Share

Jul 30, 2009

ஊட்டியில் தளையசிங்கத்திற்கு நடந்த தொழுகை -கிளைமாக்ஸ்-2002


( 'ஊட்டியில் தளையசிங்கத்திற்கு நடந்த தொழுகை ' யின் கடைசி பகுதி )

வருடம் 2002 மே மாதம் 5 தேதி ஊட்டியில் நாராயண குருகுலம்.
மூன்றாவது அமர்வு. வேதசகாயகுமார் முதலில் தன் கட்டுரையை வாசிக்காமல் விளக்கிப் பேச ஆரம்பிக்கிறார். ஒரு கட்டத்தில் கட்டுரையை வாசித்திருந்தால் நேரம் மிச்சமாகியிருக்கலாம் என்று தோன்றுகிறது. வாசிக்கிறார். வேண்டாம் என்று மீண்டும் விளக்கிப் பேச ஆரம்பிக்கிறார். விளக்கெண்ணெயை எடுத்து குண்டி கழுவுவது போல ஆகிவிட்டது.
யுவன் கொஞ்ச நேரத்தில் மோகனரங்கனின் சட்டை கைப் பகுதியை பின்னுக்கு இழுத்து முன்னுக்குத்தள்ளி விளையாட ஆரம்பித்துவிடுகிறார். நிர்மால்யாவிடம் 'டீ வருமா' என்று கேட்கிறார். நிர்மால்யா டீ ஏற்பாடு செய்கிறார். டீ குடித்தவுடன் யுவன் சிகரெட் பிடிக்க வெளியே செல்கிறார். 'குடிக்க நீர் வேண்டும்' என்கிறார். நீர் வந்ததும் எழுந்து போய் குடிக்கிறார்.

திடீரென்று ஜெயமோகன்தான் துப்பறிந்து சாரு நிவேதிதாவின் ஜாதியைக் கண்டுபிடித்ததைப் பற்றி கூறினார். சாரு ஒரு முறைதான் மலம் அள்ளுகிற ஜாதி என்று எழுதியபோது ஜெயமோகன் சாருவின் மேலதிகாரியிடம் அவர் ஜாதிபற்றிய சர்ட்டிபிகேட் நகலைக் கேட்டுப் பெற்றுவிட்டார். சாருநிவேதிதா தலித் அல்ல, செங்குந்த முதலியார் ஜாதி!
பிறகு ஜெயமோகன் கோவிலுக்குப் போன கோவை ஞானிக்கு தன் கண்டனத்தைத் தெரிவிக்கிறார். நாஞ்சில் நாடன் 'தான் தாலிகட்டிய மனைவி தீர்க்க சுமங்கலியாக வாழ, குறிப்பிட்ட ஒரு கோவிலில் மீண்டும் தாலிகட்டினால் நல்லது என்று நம்பும்போது ஞானி தன் மனைவியைப் புண்படுத்தக் கூடாது என்பதற்காக மனைவியின் நம்பிக்கையை கெளரவித்து கோவிலுக்குப் போனதில் என்ன தவறு என்கிறார். ஜெயமோகன் மீண்டும் ஞானி செய்தகாரியம் எனக்கு முக்கியம்' என்று கோவிலுக்குப் போனதை ஆட்சேபிக்கிறார். யுவன் உடனே 'ஞானி கோவிலுக்குப் போனதில் தவறில்லை. நான் கூட வருடத்திற்கு ஒருமுறை திதி கொடுக்கிறேன். அப்போது பூணூல் போடுகிறேன்' என்கிறார். இந்த இடத்தில் வேதசகாயகுமார் ஒரு செய்தி சொல்கிறார். அ. மார்க்ஸ் வீட்டில் ஞாயிற்றுக்கிழமைகளில் கிறிஸ்தவ நாடார்கள் கூடிப் பேசுவதைப் பற்றி தற்செயலாக 'ஒரு கிறிஸ்தவ நாடார் பேராசிரியர்' சகாயகுமாரிடம் சொல்லியிருக்கிறார். ஞாயிற்றுக்கிழமை என்பது கிறிஸ்தவர்களுக்கு முக்கியமான நாள் என்பது தெரிந்த விஷயம்.தளையசிங்கத்தின் கதைகள் ரொம்ப சிறப்பானவையாக பாதிக்கக் கூடியவையாக தன்னால் சொல்ல முடியவில்லை என்று நாஞ்சில் நாடன் சொல்கிறார்.
