காஞ்சி பரமாச்சாரியாள் புஞ்சை கிராமம் மேலக்காவிரியில் பயணமாக வந்திருக்கிறார். பரமாச்சாரியாள் வருவது என்றால் பல்லக்கில் தான் வருவாராம். யானை, ஒட்டகமெல்லாம் வரும். அப்படி யானை ஒட்டகத்துடன் தான் அன்று வந்திருக்கிறார். எல்லோரும் அவரைப் பார்க்க ஓடியிருக்கிறார்கள்.
கூத்துப்பட்டறை ந.முத்துசாமிக்கு அப்போது பத்து வயது. புஞ்சை அக்ரஹாரத்தில் தந்திரமாக குழந்தையை வீட்டில் ஒரு அறையில் வைத்துப் பூட்டி விட்டு பரமாச்சாரியாளைப் பார்க்க மேலக்காவிரிக்குப் போய் விட்டார்கள்.
குழந்தைக்கு ஏக்கம். ரொம்பத் தவித்திருக்கிறது. யானையையும் ஒட்டகத்தையும் பார்க்க முடியாமல் போய் விட்டதே என்ற ஏக்கமும் தவிப்பும்!
இப்போதும் அந்த வருத்தம் இருக்கிறது.
இதை முத்துசாமி சார் சொன்ன போது எனக்கு சுந்தர ராமசாமியின் கதை ஒன்று ஞாபகம் வந்தது. காலச்சுவடில் அதை சு.ரா எழுதியிருந்தார். தலைப்பு
” நண்பர் ஜி.எம்”
மதுரை காலேஜ் ஹவுஸ் லாட்ஜில் இரண்டு குழந்தைகளை அறையில் பூட்டி வைத்து விட்டு பெற்றோர் வெளியே போயிருப்பார்கள். டவுன் ஹால் ரோட்டில் யானை வருகிறது. காலேஜ் ஹவுஸில் இருப்பவர்கள் கூட யானையைப் பார்க்கச்செல்கிறார்கள். குழந்தைகள் யானையைப்பார்க்க வேண்டும் என்று வாய் விட்டு அழுகின்றனர். காலேஜ் ஹவுஸில் தங்கியிருக்கும் கதை சொல்லியை பார்க்க வரும் ’ஒருவர்’ அந்த அறையின் கதவை உடைத்து குழந்தைகளை விடுதலை செய்து யானையைப் பார்க்க அனுப்புகிறார்.
நான் சொன்னது சரி தான் என்றார் சு.ரா.
அசோகமித்திரனின் “விரல்” கதையில் கதவிடுக்கில் சிக்கிய விரல் நசுங்கிப் போகிற குடிகாரர் கூட
ஜி. நாகராஜன்.
திலீப் குமாரின் “ ஐந்து ரூபாயும் அழுக்குச் சட்டைக்காரரும் “ கதையில் வருகிற அழுக்குச் சட்டைக்காரர் ஜி. நாகராஜன்.
விக்கிரமாதித்யன் கவிதை - ”தீவிரமான தேடலில்
அந்நியமாகிப்போகிற வாழ்வுக்கு முன்னுதாரணமாக காலத்துக்கு முந்தியே பிறந்து காலத்துக்கு முந்தியே செத்துப்போவான் சிரஞ்சீவி கலைஞன் ஜி. நாகராஜன்!”
அந்தக்காலத்தில் பழைய தஞ்சாவூர் ஜில்லாவில் காஞ்சி பரமாச்சாரியாள் பல்லக்கில் எப்போதும் போல போய்க்கொண்டிருந்தாராம். பல்லக்கை சுமக்க மனிதர்கள். தி.க.காரர்கள் பல்லக்கைப் பிடுங்கி வைத்துக்கொண்டார்களாம். முத்துசாமி சொன்னார்.
அதன் பிறகு தான் பரமாச்சாரியாள் பல்லக்கைத் தவிர்த்து விட்டாராம்.
ந.முத்துசாமி இளைஞனாயிருக்கும்போது பாரதி தாசன் மாயவரத்திற்கு ’நடராஜன் வாசகசாலை’யின் ஆண்டு விழாவிற்கு வந்திருக்கிறார்.
பாரதி தாசனை கவனித்துக்கொள்ளும் பொறுப்பு முத்துசாமிக்கு.
பாரதி தாசன் புதுவையில் உள்ள தன்னுடைய பிராமண நண்பர் ஒருவரின் மகளை முத்துசாமிக்குத் திருமணம் செய்ய வேண்டும் என்று விரும்பியிருக்கிறார்.
முத்துசாமி சின்னவயதில் இருந்தே தான் ஒரு பெண்ணை காதலிப்பதாகச் சொல்லியிருக்கிறார். அந்தப்பெண்ணை நான் பார்க்கவேண்டுமே என்று பாரதி தாசன் சொன்னாராம். பாரதி தாசன் தங்கியிருந்த வீட்டின் அருகே தான் அந்தப்பெண்ணின் வீடு. முத்துசாமி அந்தப்பெண்ணை அழைத்து வந்து காட்டியிருக்கிறார். கறுப்பு சேலையில் சிவப்பு பார்டர் போட்ட சேலையில் வந்தார் அந்தப்பெண்!
அந்தப்பெண் தான் குஞ்சலி என்ற அவயாம்பாள் மாமி! முத்துசாமி சாரின் மனைவி. சென்னையில் அரசு உத்தியோகத்தில் இருக்கும்போது குஞ்சலி மாமி அந்தக்காலத்தில் ’திராவிட நாடு’ பத்திரிக்கையின் தீவிர வாசகர்!
ந.முத்துசாமி தி.மு.க உறுப்பினராய் இருந்தவர் என்பது தெரிந்த விஷயம். புஞ்சையில் கட்சி வளர்ந்ததில் அன்று இவரது பங்கும் இருந்தது.
.........................................
http://rprajanayahem.blogspot.in/2012/10/blog-post.html
http://rprajanayahem.blogspot.in/2008/12/blog-post_04.html
http://rprajanayahem.blogspot.in/2015/12/blog-post.html
http://rprajanayahem.blogspot.in/2014/09/blog-post.html
......................................
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.