Aug 31, 2021
மறதி
Aug 30, 2021
தர்மேந்திராவின் தந்தை
தர்மேந்திரா தன் தந்தை, குழந்தைகளோடு இருக்கும் ஒரு புகைப்படம் பார்த்தவுடன்
ஒரு பேட்டியில் தர்மேந்திரா சொல்லியிருந்த விஷயம் ஞாபகத்திற்கு வந்தது.
"நானும் என் அப்பாவும் நடந்து சென்று கொண்டிருக்கும் போது எதிரில் ஒரு மிக அழகான பெண் வந்து கொண்டிருந்தார். அப்பா அருகில் இருப்பதால் நான் கண்ணியமாக அந்தப் பெண்ணைப் பார்க்காமல் தவிர்த்து வேறு பக்கம் பார்த்தேன். ஆனால் அவரோ வைத்த கண் எடுக்காமல் மிகுந்த பரவசத்துடன் அந்தப் பெண்ணையே விழுங்கி விடுவது போல
பார்த்துக் கொண்டே தான் இருந்தார்."
Aug 23, 2021
ஸ்தான சலனம் கௌரவ பங்கம்
ஸ்தான சலனம் கௌரவ பங்கம்
- R.P.ராஜநாயஹம்
பதினாறு வருடங்களுக்கு முன்
ஒரு ஓய்வு பெற்ற காவல் துறை கண்காணிப்பாளரை ( Retired Supdt of Police) சென்னையில் சந்திக்கிற வாய்ப்பு கிடைத்தது.
அவர் தன்னிரக்கத்தால் பீடிக்கப்பட்டிருந்தார். பணிஓய்வு அவரை முடக்கியிருந்தது.
அவர் ஒரு பிரபலமான வக்கீலிடம் அவருடைய பணியில் உதவியாக இருக்கும்போது நான் அவரிடம் பேசும் வாய்ப்பு கிடைத்தது.
ஓய்வு பெற்ற நிலையில் ஆள் அம்பு சேனை அதிகாரம் இழந்து,
அந்த நிலையில் ஒரு டீக்கடைக்காரன் தன்னை மிகவும் அவமானப்படுத்தி விட்ட நிகழ்வு ஒன்றை விரிவாக என்னிடம் விவரித்தார்.
எனக்கு அப்போது நினைவுக்கு வந்த விஷயம் இது.
பல வருடங்களுக்கு முன் அப்போது ராஜபாளையத்தில் D.S.P யாயிருந்த ஒரு காவல் துறை அதிகாரி என்னிடம் பேசும்போது சொன்னார்:
" மாறுதல் உத்தரவு எனக்கு ( Transfer order) வந்து விட்டாலே இந்த ஊர் கான்ஸ்டேபிள் கூட அலட்சியமாகி விடுவான். ஓய்வு பெற்ற காவல் துறை உயர் அதிகாரிகளை யார் மதிப்பார். போலீஸ் துறை துவங்கி பொதுமக்கள் வரை கண்டுகொள்ளவே மாட்டார்கள் !"
அதிகாரம் என்பது அஷ்டலக்ஷ்மிகளில் கஜலக்ஷ்மியை குறிக்கும் .அதிகாரம், மக்கள் செல்வாக்கு, சமூக அந்தஸ்து தருபவள் கஜலக்ஷ்மியாம்.
சில பெரும் பணக்காரர்கள்- இவர்களை ஊரில் யாருமே மதிக்கமாட்டார்கள்.
அவர்களுக்கு கஜலக்ஷ்மி அருள் இல்லை
என்று அர்த்தம்.
அரசியல்வாதிகள் பதவியில் இல்லாத போது கஜலக்ஷ்மி அருள் இல்லாதவர்களாகி விடுகிறார்கள்.
பதவிக்கு வரும்போது கஜலக்ஷ்மி இவர்களை பின்னி படர்ந்து விடுகிறாள்.
இடுப்புக்கு கீழே எட்டு சுத்து.
Politicians out of power are the different species from the politicians in power.
அதிகார பதவியில் உள்ள காவல் துறைக்காரர்களுக்கு பணி ஓய்வு பெற்றவுடன் கஜலக்ஷ்மி நிரந்தரமாக விடை பெற்று விடுகிறாள்.
எந்த ஒரு உத்தியோக ஓய்வும் சம்பந்தப்பட்டவர்களை மனரீதியாக, ஏன் உடல் ரீதியாக கூட மிகவும் பாதித்து விடுகிறது.
பொருளாதார வீழ்ச்சியடைந்தவர்கள் பாடு கேட்கவே வேண்டாம்.
"வாழ்ந்தவர் கெட்டால் " என்று ஒரு நல்ல நாவல் க நா சு எழுதியிருக்கிறார்.
இந்த"வாழ்ந்தவர் கெட்டால்" நாவல் தான் க நா சு நாவல்களில் அசோகமித்திரனுக்கு
மிகவும் பிடித்த நாவல்.
எனக்கு கூட "வாழ்ந்தவர் கெட்டால் " நாவல்
மிகவும் பிடிக்கும்.
க.நா.சு வின் நடை அப்படி.
ஆனால் க நா சு வின் "பொய்த்தேவு " நாவலும் "ஒரு நாள் " நாவலும் தான் தமிழின் முதல் சாதனை நாவல்கள்.
....................
மீள் 2009
Aug 22, 2021
You never know a man until you stand in his shoes
27.03.1983ல் க்ரியாவில் ’நடை’ இதழ்களின் பழைய நான்கு பிரதி, ’கசடதபற’ ஒரு ஐந்து பிரதிகள் விலைக்கு கிடைத்தது. சில பிரக்ஞை இதழ்களும்.
அன்று அங்கு எஸ்.வி.ராஜதுரை, சி.மணி, க்ரியா ராமகிருஷ்ணன் ஆகியோரை சந்தித்தேன். சி.மணி தன்னுடைய ‘வரும் போகும்’ கவிதைத்தொகுப்பில் கையெழுத்திட்டு தந்தார்.
2003ல்திருச்சியில் இருந்து திருப்பூருக்கு போக நேர்ந்த போது
இந்திரன் சொன்னது போல‘ பார்த்துப் பார்த்து சேர்த்திருந்ததெல்லாம் கழுதைப்பொதியாக சேர்ந்திருக்க',
லக்கேஜை குறைக்க வீட்டின் கொல்லையில் பழைய கணையாழி, நடை, கசடதபற, பிரக்ஞை, ஞானரதம், ’மேலும்’, நிறப்பிரிகை, இன்னும் பல சிறு பத்திரிகை இதழ்களையெல்லாம் கொல்லைப்புறத்தில் வைத்து விட்டு திரும்பிப்பார்க்காமல் ஜாமான்கள் ஏற்றிய வேனில் குடும்பத்துடன் கிளம்பினேன்.
திரும்பிப்பார்த்தால் இலக்கிய இதழ்கள் எல்லாம் குழந்தைகள் போல ”எங்களை விட்டு விட்டுப்போகிறாயே” என்று கதறுவது போல காதில் கேட்குமே.
Sometimes you have to let go of what you can't live without.
சென்னைக்கு 2015 செப்டம்பர் மாதம் குடும்பத்துடன் வர நேர்ந்த போது
ஒரு ஆயிரம் புத்தகங்கள்,
காலம் காலமாக சேர்த்து வைத்திருந்த இரண்டு சூட்கேஸில் இருந்த நூற்றுக்கணக்கான கர்னாடக சங்கீத, இந்துஸ்தானி சங்கீத இசை கேசட்கள் எல்லாவற்றையும் தூக்கி வீசிவிட்டு
கிளம்ப நேர்ந்து விட்டது.
( " தேர்ந்த இசைத்தொகுப்புகளைச் சேகரம் பண்ணி வைத்திருப்பவர் ராஜநாயஹம்” என்று கி.ராஜநாராயணன் 'கதை சொல்லி’பத்திரிக்கையில் எழுதியிருக்கிறார்.)
You never really know a man until you stand in his shoes and walks around in them
- a popular quote of Atticus in " To kill a mocking Bird "
( 1962 movie)
க. நா.சு சொல்வது போல “எல்லாமே ரொம்ப முக்கியம் தான். ஆனால் எதுவுமே அவ்வளவு முக்கியமில்லை.”
..
Aug 20, 2021
ஜெய்சங்கர் பட பாட்டு - ஜானகியின் நாயகனே ராமச்சந்திரா
வருடம் 1976
"ஜானகியின் நாயகனே ராமச்சந்திரா,
தர்மம் நிலைக்கும் என்று சொன்னவனே,
நீ நாடாள வர வேண்டும்"
இந்த வாலி பாடல் பாடி நடித்தவர் ஜெய்சங்கர். செய்தித்தாளில் இந்த பாடல் வரிகளோடு ஜெய்சங்கர் தலையில் கும்பத்தோடு ஆடி பாடுகிற ஸ்டில் போட்டு 'பணக்காரப்பெண்' பட விளம்பரம்.
மறு வருடம் 1977ல் எம். ஜி.ஆர். ஆட்சி ஆரம்பம் என்பது தெரிந்த விஷயம்.
எம். ஜி.ஆர் முதல்வரான பிறகு மறு வருடம் 1978ல்
'வண்டிக்காரன் மகன்' கலைஞர் படத்திற்கு மருமகன் அமிர்தம் இயக்குநர். 'மேடையில் ஆடிடும் மெல்லிய பூங்காற்றே' பாடல் வண்டிக்காரன் மகனில் தான்.
பின் கலைஞர் படங்கள் நெஞ்சுக்கு நீதி, ஆடு பாம்பே,
1980ல் 'காலம் பதில் சொல்லும்'. இந்த படங்களில் ஜெய்சங்கர் தான் கதாநாயகன்.
ஜெய்சங்கரின் தாயார் மறைந்த போது கலைஞர் அவருடைய வீட்டிற்குப் போய் துக்கம் விசாரித்தார்.
'காலம் பதில் சொல்லும்' படத்திற்கு பிறகு கலைஞர் படங்களில் அமிர்தம் இயக்கத்தில் ஜெய்சங்கர் நடித்ததில்லை.