தளையசிங்கத்தின் 'தொழுகை' கதையில் செல்லம்மாள் மேல் கோபம் வருவதில்லை' என்று வேதசகாயகுமார் எழுதியிருப்பதைப் பற்றி நான் கேட்கிறேன்.
தேவாரம் ஓதும் சைவப்பிள்ளையின் மனைவி செல்லம்மாள் அதிகாலையில் தன் வயதுக்குவந்த இரு பெண்பிள்ளைகள் (12, 14 வயது) தூங்கும் அறையைப் பூட்டி விட்டு கரிய சாணான் தலித் முத்துவுடன் உடலுறவு கொள்ளும்போது கோவிலில் செல்லம்மாளின் கணவர் ஆறுமுகம்பிள்ளை தேவாரம் ஓதுகிறார். செல்லம்மாளுககு முத்து 'சிவலிங்கமாக'த் தெரிகிறான். முத்துவுக்கு செல்லம்மாள் அம்மனாகத் தோன்றுகிறான். உடலுறவு கொள்வது இது முதல்முறையுமல்ல. இத்தனைக்கும் பத்துநாள் முன்னதாகத்தான் முத்துவை செல்லம்மா பார்த்து கதைத்திருக்கிறாள்.
நான் கேட்கிறேன் 'வாசிப்பவனுக்கு ஏன் கோபம் வராது?' அப்போது முதல் நாள் என்னைப்பார்த்தவுடன் நிர்மால்யாவிடம் "இவர் சீரியஸான ஆளா?" என்று அங்கலாய்த்த அம்மாள் (Seriousness is a sickness) 'அவருக்குக் கோபம் வரவில்லை' என்று சொல்கிறார்' என்கிறார். 'இல்லை எனக்கு என்று இல்லை. வாசிக்கிற எல்லோருக்கும் கோபம் வருவதில்லை என்றுதான் சொல்கிறேன்' என்று மறுக்கிறார் வேதசகாயகுமார். 'அம்மா வந்தாள் அலங்காரத்தம்மாள் மீது கோபம் வராது என்று சொல்ல முடியுமா' என்று நான் கேட்டவுடன் வேதசகாயகுமாரின் முகம் இறுகுகிறது. ('எங்கிட்டேயே கேள்வி கேட்கிறாயா, நான் பார்வைக்கு சுமாரா இருப்பேன். என் புலமையை பற்றி உனக்குத் தெரியாது' என்று அர்த்தம்) உடன் ஜெயமோகனின் முகமும் இறுகுகிறது('எங்களுடைய அந்தஸ்தென்ன . . . யோக்தை என்ன ..... ' என்று அர்த்தம்).
நான் கல்லூரியில் படித்த காலத்தில் நடந்த ஒரு சம்பவம் பற்றிச் சொல்ல ஆரம்பித்தேன் .
தத்தனேரி டூரிங் தியேட்டரில் தரையில் மணலில் அமர்ந்து 'சிவகெங்கைச் சீமை' பழைய படம் பார்த்துவிட்டு வைகையாற்று வெள்ளத்தை எதிர்த்து புட்டுத் தோப்பில் கரையேறுகிறோம்.
போலீஸ் வேலையில் இருந்து டிஸ்மிஸ் ஆன முட்டாள் தாசு ஒரு கழுதையை போகம் செய்ய முயற்சித்துக் கொண்டிருக்கிறான். ஒரு பக்கம் சர்ச், இன்னொரு பக்கம் கிறிஸ்துவ பள்ளிக்கூட கேட் அருகே இரண்டு பேர் கழுதையைப் பிடித்துக்கொள்ள கழுதையைப் புணரவேண்டி முட்டாள் தாசு பகீரதப் பிரயத்தனம் செய்கிறான்.
