காலக்கண்ணாடி கடந்த கால நடப்பு ஒன்றை திடீரென ஞாபக சிறையில் இருந்து மீட்டு விடுதலை செய்து எந்த காரணமும் இன்றி கண்ணில் காட்டும்.
1980களின் முன்பகுதி கோபாலபுரம் கலைஞர்
மு. கருணாநிதி வீட்டின் முன் நான் நிற்கிறேன். எம்ஜிஆர் ஆட்சி இரண்டாவது காலம்.
முன்பகல் பதினொரு மணி. தேங்காய் சீனிவாசன் காரை அங்கே கலைஞர் வீட்டு பக்கவாட்டில் நிறுத்தி விட்டு கோவிலுக்குள் போகிறார்.
கொஞ்ச நேரத்தில் மாநகராட்சியின் துப்புரவு ஊழியர் குப்பை வண்டியை கார் அருகில் நிறுத்தி விட்டு தன் வேலையை பார்க்கிறார்.
அங்கே வீட்டின் முன் சில நடுத்தர வயது
ஏழைப் பெண்கள் மூவர் நிற்கிறார்கள்.
கலைஞர் கார் முன் பக்க சுவரையொட்டி நிற்கிறது.
வீட்டிற்குள் இருந்து மு. க.. தமிழ் வெளிப்படுகிறார்.
அப்பொழுதெல்லாம் அப்பாவுக்கு சாரதி இந்த மகன் தான். அருள்நிதியின் அப்பா.
காரை நெருங்கி தயாராகும் மு. க. தமிழைப் பார்த்து அங்கு நின்று கொண்டிருந்த பெண்களில் ஒருவர் 'நல்லாயிருக்கியா கண்ணு' என்று வாஞ்சையுடன் கேட்கிறார். தமிழ் தலை நிமிர்ந்து புன்னகையுடன் தலையசைக்கிறார்.' என்னைத் தெரியுதாப்பா ? ' என்கிறார். மீண்டும் புன்னகையுடன் தலையசைப்பு. அந்த அம்மாள் இவரை சிறுவனாக இருந்த போதே அறிந்தவராய்த் தான் இருக்க வேண்டும். ஒரு வேளை கலைஞர் வீட்டில் முன்னர் வேலை பார்த்தவராய்க்கூட இருக்கலாம்.
இப்போது கலைஞர் வீட்டிற்குள் இருந்து வெளி வருகிறார்.
தேங்காய் சீனிவாசன் சாமி கும்பிட்டு விட்டு கோவிலில் இருந்து வெளி வருகிறார்.
கலைஞர் கிளம்புகிறார் என்பது தேங்காய் சீனிவாசனுக்கு தெரியத்தான் செய்கிறது.
கலைஞருக்கும் கோவிலில் இருந்து தேங்காய் வெளி வருவது புரியாமல் இல்லை.
தேங்காய் சீனிவாசன் உரக்க ஒரு கூப்பாடு.
"யாருப்பா என் கார் முன்னால இந்த வண்டிய நிறுத்துனது. நான் கார எப்படி எடுக்கறது. என்னடா இது"
அந்த துப்புரவு தொழிலாளர் ஓடி வருகிறார்.
தேங்காய் நல்ல சத்தமாக " வண்டிய ஏன்யா இப்டி விட்ட. கார இப்ப நான் எடுக்க வேண்டாமா?
ஏம்ப்பா.. சீக்கிரம் எடுய்யா வண்டிய? "
இதை கண்டும் காணாமல் கலைஞர்
காரில் ஏற வருகிறார்.
அவர் பார்வை என் மீதோ,
அங்கு நின்றிருந்த
மற்ற மூன்று பெண்கள் மீதோ விழவில்லை.
மகன் கார் கதவை திறந்து அப்பா ஏறியவுடன் மகன் டிரைவர் சீட்டில் அமர்கிறார்.
கலைஞர் கார் புறப்படுகிறது.
துப்புரவு பணியாளர் குப்பை வண்டியை அகற்றியதும் தேங்காய் சீனிவாசன் மீண்டும் கோபமாக சிடு, சிடு என்று திட்டிக் கொண்டே தான் காரை எடுக்கிறார்.
..