Share

Oct 30, 2022

சொல் ஏர் உழவர் பகை


எழுத்தாளரோட மகன் ஒர்த்தன் 
"எங்கப்பாவ படிக்கிற. 
அவரப்பத்தி எவ்வளவோ எழுதுற. 
நான் எழுதுனத ஏன்டா படிச்சு என்னய பத்தி எழுத மாட்டேன்ற? "ன்னு
 என் கிட்ட கடும் பகையாயிட்டான்.

நடிகையர் திலகம் சாவித்திரி பற்றி
 நான் குமுதத்தில் எழுதியதை படித்து விட்டு, 
"என்னய பத்தி எழுதுங்க "ன்னு அனத்துன 
ஒரு ரொம்ப வயசான 
பிரபல 'எழுத்து பிராணி' கூட உண்டு.

புலி வால்

ஃபேஸ்புக் ஃப்ரண்ட்ஸ் லிஸ்ட் ஐயாயிரம் தாண்டி இன்று இரண்டு வருடமாகிறது. (ஜூன் 2019). 

யோசிக்காம  கையில் அகப்பட்டவர்களை அன்ஃப்ரண்ட் செய்து கொண்டு இருக்கும் போதே தினமும் புது ஃப்ரண்ட் ரிக்வஸட் வந்து கொண்டே தான் இருக்கிறது. 
களையெடுக்கும் போது பயிரும் அடி வாங்குவது நடக்காமலிருக்குமா? 

ஐயாயிரம் மீ்ண்டும் மீண்டும் நிரம்பி வழிகிறது. 

போன வாரம் அன்ஃப்ரண்ட் செய்யும் போது  Stress. 

ஐயாயிரம் ஃப்ரண்ட்ஸ் ல நாலாயிரத்து தொள்ளாயிரம் பேர் யாரென்றே தெரியாது. இவர்களில் பெரும் பகுதி dead account என்பதும் தெரிந்தது தானே. 

கணக்கிலடங்காத முகவர்களை block செய்தாகி விட்டது. 

மீண்டும் மீண்டும் ஐயாயிரம் லிஸ்டில் வந்து விடுகிறது.

 ஃப்ரண்ட் லிஸ்ட்டில் இல்லாதவர்கள் பலர் 
என்னை வாசிக்கிறார்கள். சிலர் கமெண்ட் போடவும் செய்கிறார்கள். 

ஃப்ரண்ட் லிஸ்டில் இருப்பவர்களிலும்
 லைக் கொடுக்காமல்,
 கமெண்ட் போடாமல் 
வாசிக்கிறவர்கள் இருக்கிறார்கள். 
படிக்காமலே லைக் கொடுக்கிறவர்கள் கூட. 

 ஃபேஸ்புக்கில் என்னை மட்டுமே படிக்கும்
 சிலர் உண்டு.  ஒவ்வொரு பதிவு பற்றியும் சொல்வார்கள். லைக் கொடுப்பதில்லை. 
ஏன் லைக் கொடுக்கவில்லை, கமெண்ட் போடுவதில்லை என்று நான் கேட்டதேயில்லை.
என்னுடைய மிகச்சிறந்த வாசகர்கள் சிலர் கமெண்ட், லைக் ஒரு தடவை கூட போட்டதேயில்லை தெரியுமா? 
என் ஃப்ரண்ட் லிஸ்டிலும் அவர்கள் கிடையாது. 
 சிலர் இங்கே படித்து விட்டு வாட்ஸ் அப்பில் கமெண்ட் போடுவார்கள். 
பதிவு போட்ட அந்த சில நிமிடங்களில் படிப்பவர்களை அறிவேன்.

பதிவுகளுக்கு லைக் கொடுக்காமல்
 ஃபேஸ்புக் ஸ்டோரியில் புகைப்படங்களுக்கு லைக் கொடுப்பார்கள். ஸ்டோரியில் லைக் கொடுத்தால் மற்றவர்களுக்கு தெரியாது என்பதால். 

எனக்கு லைக், கமெண்ட் தேவையில்லை என்று   இரண்டு ஸ்டேட்டஸாக 
கடந்த ஐந்து வருடங்களில் போட்டிருக்கிறேன். 

 Blog 24 மணி நேரம் வாசிக்கப்படுகிறது.
 ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கில். 

ஃபேஸ்புக்கில் இல்லாதவர்கள் ப்ளாக்கில் தான் படிக்கிறார்கள். யாரும் அதுல பின்னூட்டம் செய்ய முடியாது. 

ட்விட்டரில் படிக்கிறார்கள்.

