Share

Apr 19, 2015

லா.ச.ரா - கிருத்திகா‘ராசுக்குட்டி’ டப்பிங் வேலை அப்போது APN Dubbing theatre ல் நடந்து கொண்டிருந்தது. நான் மாலை 4 மணிக்கு ஏபிஎன் தியேட்டரில் இருந்து கிளம்பி டி.டி.கே. ரோட்டில் நடந்தேன். கொஞ்சம் தாமதமாக கிளம்பலாம்.ஆனால் இலக்கிய கூட்டம் நடக்கும் இடத்தையே இனி தான் கண்டு பிடிக்கவேண்டும்.

லா.ச.ரா – கிருத்திகா இருவருக்கும் சேர்த்து ஒரு விழா நடக்குமிடம் எது என்று அரை மணி நேரத்தில் தேடி கண்டு பிடித்தேன். அது ஒரு ரொம்ப சின்ன ஹால்.


கூட்டம் ஆரம்பிக்க இன்னும் ரொம்ப நேரம் இருக்கிறது.
மீண்டும் வந்த வழியே வேடிக்கை பார்த்துக்கொண்டே நடந்து வரும்போது ஒரு மிகப் பிரம்மாண்டமான மண்டபம். அங்கே ரொம்ப பெரிய குடும்பங்களின் திருமணம் நடத்த முடியும். அல்லது பெரிய அரசியல் கட்சி கூட்டங்கள் நடத்த முடியும். சில ஆயிரக்கணக்கான பேர்கள் அதனுள் அடங்கமுடியும். மிகப்பிரமாண்டமான படிக்கட்டுகள். அந்த படிக்கட்டுகளில் லா.ச.ராவை அவருடைய பிள்ளைகள் கைத்தாங்கலாக ஏற்றிக்கொண்டிருந்தார்கள்.

எனக்கு அந்த அபத்தம் உடனே உறைத்தது.
உடனே ஓடி பல படிகள் ஏறிவிட்ட அவர்களை நெருங்கி “ சார்! உங்களுக்கு நடக்கும் பாராட்டு கூட்டம் இந்த மஹாலில் கிடையாது சார்! இங்கிருந்து ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கிறது. நானும் அந்த கூட்டத்திற்கு தான் கிளம்பி வந்துள்ளேன்.” லா.ச.ரா வின் மகன்களில் ஒருவர் “அப்படியா! ரொம்ப நன்றி சார்! “ முதிய லா.ச.ராவை படிகளில் இருந்து கீழே கவனமாக இறக்கினார்கள்.
ஒரு தமிழ் எழுத்தாளருக்கு இவ்வளவு பிரமாண்டமான கூடத்தில் பாராட்டுக்கூட்டம் நடக்கும் என்ற லா.ச.ராவின் அசட்டு நம்பிக்கை விசித்திரமாய் அப்போது தெரிந்தது.

லா.ச.ரா என்னைப் பார்த்து “ நீங்க யாரு? எனக்கு தெரியலியே?”
“ நான் உங்கள் வாசகன். என் பெயர் ராஜநாயஹம். உங்களுக்கு 1990ல் சாகித்ய அகாடமி பரிசு கிடைத்த போது நான் உங்களுக்கு ஒரு கடிதம் எழுதியிருக்கிறேன். அப்போது நீங்கள் “ உங்கள் வாசகத்தின் அன்பில் எனக்கு பரிசு கிடைத்தது மகிழ்ச்சி தான் “ என்று பதில் எழுதியிருந்தீர்கள். லா.ச.ரா என் கைகளைப்பிடித்துக்கொண்டார்.

கூட்டம் எங்கே நடக்கப்போகிறது என்று சிரமப்பட்டு அலைந்து கண்டுபிடித்த நான் இப்போது Chief Guest லா.ச.ராவிற்கு வழி சொல்லி அனுப்பி வைத்தேன்.


அந்த கூட்டத்தில் கலந்து கொள்ள சென்றேன். சிட்டி வந்தார். சினிமாவில் நான் இருப்பதை சொன்னேன். ஆனால் அவர் “எப்ப வீட்டுக்கு வர்றேள்?’ என்றார். அவரோடு அவர் மகன் வேணுவும் 'கடலோடி' நரசய்யாவும்.


இந்திரா பார்த்தசாரதி வந்தார். இந்திரா மாமி இறந்து விட்டதற்கு துக்கம் விசாரித்தேன். இ.பா என்னிடம் “உங்களை சினிமா இன்னும் விட மாட்டேன்றது!”


அசோகமித்திரன் தன் மகனோடு வந்தார். சிலமாதங்களுக்கு முன் ஒரு பத்திரிக்கையில் அவரை பற்றி ஒரு கட்டுரை கொடுக்க வேண்டும் என்று திருச்சியில் இருந்த என்னிடம் கேட்டிருந்தார். நான் சினிமாவில் கமிட் ஆகி விட்டதால் இயலவில்லை. “ஏன் இப்படி செய்து விட்டீர்கள். என்னய்யா..” கிட்டத்தட்ட கோபமாக கேட்டார். எனக்கே தெரியாது திடீரென்று இப்படி பாக்யராஜ் படத்தில் பங்கேற்கவிருக்கிறேன் என்பது.. ராசுக்குட்டி அனுபவம் அந்த மூன்று மாதத்திலேயே என்னை மன அளவில் முறித்துப்போட்டிருந்தது. அசோகமித்திரனின் எரிச்சலுக்கு நான் பதில் சொல்லவில்லை.

கிருத்திகாவை சிட்டி அறிமுகப்படுத்தினார்.

1950களில்,1960களில் மிக,மிக அழகாக இருப்பாராம் டெல்லியில் இருந்த மதுரம் பூதலிங்கம் என்ற கிருத்திகா. அந்தக்கால ஐ.சி.எஸ் ஆஃபீசர் பெஞ்சாதி. ‘புகை நடுவில்’ ,’வாசவேஸ்வரம்’, ‘புதிய கோணங்கி’, ‘நேற்றிருந்தோம்’ ஆகிய நாவல்களை எழுதிய கிருத்திகா. தி.ஜாவிற்கு மிகவும் பிடித்த பெண் எழுத்தாளர்.

சிட்டி மீண்டும் “எப்ப எங்க வீட்டுக்கு வர்றேள்?”


கூட்டம் முடிந்ததும் நான் அப்போது தங்கியிருந்த அயனாவரம் கிளம்பிப்போனேன்.
.......................

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.