அதிமதுர 'மதுர'
குருவி மண்டயன்,
சட்டி மண்ட, தொல்ல, முட்டா தாசு, கொலாப்புட்டன், மொட்டயன், மண்ட மூக்கன், ஒத்த காதன் இவிங்களெ அரசரடி ஆரப்பாளையம் ரோட்ல பாத்தவுன்னே,
உருண்ட விழியன் பம்மிட்டான்.
நாலு சார்மினார் சிகரட் வாங்கித்தர சொல்வாங்கெ. காசு கேட்டு அரிப்பாங்கெ.
இன்னக்கி தாப்பு ஆர்வி நகர் பேஸ்மட்டம். அஞ்சடி செங்கச்செவரோட அரகொறயா நிக்குது.
போய் ஒக்காந்தாங்கெ.
முட்டா தாசு பாட ஆரம்பிச்சான்
' கோமாதா எங்கள் குலமாதா, குல மாதர் நலம் காக்கும் குணமாதா '
மொட்டயன் நாலு சிகரட்ட முக்கா வாசி உதுத்தான்.
குருவி மண்டயன் அயிட்டம் தூள கொஞ்சம் சிகரட் தூளோட சேத்து கசக்கி ஏத்தி, ஒன்ன பத்த வச்சி நல்லா இழுத்துட்டு ரவுண்ட்ல விட்டான்.
ஒத்த காதன் ' வேளெடுக்கும் மரபிலே வீரம் செறிந்த மண்ணிலே பால் குடிக்க வந்தவனே ' பாடும்போது தீட்னி தெனகரன் பேஸ் மட்டத்தில நொழஞ்சி
'ஒத்த காதா, பால் குடிக்கவாடா நான் வந்திருக்கேன். நாளக்கி தினமலர் பேப்பர பாருங்க. அப்ப தெரியும் ' னு சத்தமா சொல்லிட்டு, இவங்களோட சேராம பேஸ்மட்டத்ல அடுத்த பகுதிக்கு போய் ஒக்காந்துட்டான்.
'நாளக்கி தினமலர் பேப்பர பாருங்க' -
கவன ஈர்ப்பு டயலாக்.
மரிஜுவானா ஸ்மோக் பண்ணிக்கிட்டு இருந்ததுனால எவனுமே தீட்னி டயலாக்க சட்ட பண்ணல.
பேண்ட் பாக்கெட்ல வச்சிருந்த மூட்டைப்பூச்சி மருந்த எடுத்தான்.
இவன பாக்குற வாகுல ஒக்காந்திருந்த கொலாப்புட்டன் கவனிக்கும்படியா ( கவனித்தே ஆகும்படியா) ஓவர் ஆக்டிங் பண்ணி மூட்டைப்பூச்சி மருந்த விருட்டென்று முதுகுப்பக்கம் மறச்சான்.
தீர்மானமான கவன ஈர்ப்பு.
கொலாப்புட்டன் கண்ணாலயே 'என்னடா'
தீட்னி தெனகரன் 'ஒன்னுமில்ல' ன்னு பாவனை.
சல சலன்னு தாப்புல ஓலப்பாயில நாய் மோண்ட மாதிரி பேச்சு.
'தாசு, இன்னொரு பாட்டு பாடு '
முட்டா தாசு போலீஸ் வேலையில இருந்து டிஸ்மிஸ் ஆனவன்.
' கலக்கமா மயக்கமா மனதிலே குழப்பமா ' பாட ஆரம்பித்தான்.
தீட்னி தெனகரன் மூட்டப்பூச்சி மருந்து கார்க்க வாயால கடித்து கொலாப்பட்டன் கவனத்த ஈர்த்தான்.
கொலாப்புட்டன் மீண்டும் கண்ணாலயே தீட்னிய ' என்னடா? '
தீட்னி வம்படி சோகமாக
'ஒன்னுமில்ல' ன்னு தலய மட்டும் ஆட்டி, அவசரமாக மருந்தை மறச்சிக்கிட்டான்.
தீட்னி தர்ற சூசக தகவல மறுதலித்து
தாசு பாட்டுக்கு கொலாப்புட்டன் ரசிச்சி ஆஹாகாரம் செய்து சொக்கினான்.
தீட்னி எந்திரிச்சு இவுங்க இருக்கிற பக்கம் வந்து சோகமாக 'ஊக்கு வேணும்டா' ன்னான்.
'யாராவது ஊக்கு இருந்தா இவனுக்கு குடுங்கடா ' ன்னு கொலாப்புட்டன் ரெகமன்டேசன்.
மண்ட மூக்கன் இடுப்பு அரணாக்கயித்தில இருந்து
ஊக்க எடுத்து கொடுத்தான்.
பக்கத்து பகுதிக்கி போயி கொலாப்புட்டன் எசவா பாக்க ,
தீட்னி தெனகரன் ஊக்கால
பாட்டில் மூடி கார்க் தெறக்க பகீரதப்ரயத்தனம்.
தெறந்த வேகத்தில மருந்த இவனே கொட்டும்படியா செய்து, 'அடச்சே, அம்புட்டும் கொட்டிச்சே, எனக்கு சாகக்கூட கொடுத்து வக்கலியா ' ன்னு கத்தும் போது தான்,
அன்னக்கி தான் முட்டா தாசு பிரபலமான தன்னோட அந்த கவிதைய முதன் முதலா சுட சுட சொன்னான்.
' முதல் கோணல் முற்றிலும் கோணலல்ல. முடிவில் கொடைக்கானல் தான் '
மூக்க வெடச்சி ஆட்டு மூக்கன்
' மூட்டப்பூச்சி மருந்து நாத்தம்டா'ன்னான்.
தீட்னி தெனகரன் வந்து ஆக்ரோஷமாக கொலாப்புட்டன பாத்து " நீயெல்லாம் மனுஷனாடா, நான் சாகப்போறேன்னு தெரிஞ்சும் அசால்ட்டா பாத்துக்கிட்டே இருக்கியேடா, ஏன்டா ஒனக்கெல்லாம் ஈவு எறக்கமே இல்லயேடா, கல்லு மனசுடா டேய்..கொலகாரப்பாவி.. "
எல்லாரையும் பாத்து " லவ் ஃபெயிலியருடா" ன்னு
'ஓ'ன்னு அழ ஆரம்பிச்சிட்டான் தீட்னி.