Copy Cats தொந்தரவு. 
எவ்வளவு பதிவுகள் திருடப்பட்டது?
யூட்யுப் உள்பட தொடரும் களவுகள்.
ராஜநாயஹத்திற்கு தான் இப்படி  நடக்கிறது என்கிறார்கள்.

ஃபேஸ்புக் என்பதே 

புலி வால புடிச்ச கத.

தினமும் என் மொபைல் நம்பர் ஃபேஸ்புக் மெஸஞ்சர் பாக்ஸில் கேட்கிறார்கள். 
ஃபேஸ்புக் மெஸஞ்சர் மூலமாக கால் போட முயற்சிக்கிறார்கள். 

"ஒங்கள நேர்ல சந்திக்கனும் ராஜநாயஹம் சார்"

போன் போட்டவர்கள் ரெண்டு மணி நேரம் 
பேசி விட்டு 'சாரி சார், போன்ல சார்ஜ் போயிடுச்சி' 

தன் வலைத்தளத்தை படிக்க வேண்டும் என்று நூற்றுக்கணக்கில் கேட்கிறார்கள். 

எழுதிய பதிவு, கதை லிங்க் அனுப்பி
'படிங்க..அதோட கட்டாயம் உங்க அபிப்பிராயம் உடனே, உடனே சொல்லனுங்க'ன்னு எனக்கு மிரட்டல்.

வீடீயோ அனுப்பி, அதை பார்க்கச் சொல்கிறார்கள். அபிப்ராயம் சொல்லவில்லை என்று சடைக்கிறார்கள். 

எழுத்தாளர்கள், கவிஞர்கள் தங்கள் புத்தகங்கள் 
அனுப்ப வேண்டி, விலாசம் கேட்கிறார்கள். 

'ராஜநாயஹம் நீங்க நல்லா எழுதுறீங்க. 
உங்க விலாசம் கொடுங்க. என்னோட அஞ்சு புத்தகங்கள அனுப்புறேன்.. '

புத்தகங்கள் அனுப்பியவர்கள் 'இன்னேரம் நொறுங்கியிருக்கணுமே' என்று 'ஏன் இன்னும் விமர்சனம் செய்யவில்லை' என்ற எரிச்சலில். 

ஏதோ, நான் கடன் வாங்கி விட்டாற் போல. 

புத்தகம் எதுவும் அனுப்பாட்டியும் ,  
இவனா தானாவே நம்மள படிச்சி எழுத மாட்டேன்றானேன்னு எரிச்சல்ல இருக்கிறவர்களும்  உண்டு.

ரொம்ப பெரிய எழுத்தாளர் மகன் ஒர்த்தன் 
 தான் எழுதியுள்ள  புத்தகங்கள
 ராஜநாயஹம் படிக்கலன்னு 
கடும் பகையாயிட்டான். 
ரொம்ப பெரிய எழுத்தாளர படிச்சதுக்கு இப்படியெல்லாம் தண்டனை. 
"எங்கப்பாவ படிச்ச. ஏன்டா நான் எழுதுனத படிக்க மாட்டேன்ற. என்னய பத்தி எழுத மாட்டேன்ற.. அயோக்யா. ஒன் கூட 'டூ'. போடா"ன்னுட்டான். 

அன்னாடம் புளுபுளுன்னு எழுத்தப்புழுத்தி, கவிதய புழுத்தி
அனுப்பி, அனுப்பி.. 
"படிங்க, படிச்சிட்டு இதைப்பத்தி எழுதுங்க"ன்னு
தொடர் தொந்தரவுகள்.

ஆடு புழுக்க போடுறது போல மொத்த மொத்தமா போடுறீங்க, போட்டுக்கங்க.. 
என்ன ஏன் அத மோந்து பாக்க சொல்றீங்க.

Internet magazines : 'எங்களுக்கு ஒரு ஆர்ட்டிக்கிள் எழுதியனுப்பவும். நீங்கள் புதிதாக எழுதியதாக இருக்க வேண்டும்.' 

"எங்க நாடகத்த பார்க்க வாங்களேன். ரொம்ப வித்தியாசமான நாடகமாக்கும்.. பாத்துட்டு அதப்பத்தி நல்லா எழுதுங்களேன்"

தங்களின் எதிர்பார்ப்பை நான் ஈடேற்றாததால் 
வருத்தத்திலும் கோபத்திலும் வேறுவிதமாக வினையாற்றுகிறார்கள். 
எதிரிகளாகிறார்கள். 

'ராஜநாயஹம் தலக்கனம் பிடிச்ச ஆளு.' 

என் போராட்டமான வாழ்க்கை முறை, 
மற்றவர்கள் எதிர் பார்ப்புக்கு 
ஈடு கொடுக்கும் 
நிலையிலெல்லாம் இல்லை. 

யதார்த்தவாதி வெகுஜன விரோதி.

(சென்னை வந்து ஆறு வருடங்கள் ஒன்பது மாதங்கள் ஆகிறது.  ஆறாவது வீடு 
மாறி விட்டேன்.
(13.09.2015  - 03.06.2022)

இப்போது 
அப்பார்ட்மெண்ட்
 பதினான்காவது மாடியில் ஃப்ளாட். எப்போதும் போல வாடகை வீடு தான்.
இல்லாதவனுக்கு பல வீடு..

2020ல் கண்ணில் லேசர் ட்ரீட்மெண்ட்.
இந்த வருடம் 2022 ஜனவரி மாதம் கொரானா.
மார்ச் மாதம் உடலில் இரண்டு சர்ஜரி.  சொல்லொண்ணா துயர அனுபவம்.

சர்ஜரி முடிந்த பிறகும் தொடர்ந்து அவஸ்தை - வயிற்றுக்குள்ளிருந்து ஒரு ட்யூப் இடுப்பு வழியே உடலுக்கு வெளி வந்து ஒரு கலெக்ஷன் பேக். நான்கு வாரம் தொங்கிய கலெக்சன் பேக் - பித்தநீர்த்துளிகள், ரத்தத்துளிகள் வெளியேற்றத்திற்காக)

இவர்கள் யாரையுமே' என்னை படியுங்கள் ' என்று நான் கேட்டதேயில்லை. 

எல்லோருமே என்னை படித்தவர்கள். 
பரஸ்பரம் வேண்டுகிறார்கள்.

ம்ஹூம். மாட்டேன், போ. 

..

https://m.facebook.com/story.php?story_fbid=3127787564101355&id=100006104256328

https://www.facebook.com/100006104256328/posts/2238469029699884/

https://m.facebook.com/story.php?story_fbid=3085598808320231&id=100006104256328

https://m.facebook.com/story.php?story_fbid=3337229939823782&id=100006104256328

Oct 28, 2022

Acid Wit


Acid Wit

மணி ஜி: 

"ஒரு பத்திரிக்கையாளர் சொன்னது .. பிரசாத் லேபில் பிரஸ் ஷோவில் உணவும் வழங்குவார்கள். 
ஒருத்தர் எல்லா நிகழ்வுகளுக்கும் வந்து சாப்பிடுவாராம். 
ஒரு நாள் அவர் பிரஸ் இல்லை என்று கண்டிபிடித்து விட்டார்கள். 
எப்படி என்றால் 
'ஏன் சாம்பார்ல உப்பு கம்மியா இருக்கு'ன்னு கேட்டிருக்கார் ;-)"

https://m.facebook.com/story.php?story_fbid=797868314840860&id=100038530955909

Irony

Irony

பலி கொடுக்க கொண்டு வந்த கோழி உயிருடன்

Oct 23, 2022

பா.செயப்பிரகாசம்

1990. புதுவை.
கி.ரா லாஸ்பேட்டை வாடகை வீடு. 

கி.ரா சில விநாடிகள் உற்றுப் பார்த்து விட்டு 
"ஓ, ராஜநாயஹம்'

"சில நேரங்கள்ல இப்படி ஆகிடுது. இடைச்செவல்ல மதிய வெய்யில் நல்லா கொளுத்துது.சரியான புழுக்கம். எழுதிக்கிட்டு இருக்கேன். 
குள்ளமா வேர்த்து விறுவிறுத்து வந்து முன்னால நின்னு சிரிக்கார்.
யாருன்னு கேக்கேன். தெரியலியான்னு சிரிக்காரு.

சட்டுன்னு ஞாபகம் வர்து.
ஓ! செயப்பிரகாசம்.
எழுத்தாளர் பா.செயப்பிரகாசம். நல்லா பழகுனவரவே யாருன்னு கேட்டுட்டேன் பாத்துக்கிடுங்க.."


1981ல 
மதுரை 

மீனாட்சி புத்தக நிலையத்தில்                 பா.செயப்பிரகாசத்தின்
 "காடு" வாங்கி, 
சரவணன் மாணிக்கவாசகமும் நானும் படிச்சிருக்கோம்.
சூரிய தீபன் 'இரவுகள் உடையும்' படிக்க கிடைக்கவில்லை.
சூரிய தீபன் தான் பா.செயப்பிரகாசம்னு சொன்னாங்க.

2016

சென்னையில் 
கே.ஏ. குணசேகரன் இரங்கல் கூட்டத்தில் பார்த்த போது
பா.செயப்பிரகாசம்  விசிட்டிங் கார்டு கொடுத்தார்.