முட்டாள் தாசு 'மயக்கமா கலக்கமா' பாட்டை, அழகாக பாடுவான் 'கோமாதா எங்கள் குலமாதா' பாட்டையும் அனுபவித்துப் பாடுவான். தன் வாழ்க்கைத் தோல்வியினால் துவண்டுபோய்விடாமல் ஆப்டிமிஸ்டிக்காக 'முதல் கோணல் முற்றிலும் கோணலல்ல முடிவில் கொடைக்கானல்தான்' என்று கவிதை எழுதியவன்.
குருவி மண்டையன் 'என்ன தாசு . . . கழுதையைப் போய்.....' என்று கேட்கிறான். தாசு 'கழுதை இல்லடா கல்யாணிடா .... டேய் எனக்கு பொம்பளை சீக்குடா ...... சத்தமில்லாமப் போங்கடா நீங்க'
கழுதையின் குறி ஒரு அடிக்குமேல் நீண்டிருக்கிறது. ' ஐயய்யோ! தாசு இது 'கல்யாணி' இல்ல தாசு . கல்யாண சுந்தரம்!' என்கிறான் குருவி மண்டையன்.
இந்த நேரத்தில் பள்ளிக்கூட வாட்ச்மேன் பேபி கேட்டைத் திறந்து வெளியே வந்து 'ஐயய்யோ என்னடா இது அசிங்கம்' என்று கூப்பாடு போட தாசு அவனிடம் 'பேபி யோவ் எனக்கு பொம்பள சீக்குய்யா' என்று சமாதானம் சொல்ல ஆரம்பிக்கும் போது கழுதையை பிடித்திருந்த இருவரும் அதைவிட்டு விட்டு ஒடுகிறார்கள். கழுதையும் ஓடுகிறது.
தாசுவுக்கும் பேபிக்கும் ஏற்கனவே ஒரு கடுமையான மனஸ்தாபம் உண்டு. பேபி அவன் மனைவி வெரோனிக்காவை ஒருமுறை பகலில் புணர்ந்து கொண்டிருக்கும்போது தாசு ஓட்டை வழியாகப் பார்த்திருக்கிறான். Voyeurism! அப்போது வெரோனிக்கா ஐந்து வினாடிக்கொருமுறை 'இயேசுவே ரட்சியும்' என்று
( முட்டாள் தாசுவின் வார்த்தைகளில் 'பேபி ஏறியடிக்கும்போது ஒவ்வொரு 'குத்து'க்கும் வெரோனிகா ஓரு 'ஏசுவே ரட்சியும்') சொல்லிக்கொண்டிருந்தாளாம். இதை தாசு பலரிடமும் சொல்லிவிட்டான். பேபியையோ வெரோனிக்காவையோ பார்க்கும்போது 'இயேசுவே ரட்சியும்' என்று சின்னப்பையன்கள் கத்த ஆரம்பித்துவிட்டார்கள். தாசுதான் ஒளிந்திருந்து பார்த்து இப்படி ஊரே சொல்லி கேவலப்படுத்திவிட்டான் என்கிற விஷயம் பேபிக்கும் தெரிந்தும் விட்டது. இப்போது தாசு கழுதையைப் புணரும் போது பேபி அதைப் பார்த்து விட்டான்.

