Share

Mar 30, 2012

நீ ஏய்யா அழற ?

1960திரையுலகில் விசித்திர சரித்திர பதிவுகளை கொண்டது. தியாகராஜ  பாகவதர் இறந்த பிறகு வெளியாகி போண்டியான 'சிவகாமி'படம் 1960ல் தான் வெளியானது. அதே ஆண்டில் தான் கமல் ஹாசன் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான 'களத்தூர் கண்ணம்மா 'வும் வெளிவந்தது ! சிவாஜி கணேசன் 'படிக்காத மேதை ' ,தெய்வப்பிறவி,' பாவை விளக்கு ' என்று கொடி கட்டியதும் இந்த வருடம்.ஜெமினி கணேசன் 'களத்தூர் கண்ணம்மா'வோடு 'பார்த்திபன் கனவு' 'கைராசி ' 'மீண்ட சொர்க்கம் ' 'வீரக்கனல்'என்று கலக்கிகொண்டிருந்த போது எம்ஜியாரின் ' பாக்தாத் திருடன் 'மன்னாதி மன்னன் ' 'ராஜா தேசிங்கு ' படங்கள் 1960 ல் தான் திரைக்கு வந்தன! நல்லதொரு நகைச்சுவைப்படம் ' அடுத்த வீட்டுப்பெண் ' கூட இதே ஆண்டில் தான்  ரிலீஸ் ஆகியது. சந்திரபாபுவை கதாநாயகனாக்கி 'கவலையில்லாத மனிதன் ' படம் எடுத்து சந்திரபாபு செய்த சித்திரவதைகளால் சந்தி சிரித்து உலகத்திலுள்ள அத்தனை கவலைகளுக்கும் ஆளாகி கண்ணதாசன் நொந்து NOODLES ஆனதும் இந்த வருடம் தான்.எஸ்.எஸ்.ஆர் படம் 'தங்க ரத்தினம் '.
பாகவதரின் 'சிவகாமி 'யிலும்'சிவாஜியின் 'தெய்வப்பிறவி 'யிலும்,எம்ஜியாரின்  ' ராஜா தேசிங்கு' படத்திலும் கூட எஸ்.எஸ்.ஆர் நடித்திருந்தார்.("அன்றைய  தினம் ராஜா தேசிங்கு படத்தில் திருமதி பத்மினி அவர்களுடன் நான் நெருங்கி நடிக்கக்கூடாது என்பதற்காக இந்த எம்ஜியார் செய்த சூழ்ச்சிகளை நாடு மறக்குமா?" என்று ரொம்ப வருடம் கழித்து எஸ்.எஸ்.ஆர் கோபப்பட்டார். ம்ம் ...தாமீக ஆவேசம்! தார்மீக கோபம்! )           

இந்த பதிவு 'எம்ஜியாரின் ராஜா தேசிங்கு ' படம் பற்றியது. படப்பிடிப்பு முந்தைய சில ஆண்டுகளாக நடந்து கொண்டிருந்த போது நடந்த விஷயம்.
மதுரை வீரன்( 1956 ) படத்தை எடுத்த கிருஷ்ணா பிக்சர்ஸ் லேனா செட்டியார்  அடுத்து இந்த'ராஜா தேசிங்கு ' படத்தை எடுக்க  சில ஆண்டுகளாக படாத பாடு, நாய் படாத பாடு பட்டுக்கொண்டிருந்த போது  'இன்பக்கனா 'நாடகத்தில் எம்ஜியாருக்கு கால் உடைந்து போய் விட்டது ! குண்டுமணி, புத்தூர் நடராஜன் இருவரோடும் சண்டை போடுகிற காட்சியில் குண்டுமணியை தலைக்கு மேல் தூக்கி சுற்றும்போது கால் உடைந்து விட்டது. புத்தூர் நடராஜன் சொல்வார் -"கால் உடையும் போது பட்டாசு வெடித்தது போல சத்தம் கேட்டது"

லேனா செட்டியாருக்கு தலையில் இடி விழுந்து விட்டது. அவருக்கு பைனானஸ் செய்த தாயம்பாளையம் V.M.P.வீரமுத்து செட்டியாருக்கும் கடும் அதிர்ச்சி. கதா நாயகனை போய் பார்க்க வேண்டுமே ! தலையெழுத்தே என நொந்துகொண்டு  உடனே ஆஸ்பத்திரிக்கு இருவரும் போயிருக்கிறார்கள். லேனா செட்டியாரையும் ,வீரமுத்து செட்டியாரையும் பார்த்தவுடன் எம்.ஜி.சக்கரபாணி மூஞ்சிலே துண்டைப்போட்டுக்கொண்டு குலுங்கி குலுங்கி"தம்பிக்கு இப்படி ஆயிடுச்சே "ன்னு அழுதாராம்.வீரமுத்து செட்டியார் எரிச்சலாகி சட்டென்று துடுக்குத்தனமாக சொன்னாராம் -"நீ ஏய்யா அழற ? உன் தம்பியை வச்சு படம் எடுக்கிற லேனா அழனும். பைனான்ஸ்  பண்ற நான் அழனும். நீ ஏய்யா அழற?"

லேனா செட்டியார் வாழ்க்கை  ராஜா தேசிங்கு படத்துடன் அஸ்தமனம் ஆகிவிட்டது. வீரமுத்து செட்டியாருக்கும் கடும் நஷ்டம்.
வீரமுத்து செட்டியாரின் ஒரே மகன்  டாக்டர் V. ரவிகுமார் என் நண்பர்.

4 comments:

  1. வணக்கம்! நீண்ட இடைவெளிக்குப் பிறகு வந்துள்ளீர்கள். தொடருங்கள்.

    ReplyDelete
  2. surprise. welcome back RPR..

    ReplyDelete
  3. y sir.ivlo days ah intha pakkam varala.super sir:-)

    ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.