Share

Mar 30, 2021

ஏசு சாமியும் செவெத்தியானும்

பாஸ்கா பண்டிகை.

நாடகம் பாஸ்கா பண்டிகையில் 
இரவு பூரா நடக்கும்.

ஏசு சாமியை சிலுவை சுமந்து செல்லும்போது நாலு பேர் சாட்டையால் அடிக்கிற காட்சி.

 ஏசுவாக நடிக்கிறவர் மிக உருக்கமாக 
சிலுவை சுமந்து வரும்போது யூத சிப்பாய்கள் 
அவரை அடித்துக்கொண்டே வருவார்கள். 

" தேவ மைந்தன் போகின்றார் " என்று பாடல் பின்னணியில்.

 சாட்டையால் அடிக்கிற செவெத்தியான்( செபஸ்தியான் ) அந்த ரோலை கெஞ்சிக்கேட்டு வாங்கியிருக்கிறான்.

 எப்படியோ இந்த நாடகத்தில் ஒரு ரோல் செய்துடனும்னு அவன் ஆசைப்பட்டது தான். 

இவன் சிப்பாயாக வந்து சாட்டையால் அடிக்கிற மாதிரி சும்மா பாவலா செய்யணும். 
அப்படி முதல்ல அடிக்கிற மாதிரி பாவலா  தான் அவனும் மற்ற மூணு சிப்பாய்களாக நடித்த ஆளுங்க போல செய்திருக்கிறான்.

ஆனா அவன் ஊர்க்காரன் ஒருத்தன் " ஏலே, அங்க பாருலே நம்ம செவத்தியான்." என்று கூப்பாடு போட்டது நடிக்கிறவன் காதிலே விழுந்தது.

 இன்னொருத்தன் " எங்கலே? எங்க ?'' என்று கேட்கிறான்.
" ஏலே செத்த மூதி. அன்னா பாருலே. ஏசுவை சாட்டையால் அடிக்கிறான் பாருலே."

'' எவம்லே, நாலு பேருல்லே அடிக்கான்''

" ஏலே, பச்சை டிரஸ் போட்ட சிப்பாய் 
நம்ம செவெத்தியான்லே"

Recognition

"சாட்டைஎடுத்தார் யூதரெல்லாம்......
தாவியடித்தார் மேனியிலே ..." 
பின்னணியில் பாட்டு ...

செவத்தியானுக்கு நடிப்பு இயல்பா, 
யதார்த்தமா இருக்கணும்
 என்ற அக்கறை அதிகமாகி விட்டது.

 ஏசு வேசம் போட்ட ஆளை நோக்கி 
சாட்டையை பலமாய் வீச ஆரம்பித்தான். 

ஏசு வாக நடித்த ஆள் மூஞ்சி 
உருக்கம் சோக பாவம் 
எல்லாம் மறைந்து வெளிறிப்போனது. 

செவெத்தியானோவெனில் தன் இயல்பான நடிப்பை காட்டுவதிலேயே 
தீவிரமாக தவ்வி தவ்வி  இயங்க ஆரம்பித்தான்.

ஏசு " ஏலே நாரபுண்டழுதை. வலிக்குதுலே "

செவெத்தியான் யதார்த்த  நடிப்பின்
 உச்சத்தை எட்டிக்கொண்டிருந்தான்.  

ஏசு மற்ற சிப்பாய்களை நோக்கி 
" ஏலே, நிசமாவே அடிக்காம்லே.'' 

செவத்தியானிடம் திரும்பி ஏசு  
"ஈனப்புண்டழுதை. 
ஒன்னை கொன்னுருவம்லே. சவத்துக்கூதி...
ஏல வலிக்குதுல்லே.
ஒக்காபுண்ட.. நிறுத்துறியா இல்லையால்லே."

..

Mar 29, 2021

அப்பா பக்கம் வந்தா, அம்மா முத்தம் தந்தா



எதிரிகள் ஜாக்கிரதை. 1967ல் மாடர்ன் தியேட்டர்ஸ் படம். இதில் ஒரு பாட்டு. 

'லாலா லல்லலல்லா

லாலா லல்லலல்லா 


 ஒரு நாள் இருந்தேன் தனியாக, 

ஒரு பெண் நடந்தாள் அருகே, 

சிரித்தேன் சிரித்தாள் மெதுவாக, 

சிவக்கும் ரோஜா மலரே


அம்மா பக்கம் வந்தா, 

அப்பா முத்தம் தந்தா '

 என்று ