Share

Jan 28, 2021

வண்ண நிலவனும் நல்லுசாமியும்

 

எழுத்தாளர் வண்ண நிலவன் (Ramachandran Ulaganathan) பதிவொன்றில் சுவையான ஒன்றை கவனித்தேன். 


ஒரு திரை ரசிகனாக பதிவை எழுதியிருக்கிறார். 


கே. ராஜேஷ்வருடன் ( சோமசுந்தரேஷ்வர்) வண்ண நிலவன் 'அவள் அப்படித்தான்'  கதை வசனத்தில் பங்களிப்பு செய்தவர். 


ருத்ரய்யாவின் படத்திற்கு ஒளிப்பதிவு செய்த இரட்டையர்கள் நல்லுசாமி - ஞானசேகரன். 

இவர்களில் கேமராமேன் நல்லுசாமி 

(U. R. Nallusami) அந்த பதிவில்

தொழில் நுட்ப விளக்கம் அளித்துள்ளார். 


நல்லுசாமியை ருத்ரய்யா பெர்க்மனுடைய கேமராமேன் ஷென் நிக்விஸ்ட் அவர்களுடன் ஒப்பிடுவார் என்று 

வண்ண நிலவன் நினைவு கூர்கிறார். 


அவற்றை இங்கே அப்படியே தந்துள்ளேன். 


வண்ண நிலவன் : " ஜி.ஆர்.நாதனின் ஒளிப்பதிவு பற்றி அவ்வளவாகப் பேசப்பட வில்லை.

அவர் இயக்குனரும் கூட.

பாடல்களின் நடுவே வரும் கை தட்டல்களை வானம்பாடியிலும் ,கருப்புப்பணத்திலும் படமாக்கியுள்ள காட்சிக் கோணம் அபாரமானது.


வானம்பாடியில் 'ஆண்கவியை வெல்ல வந்த'பாடலில் இடையே வருகிற பி.ஜி.எம்.மில் பார்வையாளர்கள் எல்லோரும் கை தட்டுவார்கள்.

வரிசையாக இணைந்து கை தட்டுகிற கைகளை மட்டும் ஒரு ஷாட் டில் படம் பிடித்திருப்பார்.


இதே போன்ற காட்சிக் கோணத்தில் தட்டும் கைகளை கருப்புப்பணத்தில் 'தங்கச்சி சின்னப் பொண்ணு' பாட்டிலும் படம் பிடித்திருப்பார்.

அந்தக் கோணம் அவருடைய கண்டு பிடிப்பு.


வேறு எந்த இயக்குனரோ, ஒளிப்பதிவாளரோ

 அந்தக் கோணத்தில் படமாக்கியதில்லை.


 ஏ.வின்செண்ட் 'சுமைதாங்கி' படத்தில் 'ராதைக்கேற்ற கண்ணனோ'பாடலில் அவருடைய கேமரா வளைந்த மாடிப்படிகளை 

அப்படியே சுற்றி வரும்.


கீழ்த் தளத்திலிருந்து அப்படியே மேலேறி கேமரா செல்லும்.


நெஞ்சில் ஓர் ஆலயத்தில் 'சொன்னது நீதானா'பாடலில் ஒரு பி.ஜி.எம்.மில் கேமரா ஜன்னல் வழியே நுழைந்து கட்டிலுக்குக் கீழே போய் தரையில் உட்கார்ந்து சிதார் வாசிக்கிற தேவிகாவை நோக்கிச் செல்லும்.


ஜூம் இன் ஷாட் தான் என்றாலும் நிதானமாக ஜூம் செய்திருப்பார்.

அண்டோனியோனியின் 'தி பேஜேஜ்'படத்தின் க்ளைமேக்ஸ் காட்சி யின் இறுதியில் நான்கு நிமிடங்கள் நகரும் ஜூம் காட்சி ஒன்றும் நினைவுக்கு வருகிறது."


ஒளிப்பதிவாளர் நல்லுசாமி அவர்களின் பின்னூட்டம் :


நெஞ்சில் ஓர் ஆலயத்தில் நீங்கள் குறிப்பிடும் அந்தப் பாடல் காட்சியில் வரும் அந்த சாட் zoom லென்ஸில் எடுக்கப்படவில்லை, 

எடுக்கவும் முடியாது. 


அந்த காட்சி கேமராவை கட்டிலுக்கடியில் முன்னோக்கி நகர்த்தி தான் எடுக்கப்பட்டது. 

