Share

Dec 6, 2012

Go with the flow



பஞ்ச பாண்டவர் எத்தனை பேர் என்பது கேள்வி.
ஒருத்தன்’கட்டில் காலு’ போல ’மூனு பேர்’னு சொல்லி ’ரெண்டு விரலை’ நீட்டி ஆட்டிக்காட்டினான்.
இதில் எத்தனை தப்பு. அவன் விளக்கமாக ’கட்டில் கால்’ எனும்போதே தப்பு.நாலுன்னு சொல்வான்னு பாத்தா கட்டில் காலு போல மூனு பேர் என்கிறான்.அதை இன்னும் விரிவாக தன் இரண்டு விரல்களை விரித்து செயல்முறை விளக்கம்.அப்ப ரெண்டு பேர்ங்கிறான்.
நாட்டில் பல பல ’பப்பள பள பள’ பேச்சைக் கேட்கும்போது இந்த கட்டில் கால் போல மூனுபேர்னு சொல்லி ரெண்டு விரலைக்காட்டுறது தான் ஞாபகத்துக்கு வரும்.அன்னிய நேரடி முதலீடு,தர்மபுரி நாய்க்கன் கொட்டாய் கலவரம்,வெள்ளத்துரை என்கவுண்டர் என்று எல்லாவற்றுக்குமே கட்டில் கால் போல மூனுபேர்னு சொல்லி ரெண்டு விரல தான் காட்டுறாய்ங்க.
மக்கள் பாவம்.ஆடு வளக்கறவன நம்பாது.அறுக்கறவன தான் நம்புமாம்னு சொலவடை ஒன்னு உண்டு.
கொஞ்சம் விபரமானவர்களாக தங்களை நினைத்துக்கொள்ளும் படித்த நடுத்தர வர்க்கத்தவர்களுக்கு ’வேடிக்க பாக்கற வேல’ தான் அதிகபட்ச சாத்தியம்.
இவர்களுக்கு ஓஷோ சொல்லியிருக்கிற விஷயம் ஒன்றை சுட்டிக்காட்டினால் மேலும் குற்றவுணர்வின்றி விச்ராந்தியாக இருப்பார்கள்:
” நீ எதுவும் செய்ய வேண்டாம் என்று அஷ்டவக்கிரர் கூறுகிறார்.எது நடந்து கொண்டிருக்கிறதோ அது நடந்து கொண்டிருக்கிறது.அதனோடு நீ ஐக்கியமாகி விடு.சும்மா பார்த்துக்கொண்டிருப்பதன் மூலம் சாட்சித்தன்மையில் இருப்பதன் மூலம் நீ முக்தி பெறுகிறாய். எந்தப்பயிற்சி முறைகளிலும் சிக்கி விடாதே.”

அடைய வேண்டிய அந்தஸ்தை இழந்து,தகுதிக்கேற்ற அங்கீகாரத்தையும் இழந்து பொருள்,பொன் இழந்தவர்கள் தங்களைப் பற்றிய சுய தரிசனமாக ‘வலிமையின்றி சிறுமையில் வாழ்வான் காலம் வந்து கை கூடுமப்போதிலோர் கணக்கிலே புதிதாக விளங்குவான்’ (கண்ணன் என் அரசன்) என்ற பாரதியின் வரிகளை வாய்விட்டுச்சொல்லிக்கொள்ளலாம்.
பொறுமையா உன் வேலைய செஞ்சிக்கிட்டே இரு.உன் மதிப்பு புரியும்போது பெரும்புகழ் கிடைக்கும். கண்டதெல்லாம் கடிய விலையானால் இந்திராணிப் பட்டு இருந்த விலையாகும்.

’ஒவ்வொரு நாள் காலையிலும் நம்பிக்கைகளை அரற்றியவாறு அறுந்து தொங்கும் மனதின் நாண்களை இழுத்துக் கட்டினாலும் மாலைக்குள் அது தொய்ந்து போய்விடுகிறது’ என்று சுந்தர ராமசாமி ‘குழந்தைகள் பெண்கள் ஆண்கள்’ நாவலில் சொல்லும் யதார்த்தம் இன்றைய லோகாயுத சிக்கல்கள் மூலம் தெளிவுபடுகிறது.
வீட்டு வாசலில் கோலம் போடுவதற்கு கூட சாஸ்திரம் இருக்கிறது,போடுகிற கோலம் தெற்கு நோக்கி முடியக்கூடாதாம்.
ஆனால் இன்று தலையாய முக்கியப்பிரச்னைகளில் கூட ’அள்ளித்தெளித்த அவசரக்கோலம்’.

மிச்சல் ஃபூக்கோ சொல்வதை சொல்லி முடிக்கலாம்: “ஒன்றை எழுத ஆரம்பிக்கும்போது அதன் முடிவில் என்ன சொல்லப்போகிறீர்கள் என்பது உங்களுக்குத் தெரிந்திருந்தால் அதை எழுதுவதற்கான தைரியம் தான் உங்களுக்கு வந்து விடுமா? முடிவு என்னவென்று தெரியாமல் இருக்கும்போது தான் இந்த விளையாட்டுக்கு அர்த்தமுண்டு.”

In the future, the priest is not needed,neither is the psychoanalyst needed. Both those professions are anti-human;But they can go only if man is freed of guilt; otherwise they cannot go
Even if you feel guilty,go with the flow.
- Osho


2 comments:

  1. நாம் அதைத்தானே செய்துகொண்டுள்ளோம்.

    ReplyDelete
  2. சாஸ்திரங்களைப் பற்றிய சரியான ஞானம் உடையவர்கள் அரிதாகிவிட்டது கவலைக்குரிய விஷயம். நல்ல பதிவு!

    amas32

    ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.