1987ல் எம். ஜி.ஆர் மறைவு.
1989 ல் கலைஞர் கருணாநிதி 13 வருடங்களுக்கு பிறகு ஆட்சிக்கு வந்தார்.
ஆட்சியை கைப்பற்ற நடந்த கடுமையான போராட்டம்.
கலைஞருக்கு எதிராக பெரு வியூகம்.
காங்கிரஸ் கலைஞருக்கு கை கொடுக்காமல் எதிராக தேர்தலை மூப்பனார் தலைமையில்.
உடைந்த அ.தி.மு.கவின் பகுதி எம்ஜியார் மனைவி ஜானகி தலைமையில் சிவாஜி கணேசன் தமிழக முன்னேற்ற முன்னணியும், ஜெயலலிதா அணி சேவல் சின்னத்தில்.
தி. மு. க வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றிய போது நக்கீரனில் பிரபஞ்சன் 'தி. மு.க. வின் வெற்றி ஐயர்களின் தோல்வி' என்று குறிப்பிட்டு
தி. மு. க விற்கு எதிராக பிரசாரம் செய்த ஐயர்கள் பெயர்களை ஐயர் என்ற அடையாளமிட்டு குறிப்பிட்ட பெயர்களில் நடிகர் ஜெய்சங்கரையும் கூட ஜெய்சங்கர் ஐயர் என்று குறிப்பிட்டு எழுதியிருந்தார். ஆமாம். கலைஞருக்கு எதிராக ஜெய்சங்கர் 1989ல்.
ஐயங்காரான மேஜர் பெயரையும் சுந்தர்ராஜ ஐயர் என்றே எழுத்தாளர் பிரபஞ்சன் எழுதினார்.
மணிக்கொடி சிட்டி என்ற பெ.கோ. சுந்தர்ராஜன் அப்போது கோயம்புத்தூரில் பிரபஞ்சனின் அந்த நக்கீரன் கட்டுரை படித்து விட்டு என்னிடம் சொன்னார் : அடுத்த தடவை பிரபஞ்சனைப் பார்க்கும் போது ' என்னை தெரியுதா? நான் தான் சுந்தர்ராஜ ஐயர்' என்று சொல்வேன் ' என்றார்.
சிட்டியின் இந்த மெல்லிய நகைச்சுவை பற்றி 1990ல் புதுவையில் பிரபஞ்சனிடம் நான் சொன்ன போது ரசித்து புன்னகைத்தார்.
Paulo Coelho 's proverb and emails to R. P. Rajanayahem
பௌலோ கொய்லோ சொன்ன
ஒரு பழமொழி பற்றியும்
மற்றும் அவர் R. P. ராஜநாயஹத்துக்கு எழுதிய இரண்டு ஈமெயில்களும்
ஏற்கனவே இருக்கிற பழமொழிய தான்
பௌலோ கொய்லோ சொன்னார்.
“Everything that happens once can never happen again. But everything that happens twice will surely happen a third time.” ― Paulo Coelho, The Alchemist.
'ரசவாதி' என்ற தமிழ் மொழிபெயர்ப்பைப் படித்த பலரும் மேற்கண்ட பௌலோ கொய்லோவின் வார்த்தைகளால் கவரப்பட்டிருக்கிறார்கள்.
"ஒரு முறை நடந்த எதுவும் திரும்ப நடக்காது. ஆனால் இரண்டு முறை நடந்த எதுவாயிருந்தாலும் மூன்றாவது முறை நடந்தே தீரும்"
இது ஆங்கிலத்தில் முன்னரே சொல்லப்பட்டிருக்கிற பழமொழி.
அதை தன் Alchemist நாவலில் மீண்டும் கொஞ்சம் மாற்றி சொல்லியிருக்கிறார்.அவ்வளவு தான்.
" Things comes in threes "
proverb was first recorded in 1927.
All good things comes in threes;
all bad things comes in threes.
.........
இன்னொரு விஷயம்.
once, twice, three times
once சொல்லுங்க.. twice சொல்லுங்க.. 'மூன்று முறை ' குறிக்க எப்போதும் three times தான் சொல்ல வேண்டும்.
"Thrice " என்று சொன்னால் நீங்க கொஞ்சம் Old fashioned ஆக அறியப்படுவீர்கள்.
..........
"அப்பா டக்கர் " என்ற slang வார்த்தை இன்று மிக பிரபலம். இதற்கு Antonym தெரியுமா? முப்பது வருடங்களுக்கு முன் அப்பா டக்கர் என்பதற்கு எதிர் பதம் மதுரையில் மிகவும் பிரபலம்!
ஊள் டக்கர்.
ஊளை என்பதிலிருந்து பிறந்த மதுரை Slang
ஊள் டக்கர்.
சொத்தையான ஆளை, ஊளையான ஆளை குறிப்பிட "ஊள் டக்கர்" என்ற வார்த்தையை அன்றே உபயோகப்படுத்தினர்.
"தாழன் சரியான 'ஊள் டக்கர்'டா"
"அப்பா டக்கர்" என்பதன் எதிர் பதம் என்பதால் மீண்டும் "ஊள் டக்கர்" புழக்கத்தில் வரட்டும்.
............
PAULO COELHO's Mails to R.P.RAJANAYAHEM
Two Emails from the Great Writer Paulo Coelho
Two feathers in R.P.Rajanayahem's Cap
.
Paulo Coelho wrote:
From: "Paulo Coelho" To: Subject: Fw: The Alchemist Date: Wed, 16 Apr 2008 08:01:19 -0300
Dear R.P.Rajanayahem,
I hope that this message finds you in high spirits,
as I was when I received yours.
I thank you for your kind words and inspiration.
The Warrior of light concentrates on the small miracles of daily life
Paulo Coelho
www.paulocoelho.com www.paulocoelhoblog.com http://www.warriorofthelight.com
Paulo Coelho wrote:
From: "Paulo Coelho" To: Subject: Fw: Bush - Re: Thank you Bush Date: Wed, 16 Apr 2008 07:58:17 -0300
Dear R.P.Rajanayahem,
Thank you for your message and this information. Keep on fighting for what's important to you and to the world.
Paulo Coelho.
www.paulocoelho.com www.paulocoelhoblog.com http://www.warriorofthelight.com
...........................
மரம்.. தனி
மரம்...தனி
- R.P.ராஜநாயஹம்
இதற்கு முன் நான் பார்த்தேயிராத, ஆனால் கேள்விப்பட்டிருக்கிற ஒரு இலக்கியவாதி.
சந்திக்கிற வாய்ப்பு கிடைத்த போது இவனையெல்லாம் ஏண்டா பாத்தோம்னு ஆகிப்போச்சி. ச்சீ…ச்சீன்னு இருந்தது.
பெரிய மேதாவிங்கிற, பெரிய புடுங்கிங்கிற நெனப்பு.
குடிச்சிப்பிட்டு தான் மேடையில பேசமுடியும்னான்.
அவனோடு பேசியதில் எப்படி இவன் மத்தவங்க கிட்ட அடி வாங்காம தப்பிக்கிறான்னு தோணுச்சி.
சம்மந்தமேயில்லாமல் தான் பெரிய மசகாளி என்றான்.
தன்னைப்பற்றி எவனாவது இப்படி ஒரு கேஸனோவான்னு சொன்னான்னா அவன்
ஒரு மன நோயாளின்னு அர்த்தம்.
பொதுவாவே இவனுங்க எப்பவும் பீத்திக்கிட்டே தான் இருப்பானுங்க.
நான் சந்திச்ச எழுத்தாளன் கூட
தன்னோட பெண் வயதுள்ள ஒரு பெண் தன்னை காதலிக்கிறாள் என்றான்.
இத்தனைக்கும் இவன் பொண்டாட்டி இவன வேணவே வேணாம்னு போயிட்டா.
கிழிஞ்ச கல்யாணம்.
மூஞ்சப் பாத்தீங்கன்னா கரிச்சட்டி மாதிரி முகத்தில் அங்கங்கே கரியடிச்சி இருந்தது.
ரத்தம் செத்த பய. இவன போய் ஒரு சின்னப்பொண்ணு காதலிப்பது உண்மையென்றால்
அவள் எப்பேர்ப்பட்ட கோட்டிக்காரியாக இருப்பாள்.
இவன் ரொம்ப வருஷங்களுக்கு முன்ன வேலை பார்த்த இடத்தில் முதலாளி தன் மனைவியோடு இந்த பயலை படுக்க சொன்னதாக சொன்னான்.
பயல் என்றவுடன் இளம் வாலிபன் என்று நினைத்து விடக்கூடாது.
இப்ப எழுபது வயசு ஆனவன். ஆனால் எழுபத்தைந்து வயசுக்கு மேலன்னா நம்பலாம்.
………………………………
க.சீ. சிவகுமார் அகால மரணமடைந்த போது எவ்வளவு இரங்கல் பதிவுகள்.
இணையம், பத்திரிக்கை எல்லாமே
இரங்கல் செய்திகள்.
இந்த க.சீ. எப்படியெல்லாம் எவ்வளவு பேருடன் நல்ல rapport. என்ன ஒரு public relation.
ஒரு பெரிய குழுவாக இங்கே எல்லா எழுத்தாளர்களும் இயங்குகிறார்கள்.
ஒருவரோடும் சேராமல், தொடர்பில் இல்லாமல், செல் பேசி உறவு கொண்டாடாமல் ஒதுங்கியிருக்கும் நான் இறந்தால் எனக்காக இரங்கல் தெரிவிக்க இலக்கிய உலகத்தில் ஆளே இல்லை.
Unwept, unsung, unhonored.
தன்னிரக்கம் எதுவும் கிடையாது.
இருந்தாலும் உண்மை இது தான்.
எந்த கும்பல்லயும் சேராம, கும்பல சேக்காம..
பெரிய எழுத்தாளர்கள் எவரோடுமே எனக்கு
Communication கிடையாது.
நான் எந்த இலக்கிய உலக எழுத்தாளரையும் சந்திக்க விரும்புவதில்லை.
எல்லோருமே Self-centred persons.
