Share

Jun 15, 2022

என்ன பலகாரம்?!

கணையாழி ஆகஸ்ட் 1991 இதழில் நான் எழுதிய இதன்  ஒரு பகுதி ‘புலவர் பிரபஞ்சன்’ என்ற தலைப்பில் பிரசுரமானது.

கேக் கொண்டு வந்த சினிமா நடிகர் பார்த்திபனிடம் பின்னால் கி.ரா கடிதத்தில் கேட்ட  கேள்வி. ‘அது என்ன பலகாரம்?’ 
என்ன தான் காஸ்ட்லியான கேக் என்றாலும் பார்த்தவுடனே கண்டு பிடிக்க முடியும். 

கி.ரா எப்படில்லாம் காதில் பூ சுத்திருக்காரு. 
எல்லா கிராமங்களுக்கும் கேக்
 1970லேயெ வந்துடுச்சி. கேக் தெரியாத கிராமத்தானே கிடையாது.

கோவில்பட்டியிலேயே பேக்கரி கேக் உண்டு. இடைச்செவல் கிராமம் பக்கத்தில் தான்.                          பாண்டிச்சேரி போன்ற பெரு நகரத்துக்கு வந்து மூன்று வருடம் கழித்து ’அது என்ன பலகாரம்?’ என்று வியந்து கேட்பது ரொம்ப ஓவர் தானே?

பிரபஞ்சன் பின்னால் ஒரு எட்டு ஒன்பது வருடங்களில் தி.ஜாவின் பெருமைகளை 
புரிந்து கொண்டார். 
தி.ஜாவை மிஞ்ச ஆளேயில்லை என்று 
வானளாவ ஜானகிராமனை
 புகழ ஆரம்பித்தார்.

……………………

கி.ரா அறியாத பலகாரமும்,புலவர் பிரபஞ்சனும். (1991)
- R.P.ராஜநாயஹம்

 சென்ற ஜுலை மாத கணையாழியில் 
பிரபஞ்சன் பேட்டியில் தி.ஜாவின் பெண் கதாபாத்திரங்களை Utopian characters ஆக மட்டையடி அடித்திருப்பது ஏற்க முடியாத விஷயம்.

 பெண்மையின் மேன்மையையும், உன்னதத்தையும் தன் பெண் கதாபாத்திரங்களின் பலம், பலவீனத்துடன் தெளிவாக சித்தரித்தவர் தி.ஜானகிராமன். 

’தாங்க முடியாத மன உளைச்சலுக்குத் தான் ஆட்படும்போது தி.ஜாவின் மோகமுள்ளை ஒரே இரவில், ஒரே மூச்சில் எத்தனையோ தடவை படித்துள்ளதாக’ சொல்லும் பிரபஞ்சன்
 தன்னுடைய பார்வை முரண்பாடுகளை 
பரிசீலிக்க வேண்டும்.

’தன்னை நம்பி வந்த மனைவியை பட்டினி போட்டு விட்டு ஒருவன் இலக்கியம் படைத்தால் அந்த இலக்கியம் கறை படிந்த இலக்கியம்’ என்கிறார்.

 முன்பொரு முறை பாரதி மீது பணக்கார பாலகுமாரன் இந்த மாதிரி 
ஒரு கமெண்ட் அடித்தார். 
இப்போது பிரபஞ்சன்.

பாரதி, புதுமைப்பித்தன் துவங்கி ஜி. நாகராஜன் வரை,  கலைஞனின் தனிப்பட்ட வாழ்க்கை முறை பற்றி முகம் சுளித்து தீர்ப்பிட யாருக்கும் 
இங்கே யோக்கியதை கிடையாது.
 கலைஞன் இவர்களுடைய சமூக, பண்பாட்டு மதிப்பீடுகளுக்கு கட்டுப்பட வேண்டிய அவசியமில்லாதவன். 
டேல் கார்னகி, எம்.ஆர்.காப்மயர் தியரிகளைப் போன்ற அபத்தங்களை  உளற வேண்டாம்.

வட்டார இலக்கியம் போலியானது என்பது சரி. இது குறித்த அபாய எச்சரிக்கையை முதலில் செய்தவர் வண்ண நிலவன். 
மானாவாரி பயிர், திவசம், கம்மங்கூழ் இப்படி சில  வார்த்தைகளோடு வறுமையை மிக்ஸ் பண்ணி ’ரெடிமேட்’ கரிசல் இலக்கியம் செய்வதை வண்ணநிலவன் சாடினார்.