2020

பா. செயப்பிரகாசம் கடுமையாக ஜெயமோகன் தாக்குதலுக்கு உள்ளான போது, 
செயப்பிரகாசத்திற்கு ஆதரவாக திரண்டு கையெழுத்திட்ட எழுத்தாளர்கள்...

சினிமா எனும் பூதம் - பாகம் 2 பற்றி வீரன்மணி பாலமுருகன்



வீரன்மணி பாலமுருகன் :

"நவீன இணைய தேடுபொறிகளும் வியந்து அதிசயக்கும் தகவல்களின் வற்றா ஊற்றுதான் பன்முக கலைஞர், அபூர்வ மனிதர் R.P. ராஜநாயஹம். Rajanayahem R.p. அவரால் தான் சரித்திர நாயகனையும் சாமானிய மனிதனையும் தன் எழுதுகோலால் ஒரே நேர்கோட்டில் நிறுத்த முடியும். ஒரு இடி மழை பெய்வது போலும் ஒரு பூத் தூறல் படர்வது போலும் பல சுவாரசியங்களை கொண்டது அவரின் பொழிவு. அவரின் எழுத்தாக்கங்களின் வரிசையில் இப்போது பேசப்பட்டு கொண்டாப்படும் "சினிமா எனும் பூதம்" முதலிரண்டு பாக நூல்கள் என்பது அரிய திராட்சை கொத்துக்களைக் கொண்டு வடித்து பனிப்பாறைக்குள் பன்னெடுங்காலம் பாதுகாக்கப்பட்ட செறிவூட்டப்பட்ட ஒயின் போன்ற தகவல்களின் மது ரசம் என்பேன்."

சினிமா எனும் பூதம் - பாகம்- 2-
 R.P. ராஜநாயஹம்:

பிரதிக்கு:
தோட்டா கம்பெனி 
விற்பனை உடுமலை.Com 73 73 73 77 42
முதல்பதிப்பு செப்டம்பர் 2022
விலை ரூ.240.

Oct 20, 2022

நடிகர் பூவலிங்கம்

மதுரை அரசரடி ஆரப்பாளையம் ரோட்டில் இவரை அறிந்தவர்கள் இருந்தார்கள். 
இவருடைய தாயார் அங்கே மெய்யப்பன் இரண்டாவது தெருவில்.

இந்த நடிகர் பெயர் பூவலிங்கம்.
இரவில் ஆரம்பித்து விடிய விடிய நடக்கும் ஸ்பெஷல் நாடகங்களில் நடிப்பவர்.

பாஸிங் ஷோ சிகரட்ட வாயில இருந்து எடுத்து புகைய ஊதிக்கொண்டே சப்ப காலன் "பூவலிங்கம் ஆள் பாக்க நடிகர் சிவகுமார் மாதிரி இருப்பான்யா."

குழந்தை நட்சத்திரம் பேபி ராணி முக்கிய பாத்திரத்தில் நடித்த படம் 'ராணி யார் குழந்தை'.

முன்னதாக பத்மினி நடித்த 'குழந்தைக்காக'விலும் பேபி ராணிக்கு டைட்டில் ரோல் தான்.

கே.எஸ்.ஜி "சித்தி" படத்தில் குழந்தைகளாக அறிமுகம் ஆனவர்கள் மாஸ்டர் பிரபாகரும்,
பேபி ராணியும்.

பேபி ராணி இப்போது ஹைதராபாத்தில் இருக்கிறார்.

இந்த "ராணி யார் குழந்தை"யில் 
'யார் குழந்தை நீ?, நீ யார் குழந்தை?'
என்று ஒரு பாடல். 
T. M.செளந்தர்ராஜன் பாடியிருந்தார்.
 பாடிக்கொண்டே நடந்து வருகிற நடிகர் பூவலிங்கம் 'யார் குழந்தை நீ? நீ யார் குழந்தை?' 

குருவி மண்டையன் மூக்கு மேல் விரல் 'யோவ் பூவலிங்கத்துக்கு இந்த படத்தில T.M.S. பாட்டுய்யா!'

லட்சுமி, ஜெய்சங்கர், முத்துராமனெல்லாம் நடித்த ' ராணி யார் குழந்தை' மதுரை தேவி டாக்கீஸில ஊத்திக்கிச்சு.

பூவலிங்கத்தின் அம்மா இந்த படத்த மகனோட பாட்டு சீனுக்காகவே பாத்து 'இந்தப்பாவி பெத்த புள்ள தான்டா நீ'ன்னு வாய் விட்டு புலம்பி கண்ணீர் விட்டு புலம்பினார்.