எழுத்தாளனோடு உறவு கொண்டாட அவனுடைய எழுத்தை படித்துக்கொண்டே, கொண்டே இருக்கவேண்டும். அவனுடைய எழுத்தைப் பற்றி அவனிடம் பேசிக்கொண்டே இருக்க வேண்டும்.
என்னுடைய சிறுகதை படிச்சீங்களா? என்னோட புது நாவல் படிச்சிட்டீங்களா? இந்த பத்திரிக்கையில என் கட்டுரை படிச்சீங்களா?
இல்லன்னா உறவு அஸ்தமித்து விடும்.
எப்ப எவன் பேன் பார்ப்பான்,
எவன் காத அத்துருவான்னு சொல்ல முடியாது.
பேன் பாக்கறான்னு நெனக்கும்போதே
காத அத்துடறவனும் உண்டு.
இவ்வளவு நாளில் நான் ஒரு வாசகரிடம் கூட என் புத்தகம் வாசிச்சீங்களா? என்று கேட்டதில்லை. பிறகு எழுத்தாளனிடம் கேட்க எனக்கு பைத்தியமா?
ஒரு முப்பது பக்க கவிதை நூலுக்கே எவ்வளவு செலவு பண்ணி விழா எடுத்து விடுகிறார்கள்.
கடந்த இரண்டு வருடங்களில் இப்ப மூன்று புத்தகம் என் பெயரில் வந்திருக்கிறது. அதற்கு வெளியீட்டு விழா என்று நடந்ததில்லை. படியுங்கள் என்று யாரிடமும் வன்முறை பிரயோகித்ததில்லை.
" தனியாக இருக்கத் தெரியாத
ஒருவனும்
ஒரு எழுத்தாளனாக
இருக்க முடியாது”
- நகுலன்
……
நாலு வருஷம் முன்ன நான் 'மரம் தனி..' எழுதுனப்ப
ஒரு மெகா ரைட்டர் 'எனக்கு ஏகப்பட்ட ப்ரன்ஸுங்க இருக்காங்க' ன்னு பீற்றி
ஒரு ப்ரன்ஸுங்க லிஸ்ட் கொடுத்திருந்தான்.
அந்த லிஸ்ட்ல இருந்த ஒர்த்தன் எப்பவும் விடாம அவன திட்டிக்கிட்டே இருந்தவன்.
...
Aug 19, 2021
மென்னடி மங்கையை விட்டுச் சென்ற கென்னடி
'மென்னடி மங்கையை விட்டுச் சென்ற கென்னடி'
இதை முன் வைத்து ஒரு Macabre joke.
கென்னடிக்கு பதிலாக குருச்சேவ் சுட்டுக் கொல்லப்பட்டிருந்தால் என்ன ஆகியிருக்கும்?
" ஒனாசிஸ் நிச்சயமாக மிஸஸ் குருச்சேவை
கல்யாணம் செய்திருக்க மாட்டார். "
..
Oliver Stone 's Wonder movie JFK.
Kevin Costner as Jim Garrison.
How can we forget Madurai Regal and
Parameswari theatres.
தரை டிக்கெட் மதுர சல்லி JFK பாத்துட்டு கமெண்ட் : "வசனம்லாம் டயலாக்கா எழுதிருக்கான். ஆனா படம் ஃபுல்லா கான்வெக்கேஸன்"
(Conversation தான் சல்லி வாயில் மருவி Convocation ஆகியிருக்கிறது)
Aug 12, 2021
பிரமிள் பதிவில் பின்னூட்டங்கள்
ஜெயந்தன் மகன் 2012 ல் ராஜநாயஹம் ப்ளாக்கில் பிரமிளை தாக்கி எழுதிய கமெண்ட் : என் தந்தைக்கு இப்படியோர் அவமானம் நடந்திருக்கிறது என்றறியும் போது கோபம் வருகிறது. தன்னை தானே நெறிப்படுத்திக்கொள்ள முடியாதவன் எப்படி எழுத்தாளனாக இருக்கமுடியும் !
கோடு - ஜெயந்தன் : இது என் தந்தை அவமானப் படுத்தப் பட்ட தின் பதிவு. இதை நான் வெறுக்கிறேன். இப்பதிவு மீண்டும் மீண்டும் சுற்றி வருகிறது. பிரமிள், ஜெயந்தன் இருவருக்கும் பெருமை சேர்ப்பது அல்ல இப்பதிவு. பாசுந்தி, தோசை வாங்கிக் கொடுத்த தன் புரவல பெருமையை பீற்றிக் கொள்ளவே முயல்கிறார் R. P.
ஜெயந்தன் மகன் கோபத்திற்கான பதில் பின்னூட்டங்கள் கீழே
கால சுப்ரமணியம் : மூன்று நாள் பட்டினியோடு வருகிறார். பெயருக்கு அவர் மிக முதன்மை தருபவர். ஜெயந்தனை படித்தோ அறிந்தோ இருக்கமாட்டார். ஜெயகாந்தன் பெயரைக் குறுக்கி ஜெயந்தன் ஆக்கி வைத்துக்கொண்டது என்று உடனே தீர்மானித்துக்கொண்டு கட்டாயம் முகச்சுளிப்பைக் காட்டியிருப்பார். பெயரை, தோற்றத்தை வைத்தும் முதல் ஓரிரு பேச்சுக்களை வைத்தும் ஒருவரை எடை போடுவதில் அவர் மிகத் துல்லியம் கொண்டவர். தேவதேவன் வீட்டில் வண்ணதாசன் வந்து சந்தித்த போதும் இதுவே நடந்தது. மணிக்கணக்கில் அப்படி ஒரு பிரகிருதி அருகிலிருப்பதாகவே காட்டிக்கொள்ளவில்லையாம். அந்த நிகழ்வை பிரமிள் என்னிடம் பின்பு விவரித்திருக்கிறார். அந்த நிகழ்வை வண்ணதாசன் பின்பு ஒரு முறை என்னிடம் கூறி வருத்தப்பட்டிருக்கிறார். கண்ணதாசனைப் போல பெயர் என்பதுக்கும் மேல் அவர் தன்னை அறிமுகப் படுத்திக்கொண்ட விதம் சரியில்லை என்று பிரமிள் கூறியிருக்கிறார்.
ராமசாமி துரைப்பாண்டி : நினைவலைகளைப் பகிரும் போது யாவும் வரும்தானே.. இங்கே எங்கு உங்கள் தந்தையைச் சிறுமைப் படுத்தியுள்ளார். பெருமைதானே செய்திருக்கிறார்.. ஏன் இவ்வளவு கோபம் வருகிறது இந்தப் பதிவின் நோக்கம் பாசந்தி அல்ல... இரு ஆளுமைகளின் சந்திப்பின் மையம் குறித்த பதிவு மட்டுமே... பொது வெளி ஆளுமை பொதுவானாவர்... உங்களுக்கு மட்டுமே அப்பா இல்லை... குருதி உறவு சொல்லி அவரைச் சுருக்க வேண்டாமே அன்பே.
Gopalakrishnan Sundararaman : Don't be naive and stupid. People can't write the facts as per your whims and fancies. If there is factual error on the incident, it can only be corrected. Atleast you should be happy that your father is figuring in a widely read forum. R. P. Rajanayahem posts are generally based on the actual incidents and his opinions and comments are honest and upright. We know more about your father and as a child of a known literary person, you wouldn't be knowing much about your Dad. This posting in no way, demean your Dad.
சரவணன் மாணிக்கவாசகம் :தமிழ் எழுத்தாளர்கள் எப்போதும் துதி பாடுபவர்களைப் பார்த்தே பழகிவிட்டார்கள். அது அடுத்த தலைமுறைக்கும் தொடர்வதாகத் தெரிகிறது. தோழர் ராஜநாயஹம் தான் வாங்கிக் கொடுத்ததை எழுதினால் அதைப் பற்றி மட்டும் தான் அவர் வருடக்கணக்காகப் பதிவுகள் எழுத வேண்டும். உங்களுக்கு ராஜநாயஹத்தைத் தெரியாது. ஜெயந்தனை எந்த விதத்திலும் மரியாதைக்குறைவாக இந்தப்பதிவு சொல்வதாகத் தெரியவில்லை. எண்பதுகளிலேயே நாங்கள் ஜெயந்தனை முழுதும் படித்து விவாதித்தாகியாயிற்று. இது சொல்வது இரண்டு எழுத்தாளர்கள் மட்டுமன்றி வேறு யாரேனும் இரண்டு எதிர் குணாதிசயங்கள் கொண்ட நண்பர்கள் வந்தாலும் Hostக்கு ஏற்படும் தர்மசங்கடத்தைக் குறிக்கிறது. பிரமிளையோ ஜான் ஆபிரகாமையோ சந்திரபாபுவையோ யாரும் கட்டுப்படுத்த முடியாது.
சரவணகுமார் அய்யாவு : இதில், பிரமிள் அவர்களையோ, ஜெயந்தன் அவர்களையோ சிறுமைப்படுத்தும் எந்த வாக்கியமும் இல்லை. ராஜநாயஹம் சாரின் நோக்கமும் அது அல்ல. பிரமிள் மீது உள்ள பிரியத்தின் காரணமாகத் தான் அவர் மாற்றிய பெயரை இன்றளவும் வைத்திருக்கிறார். ஜெயந்தன் பற்றிய ராஜநாயஹம் சாரின் உயர்வான பதிவு.
https://m.facebook.com/story.php?story_fbid=3101078233438955&id=100006104256328
பா. அசோக் : ஜெயந்தன் உங்க தந்தை என்பதாலேயே நீங்கள் அவரை முழுமையாக அறிந்தவர் என நினைக்க வேண்டாம்.எந்த இடம் உங்கள் தந்தையை சிறுமை படுத்துகிறது. தாங்கள் அனைவரும் உண்டதை பகிர்ந்துள்ளார், பதிவர். இதில் குற்றம் சொல்லுமளவு என்ன தவறு உள்ளது...?