கி.ராவின் இலக்கிய அந்தஸ்தை இது கேள்விக்குள்ளாக்காது. 
கி.ராவின் சாதனை ‘கதவு’ மட்டும் தானா?  நாவலுக்கு என்று இருந்த வடிவத்தை உடைத்ததோடு தமிழின் முதல் சரித்திர நாவலையும் எழுதியவர் கி.ரா.
 சமீப காலங்களில் முழுக்க முழுக்க வட்டார வழக்கிலேயே கரிசல் காட்டு கடுதாசி 
கட்டுரை துவங்கி, 
தொடர்ந்து தன் மொழி நடையில் 
அவர் செய்து வரும் மரபு மீறல் புதிய முயற்சி. 

எந்த மொழி இலக்கியமானாலும்
 மரபு மீறல்களாலேயே 
வளமடைந்திருப்பது 
சரித்திர உண்மை.

கி.ராவிடம் ஆட்சேபகரமான விஷயங்களும் இல்லாமல் இல்லை.
 ஈசல் போல் கரிசல் எழுத்தாளர்கள் பெருகுவதைக் கண்டு அவர் புளகாங்கிதமடைவது ஏற்புடையதன்று. 
பூமணி, கோணங்கி விதிவிலக்கு.

மற்றொன்று ஆரம்ப காலத்தில் கி.ரா.வுக்கு ஏற்பட்டு விட்ட நகர வாசனையேயில்லாத கிராமத்து அப்பாவி என்ற பிம்பத்தை தொடர்ந்து காப்பாற்ற அவர் செய்யும் பிரயத்தனங்கள்!

புதுவையில் தன்னைப் பார்க்க வந்த ஒரு சினிமாக்காரன் கொடுத்த ‘கேக்’ பற்றி,
 பின்னர் அவனுக்கு எழுதிய கடிதத்தில்
 ‘அது என்ன பலகாரம்?’ என்று மிகையாக அதிசயப்பட்டு விசாரித்திருக்கிறார். 
அந்த நடிகனே இதை குமுதத்தில் எழுதி
 அவரை ரொம்ப இன்னொசண்ட் என்று புகழ்ந்திருந்தான். 

கி.ராவின் சமீபத்திய இலக்கிய முயற்சிகளை ஆபாசத்தின் எல்லை என்று பிரபஞ்சன் கடுமையாக தாக்குவது சரியா? 

 நக்கீரன் பத்திரிக்கையில் 
பிரபஞ்சன் அடித்த கூத்தை விட 
எதுவுமே ஆபாசம் கிடையாது.

‘மரப்பசு’ நாவல் குறித்த தன் அபிப்ராயமாக ‘தி.ஜானகிராமனுக்கு ஆயிரம் பெண்களோடு படுக்க ஆசை’ என்று எழுதிய வக்கிரம்,

எஸ்.வி.சேகர் ஏதோ ஒரு பத்திரிக்கையாசிரியரான போது, அலட்சியப்படுத்த வேண்டிய உப்பு பெறாத இந்த விஷயத்தை பெரிதாக எடுத்துக்கொண்டு, மணிக்கொடி ஆசிரியர் பி.எஸ்.ராமையாவையும் ‘எழுத்து’ சி.சு.செல்லப்பாவையும், குமுதம் எஸ்.ஏ.பி. அண்ணாமலை அப்புச்சியோடு தோளோடு தோளாக நிறுத்தி வைத்து ‘இவர்களெல்லாம் பத்திரிக்கையாசிரியர்களாக இருந்த செந்தமிழ் நாட்டில் இன்று எஸ்.வி. சேகர் பத்திரிக்கையாசிரியரா? என்று புலம்பிய அபத்தம்,

’1989 இல் தி.மு.க.வின் சட்டசபைத் தேர்தல் வெற்றி, ஐயர்களின் தோல்வி’ என்று கொக்கரித்த எகத்தாளம்.

ஆக இந்த பேட்டை ரௌடித்தனம் தான் 
இன்று கி.ரா.வின் மேலேயும் 
நிர்த்தாட்சண்யமாக பாய்ந்திருக்கிறது.

கடைசியாக ‘Ego’ பற்றி 
பிரபஞ்சன் வருத்தப்படுவது வேடிக்கை தான்.
 ஏனென்றால் இந்த கற்றோர் காய்ச்சல்,
 வித்துவச் செருக்கெல்லாம் 
புலவர் பிரபஞ்சனிடமும் இருக்கிறது.

………………………………..

https://m.facebook.com/story.php?story_fbid=3061918680688244&id=100006104256328

https://m.facebook.com/story.php?story_fbid=3148275495385895&id=100006104256328

http://rprajanayahem.blogspot.in/2008/06/blog-post_09.html

http://rprajanayahem.blogspot.in/2017/01/blog-post_19.html

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.