சினிமா எடுக்க ஒரு துப்பாக்கியும், ஒரு சூப்பர் ஃபிகரும் இருந்தால் போதும் - இப்படி கிண்டலாக குறிப்பிடுவார் கோடார்ட்.
Godard
ஒரு காலத்தில் கோடம்பாக்கத்தில் தான் ஷூட்டிங் நடக்கும். பின்னால் பொள்ளாச்சி,கோபிசெட்டிப் பாளையம்,மேட்டூர் எல்லாம் கோடம்பாக்கம் போலவே மாறி காரைக்குடியும் கோடம்பாக்கம் தான்.
மேட்டூரில் லாட்ஜை விட்டு அதிகாலை நெருஞ்சிப்பேட்டைக்கு 'ராசுக்குட்டி' படத்தின் ஷூட்டிங் போக வெளியே வந்து காருக்காக காத்திருந்த வேளை.
எஸ்.டி.டி பூத்தில் நுழைந்து போன் செய்கிறேன்.
கீர்த்தி போனை எடுத்தவுடன்,உடனே,உடனே " அப்பா! நீ வாங்கிக் கொடுத்த பந்தை அஷ்வத் தொலைச்சிட்டான்!"
அவனுக்கு பேசுவது ஹலோ யாரென்றெல்லாம் கேட்கத்தேவையேயில்லை. இது அப்பாவே தான். அப்போது தினம் இந்த ஒரு கால் தானே,அதுவும் அதிகாலையில் வீட்டுக்கு வரும்.
போன் பேசி விட்டு பூத்தை விட்டு வெளியே வந்தால்
ஒரு சலசலப்பு....
ஆச்சரியப்பட்டு ஒரு கூட்டமே வேடிக்கை பார்த்தது.
ஒரு கான்ஸ்டபிள். ஒரு இன்ஸ்பெக்டர்.
கான்ஸ்டபிள் கத்தி கூப்பாடு போட்டு அந்த இன்ஸ்பெக்டரை கண்டபடி கடுமையாக மிரட்டி திட்டி அடித்துக்கொண்டிருந்தார்.
இன்ஸ்பெக்டரை அந்த கான்ஸ்டபிள் முதுகில் ரெண்டு தட்டு பலமாக தட்டி 'ஏறுடா! வேனுல'
இன்ஸ்பெக்டர் - " இவனால தான் லேட்டு.என்னை அடிக்கிறீங்க.."
கான்ஸ்டபிள் : (மீண்டும் இன்ஸ்பெக்டர் கன்னத்தில் தன் கையில் இருந்த லத்தியால் குத்தி) என்னை டென்ஷன் பண்ணாதடா.
இன்ஸ்பெக்டர் : என்னை ஏண்ணே அடிக்கிறீங்க.. நான் என்ன பண்ணேன்...
கான்ஸ்டபிள் : எனக்கு ஆயிரத்தெட்டு பிரச்னை. உன்னை கொன்னுடுவன்டா!
கொஞ்ச நேரத்தில் விஷயம் பிடிபட்டது.
இரு பக்க வி.எம். லாட்ஜிலும் கிருஷ்ணா லாட்ஜிலும் இன்னொரு படக்குழுவினரும் இருந்தார்கள்.
வசனம் பேசத்தேவையில்லாத எக்ஸ்ட்ரா கான்ஸ்டபிள், இன்ஸ்பெக்டர் ரோலெல்லாம் அவசரத்திற்கு ப்ரொடக்சன் ஆட்களே தான் செய்ய வேண்டியிருக்கும்.
இந்த (இன்ஸ்டண்ட்) இன்ஸ்பெக்டர் அந்த பட கம்பெனியில் எல்லோருக்கும் காபி தருகிற ப்ரொடக்சன் அசிஸ்டண்ட்.
கான்ஸ்டபிள் ட்ரஸ்ஸில் இருந்தவர் ப்ரொடக்சன் மேனேஜர்.
When everything gets answered, it's fake! Cinema is the ultimate pervert art!
ராசுக்குட்டி படத்தின் ஷூட்டிங் போது வில்லன்களின் ஒருவனான நளினி காந்த் அடிக்கடி ஷாட் முடிந்தவுடனே கதாநாயகன் காலில் விழுவான்.
"மன்னிச்சிக்கங்கண்ணே.. டயலாக் பேசும்போது உங்களை டேய்னு சொல்லிட்டேன்."
பாக்யராஜ் " டேய்! இது நடிப்பு தானே!"
திரும்பி அஸிஸ்டண்ட்களிடம் சலித்துக்கொள்வார் "இவன் ரொம்ப நடிக்கிறான்."
ராசுக்குட்டி படத்தில் பாக்யராஜுக்கு 'டூப்' போட்ட ஸ்டண்ட் நடிகர் சங்கர் பின் மஹா நதி படத்தில் நடித்து 'மஹாநதி சங்கர்' ஆக பிரபலம்.
'மஹாநதி' படத்தில் ஜெயில் வார்டராக வந்து கமலை சித்திரவதை செய்வார். பட ரிலீஸ் போது படக்கம்பெனிக்குப் போய் படம் பார்க்க டிக்கெட் கேட்டிருக்கிறார். அலட்சியப் படுத்தியிருக்கிறார்கள்.
கமல் ஹாசனிடம் " டிக்கெட் கேட்டா கொடுக்க மாட்டேங்கிறாங்க சார்.." னு அழுது விட்டாராம்.
The Birds படத்தில் பறவைக்கூட்டம் ஊரையே என்ன பாடு படுத்தும். ஹிட்ச்காக் தோளில் எப்படி சௌஜன்யமாக சினேகமாக அமர்ந்திருக்கின்றன!
.....................................
மீள்
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.