சினிமாவுல வர்ற அம்மாக்கள் போல தோற்றம்.

வறுமையில் இருக்கிற ஏழை கைம்பெண் பார்க்க வேண்டிய எல்லாத்துயரங்களையும், சீரழிவுகளையும்  எதிர் கொண்டவர். வீடுகளில் வேலை செய்து வயிறு கழுவுகிற துர்பாக்கிய அபலை.

பூவலிங்கம் ஒரு காட்சியில் தலை காட்டிய இன்னொரு படம்
 'குறத்தி மகன்'.
ஐஸ்கிரீம் வண்டிக்காரராக.

பழைய படமாக டூரிங் தியேட்டர்ல பல வருஷங்கழிச்சி எப்ப குறத்தி மகன பாக்கும் போதெல்லாம் ஆட்டு மூக்கன் கூப்பாடு " இந்தா பூவலிங்கம். ஐஸ் விக்கிறவன் நம்ம பூவலிங்கம்யா".

'ராணி யார் குழந்தை'யில் கூட டைட்டிலில் பூவலிங்கத்தின் பெயரை போடவில்லை.


பூவலிங்கத்திற்கு தம்பி சோமு. மாவாட்டுவது போல  வீட்டு வேலைகள்  தான் வீடுகளில் செய்துகொண்டிருந்தார்.
பார்த்திருக்கிறேன்.
அம்மா படம் பார்த்து அழுததையெல்லாம் சொன்னது சோமு தான்.


https://youtu.be/vx_FoW2_iwM

Oct 19, 2022

பார்த்த 'சாரதிகள்'

ஒவ்வொரு முறை கலைஞர் டிவிக்கு 'சினிமா எனும் பூதம்' தொடர் ஷூட்டிங் செல்லும் போதும், வரும் போதும் கேப் டிரைவர்கள் பலவிதமானவர்கள்.

நேற்று மாஸ்டர் பிரபாகர், மாஸ்டர் ராஜ்குமார் பற்றிய இரண்டு 'சினிமா எனும் பூதம்' ஷூட்.

கேப் டிரைவர் அஜித் ஒரு மலையாளி இளைஞர்.
கேப்பிடல் திருவனந்தபுரத்தில் பிறந்து வளர்ந்தவர். மோகன்லால் வீட்டுப் பக்கம் தான் டிரைவர் அஜித் வீடு.

சென்னை வந்து இரண்டு வருடங்கள் ஆகிறது.
அவருடைய தாய் மொழியில் தான் இயல்பாக பதில் பேசுகிறார்.

சமூக சூழலால், ஊடகங்களால் கொஞ்சம் கூட பாதிக்கப்படாத வாலிபன்.

கமல் தெரியவில்லை. 
"எனீக்கி அறியில்ல" என்பதாக பதில்.
'கமல்' என்ற வார்த்தை பாரதீய ஜனதா சிம்பலா? கை விரல்களை பூ போல் விரிக்கிறார். லேடிஸ் ஜுவல் 'கம்மல்' ? காதைத் தொட்டு கேட்கிறார்.

சக்கை போடு போட்ட கமலின்"விக்ரம்" சினிமா, டி.வி. பரபரப்பு கமலின் "பிக் பாஸ்" எதுவும் நிஜமாகவே தெரியவில்லை. போட்டோ பார்த்தால் கமல் தெரிந்த முகமா? பார்த்த முகமா? என்று கண்டு பிடிக்க முடியும். 
இதை மலையாளத்தில் அவர் சொல்லும் போது புரிந்து கொள்ள முடிகிறது.
அவருடைய ஜெனரல் நாலட்ஜில் ரஜினி, அஜித் இருக்கிறார்கள்.
விஜய் தெரியாது. கமல் தெரியாது.

தமிழக முதல்வர் ஸ்டாலின் என்பதை நன்கு அறிந்த டிரைவர் இந்த அஜித்.
உதயநிதி ஸ்டாலின் முதல்வரின் மகன் என்பதை நன்றாக புரிந்து வைத்திருக்கிறார்.

இது வரை தியேட்டருக்குப் போய் இரண்டே இரண்டு திரைப்படம்  பார்த்திருக்கிறார். ஒரு இந்திப் படம்.
'ஜெய்ஹோ' அந்த நடிகர் சல்மான் கானா என்று சந்தேகமாக குழம்புகிறார்.  இன்னொரு படம் மோகன்லால். படம் பெயர் ஞாபகம் இல்லை.