அந்த கேமரா  கட்டிலுக்கு அடியில் நகரும் சமயம் அந்த கட்டிலையே முத்துராமன் உடன் சேர்த்து அப்படியே மேலே தூக்கி விட்டார்கள்,

கேமரா இப்பொழுது முன்னோக்கி எளிதாக நகர முடிந்தது. அது இப்படித்தான் எடுக்கப்பட்டது.


 உண்மையில்  எல்லோருமே இது எப்படி எடுத்தார்கள் என்று யோசிக்க வைத்த ஷாட் தான் அது. இந்த குறிப்பிட்ட ஷாட் இதனுடைய இந்திப் பதிப்பான படத்திலும் இடம்பெற்றிருக்கிறது.


 அதனுடைய இயக்குனரும் ஒளிப்பதிவாளரும் இவர்களே தான், அதாவது ஸ்ரீதரும் வின்சென்ட் அவர்களும்.


 ஜி ஆர் நாதன் அவர்களைப் பற்றி குறிப்பிட்டு இருந்தீர்கள், உண்மையில் நீங்கள் சொன்ன

 அந்த ஷாட்டுகள் மிகவும் அற்புதமானவை. அதுமட்டுமல்ல அவர் வின்சென்ட் போன்றவர்களுக்கு நிகரான முதல் வரிசை ஒளிப்பதிவாளர் தான். 

அவருடைய லைட்டிங் மிக உன்னதமாக இருக்கும். 


ஆனால் ஏனோ வின்சென்ட் போன்றவர்களுக்கு கிடைத்த அங்கீகாரம் ஜிஆர் நாதன் அவர்களுக்கு கிடைக்காமல் போய்விட்டது. 


நான் பலமுறை ஜி ஆர் நாதன் அவர்களை பற்றி எழுத வேண்டும் என்று நினைத்திருந்தேன், இப்பொழுது உங்கள் வாயிலாக 

அதை நான் செய்திருக்கிறேன். நன்றி ராமச்சந்திரன் அவர்களே.


நீங்கள் குறிப்பிடும் அன்டோனியோ படத்தில் வரும் அந்த ஜன்னல் காட்சி கூட zoom லென்ஸில் எடுக்கப்பட்டது இல்லை.


 கேமரா ஜன்னலை நோக்கி வரும்பொழுது

 கேமரா லென்ஸ் ஜன்னல் கம்பியை நெருங்கியவுடன், அப்படியே ஜன்னலை இரண்டாக பிரித்து விட்டார்கள். 

அதாவது வலது புற பாதி ஜன்னல் வலது புறம் சென்றுவிடும், இடது பாதி 

இடது புறம் சென்று விடும். 


இப்பொழுது கேமரா ஜன்னலை விட்டு 

இறுதியாக வெளியே வந்து விடும்.

வெளியே வந்த கேமரா பின்னர் வாயில் வழியாக உள்ளே நுழைந்துவிடும். 

இப்பொழுது அதே நடிகர்கள் வேறு உடையில் இருப்பார்கள். 

கேமராவை கையில் வைத்துக்கொண்டு எடுக்கப்பட்டதுதான் அந்த காட்சி. 


நான் திரைப்படக் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த போது இந்தப் படம் எங்களுக்காக திரையிடப்பட்டது, 

படம் முடிந்ததும் அதை பற்றிய விவாதம் நடந்தது, குறிப்பாக மேலே குறிப்பிடப்பட்ட அந்த ஷாட்டை பற்றி மிக விரிவான விவாதம் நடைபெற்றது எனக்கு நன்றாக நினைவிருக்கிறது.


 நீங்கள் குறிப்பிட்ட நெஞ்சில் ஒரு ஆலயம் சாட்டும் மைக்கலாஞ்சலோவின் படத்தில் வரும் அந்த ஜன்னலை கேமரா கடந்து செல்லும் காட்சியும் உங்களைப்போலவே எல்லோரையும் வியப்படைய வைத்த காட்சி தான் அது. 


இந்த இரண்டு காட்சிகளையும் பொது வெளியில் கொண்டுவந்து நிறைய பேர்களுக்கு இதைப்பற்றி  தெரிந்துகொள்ள செய்ததற்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். 


உண்மையில் என்னை போன்றவர்கள்

 இது பற்றி எல்லாம் பேசி இருக்க வேண்டும். 

நல்ல வேளை நல்ல இலக்கியவாதியான நீங்கள் இதை கொண்டு கொண்டு வந்ததற்கு மிக்க நன்றி.

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.