Vasudevan Kathamuthu : இதில் எங்கே ஜெயந்தன் சிறுமைப்படுத்தப்பட்டுள்ளார். ராஜநாயஹம் சார் ஒரு வெள்ளந்தியான மனிதர். எதையும் மறைத்தோ புனைந்தோ எழுதத் தெரியாதவர். அது வரமா? சாபமா? என்றுகூட நான் நினைப்பதுண்டு.
ரவி லோசனன் : Where arises the question of demeaning your father. Your fault finding is baseless and childish .
ச. முருக பூபதி வாட்ஸ் அப்பில் ராஜநாயஹத்துடன்
ராஜநாயஹத்தின் எழுத்துப்பதிவுகள் ஒவ்வொன்றும் சிறுகதை, குறுநாவல், நாவல் போன்ற பெரும் புனைவுக்கானது என்று சொல்லப்படுவதுண்டு.
ஆதங்கம் "கதை, நாவலா எழுதாம இப்டி செய்றீங்களே"
ச. முருக பூபதி பார்க்கும் பார்வை -
" 'பெரும் கட்டுரைகளுக்கான குறிப்புகள்'
ராஜநாயஹம் பதிவுகள் "
ஆனால் உண்மையில் கட்டுரை எனும் வடிவத்தையே உடைத்தவன் ராஜநாயஹம்.
கோணங்கியின் தம்பி
நாடக காவலன் ச. முருக பூபதி
Whatsappல் சென்ற ஜூன் 27 ம் தேதி
R. P. ராஜநாயஹத்துடன் சின்ன உரையாடல்
முருக பூபதி : அண்ணே, உங்களுடைய பெரும் கட்டுரைகளுக்கான ஃபேஸ்புக் குறிப்புகள் எல்லாவற்றையும் மாக்ஸிமம் படித்து விடுகிறேன்.
என்றுமான வாழ்த்துகள்.
இரண்டு நாள் மணல் மகுடிக்கு வந்து நடிகர்களோடும் கோணங்கியோடும் தங்கிப் போக ஒரு சூழலை உருவாக்குங்கள்???
R. P. ராஜநாயஹம் : இப்போதுள்ள சூழலில்
எங்கும் வர முடியாத நிலை உள்ளது என்பதை அறிவீர்கள்.
கோணங்கியையும் உங்களையும் சந்திக்க,
நடிகர்களையும், நாடகத்தையும் பார்க்க பெரும் ஆவல் தான்.
நினைப்பதெதுவும் நடப்பதில்லை.
பாருங்க, Life is so harsh. அதிர்ச்சியில் தானே எல்லோருமே இருக்கிறோம்.
உங்கள் அன்புக்கும் அபிமானத்திற்கும் நெகிழ்கிறேன்.
ச. முருக பூபதி : எல்லாம் ஃப்ரியானதும் நடக்கட்டும்.
ராஜநாயஹம் : ஆமாம் தம்பி, கோணங்கிக்கு
என் அன்பைத் தெரிவியுங்கள்.
Aug 11, 2021
Muralidharan on Rajanayahem's write ups Carnal Thoughts
Renowned Artist Muralidharan Krishnamoorthy
On R. P. Rajanayahem's Popular write ups
'CARNAL THOUGHTS' :
"பொதுவாகவே எனக்கு ' sence of Humour '
உள்ள நபர்களை பிடிக்கும்.....
ராஜநாயஹம் ' Extraordinary sence of Humour
உள்ள ஓருவர்..உதாரணம்....அவரது
Carnal Thoughts posts....😃😃😃♥️.."
https://m.facebook.com/story.php?story_fbid=3121232281423550&id=100006104256328
Aug 10, 2021
'மணல் கோடுகளாய்' நூலை முன்வைத்து பா. அசோக்
'மணல் கோடுகளாய்' நூலை முன்வைத்து
அன்பு இளவல் வழக்கறிஞர் பா.அசோக்
(தமிழ் நாடு - புதுச்சேரி பார் கவுன்சில் அசோசியேஷன் கோ-சேர்மன்)
எழுதியுள்ள
ஈர வரிகள் :
யார்யாரையோ படித்து வியந்து நிற்கையில், அதெல்லாம் தூசுகள்,
வைரக்கல் இங்கே இருக்கிறது பார் என வியக்க வைத்தவர்கள் ராஜநாயஹம் சாரும் முத்து நாகு அண்ணனும். இருவரும் வேறு வகை எழுத்தையாள்பவர்கள்.
R. P. ராஜநாயஹம்
என் ஞானாசிரியன்,
ஞான தகப்பன்.
இவரையோ இவர் நூலையோ எழுத தகுதியற்றவன் நான். நமக்குள் பகிரவே இது.
எத்தனையோ நாட்களுக்கு முன் எழுத வேண்டியது...
வேண்டுமென்றே தள்ளிப்போட்டு வந்தேன்..
இதை படித்தால் ஏற்படப்போகும் பெருஞ்சுமைக்கு அஞ்சியே தவிர்த்தது...
தன் மகன் கீர்த்தியை எல்கேஜி வகுப்பில் விட்டதையும், மிக இளவயதில் வேலைக்கு சேர்த்து விட்ட நாளையும் ஒப்பிட்டு எழுதியதை முகநூலில் படித்த போது நெஞ்சிலறைந்த கலக்கம், பலநாள் இருந்தது. மீண்டும் அந்த அத்யாயத்தை படிக்க வேண்டுமோ என்ற அச்சத்தாலேயே இத்தனை தாமதம்.
The past beats inside me like a second heart...- The sea.
செய்துங்கநல்லூரில் செல்வ சீமானாய் பிறந்து, திருச்சி, மதுரையிலும், திருவில்லிபுத்தூரிலும், பாண்டியிலும், அப்படியே வளர்ந்து,
இலக்கியவாதிகளுக்கும், இசைகலைஞர்களுக்கும் பெரும் போஷகனாய், வள்ளலாய் வாழ்ந்து, தன் இயல்பை மீறாது உண்மையாகவும்,நல்லவனாகவும் இருப்பதால், ஏற்படும் வாழ்விடர்களை பகிரும் பதிவுகளே இது.
Faceless name or a nameless face என தன்னை மு.க. அழகிரியிடம் அறிமுகமாவதாகட்டும், தன் ஸ்போக்கன் இங்கிலீஷ் மாணவர்களாகட்டும், அனைவருக்குமே well known face ஆக தான் வருகிறார்.
பிரமிள் மீதான அன்பின் விளைவே ராஜநாய"ஹ"ம். ஒரு நிகழ்ச்சிக்கு அழைப்பிதழில் நாயகம் என அச்சடித்த போது, மறுத்து, "ஹ " வை சேர்க்க சொன்னார்.
ஏனெனில் அந்த பெயரை சொன்னது பிரமிள். பிரமிளின் மீது அவருடைய மரியாதை அபரிமிதமானது.
சாரு, லியர் அரசன் என வியந்து எழுதியது இவரைத்தான். உண்மையில் இவருடைய நினைவாற்றல் ,பாரிய வரம். எந்த குறிப்பும்,முன்தயாரிப்பும் இல்லாமல் மணி கணக்கில் ஒரு subject ஐ யாரிப்போது பேச முடியும். இசை, இலக்கியம், ஓவியம், சினிமா, நாடகம் என எதை பேச ஆரம்பித்தாலும், ராஜநாயஹ அறிவுக்கடலின் பேரலைகள் நம்மை மூழ்கடிக்கும்.
பிரபல பத்திரிகையாளர்களென அறியப்படுகிற சிலர், இவரது எழுத்துக்களை பயன்படுத்திவிட்டு நன்றி கூட சொல்லாத , அடுத்தவர் பிள்ளைக்கு தன் முன்னெழுத்தை போடும் பிரபல ஈனங்களை மன்னித்தே போய்விடுகிறார்.
இந்நூல்களின் உருவாக்கத்தில் அவர் பட்ட சிரமங்களை அறிவேன், அவர் சந்தித்த துரோகங்களையும் அறிவேன்...
அத்தனையும் தாங்கும் சக்தி அந்த இளகிய மனதிற்கெப்படி ..?
பட்டை தீட்டிய வைரம் எத்தனை நாள் தூசி படிந்து கிடந்தாலும் ஒரு சிறு துடைப்பும் மெல்லிய வெளிச்சமும் வைரத்தை இனங்காட்டிவிடும்.
நலம் கெட புழுதியில் விழ எந்த நல்வீணை ஒப்பும்.
இந்த ராஜநாயஹ வீணை இசைக்க வேண்டிய அறிவு ராகங்கள் இன்னும் பல உள்ளன, காலம் அவ்வீணையை இசைக்க செய்யும்...
சேர்ந்தே ரசிப்போம்.
கோ. மகேசன் - கவிஞர்
கோ. மகேசன். கவிஞர்.
1987, 88, 89 ஆண்டு ஏப்ரல் வரை பழனியில் டாக்டர் கோபாலன் தெருவில்
நான் வசித்தேன்.
தெருவில் பெரிய வீட்டுக்காரர் என்று, ரீஃபைன்ட் ரைஸ் ப்ரான் ஆயில் வியாபாரம் செய்து கொண்டிருந்த என்னை தவிட்டெண்ணைக்காரர் என்றும் அடையாளமிடுவார்கள்.
அப்போது மகேசன் பெற்றோர்
எதிர் காம்பவுண்ட்டில்.
மகேசன் அப்போது ரொம்ப சிறுவன். அப்பா இண்டியன் பேங்கில் அட்டெண்டராக இருந்தார்.
எப்போதும் என்னைப் பார்த்தால் வணக்கம் சொல்வார்.
மகேசனின் அம்மா என் மனைவியுடன் நல்ல நட்பு.
தங்கமானவர் அந்த அம்மாள்.
பழனியில் இருந்து நாங்கள் பாண்டிச்சேரி கிளம்பும் போது மகேசனின் தாயார் எங்கள் குடும்ப புகைப்படம் ஞாபகார்த்தமாக கேட்டு வாங்கிக்கொண்டார். அப்போது கீர்த்தி குழந்தை.