இன்னொரு டிரைவர். 
சினிமா எனும் பூதம் ஷூட் முடிந்து தேனாம்பேட்டையில் இருந்து மாம்பாக்கத்திற்கு கிளம்பும் போது வழியிலெல்லாம் 'மாம்பாக்கத்தில் உள்ள முருகேஸ்வரர் கோவில் புதுப்பிக்கப்பட வேண்டும். ஐநூறு வருட பாரம்பரியமான கோவில். கைங்கரியம் செய்யும் சிவனடியார்களை இந்த டிரைவர் நன்கு அறிந்தவர். மெட்ராஸ் கிறிஸ்டியன் காலேஜில் பேராசிரியராக இருந்த பெரியநாயகம் என்ற சிவபக்தரிடம் இந்த மாம்பாக்கம் சிவன் கோவில் கைங்கரியம் பற்றி பேசினால் ஏதேனும் வழி பிறக்கலாம்.' என்று மிகுந்த அக்கறையுடன் பேசிக்கொண்டே வந்தார்.
அவருடைய பெயர் கேட்டேன். 
அந்த டிரைவர் பதில் "சார், என் பேரு கேப்ரியல்.நான் பெந்தகோஸ்து கிறிஸ்டியன்"

சினிமா எனும் பூதம் - பாகம் 2 சரவணன் மாணிக்கவாசகம் பார்வையில்

"சரவணன் மாணிக்கவாசகம் பார்வையில்"


சினிமா எனும் பூதம் - பாகம்- 2-
 R.P. ராஜநாயஹம்:

ஆசிரியர் குறிப்பு:

R.P. ராஜநாயஹம் ஒரு எழுத்தாளர், பேச்சாளர், நடிகர், பாடகர், சங்கீதரசிகர், இயக்குனர், கூத்துப்பட்டறை ஆசிரியர், பெரும் வாசகர், அரசியல் உட்பட பலவிசயங்களை எழுதும் பத்தி எழுத்தாளர்,  சினிமா தகவல்களை (ஹாலிவுட், உலகப்படங்கள் உட்பட) மூளையில் சுரங்கம் போல் வைத்திருப்பவர், இத்தனைக்கும் மேல் சிறந்த மனிதர். தற்போது முரசு டிவியில் சினிமா எனும் பூதம் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிக் கொண்டிருக்கிறார்.

எண்பதுகளில், மதுரையில் இவரோடு பழைய படங்கள் பார்ப்பதென்றால் ஒரு பட்டாளமே பரவசமாகத் தயாராகி விடும்.  சினிமாவுக்குப் போகுமுன்பே  வாழ்வில் ஓர் திருநாள் பாடலில் பாகவதர் குதிரையில் அமர்ந்து சேலையைப் பிடித்து இழுப்பது பண்டரிபாயை என்பது போன்ற தகவல்கள் படம் பார்க்கும் கூட்டத்திற்கு முன்னெச்சரிக்கையாக்கி விடும்.  அந்தக் காட்சியில் "ஆமாம் தோழரே'" என்று குரல்கள் கேட்கும்.  வசந்தமாளிகையில் அம்மா ரோல் நடிகை யார், அசோகன் படத்தில் ஹேமமாலினிக்கு நேர்ந்த அநீதி முதலிய Data சகிதம் போவோருக்கு, திரையரங்கில் மற்றவர்களை விட தாம் ஏதோ ஒரு விதத்தில் உயர்ந்தவர்கள் என்ற மமதை இருக்கும்.  அது கூகுள், Wikipedia முதலியவைகள் இல்லாத காலம். 

சினிமா எனும் பூதம் நூலின் வெற்றிக்குப் பிறகு இரண்டாம் பாகம் வெளிவருகிறது. குறைந்தபட்சம்  சினிமா எனும் பூதம் பத்து பாகங்கள் எழுதும் அளவிற்கு இவரிடம் விஷயங்கள் இருக்கும்.  உதாரணத்திற்கு கமலின் நகைச்சுவை பற்றிய கட்டுரையில் அவள் ஒரு தொடர்கதையின் விகடகவி ரோல் நாகேஷ் பாணி ரோல் என்றிருப்பது குறிப்பிடத்தக்கது. பின்னாளில்,  வளரும் நடிகராக இருந்து கொண்டு இந்தப் பாத்திரத்தை கமல் ஏன் செய்தார் என்று நான் யோசித்திருக்கிறேன். 

