Share

May 29, 2017

வியாபார வசியம்


சென்னையில் பம்மலில் யா.முஹைத்தின் பிரியாணி கடை. ஒரு ஞாயிற்றுக்கிழமை அந்த கடைக்கு என் மகன் கீர்த்தி அழைத்துப் போய் காட்டிய போது அசந்து போனேன்.

ஏதோ ரஜினி படம், அஜீத், விஜய் படங்கள் ஓடுகிற ஒரு பழைய தியேட்டரில் டிக்கட்டுக்கு நிற்கிற மாதிரி பெரிய க்யூ ரெண்டு. பணம் கட்டி பிரியாணி வாங்க ஒரு க்யூ. Card swiping செய்வதற்கு ஒரு க்யூ.
பார்சல் வாங்க வரிசை. பெரும்பாலோர் பெரிய பக்கெட்டில் பிரியாணி வாங்கிப்போகிறார்கள். உட்கார்ந்து சாப்பிட ரொம்ப சின்ன இடம். அதற்கு காத்திருக்கும் பெரிய கூட்டம்!

என்ன வசியம் இது! சென்னையில் பிரியாணி ஹோட்டல்கள் ஆயிரக்கணக்கில் இருக்கும் போது இந்த பம்மல் முஹைத்தின் பிரியாணிக்கு இப்படி வியாபார வசியம்.



எல்லா ஊரிலும் இப்படி ஓட்டல் கடைகள், பலகார கடைகள், டீக்கடைகள் வசியம் கொண்டவையாக இருக்கின்றன.

நான் முப்பது வருடங்களுக்கு முன் இருந்த ஒரு ஊர் பிரபலமான கோவில் காரணமாக பிரசித்தி பெற்றது.

ஊரில் அந்த ஓட்டல் ரொம்ப பிரபலம். ரெண்டு தடவ I.P. கொடுத்தவர் அந்த அசைவ ஓட்டலின் உரிமையாளர். பத்து பேர் தான் உட்கார்ந்து சாப்பிடமுடியும். பார்சல்கள் அதிகம்.

உரிமையாளர் ஓட்டல் முன் நின்றவாறே கல்லாவில் காசை வாங்கி போட்டுக்கொண்டே தான் இருப்பார். பக்கத்தில் அதை விட வசதியான நல்ல விசாலமான இடவசதியுள்ள மற்ற அசைவ உணவகங்கள் உண்டு. ஆனால் இந்த கடையில் தான் சாப்பிட காத்து நிற்பார்கள்.

எழுபது வயது முதலாளிக்கு உடம்பில் பல பிரச்னைகள். கல்லாவில் காசை வாங்கிப்போடும்போதே ஐந்து நிமிடத்திற்கொரு முறை அந்த சின்ன ஓட்டலை விட்டு கொஞ்சம் தள்ளிப் போய் சத்தமாக காறி துப்புவார். சாப்பிடுபவர்களோ, பார்சல் வாங்க வந்தவர்களோ முகம் சுளிக்கவே மாட்டார்கள்.

அவர் வந்தவர்களிடம் சொல்வார்.” உழைப்பு, திறமை எல்லாம் ஒன்னும் நம்பாதீங்க. நேரம் தான் மனுஷன மேல கொண்டு போகுது. கீழ விழுத்தாட்டறதும் நேரம் தான். நான் அறுபது வயது வரை என்னென்னமோ செஞ்சி கடுமையா உழச்சி தல கீழா நின்னு பார்த்தேன். மஞ்ச கடுதாசி
 ( insolvency) தான் கொடுத்தேன். நாப்பது, அம்பது வயசில எல்லாம் பட்ட பாடு, அவமானம் கொஞ்ச நஞ்சமில்ல. என்ன செஞ்சாலும் நஷ்டம் தான்.அம்பத்தெட்டு வயசில இந்த சின்ன ஓட்டல நடத்த ஆரம்பிச்சேன். பத்து வருசத்தில இந்த ஓட்டல் பேர்லயே இந்த ஊர்ல ஒரு காலனியே எனக்கு இருக்கு. அவ்வளவு வீடுகளும் இந்த சின்ன ஓட்டல்ல இப்ப சம்பாரிச்சது தான்.”


எவனோ எட்டிமடை ஜோசியன் சொன்னான்னு
மதியம் பிசியான நேரத்திலும் மாலை பிசியான நேரத்திலும் அரைமணிக்கு ஒரு முறை எல்லாரும் சாப்பிட்டுக்கொண்டிருக்கும்போதே சாம்பிராணி புகை போடச்சொல்வார். அந்த சாம்பிராணி புகையை கண்ணெரிய சகித்துக்கொண்டே, ’ஒரு பன்னீர் சிக்கன் கொடு’, ’ஒரு மட்டன் வருவல் கொடு’, கண்ணை கசக்கிக்கொண்டே ’இன்னும் கால் பிளேட் பிரியாணி கொடு’ ’ஒரு முட்டை புரோட்டா’
என்று கேட்டு சாப்பிட்டு விட்டு இலையை எடுத்து தொட்டியில் போடுவார்கள். சாப்பிடும் இடத்தில் எப்பவும் சாம்பிராணி புகை மண்டலம்.


காறித் துப்பிக்கொண்டே கடை முதலாளி சொல்வார் – அந்த ஊரின் பிரபலமான தெய்வத்தின் பெயரை சொல்லி “ அவன் எல்லாத்துக்கும் ஒரு கணக்கு வச்சிருக்கான். எனக்கு பாருங்க. நாலு பொம்பள பிள்ளைங்க. எனக்கு ஒரு ஆம்பிள பிள்ள சொத்துக்கு வாரிசா இல்லாம அவன் பண்ணிட்டானே… நாலு பொட்ட பிள்ளையையும் கட்டி கொடுத்திருக்கேன். இப்ப பாருங்க. எந்த காட்டுப்பயல்களோ என் சொத்துக்காக மூக்கு வேர்த்து தவிக்கிறானுங்க. இவ்வளவையும் எந்த காட்டுப்பயல்களோ தின்னுட்டு போகப்போறானுங்க.. என் தலையில ஓத்த விதி!”
காட்டுப்பயல்கள் = இவர் பெத்த பெண்பிள்ளைகளின் மாப்பிள்ளைகள்!


…………………………………………………………………

http://rprajanayahem.blogspot.in/2017/03/blog-post.html

1 comment:

  1. //உழைப்பு, திறமை எல்லாம் ஒன்னும் நம்பாதீங்க. நேரம் தான் மனுஷன மேல கொண்டு போகுது.//
    Very true!

    ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.