2015 ல் திருப்பூரில் இருந்து சென்னைக்கு குடி பெயர்ந்த போது மகேசன் ஃபேஸ்புக்கில் என்னைப் பார்த்து விட்டு அடையாளம் கண்டு 'சார், நீங்கள் பழனியில் இருந்திருக்கிறீர்களா' என்று விசாரித்து தெரிந்து கொண்டவர் தன் தாயாரை அழைத்துக் கொண்டு எங்களை பார்க்க வந்த போது சற்று ஆச்சரியம். 26 வருடங்கள் கழித்து அவருடைய தாயாரை நாங்கள் சந்தித்தோம்.
கணவரை இழந்து விட்ட அந்த அம்மாளுக்கு இண்டியன் பேங்கிலேயே உடன் வேலை கிடைத்திருந்திருக்கிறது. பிள்ளைகளை வளர்த்து ஆளாக்கியிருக்கிறார்.
சிறுவன் மகேசன் இப்போது நல்ல கவிஞர். இலக்கிய வாசகர். கவிதைத் தொகுப்புகள் வெளியிட்டிருக்கிறார்.
அப்பல்லோ மெடிக்கல்ஸில் பணியாற்றுகிறார்.
அம்மா உடல்நிலை காரணமாக வங்கிப் பணியிலிருந்து விருப்ப ஓய்வு பெற்றுவிட்டார்.
மகேசனின் 'பரிணாம தேவதைகள் ' தொகுப்பில் இடம் பெற்றுள்ள 'மேய்ச்சல்' என்ற தலைப்பில் பிரபலமான ஒரு கவிதை
" கிராமத்தில்
படிக்காததால்
ஆடு மாடுகளை மேய்க்கிறார்கள்.
நகரத்தில்
படித்ததால்
நாய்களை மேய்க்கிறார்கள் "
...
அழகாயில்லாததால் தங்கை
கலாப்ரியாவின் 'மற்றாங்கே' தொகுப்பு பற்றி
ஒரு இளம் தமிழ் ஆசிரியரிடம் பேசிய போது
அவர் கோபத்துடன் மூச்சிறைத்தார்.
அவன் இவன் என்று ஏக வசனம்.
கலாப்ரியாவின் 'சலுகை' கவிதை
" அழகாயில்லாததால் அவள் எனக்குத் தங்கையாகி விட்டாள்."
ரொம்ப ஆத்திரத்துடன் அவர் சொன்னார்."அழகாயில்லாத பெண் எனக்கு தங்கை என்று வக்கிரமாக எழுதலாமா?"
தன்மை ஒருமையில் கவிதை எழுதப்பட்டுள்ளதால் இது கவிஞரின் வாக்குமூலம் என்று
தமிழாசிரியர் உறுதியாக கருதி மூச்சிறைத்துக்கொண்டு திரிகிறார்
என்று தெரிந்தது.
An incorrigible Tamil Teacher.
இது நடந்து இருபது வருடங்களுக்கு மேல் ஆகிறது.
...........
Aug 7, 2021
மன்னிப்பு
R. P. ராஜநாயஹம் கட்டுரை முன்னாள் மேயர் மதுரை முத்து பதிவை
ப. திருமலை 'மதுரை அரசியல்' நூலில் காப்பி பேஸ்ட் செய்தது விஷயமாக
அன்பு இளவல் பா. அசோக் அவர்களுக்கு
சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ்
கார்த்திகேயன் புகழேந்தி
"பா. அசோக் சார் வணக்கம்,
எழுத்தாளர் ப. திருமலை தவறை ஒப்புக்கொண்டு பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுக்கொண்டார்...
பதிப்பகத்தின் சார்பாக நானும் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்...
அடுத்த பதிப்பில் உரிய இடத்தில்
R.P. ராஜநாயஹம் பெயருடன் creditகொடுக்கப்படும்...
நன்றி!"
https://m.facebook.com/story.php?story_fbid=3117359748477470&id=100006104256328
கமல் அடித்த ஒரு பழைய ஜோக்
நெஞ்சில் ஓர் ஆலயம் கல்யாண்குமார் "ராசுக்குட்டி '" படத்தின் சூட்டிங் இடைவேளையில் என்னிடம் சொன்ன விஷயம் இது.
கமல் ஹாசன் அடித்த கமெண்ட் ஒன்று.
ரொம்ப பழசு.1970களில்.
"எந்த பெண்ணை தொட்டாலும்
அம்பரிஷ் வாடை அடிக்கிறதே! "
கமலுடைய ஜோக்கேல்லாமே
இப்படி பூசினாற்போல் தான்
ஒரு தனித்தன்மையோடு இருக்கும்.
அந்த ஒரு வரி எத்தனை கதை சொல்லிவிடுகிறது.
இதில் கமல், அம்பரிஷ் இருவரின் ஆளுமை பற்றியும் என்ன அழகாக தெரிய வந்து விடுகிறது. TWO CASANOVAS.
மறைந்த அம்பரிஷ் நடிகை சுமலதாவின் கணவர்.
அமைச்சராக இருந்தவர்.
சுமலதா இன்று பாராளுமன்ற உறுப்பினர்.
நடிகை சுமலதா நான் உதவி இயக்குனராய் பணிபுரிந்த "அழைத்தால் வருவேன் " படத்தின் கதாநாயகி.
படத்தில் இரண்டு காட்சிகளில் நானும் வருவேன்.
கதை நாயகியை கடத்தி முதல் முதலாக
கற்பழித்து விடும் ஒரு கதாபாத்திரம் என்னுடையது. தொடுவதெல்லாம் கிடையாது.
படத்தில் Suggestive ஆகவே காட்டியிருப்பார்கள்.
..............................
Aug 5, 2021
ராஜநாயஹம் எழுதிய மதுரை முத்து பதிவு
ப. திருமலை என்பவர் எழுதிய மதுரை அரசியல் நூலை சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ் வெளியிட்டிருப்பதாக தெரிகிறது.
நான் இன்னும் நூலைப் பார்க்கவில்லை.
இந்த புத்தகத்தில்
என்னுடைய மதுரை முன்னாள் மேயர் முத்து பற்றிய பிரபலமான பதிவில் இருந்து காப்பி பேஸ்ட் செய்யப்பட்டிருப்பதாக முத்துராஜன் என்பவர் தகவல் தெரிவித்திருந்ததைப் பற்றி நான் சில நாட்களுக்கு முன் எழுதிய பதிவு இப்போது காணவில்லை. ஃபேஸ்புக்கில் நீக்கம் செய்யப்பட்டிருக்கிறது.
நான் எழுதிய 'அரசியல் பிழைத்தோர்' நூலில் இடம் பெற்றுள்ள கட்டுரை.
2012 ம் ஆண்டு எழுதினேன். என் ப்ளாக்கிலும், ஃபேஸ்புக்கிலும் வெளிவந்த பதிவு.
..
என்னுடைய பதிவு கீழே :
இரும்புமனிதர் மதுரை எஸ்.முத்து
- R.P. ராஜநாயஹம்
திராவிட இயக்கத்தின் இரும்பு மனிதர் என்றும் அண்ணாவின் முரட்டுப்பிள்ளை என்றும் அறியப்பட்டவர் மதுரை எஸ்.முத்து.
அண்ணாத்துரைக்கு எல்லோரும் தம்பிகள். ஆனால் மூன்று பேர் பிள்ளைகள்.
மதுரை முத்து முரட்டுப்பிள்ளை!
அன்பில் தர்மலிங்கம் செல்லப்பிள்ளை!
மன்னை நாராயணசாமி அழுகினிப்பிள்ளை!
மதுரைமுத்து உடம்பில் உள்ள பல தழும்புகளைப் பற்றி மேடையிலேயே குறிப்பிட்டு கட்சியை வளர்க்க அந்தக்காயங்கள் எப்படிப்பட்ட சூழலில்,எங்கே,எப்போது ஏற்பட்டவை என்பதைப்பற்றி விரிவாக பேசுவார்.பேச்சில் சவடால் இருக்கும்.நகைச்சுவை இயல்பாக இருந்ததற்கு காரணம் இவர் வட்டார வழக்கில் இயல்பாய் பேசியது தான்.
தனிப்பட்டமுறையில் அவர் பிரமுகர்கள்,கட்சிக்காரர்கள்,உறவினர்களுடன் பேசும்போது கூட சட்டையை கழட்டி உடம்பில்,முதுகில் அரிவாள் வெட்டு தழும்புகளைப் பார்க்க சொல்லி நிறைய விவரங்கள் சொல்வார்.
அரிவாளால் ஒருவன் தேனியில் தன் தலையை குறிவைத்து வெட்ட பாய்ந்த போது மதுரை முத்து தான் கையால் உடனே தடுத்து தன்னைக் காப்பாற்றியதாக எஸ்.எஸ்.ஆர் சொல்லியிருக்கிறார்.
திமுகவை விட்டு ஈ.வி.கே.சம்பத் பிரிந்தபோது மதுரையில் சண்டியர் முத்துவை எதிர்த்து தைரியமாக மாவீரன் பழ.நெடுமாறன் அரசியல் செய்ததைப் பற்றி கண்ணதாசன் வனவாசம் நூலில் எழுதியிருக்கிறார்.
எம்.ஜி.ஆர் திமுகவை விட்டு நீக்கப்பட்ட பின் மதுரை திலகர் திடலில் விளக்கக்கூட்டம் நடத்தப்பட்டது.
கூட்டத்தில் க.அன்பழகன்,மதுரை முத்து, திண்டுக்கல் பாராளுமன்ற உறுப்பினர் ராஜாங்கம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
ராஜாங்கம் வாழ்வு அப்போது சில மணி நேரங்களில் முடிய இருந்தது. இந்தக்கூட்டம் முடிந்து திண்டுக்கல் ரோட்டில் காரில் போய்க்கொண்டிருந்த போது மாரடைப்பில் திடீர் மரணம் அடைந்தார்.அதோடு அவர் இறப்பின் காரணமாக நடந்த இடைத்தேர்தலில் எம்.ஜி.ஆர் பிரமிக்கத்தக்க மிகப்பெரிய வெற்றியை அடைந்தார்.