T R ராஜகுமாரி குடும்பத்திற்கு செய்த தியாகம்,  எம்.கே.ராதாவிற்கு எம்.ஜி.ஆரின் பதில்,  சிவாஜி," அண்ணே நூறு ரூபாய் நோட்டை முழுசா பார்ப்பேனா" என்றது,  , டைரக்டர் மகேந்திரன் மோகமுள்ளை படமாக்க எடுத்த முயற்சி, எல்லாம் மாயை தானா பாடிய போது கே.ராணிக்கு ஒன்பது வயது என்ற விஷயம்,   மனோரமா காக்கா ராதாகிருஷ்ணனுக்கு ஜோடியாக மாலையிட்ட மங்கையில் அறிமுகமானது என்பது போல் தகவல்களால் நிறைந்த நூல் இது.  தகவல்கள் என்றால் கூகுள் செய்து பெற முடியாத தகவல்கள். நடிகை சீதாலட்சுமியைப் பற்றி ஒருவர் இரண்டு பக்கங்கள் எழுத முடியும் என்பது நாம் படித்திருக்காவிட்டால் நம்மால் நம்ப முடிந்திருக்கப் போவதில்லை.

பெரும்பாலும் எழுத்தாளர்களைச் சந்திக்காதவன் நான். அதில் ஆர்வமும் இருந்ததில்லை.  ஆனால் ஒரு எழுத்தாளரை நன்கு அறியும் பொழுது அவர்கள் எழுதும் எழுத்துக்களில் பலருக்கும் தெரியாத ஒன்றை நாம் கவனிக்க முடிகிறது.  இவர் எழுதியிருக்கிறார்: "  இது இயல்பான ஒன்று. நினைவில் நிழல் விழுவதும்,  ஞாபகச்சிக்கல் ஏற்படுவதும்"

ஹாலிவுட்டின் Blockbuster படங்கள் பல இந்த நூலில் கட்டுரைகளாக வந்திருக்கின்றன. 
க்ளார்க் கேபிள் குறித்து இவ்வளவு சுவாரசியமாக யார் சொல்ல முடியும்.  When Harry met Sally படத்திற்கும் ஜானகியின் நிலா காயுதேக்கும் என்ன தொடர்பு. Associative memory தான் தொடர்பு. 

புத்தக விமர்சனங்கள் வாசித்த புத்தகங்கள் குறித்து என்ன எழுதியிருக்கிறார்கள் என்ற ஆர்வத்தை ஏற்படுத்தலாம். வாசிக்கவில்லை என்றால், அதில் பெரிதான ஆர்வம் பலரும் காட்டப்போவதில்லை.  ஆனால் இந்த நூலில் குறிப்பிடப்பட்டிருக்கும் பல விஷயங்கள் யார்  வேண்டுமானாலும் உடன் ரசிப்பவை.  அதனாலேயே அதிகபட்ச எழுத்துத்திருட்டு இவரது சினிமா குறித்த பதிவுகளில் ஏற்படுகிறது.

நடிகர் சார்லி போனில் சொல்கிறார் " ராஜநாயஹம்! நீங்கள் மிக, மிக, மிகப்பெரிய ஜீனியஸ். உங்களுக்கு மிக, மிக, மிகப் பிரகாசமான எதிர்காலம் இருக்கிறது".

ராஜநாயஹம் சொல்கிறார் " மிக,மிக,மிகப் பிரகாசமான நிகழ்காலம் இருந்திருந்தால் எவ்வளவோ நன்றாய் இருந்திருக்கும்".

பிரதிக்கு:

தோட்டா கம்பெனி 
விற்பனை உடுமலை.Com 73 73 73 77 42
முதல்பதிப்பு செப்டம்பர் 2022
விலை ரூ.240.
#தமிழ்கட்டுரைநூல்கள் 

http://saravananmanickavasagam.in/2022/10/18/%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%be-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%af%82%e0%ae%a4%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-2-r/
...

Oct 8, 2022

ஜெயசித்ரா அம்மா ஜெயஶ்ரீ

ஜெயசித்ராவின் அம்மா ஜெயஶ்ரீ

தெலுங்கு, தமிழ் படங்களில் நடித்துள்ளார்.


1959ம் வருடம்  தெலுங்கில், தமிழில் 
"தெய்வ பலம்" படத்தில் கதாநாயகி.
தெலுங்கில் N.T. ராமாராவ், 
தமிழில் K. பாலாஜி நடித்திருந்தார்கள்.

'மலரோடு விளையாடும் தென்றலே வாராய்' பாடல் இவர் நடித்த பாடல்.

தெலுங்கு "தெய்வ பலம்"
 ஷோபன் பாபு அறிமுகமான 
முதல் திரைப்படம்.

ஜெயசித்ரா பிரபல திரை நட்சத்திரம் ஆன போது
நடிகைகளின் தாயார்களில் ஜெயசித்ராவின் அம்மா ஜெயஶ்ரீ தான் இளமையானவர் என்று
 ஒரு பிரபல வாரப்பத்திரிக்கை எழுதியதுண்டு.