இதைச் சொல்லிக்கொண்டே வரும்போது இடையிடையே வேதசகாயகுமார் 'என்ன சொல்ல வர்றீங்க', இதுக்கும் தொழுகை கதைக்கும் என்ன சம்பந்தம், 'விஷயத்தை மட்டும் சொல்லுங்க' என்று குறுக்கிட்டுப் பேசிக்கொண்டே வந்தார். சொல்லி முடித்ததும் சுவாமி வினயசைத்னயா "This is mere a Gossip" என்றார். இவர் இரண்டாவது அமர்வில் வெ.சா. சொன்னதைப் புரிந்து கொள்ளாமல் வெ.சா ஜாதி பற்றி தவறான எண்ணத்தோடு பேசியதாக வீணான சர்ச்சை செய்தவர். முன்னதாக 'You do Dhabas' என்ற வார்த்தையை திரும்பத் திரும்பச் சொல்லி ரொம்ப நீளமாக ஒரு தத்துவக் கதையை சொன்னவர் (எனக்கு திலீப்குமாரின் திருமதி ஜேம்ஸ் ஒன்றும் பேசவில்லை கதை ஞாபகத்துக்கு வந்தது. அது நல்ல கதை) நாராயண குரு குல சுவாமி வினய சைதன்யா 'காசிப்' என்று சொன்னவுடனேயே ஜெயமோகன் என்னைப் பார்த்து 'நீங்கள் ஊருக்குக் கிளம்புங்கள். இதுவரை நடந்த கருத்தரங்கத்தையே நீங்க புரிஞ்சிக்கலை. நீங்க ஊருக்குக் கிளம்பலாம்' என்றார். 'பத்து பேர் உங்க பேச்சைக் கேட்பதால் நீங்க இஷ்டத்துக்குப் பேசுறீங்க, இப்ப நீங்க பேசியதற்கு என்ன பர்ப்பஸ் இருக்கு' என்று கேட்டார். 'பர்ப்பஸ் இருக்கு என்றேன். 'ஒரு பர்ப்பஸும் தேவையில்லை. நீங்கள் ஊருக்குக் கிளம்புங்கள்' என்றார். நான் அப்போது என்னை பரதேசியாக உணர்ந்தேன். தி ஜானகி ராமனின் பரதேசி வந்தான் கதை. கடைந்த அமுதத்தைக் குடிக்க வந்த ராகுபோல பந்தியில் அமர்ந்துவிட்ட பரதேசி. தரதரவென்று பாதிபந்தியில் இழுத்துத் தள்ளப்பட்டு தலை அவிழ்ந்து அலங்கோலமாகக் குப்புற விழுந்த பரதேசி.நான் அப்படியே உட்கார்ந்திருந்தேன்.
யாரும் எதுவும் பேசவில்லை. எதுவுமே நடக்காதது போல, கருத்தரங்கம் தொடரும்படியாக ஜெயமோகன் பேச ஆரம்பித்துவிட்டார் எல்லோரும் அதை கவனிப்பதான பாவனை. இது துரியோதன சபை. துரியோதனனும் சகுனியுமாக இயக்கும் சபை. எனக்கு ஆதரவுதர யாரும் கிடையாது. பீஷ்மர், துரோணர், கர்ணன், அஸ்வத்தாமா எல்லோரும் வாய்மூடி மெளனியாகிவிட்டார்கள் பிற இளைஞர்கள் கூட இளம்படைப்பாளிகள் ஜெயமோகனைச் சார்ந்து இருக்க வேண்டியவர்கள். நான் ஒரு சாதாரண வாசகன். முப்பதாண்டு காலமாக வாசித்துக் கொண்டே இருக்கும் அற்பம். Just a nameless face or a faceless name.
எழுந்தேன் அறைக்கு வந்தேன். பேக் செய்தேன். ராஜீவைத் தேடி டைனிங் அறைக்கு வந்தேன். சுவாமி வினய சைதன்யா சாப்பிட்டுக் கொண்டிருந்தார். வினயமாக 'That was not a Gossip I agree. But you have taken a long time' ' என்றார். நான் 'If you say 'but' I will say 'yet'. That is discussion that is seminar' என்றேன். ஜெயமோகன் சொன்னதற்காக நான் ஊருக்குப் போகக்கூடாது என்று வினயசைதன்யா பிடிவாதம் பிடித்தார். நான் ஏற்க மறுத்துவிட்டேன். கருத்தரங்கத்தில் நான் பேசியதற்கு எடுத்துக்கொண்ட நேரம் 8 நிமிடத்திலிருந்து 11 நிமிடத்திற்குள் தான் இருக்கும். மூன்று மணி நேர கருத்தரங்கத்தில் 11 அல்லது 12 நிமிடம் கூட பேசியிருந்தாலும் லாங்டைம் என்று எப்படி சொல்ல முடியம்.