ராஜாங்கம் தன் மரணத்தின் மூலமே எம்.ஜி.ஆரின் வெற்றி சரித்திரத்திற்கு பிள்ளையார் சுழி போடப்பட இருப்பதை அறியாமலே அன்று பேசிய பேச்சு “ நாம் இது வரை அசமந்தமாக இருந்து விட்டோம். இப்போது தான் கட்சியில் ஒரு விறுவிறுப்பு,சுறுசுறுப்பு ஏற்பட்டிருக்கிறது.
I Like this atmosphere very much. அன்று ப்ரூட்டஸ் சொன்னான். ‘We love Caesar. But we love our country more than Caesar.’ அதையே தான் நானும் சொல்கிறேன். எம்.ஜி.ஆரை விட திராவிடமுன்னேற்றக்கழகத்தை நாங்கள் மிகவும் நேசிக்கிறோம். பல்ப் நல்லாத்தான் எரிஞ்சிச்சி. இப்ப ஃப்யூஸ் போயிடிச்சி.அதான் தூக்கியெறிஞ்சிட்டோம்.
எஸ்.எஸ்.ஆரை ப் பார்த்து ஷூட்டிங் போறீங்களா திமுக மீட்டிங் வாறீங்களா என்றால் ’நான் திமுக மீட்டிங்குக்கு வாறேன்’ என்று தான் சொல்வார். ஆனால் எம்.ஜி.ஆரைப் பார்த்து மீட்டிங் வாறீங்களா என்று கூப்பிட்டால் ‘நான் ஷுட்டிங் போறேன்’ என்று தான் எப்போதும் சொல்வார்.
எனதருமை நண்பன் எஸ்.எஸ்.ராஜேந்திரனை திரையுலகை விட்டு விரட்டியதே இந்த எம்.ஜி.ஆர் தான்.’’
கணக்கு கேட்ட எம்.ஜி.ஆர் மேல் மதுரை முத்துவுக்கு கடும்கோபம்.
அந்த நேரத்தில் எம்.ஜி.ஆர் கட்சியை விட்டு நீக்கப்பட இரண்டு முத்துக்கள் காரணம் என்றே பத்திரிக்கைகள் எழுதின. ஒருவர் மதுரை முத்து,இன்னொருவர் மு.க.முத்து.கருணாநிதி மகனுக்கு கட்சியில் ரசிகர் மன்றங்கள் ஆரம்பிக்கப்பட்டது. கணக்கு கேட்கிறார் என்றதும் மதுரை முத்து எம்.ஜி.ஆருக்கு எதிராக போர்க்கொடி தூக்கிவிட்டார். குமுதம் எம்.ஜி.ஆர் சஸ்பெண்ட் ஆனபோது ஒரு கார்ட்டூன் வெளியிட்டது. அந்த கேலிச்சித்திரம் இப்படி- அண்ணா படத்தை எடுத்துக்கொண்டு வெளியேறும் எம்.ஜி.ஆரைப் பார்த்து கருணாநிதி சுவற்றிலிருக்கும் மதுரை முத்து படத்தைக் காட்டி சொல்வார்.”என்னை இந்த அண்ணா காப்பாற்றுவார்.”
எம்.ஜி.ஆர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார் என்று செய்தி வந்த மாலைமுரசிலேயே மதுரை முத்து அறிக்கை “ என் உயிர் உள்ள வரை இனி நான் திமுக தான்” - For this relief much thanks என்று அர்த்தம்.
அந்த சூழ்நிலையில் மதுரையில் திமுகவின் முதல் கூட்டம்.
மதுரை முத்து.பேசியது “ டேய்! விசிலடிச்சான். உனக்கு ஒன்னு சொல்றேன். எம்.ஜி.ராமச்சந்திரன் ஒரு கோழை. படத்தில தான் ஒன் ஆளு வீரன். நிஜ வாழ்க்கையில் பயங்கரமான கோழை.போன பொதுத்தேர்தல்ல தேனிக்கு பிரச்சாரம் கிளம்பற நேரத்தில எம்.ஜி.ஆருக்கு ஒரு மொட்டை கடிதாசி.’நீ தேனிக்கு வந்தீன்னா கொல செய்வேன்’ன்னு எவனோ எழுதியிருந்தான். அதைப் படித்து விட்டு பேயடிச்ச மாதிரி எம்.ஜி.ஆர் முகமே விளங்கல. நான் சரி வாங்க தேனிக்கு கிளம்புவோம்னேன். அதுக்கு என்ன சொன்னான் தெரியுமா? கிழட்டுப்பய சொல்றான்யா-”என் ஃப்யூச்சர் என்னாகுறது?’’( இதை சொல்லும்போது முத்து வளஞ்சு நெளிஞ்சு நிற்கிறார் ) மாட்டேன்னுட்டான்ய்யா! இவனை நம்பி நீ திமுகவ விட்டுப்போகாத. எம்.ஜி.ராமச்சந்திரன் ஒரு பயங்கரமான கோழை.
நான் டீக்கடை வச்சிருந்தேன்.இத கிண்டல் பண்ணுறானுங்க.அந்தக்காலத்தில மெஜுரா மில்லில வேல பார்த்தேன். கட்சியில தீவிரமாயிருந்தேன்னு வேலைய விட்டு டிஸ்மிஸ் பண்ணிட்டாங்கெ.அப்ப டீக்கடை தான் வச்சிருந்தேன். இல்லங்கல.அன்பழகன் கூட மதுரை வந்தா என் கடையில டீ சாப்பிட்டிருக்காரு.டேய் விசிலடிச்சான் குஞ்சு! ஒனக்கு ஒன்னு தெரியுமா? ஒன் எம்.ஜி.ஆரு கும்பகோணத்தில அவன் மாமன் கடையில க்ளாஸ் கழுவியிருக்கான் அது தெரியுமா ஒனக்கு? க்ளாஸ் கழுவியிருக்கான்டா! (க்ளாஸ் கழுவுவது போல ஆக்சன் செய்து காட்டுகிறார்)
என் கார் மேல கல்ல விட்டா எவனாயிருந்தாலும் ஒன் வீட்டுக்கு வந்து தூக்குவேண்டா.(அப்போதுஅப்படி கல்லெறிந்த ஒரு ஆளை இவரே காரிலிருந்து இறங்கி விரட்டிப்பிடித்தார்!)
டே ராமச்சந்திரா! கணக்காடா கேக்கற. கணக்கு கேக்கறியா? போய் ஜெயலலிதா கிட்ட கேளுடா கணக்கு. இந்தி எதிர்ப்பு போராட்டத்தப்ப நாங்க எல்லாம் ஜெயில்ல இருந்தப்ப இவன் ஜெயலலிதாவோட கோவா வில இருந்தான்யா. (அப்போது ஆயிரத்தில் ஒருவன் பட சூட்டிங்கில் எம்.ஜி.ஆர் இருந்திருக்கிறார்.)
க.அன்பழகன் அன்று பேசியது “ என் பொண்டாட்டி கூட என்கிட்ட கணக்கு கேட்டதில்ல. என்ன கணக்கு? இனிமே வேட்டிய அவுத்துத் தான் காட்டனும்.”
“மதுரையில் ’புரட்டு’ நடிகர் கட்சியை அழித்தே தீருவேன்,ஒழித்தே தீருவேன்” என்று மதுரை முத்து வரிந்து கட்டிக்கொண்டு செயல்பட்டார்.
’எம்.ஜி.ஆரின் உலகம் சுற்றிய வாலிபன் படம் வெளி வந்தால் சேலை கட்டிக்கொள்கிறேன்’ என்று பகீரங்க சவால் விட்டார்.
உலகம் சுற்றும் வாலிபன் ரிலீசானபோது இந்த திராவிட இயக்கத்தின் இரும்பு மனிதருக்கு பல பார்சல்கள் வந்தன.அவ்வளவும் சேலைகள்!
திண்டுக்கல் இடைத்தேர்தலில் அண்ணாதிமுக அமோக வெற்றி பெற்ற போது கருணாநிதி “ மதுரை மாவட்ட திமுக தலைமை, வேட்பாளர் தேர்வில் தவறு செய்து விட்டது” என்றார். பொன்முத்து ராமலிங்கம் பிரமலை கள்ளர் வகுப்பைச் சேராதவர். வெற்றி பெற்ற அண்ணாதிமுக வேட்பாளர் மாயத்தேவர் பிரமலை கள்ளர். இது முழுக்க முழுக்க எம்.ஜி.ஆரின் செல்வாக்குக்கு கிடைத்த வெற்றி என்பதை மறைக்க கருணாநிதி இப்படி சொன்னார்.
மதுரை முத்துவுக்கு இதன் பிறகு கருணாநிதியோடு பிணக்கு ஏற்பட்டுவிட்டது.
மதுரை முத்து சிவகங்கையில் எம்.ஜி.ஆரை சந்தித்து அண்ணா திமுகவில் சரணடைந்தார்.எம்.ஜி.ஆர் கட்டிப்பிடித்து அணைத்து முத்தண்ணனை வரவேற்றார்.
கருணாநிதியிடமிருந்து விலகி நெடுஞ்செழியன்,மாதவன்,க.ராஜாராம்,பண்ருட்டி ராமச்சந்திரன்,எஸ்.எஸ்.ராஜேந்திரன் என்று கடுமையாக எதிர்த்தவர்கள் எல்லோரும் எம்.ஜி.ஆரிடம் சரணடைந்தார்கள்!
“நம்மை வாழ விடாதவர் வந்து நம் வாசலில் வணங்கிட வைத்து விடும்” என்ற எம்.ஜி.ஆரின் பாடல் வரி இப்படி பலித்தது.
எம்.ஜி.ஆரை எந்த அளவு கடுமையாக சாடினாரோ அதை விடவும் கடுமையாக மதுரை முத்து அதன் பின் கருணாநிதியை சாடினார்.
முத்தண்ணன் அப்படி சாடிப்பேசும்போது எம்.ஜி.ஆர் சிரிப்பை அடக்க முடியாமல் தவிப்பார்.
