மீள் பதிவு 2014
Dec 22, 2014
Cinema -The most beautiful fraud!
ஜிப்பா வேஷ்டியுடன் பசுமணி. சர்வர் வேலை செய்து கொண்டே சினிமாவில் பாடல் எழுத வாய்ப்புக்காக முயற்சியில் இருப்பதாகச்சொன்னார்.
அப்போது வைரமுத்து கூட சினிமாவுக்கு பாடல் எதுவும் எழுதியிருக்கவில்லை.
பசுமணி இறந்து விட்ட தன் காதலிக்காக தான் எழுதிய பாடலை பாடிக்காண்பித்தார்.
‘பாடு என்று பாடச்சொல்லி கேட்டு நின்றவள்
நான் பாடும்போது பாவத்தோடு ஆடி நின்றவள்
இன்று பார்வை மூடி பாடையோடு பயணம் போனதேன்
என்னை பாதிக்கவிஞன் ஆக்கி விட்டு பறந்து போனதேன்’
சோகமாக என்னைப்பார்த்து தன் கண்களை துடைத்துக்கொண்டார்.
“ நான் ஒரு வித்தியாசமான ஆளு சார்!”என்றார்.
நான் “சொல்லுங்க!”
“ நான் ஒரு இலட்சியவாதி! கேட்டா ஆச்சரியப்படுவீங்க!”
அவரே சொல்லட்டும். ஆச்சரியப்படுவது பற்றி யோசிக்கலாம்
- அமைதியாக புன்முறுவலுடன் அவரைப் பார்த்தேன்.
" 'தப்புத்தாளங்கள்’ பார்த்து விட்டு நான் என்ன செய்தேன் தெரியுமா?”
கன்னத்தில் கை வைத்தவாறு அவர் பீடிகையை எதிர்கொண்டேன்.
“என் காதலி இறந்த பிறகு ரொம்ப சோகமாக பைத்தியம் பிடித்தது போல இருந்தேன். ஒரு நாள் “தப்புத்தாளங்கள்” பாலச்சந்தர் படம் பார்த்தேன். ரஜினி என்னை ரொம்ப பாதித்தார். அந்தப்படம் பார்த்து விட்டு நான் ஒரு காரியம் செய்தேன்.”
இந்த இடத்தில் மீண்டும் நிறுத்தி விட்டு மந்தகாசமாக ஒரு சிரிப்பு சிரித்தார்.
“ ‘தப்புத்தாளங்கள்’ பார்த்து விட்டு உடனே ஒரு விபச்சாரிக்கு வாழ்வு கொடுத்தேன். ஆமா சார்! ஒரு விபச்சாரியை கல்யாணம் செய்து கொண்டு விட்டேன். ஆனா அந்த கல்யாணம் நிலைக்கல..”
Cinema is the most beautiful fraud in the world. - கோடார்ட் இப்படி சொல்லியிருக்கிறார்.
நான் ஒரு பெருமூச்சு விட்டு விட்டு கவிஞர் பசுமணியிடம் சொன்னேன்.
“ நீங்க “சிகப்பு ரோஜாக்கள்” தயவு செய்து பார்க்காதீங்க...பார்க்கவே பார்க்காதீங்க..”
Cinema can fill in the empty spaces of your life and your loneliness.
- Pedro Almodovar
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.