தொடர்ந்து சுவாமி வினயசைதன்யா “I will fuck the bloody ezhavaas.Only to avoid ezhavaas we have come all the way from Kerala to Ooty.Bastards” என்றார். நாராயண குரு நடராஜ குரு நித்ய சைதன்யபதி ஆகிய மூவரும் ஈழவர்கள் எனக்கு நாக்கிலே சனி. கருத்தரங்க அமர்வில் பேசியது போதாதென்று இவரிடம் நான் தமிழ் ஈழவ இனம் இல்லத்துப் பிள்ளைமார் என்று சொல்லித் தொலைத்துவிட்டேன். அறைக்குப் போய் என்பைகளை எடுத்துக்கொண்டு ராஜீவிடம் ஸ்வட்டரை ஒப்படைப்பதற்காக அங்கிருந்த குருகுல வாசியிடம் ஸ்வட்டரை கொடுத்து ராஜீவிடம் ஒப்படைக்கச் சொன்னேன். வினயசைதன்யா நான் சாப்பிட்டுதான் போக வேண்டும் என்று ரொம்ப பிடிவாதம் பிடித்தார். நான் சாப்பிட மறுத்தால் இவர் என்ன செய்வார் என்று சொல்லமுடியாது. சாப்பிடுவதாகப் பேர் பண்ணிவிட்டு எழும்போது கருத்தரங்கம் முடித்து எல்லோரும் சாப்பிட வந்துவிட்டார்கள்.தேவதேவன், நாஞ்சில்நாடன், யுவன், வெங்கட் சாமிநாதன், தேவகாந்தன் ஆகியோரிடம் விடைபெற்றேன். யுவன் 'ஏன்' என்றார். நான் பதில் சொல்ல விரும்பவில்லை. ஆசிபெறுவதற்காக வெங்கட் சாமிநாதன் காலைத் தொட்டபோது அவர் 'நோ நோ' என்றார். சிரித்துக்கொண்டே வெளியேறினேன். இடுக்கண் வருங்கால் சிரிக்கச் சொன்னான்.
தொழுகை கதை பத்துநாள் சமாச்சாரம். இதுவே சில மாதங்களில் அல்லது சில வருடங்களில் ஊருக்கும் தெருவுக்கும் இந்த விஷயம் தெரிந்துவிடும் காலப்போக்கில் முத்து மேலும் முன்னேறி செல்லம்மாளின் பெண்பிள்ளைகளின் மீதுகூட கைவைக்கும்படி ஆகலாம். அந்தப் பிள்ளைகளின் எதிர்காலம்? விஷயம் ஆறுமுக ஒதுவாருக்குத் தெரியவந்து அவருடைய மனநிலை பாதிக்கப்படலாம். ஒரு வேளை அவர் அனுசரித்துப் போகலாம். அல்லது கொலையோ தற்கொலையோ செய்யம் படி ஆகலாம். செல்லமாள் மீது கோபம் வராது என்றால் எப்படி?
முட்டாள் தாசுவின் மிருகப் புணர்ச்சியில் அவனது நோக்கம் காமமல்ல. மெடிக்கல் க்யூர்! கழுதையைப் புணர்ந்தால் பொம்பளை சீக்கு குணமாகிவிடும் என்ற நம்பிக்கை. இதுகூட தொழுகைதான். பேபியின் மனைவி வெரோனிக்கா செய்வது செல்லம்மாள் செய்வதுபோல அடல்ட்ரி கூட இல்லை. கலவியைத் தொழுகையாக்கியிருக்கிறாள்.


சும்மா சாருநிவேதிதாவை மிரட்டுவதற்காக 'சாரு தாண்ட வேண்டிய புள்ளி தொழுகைதான் ஆனால் தளையசிங்கம் அவசரமாக அடித்துக்கொல்லப்பட்டார்' என்று ஜெயமோகன் மிகையாகக் கூறிவிட்டபின் நான் தொழுகையை நிர்வாணமாக்கினால் எப்படித் தாங்கிக்கொள்ள முடியம். It is a tale told by an idiot full of sound and fury and signifying nothing.
ஊட்டியை விட்டுக் கிளம்பும்போது மதியம் 2மணி திருச்சி வந்து வீடு சேரும்போது இரவு சரியாக 12 மணி. ஊட்டிக்குப் போகாமல் சின்னவனின் சைக்கிளை சரி பண்ணியிருக்கலாம். There is always trial and error. சுந்தரராமசாமியின் 'அழைப்பு' கதையில் ஒருவரி 'நினைவின் எந்தப் பக்கத்தைப் புரட்டினாலும் பிழைகளின் அவமானம்'.