தீப்பொறி ஆறுமுகம் மதுரைமுத்து பற்றி “ நான் மதுரை முத்துவை மதிக்கிறேன். அந்த ஆளு சண்டியரு.ஆனா சிகரெட் கிடையாது, குடிப்பழக்கம் கிடையாது,சீட்டு விளையாட்டு கிடையாது..பொம்பளை விசயத்திலயும் சுத்தமான ஆளு…ஆனா ஒன்னு…அடுத்தவன் பாக்கெட்டுல பணம் இருக்கறது தெரிஞ்சா எப்படியாவது லவட்டிடுவான்!”
மதுரை மாநகரின் முதல் மேயர். அதன் காரணமாக மதுரைக்கு திமுகவின் முதல் மேயர். மீண்டும் இரண்டாவதாக மேயராகவும் மதுரை முத்து தான் பதவியேற்றார். அதன் காரணமாக மதுரைக்கு அண்ணாதிமுகவின் முதல் மேயரும் இவரேயென்றானது.
ஆனால் அவரது கடைசி காலத்தில் அண்ணாதிமுகவிலும் நிம்மதியாக இருக்க முடியவில்லை.கட்சியில் புதிதாய் சேர்க்கப்பட்டு கொள்கை பரப்பு செயலாளராக எம்.ஜி.ஆரால் நியமிக்கப்பட்ட ஜெயலலிதா இவருக்கு show cause notice அனுப்பினார்.
இலங்கைப்பிரச்னையில் எம்.ஜி.ஆருடன் கருத்து வேறுபாடு.
பழ.நெடுமாறனோடு மேடையில் முத்து.
’இலங்கைத் தமிழர்களுக்கு உதவ தயங்கும் மத்திய மாநில அரசுகளை ஓடஒட விரட்டவேண்டும்’ என்று இந்திராகாந்தி,எம்.ஜி.ஆர் இருவரையும் மதுரைமுத்து கடுமையாக தாக்கியபோது மேலமாசி வீதியில் கரகோஷம் விண்ணைப்பிளந்தது.
இந்திராகாந்தி சுட்டுக்கொல்லப்பட்ட சில நாட்களில் மதுரை முத்து மறைந்தார்.அப்போது எம்.ஜி.ஆர் அமெரிக்காவில் ப்ரூக்ளின் ஆஸ்பத்திரியில் சிகிச்சைப் பெற்றுக்கொண்டிருந்தார்.ராஜ வைத்தியம்!
கா.காளிமுத்து இரங்கல் அறிக்கையில் “ எம்.ஜி.ஆர் உடல் நலம் பெற்று அமெரிக்காவிலிருந்து வந்த பின் “முத்தண்ணன் எங்கே?” என்று கேட்டால் நான் என்ன சொல்வேன்?” என்று வருத்தப்பட்டிருந்தார்.
ஒரு விஷயம்.
என்னுடைய திருமணம் மதுரைமுத்து தலைமையில் தான் நடந்தது!
என்னுடைய திருமணம் மட்டுமல்ல.
அதற்கும் இருபத்தைந்து வருடங்களுக்கு முன் என் மாமனார் திருமணமும் கூட இந்த திராவிட இயக்கத்தின் இரும்பு மனிதர் தலைமையில் தான் நடந்தது!
https://m.facebook.com/story.php?story_fbid=3117359748477470&id=100006104256328
Aug 4, 2021
கிஷோர்
இன்று கிஷோர் குமார் பிறந்த தினம்
Kishore Kumar (4 August 1929 – 13 October 1987)
"I have three best friends in this world. What's surprising is that they also happen to be your three best friends. They are Bachpan (childhood), Jawani (Youth) and Budhapa (old age)." - Kishore Kumar
ராஜேஷ் கன்னாவின் உயர்வில் கிஷோர் குமார் பாடல்களுக்கு முக்கிய பங்குண்டு.
“Roop Tera Mastana Pyar Mera diwana “
“Kora Kaagaz Tha Yeh Mann Mera “
“zindegi ek safar “
“Yeh shaam Mastaanee “
“Ye Kyaa huaa,Kaise huaa ,Kab huaa Kyo huaa”
ஒன்பது வருட திலீப்குமாருடனான (living legend) affair ஐ ஒரே நிமிடத்தில் மதுபாலா உதறி விட்டு கிஷோர் குமாரை திருமணம் செய்து தன் வாழ்வின் கடைசி ஒன்பது வருடங்களை முடித்தார்.
Madhubala - The beauty with tragedy and The Venus of Indian Cinema!
அசோக் குமாரின் தம்பி கிஷோருக்கு இது இரண்டாவது திருமணம். 1969ல் முற்றிய இதய நோய், நுரையீரல் பிரச்னைகள் காரணமாக மதுபாலாவின் அகால மரணம் நடந்த அதே வருடம் Pyar ka mousam, Aradhana, அடுத்த வருடம் Sharmilee ஆகிய படங்களில் கிஷோர் குமார் பின்னணி பாடகராக மாபெரும் சாதனை செய்தார். அதன் பிறகு he never looked back.
கிஷோர் குமாரின் மூன்றாவது மனைவி யோகிதா பாலி தான் பின்னர் மிதுன் சக்ரவர்த்தியின் மனைவியானார்.
கிஷோரின் நான்காவது மனைவி லீனா சந்தாவர்க்கருக்கு அது இரண்டாவது திருமணம்.
ஆஷா போன்ஸ்லேயுடன் தான் தன் கடைசி பாடலை கிஷோர் குமார் சாவதற்கு முந்தைய தினம் (12-10-1987) பாடினார். மறு நாள் செத்துப்போனார். மிதுன் சக்ரவர்த்தி, ஸ்ரீதேவி இருவருக்காக ‘Waqt ki Aawaz’ல் ’Guru O Guru…Guru Guru aajao’ என்ற பாடல் அது.
ஒரு விஷயம். இந்த மிதுன் சக்ரவர்த்தி தான் கிஷோர் குமாரின் மூன்றாவது மனைவி யோகிதா பாலியை தன் மனைவியாக்கி குழந்தைகள் பெற்றுக்கொண்டவர். ஸ்ரீதேவியை திருமணம் செய்து கொண்டார் என்று அவர் மீது பலத்த வதந்தி இணைந்து நடித்த போது இருந்ததுண்டு.
கிஷோர் ஒரு multi faceted personality. நடிகர், பாடகர், பின்னணி பாடகர் என்று அவருடைய வாழ்க்கை மிகவும் சுவாரசியமானது.
மேடைக் கச்சேரியில் எல்லா பிரபல பின்னணி பாடகர் களுக்கும் பாடல் வரிகள் கண் முன்னால் ஒரு நோட் புக்கில் இருக்க வேண்டும். அதைப் பார்த்துக் கொண்டே தான் பாட முடியும். ஆனால் கிஷோர் குமாருக்கு அந்த தேவையில்லை. எந்த பாடல் என்றாலும் வார்த்தைகள் மனதிலேயே இருக்கும். எந்த பாடலுக்கும் அவர் வரிகளை நோட் புக்கில் பார்க்காமலே பிரமாதமாக பாடுவார்.
Once in a while, A consistency comes forward that is both sublime and foolish!
இந்த வார்த்தைகளை 'அரசியல்' துவங்கி எந்த துறையிலும் கலை,இலக்கியம், இசை, நடிப்பு என்று எந்த துறையிலும் குறிப்பிடத்தக்க சாதனை புரிந்த பலரைப் பற்றி எண்ணி பார்க்கும்போது சொல்ல வேண்டியிருக்கும்.
இந்தியத்திரை பின்னணி பாடகர்களில்
முழுமையான பி பி ஸ்ரீநிவாஸ்,கிஷோர்குமார் பாடல்கள் பற்றி மட்டுமே மேற்கண்ட மேற்கோளை பிரயோகிக்க முடியாது.
பள்ளி, கல்லூரி நாட்களில் கிஷோர் குமார், பி.பி.எஸ் பாடல்களை உற்சாகமாக பாடியிருக்கிறேன்.
அதன் பிறகும், இப்போதும் தான்.
https://m.facebook.com/story.php?story_fbid=3116347261912052&id=100006104256328
Aug 2, 2021
Grammar and literature
Best grammarian is the worst literarian.
இன்னொன்று
"எனக்கு தமிழ் தெரியாது. ஆனால் தமிழுக்கு என்னைத் தெரியும். "
- ஜெயகாந்தன் தன்னைப் பற்றி.
Prof. Dr. Raveendran Chelliah 's reply :
Totally agree with you
but without understanding
the minimum formula given by
Noam Chomsky:S=NP + VP
which will give phase for
individual style of individual writings.
S means Sentence and NP and VP indicates that Noun phrase and Verb phrase of the sentence.
Any sentence has these structural components.
..
Aug 1, 2021
புணர்ச்சி இயல்பு விகாரம்
Carnal Thoughts - 51
புணர்ச்சி இயல்பு விகாரம்
இந்த வார்த்தை தொனி
ஏதோ Sexual Perversion என்பது போல
அர்த்தம் தருகிறதோ.
ஒரு ஃபாரின் ஜோக்.
இன்டியனைஸ், டமிலைஸ் செய்திருக்கிறேன்.
வாழ்க்கை வெறுத்துப்போன ஒரு கிழவி
ஒரு பாலத்தின் மேல்
தற்கொலை முயற்சியில் இருந்திருக்கிறாள்.
குதித்து தற்கொலை செய்யப்போகிறாள்.
பாலம் நல்ல உயரம்.
கீழே தண்ணீர் சுத்தமாக கிடையாது.
குதித்தால் நொடியில் மரணம் நிச்சயம்.
உடனே, உடனே பிணமாகிப்போவாள்.
ஒரு சின்ன பயல் “ இருங்க, பொறுங்க” என்று கத்திக்கொண்டே அவளை நோக்கி
ஓடி வந்திருக்கிறான்.
கிழவி அவனைப் பார்த்தவுடன் நினைத்திருக்கிறாள்
‘யாரோ மனிதாபிமானி போல இருக்கு.
ச்சே..சாக விடமாட்டான் போல இருக்கே’
அந்த அயோக்கிய பையன் பக்கத்தில் வந்தவுடன் மூச்சிறைக்க, அந்த கிழவியிடம்
“நீங்கதான் தற்கொலை பண்ணிக்கப்போறீங்களே,
உங்கள நான் ஒரு டொக்கு போட்டுக்கறேனே” என்று கேட்டிருக்கிறான்.