ஜெயசித்ரா அப்பா மகேந்திரா கால்நடை மருத்துவராம்.  வக்கீலாகவும் இருந்தாராம்.

!?

Oct 7, 2022

ஓவியர் சந்ரு படைப்பு

ஓவியர், சிற்பி சந்ரு படைப்பு



ராஜ் லீலா :

"ஆஹா! என்னதொரு அருமையான படைப்பு! "

"சார், பிரம்மாதமான படைப்பு, மிகவும் அழகு!"

"ச்ச, சான்ஸே இல்ல, செமயா இருக்கு, இது வேற லெவல்"

      இவையெல்லாம் கீழ்கண்ட சிலையை தொட்டு, பார்த்து ரசித்தவர்களின் பாராட்டுரை....ஆம்! இச்சிலை ஒரு பொக்கிஷமான படைப்பு. இச்சிலைக்கு மிகப்பெரிய வரலாற்று பின்னணி உண்டு. திறமான ஆய்வுகளுடன் ஓவியர் சந்ரு அவர்களால் இச்சிலையின் ஒவ்வொரு பகுதியும் மிக நேர்த்தியாக படைக்கபட்டுள்ளது.
    பல்வேறு உருவங்களுடன், தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டுள்ள இச்சிலை பார்ப்போர் அனைவரையும் கவர்ந்திழுக்கும். உண்மையில் இது எங்குள்ள சிலை? இதன் வரலாற்றுப் பின்புலம் என்ன? என்ற ஆவல் மிகுதி அனைவரிடமும் உள்ளது.. 
       தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் மேனாள் துணைவேந்தரும், உலக தமிழாராய்ச்சி நிறுவனத்தின் மேனாள் இயக்குநருமான ம.ராஜேந்திரன் அவர்களை சந்திக்க அவரது இல்லத்திற்கு சந்ரு ஐயா உடன் சென்றிருந்தேன். அச்சமயம் இந்த சிலை அவருக்கு வழங்கப்பட்டது. கண்ட உடனே "இது பிரம்மாதமா இருக்கு... வரலாற்று பொக்கிஷம்.." என வியந்து பாராட்டினார். மேலும் "கடந்த வாரம் நம் முதலமைச்சர் டெல்லி சென்று பிரதமரை சந்திச்சார்.. அப்போது பிரதமருக்கு  என்ன நினைவு பரிசு கொடுக்கலாம்னு மினிஸ்டர் என்னிடம் கேட்டார். இதை முன்னரே பார்த்திருந்தால், இதையே கொடுத்திருக்கலாம். மிக அருமையா இருந்திருக்கும்" என்றார்..
     தமிழகத்தின் தலைசிறந்த தலைவரான நல்லக்கண்ணு அவர்கள்   இச்சிலையை பார்த்து " மிகவும் நேர்த்தியான படைப்பு. வரலாற்றுப் புகழ் கொண்ட,  அரிதான     இச்சிலையை பெறுவதில் மிக்க  மகிழ்ச்சி" என்றார். 
  இதைப் போன்று  விசிக தலைவர் டாக்டர். தொல். திருமாவளவன் அவர்களும் இச்சிலை குறித்த முழு வரலாற்றை கேட்டு மகிழ்ந்து, அதன் வடிவமைப்பை  வியந்து பாராட்டினார்...  
         ஆகச் சிறந்த படைப்பான இச்சிலை என்னவென்று அறிந்திருப்பிர்கள். ஆம், நம் தமிழ் நாகரிகத்தை ஒத்த சிந்துவெளி நாகரிகத்தின் முத்திரையே இச்சிலையாகும்.. 
     விலைமதிப்பற்ற இச்சிலை தற்போது அம்பை-குருவனத்தில் தயாராகிறது.. இது மட்டுமின்றி கலைநயமிக்க பல அற்புதமான சிலைகளும்  குருவனத்தில் தயாரிக்கப்பட்டு விற்பனைக்கு  வருகிறது.. மேலும் உலகின் பல நாடுகளில் இருந்து சிலைக்கான ஆர்டர்கள்  வருவதால் மிகப்பெரிய அளவில் தயாரிப்பு தளம் உருவாக உள்ளது. நீங்கள் விரும்பும் எந்த Model-ம் fibre or bronze சிலையாக செய்து தரப்படும்.....
சிலைகள் 
வாங்க விரும்புவோர் தொடர்பு கொள்ள வேண்டிய எண்: 9994188367, 9884992815, 9489204816

- ராஜ் லீலா

...