டாக்டர் கலைஞரின்
முதல் சென்னை விஜயம் பற்றி இராம. அரங்கண்ணல் 'நினைவுகள்' நூலில்:
திருவல்லிக்கேணி பைக்ராஃப்ட்ஸ் ரோட்டில் இருக்கும் 581 எண்ணுள்ள இல்லத்தின் மேல் மாடி..
ஒரு நாள் காலையில் இரவெல்லாம் மூட்டைப்பூச்சிகளோடு போராடி விட்டு,
யாரோ கதவைத் தட்டும் சப்தம் கேட்டு,
கதவைத் திறந்தால், வெளியில் பையோடு தஞ்சாவூர் நண்பர் என்.எஸ். சண்முக வடிவேல்.
"அவரோடு கருணாநிதி அவர்களும் நின்றார்.
சென்னைக்கு அது தான் அவருடைய முதல் விஜயம்!"
கோவை ஜூபிடர் ஸ்டுடியோவில் டைரக்டர் ஏ.எஸ்.ஏ. சாமி அவர்களுக்கு
உதவியாளராக இருந்து, கருத்து வேற்றுமை காரணமாக விலகி, திருவாரூக்குத் திரும்பி வந்து தங்கியிருந்த சமயம் அது.
P.V. கிருஷ்ணன் டைரக்டர். அவரும் நடிகர் எம்.ஜி. ராமச்சந்திரனும் கோவை ஜூபிடரில் பணியாற்றிய போது கருணாநிதியோடு நன்கு பழகியவர்கள்.
கிருஷ்ணன் ஏதோ திரைப்படம் எடுக்கவிருப்பதாக சொல்லவே, ராமச்சந்திரனும் அவர் அண்ணன் சக்ரபாணியும் 'மு.க.' வைத்துக் கதை வசனம் எழுதலாம் என்று சொன்னதன் பேரில் தந்தி கொடுத்து வரவழைத்து இருந்தார்கள்.
அதற்காக வந்திருந்த மு.க. , சண்முக வடிவேல் இருவரையும் அழைத்துக் கொண்டு முஸ்லிம் ஆபீசுக்குப் போய் டெலிபிரிண்டர் முதலியவைகளைக் காட்டினேன்.
இது தான் கடற்கரை, இது தான் எலக்ட்ரிக் ரயில், இது ட்ராம் வண்டி, இது தான் கவர்ன்மெணட் நடக்குமிடம் என்று காட்டினேன்.
எம்.ஜி.ஆர் குடியிருந்த சுபாஷ் சந்திர போஸ் ரோட்டிலிருந்த வீட்டுக்குப் போனோம். எம்.ஜி.ஆரின் அம்மா பக்கத்துக் கடைக்குத் தானே போய் குலோப்ஜாமுனும் மிக்சரும் வாங்கி வந்து வழங்கியது நினைவில் ஆடுகிறது.
அன்று இரவு காற்றுக்காகப் படுக்கைப் படுக்கைகளையெல்லாம் சுருட்டிக்கொண்டு கடற்கரை மணற்பரப்புக்கு நான், 'மு.க.',
டி.என். ராமன், சண்முக வடிவேல், இன்னொரு சண்முக வடிவேல் ஆகியோர் போனோம். விடிய விடியக் கதைகளைப் பேசியவாறு, குளிர்க்காற்று உடம்பைத் தாக்கத் தொடங்கியதும் அறைக்கு வந்தோம்.