில் வெளிவந்திருக்கிறது.
அவர் மொழிபெயர்த்த வில்லியம் பாக்னரின் "பன்னிரெண்டு கதைகள்' இன்னும் அச்சுருவம் பெறவில்லை என்றே தோன்றுகிறது. ஹெர்மன் மெல்வின் எழுதிய மோபிடிக் நாவலை யும் மொழிபெயர்த்திருக்கிறார்.
அணுவிஞ்ஞானம், புவியியல் பற்றிய ஆங்கில நூல்களையும் தமிழில் மொழிபெயர்த்துள்ளார்.
சாதனை! சாதனை! இத்தனை சாதனைசெய்த ஜானகிராமன் தன்னுடைய தகுதிக்குக் குறைவாகவே கௌரவிக்கப்பட்டார். இந்த கிருஷ்ணபரமாத்மா பல சிசுபாலர்களால் அவமானப்படுத்தப்பட்டவர். ஒரு இலக்கியப்பாரம்பர்யத்தையே துவக்கி வைத்த இந்த துரோணர் ஏகலைவர்களாலேயேகூட உதாசீனப்படுத்தப்படுகிறார்.
வீழ்ந்த பின்னும் மறைந்தபின்னும் சிகன்டிகளால் அம்புத்துளைபடு கிறார் இந்த பீஷ்மர்.
அவருடைய சாதனை உதாசீனப்படுத்தப்படும் என்பதை அவர் அறிந்தேவைத்திருந்தார் என்றே தெரிகிறது. மலர்மஞ்சம் நாவலில் தஞ்சைக்கோவில் பற்றிக் கூறுவது சுயதரிசனமாகவே படுகிறது.
"ஆட்டுமந்தை படுத்திருப்பது போலீருக்கிறது. மதிலும் கோட்டையும், கோயில் கோபுரம் இடையனை போலவும் நிற்கிறது.
இவ்வளவும் செய்து என்னஆச்சு? இந்த இரண்டு காக்காய் குடியிருக்கிறதுக்காக இத்தனை பெரிய கோயில் கட்டனுமா?
எத்தனை கருங்கல்! எத்தளை ஆளு! எத்தனை சில்பி!
ஒரு மனுஷனுக்கு இவ்வளவு அகம்பாவம்மான்னுதான் இந்த இரண்டு காக்காயும் சிரிச்சுண்டிருக்கு,
அவ்வளவும் உண்மை, நாமெல்லாம் என்ன சாகசம் பண்ணினாலும் அதுக்கெல்ல்லாம் இப்படி ஒரு காலம் வரும்.
ஐந்தாறு எருதின் பருமனுக்கு ஒரு நந்தி, மூன்று ஆள் உயர லிங்கம், வானக் கோலாய் வடித்த கோபுரம், ஆகாயத்தைப் போல பிரகாரம் இவைகளுக்கு மரியாதை இல்லை. யாரும் சீந்தக் காணோம். நானும் அப்படியே இருந்து விட்டால் போகிறது"
இந்த இலக்கிய உலகின் அசமந்தத்தைத் தெரிந்தேதான் தி. ஜானகிராமன் இப்படிச் சொல்கிறாரோ?
....
1989 நவம்பர் மாதம் 19ம் தேதி புதுவை பல்கலைக்கழகத்தில் வாசிக்கப்பட்ட கட்டுரை.
"மேலும்" இலக்கிய இதழில் 1990 மே மாத இதழில் வெளி வந்தது.
......
https://www.facebook.com/share/p/1D65gXCeTn/
https://www.facebook.com/share/p/162aWh8J7d/
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.