மதுரை அரசரடி ஆரப்பாளையம் ரோட்டில் இவரை அறிந்தவர்கள் இருந்தார்கள்.
இவருடைய தாயார் அங்கே மெய்யப்பன் இரண்டாவது தெருவில்.
இந்த நடிகர் பெயர் பூவலிங்கம்.
இரவில் ஆரம்பித்து விடிய விடிய நடக்கும் ஸ்பெஷல் நாடகங்களில் நடிப்பவர்.
பாஸிங் ஷோ சிகரட்ட வாயில இருந்து எடுத்து புகைய ஊதிக்கொண்டே சப்ப காலன் "பூவலிங்கம் ஆள் பாக்க நடிகர் சிவகுமார் மாதிரி இருப்பான்யா."
குழந்தை நட்சத்திரம் பேபி ராணி முக்கிய பாத்திரத்தில் நடித்த படம் 'ராணி யார் குழந்தை'.
முன்னதாக பத்மினி நடித்த 'குழந்தைக்காக'விலும் பேபி ராணிக்கு டைட்டில் ரோல் தான்.
கே.எஸ்.ஜி "சித்தி" படத்தில் குழந்தைகளாக அறிமுகம் ஆனவர்கள் மாஸ்டர் பிரபாகரும்,
பேபி ராணியும்.
பேபி ராணி இப்போது ஹைதராபாத்தில் இருக்கிறார்.
இந்த "ராணி யார் குழந்தை"யில்
'யார் குழந்தை நீ?, நீ யார் குழந்தை?'
என்று ஒரு பாடல்.
T. M.செளந்தர்ராஜன் பாடியிருந்தார்.
பாடிக்கொண்டே நடந்து வருகிற நடிகர் பூவலிங்கம் 'யார் குழந்தை நீ? நீ யார் குழந்தை?'
குருவி மண்டையன் மூக்கு மேல் விரல் 'யோவ் பூவலிங்கத்துக்கு இந்த படத்தில T.M.S. பாட்டுய்யா!'
லட்சுமி, ஜெய்சங்கர், முத்துராமனெல்லாம் நடித்த ' ராணி யார் குழந்தை' மதுரை தேவி டாக்கீஸில ஊத்திக்கிச்சு.
பூவலிங்கத்தின் அம்மா இந்த படத்த மகனோட பாட்டு சீனுக்காகவே பாத்து 'இந்தப்பாவி பெத்த புள்ள தான்டா நீ'ன்னு வாய் விட்டு புலம்பி கண்ணீர் விட்டு புலம்பினார்.
சினிமாவுல வர்ற அம்மாக்கள் போல தோற்றம்.
வறுமையில் இருக்கிற ஏழை கைம்பெண் பார்க்க வேண்டிய எல்லாத்துயரங்களையும், சீரழிவுகளையும் எதிர் கொண்டவர். வீடுகளில் வேலை செய்து வயிறு கழுவுகிற துர்பாக்கிய அபலை.
பூவலிங்கம் ஒரு காட்சியில் தலை காட்டிய இன்னொரு படம்
'குறத்தி மகன்'.
ஐஸ்கிரீம் வண்டிக்காரராக.
பழைய படமாக டூரிங் தியேட்டர்ல பல வருஷங்கழிச்சி எப்ப குறத்தி மகன பாக்கும் போதெல்லாம் ஆட்டு மூக்கன் கூப்பாடு " இந்தா பூவலிங்கம். ஐஸ் விக்கிறவன் நம்ம பூவலிங்கம்யா".
'ராணி யார் குழந்தை'யில் கூட டைட்டிலில் பூவலிங்கத்தின் பெயரை போடவில்லை.
பூவலிங்கத்திற்கு தம்பி சோமு. மாவாட்டுவது போல வீட்டு வேலைகள் தான் வீடுகளில் செய்துகொண்டிருந்தார்.
பார்த்திருக்கிறேன்.
அம்மா படம் பார்த்து அழுததையெல்லாம் சொன்னது சோமு தான்.
https://youtu.be/vx_FoW2_iwM
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.