Kinky sex rogue.
சின்னப்பெண்ணான போதிலே,
குமரியாய் இருந்த காலத்திலேயே, ஸ்திரிலோலர்களை கண்ட போதெல்லாம் கூந்தலை விரிச்சிப்போட்டு,
ஒத்த முலைய பிச்சி வீசி,
சிலம்ப உடச்சி
“அத்தனையும் மாணிக்கப்பரல்டா” என்று
ஆவேசமானவளாக்கும் அந்த கிழவி.
அந்த பழக்கம் சுடுகாடு வரைக்கும் இருக்குமல்லவா?
அயோக்கிய பயல் டொக்கு என்றவுடன்
கிழவி பதறிப்போய்
கூப்பாடு போட்டிருக்கிறாள்.
“ ச்சீ போடா பொறுக்கி,
எனக்கு கற்பு தான்டா பொக்கிஷம்”
அயோக்கிய பையன், அந்த படவா ராஸ்கல்
தன் முயற்சியில் சற்றும் மனம் தளராமல்
“சரி, பரவால்ல.
நான் கீழ பாலத்துக்கு அடியில போய்
வெயிட் பண்றேன்.”
ஒன்னாம் நம்பர் வெங்கம்பய.
தமிழ் இலக்கணத்தில்
’புணர்ச்சி இயல்பு விகாரம்’ வருகிறது.
தமிழ் இலக்கணம் என்றாலே
எனக்கு படிக்கிற காலத்தில் பயம்.
கணக்கு, தமிழ் இலக்கணம் இரண்டுமே
எனக்கு பிடிக்காத பாடங்கள்.
கணக்கு பள்ளி வாழ்க்கையோடு முடிந்து விட்டது.
மதுரை அமெரிக்கன் கல்லூரியில் ஆங்கில இலக்கியம் படித்த காலத்திலும்
முதல் இரண்டு ஆண்டுகள் தமிழ் இலக்கணம் விரட்டிக்கொண்டு வந்தது.
விளக்கெண்ணெய் குடிப்பது போல
இலக்கணம் படிக்க வேண்டியிருந்தது. வெறுப்பில்லை. பயம்.
என்ன படித்தேன் என்பதெல்லாம்
எதுவுமே நினைவில் இல்லை.
Best grammarian is the worst literarian.
இன்னொன்று
"எனக்கு தமிழ் தெரியாது. ஆனால் தமிழுக்கு என்னைத் தெரியும். "
- ஜெயகாந்தன் தன்னைப் பற்றி
படிக்கிற காலத்துக்குப்பின்னால
தமிழ் இலக்கணம் பற்றி நினைத்து பார்க்க நேரம், அவசியம் இருந்ததே இல்லை.
ரெண்டு மூணு நாளா
'புணர்ச்சி இயல்பு விகாரம்' போல
வேறு சில ஞாபகம் வருகிறது.
'கூறு கெட்ட'ன்னு திட்டுறத போல
' ஈறு கெட்ட எதிர் மறை வினையெச்சம்',
அப்புறம் தேன்மாவு, புளிச்ச மாவு கணக்கா 'தேமா' , 'புளிமா' ..
சாலமன் பாப்பையா வகுப்பு போரடிக்கும். வகுப்பிற்கு வெளியே
அவரிடம் பேசுவது ரொம்ப ஜாலி.
தமிழ் டிபார்ட்மெண்ட்டின்
ஜென்ட்டில் மேன் பாப்பையா.
....
அம்மா சென்ட்டிமென்ட் - Cock a snook at mother
அம்மா சென்ட்டிமென்ட்
’பத்து மாசம் சுமந்திருந்து பெற்றாள்’ பாட்டு இருக்கிறது.
’ முன்னூறு நாள் சுமந்தாள்’ – இப்படியும்
ஒரு டப்பா பாட்டு
நான் சிறுவனாயிருக்கும் போது
கேட்டிருக்கிறேன்.
அப்போது நினைத்திருக்கிறேன்.
அடுத்து ‘7200 மணி நேரம் வயிற்றில் அன்னை என்னை வைத்திருந்தாளே’ பாட்டு அடுத்து வரப்போகிறது.
வில்லன் பிரகாஷ் ராஜ் வசனம்
ஒரு படத்தில் இந்த மாதிரியிருந்தது.
டி.வியில் ஓடிக்கொண்டிருந்ததை
ஒரு நிமிஷம் கவனிக்க நேர்ந்த போது:
– “என் அம்மா செத்துட்டா.
அவ மட்டும் இப்ப உயிரோடு இருந்தா
'ஏண்டி என்ன பத்துமாசம் உள்ள வச்சிருந்தே'ன்னு கேட்டு அவள கொன்னுடுவேன். ")
Cock a snook at Mother
வலம்புரி ஜான் ஒரு பத்திரிக்கைக்கு ஆசிரியராய் இருந்தார். பத்திரிக்கையின் பெயர் "தாய்".
எம்.ஜி.ஆர் – ஜானகியின் வளர்ப்பு மகன் அப்பு என்ற ரவீந்திரன் தான் பத்திரிக்கை அதிபர்.
ஜெயகாந்தன் மடத்திற்கு போயிருந்த வக்கீல் ஹபீப் ராஜா (’ஏழாவது மனிதன்’ படத்தின் அசிஸ்டண்ட் டைரக்டர்) ஜெயகாந்தனின் அடைமழை பிரசங்கத்தின் இடையில் கொஞ்சம் கேப் கிடைத்த போது
“இந்த ‘தாய்’ பத்திரிக்கையில ஒங்களைப் பத்தி..”
ஜெயகாந்தனோ வாக்கியம் முடியுமுன்னே மின்னலாக சீறினார் “அந்த ‘த்தாயோளி’ பத்திரிக்கையெல்லாம் நீங்க ஏன் படிக்கிறீங்க?”
‘அம்மா வந்தாள்’ நாவல் தி.ஜானகிராமனின் மிகப்பிரபலமான நாவல்.
‘மோகமுள்’ நாவலை பிரமாதமாக புகழ்ந்த க.நா.சுவுக்கு ‘அம்மா வந்தாள்’ பிடிக்கவில்லை.
டெல்லியில் ‘THOUGHT’ ஆங்கிலப்பத்திரிக்கையில் அம்மா வந்தாளுக்கு எழுதிய விமரிசனத்திற்கு க.நா.சு கொடுத்த தலைப்பு ‘Janakiraman’s Mother’. அம்மா வந்தாள் படித்திருந்தால் தான் இந்த தலைப்பின் வக்கிரம் புரியும்.
ஹேம்லட் தன் தாய் மீதான வெறுப்பை உமிழ்ந்த போது சொன்ன வார்த்தை -
"Frailty! Thy name is woman!" - One of the mighty lines of Shakespeare - one of the memorable expressions.
த்ரூஃபோ ( Francois Truffaut ) எடுத்த படம் Bed and Board. படம் பார்க்கும்போது அதில் ஒரு சுவாரசியமான தகவல். “Mother’s day” was invented by the German Nazis, During the second world war".
..
இரண்டு கிழவிகள் எழுதிய புத்தகங்கள்
வானதி பதிப்பகம் 1996 ல் வெளியிட்ட நூல்
எம். எஸ் சௌந்தரம் எழுதிய
"சங்கீத நினைவு அலைகள் "
இவர் அப்போது எண்பது வயது மாமி.
பத்மா சுப்பிரமணியத்தின்
மன்னியின் தாயார்.
இந்த நூல் ரொம்ப சின்னது.
மேலோட்டமாக கர்நாடக சங்கீத நூல் என்ற எண்ணத்தை படிப்பவருக்கு ஏற்படுத்தும்.
ஆனால் சென்ற நூற்றாண்டின்
பிராமண பெண் வாழ்க்கை போராட்டங்களை பற்றிய நூல்.
சௌந்தரம் அவர்களின் கணவன் மட்டுமல்ல, அவரது குரு கூட அவர் வாழ்க்கையை எப்படியெல்லாம் சித்திரவதை செய்தார்கள் என்பதை சுருக்கமாக விளக்கிய அற்புதமான நூல்.
அவரது குருநாதர் அரியக்குடி.
அதோடு அந்தக்கால கர்நாடக சங்கீத உலகம், அன்றைய ஜாம்பவான்கள், சிஷ்யர்கள் பற்றியும் அருமையான Reference book.
ஆனால் ரொம்ப சின்ன புத்தகம்.
பக்கங்கள் ரொம்ப குறைவு .
அழகிய நாயகி அம்மாள் அப்போது எண்பது வயது. எழுத்தாளர் பொன்னீலனின் தாயார்.
இவர் எழுதிய " கவலை " பெரிய புத்தகம். பக்கங்கள் ரொம்ப அதிகம்.
1998 ல் பாளையங்கோட்டை வளனார் கல்லூரி நாட்டார் வழக்காற்றியல் துறை
இந்த நூலை வெளியிட்டது.
சென்ற நூற்றாண்டின் நாகர்கோவில் பகுதி நாடார் பெண்கள் வாழ்க்கை பற்றி
அருமையான சித்திரம்.
நெஞ்சு வெடித்து விடுமோ என்று பயப்படுகிற அளவுக்கு பெண்கள் துயரங்கள் பதியப்பட்டது.
இரண்டு முதிய பெண்மணிகள்
இருவரும்
இறந்து விட்டார்கள்.
'சங்கீத நினைவு அலைகள் ' 'கவலை ' இரண்டு நூல்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.
மடுவுக்கும் மலைக்கும் உள்ள வித்தியாசம் என்று உரக்க பேசக்கூட, விளக்குவதற்கு
இங்கே ஆட்கள் உண்டு.
2000 ல் திருச்சி தமிழ் இலக்கிய கழகத்தில்
நான் அழகிய நாயகி அம்மாளின்
'கவலை ' புத்தகம் பற்றி பேசினேன்.
அப்போது எம் எஸ் சௌந்தரம்
' சங்கீத நினைவு அலைகள் '
நூலை ஒப்பிட்டு பேசினேன்.
....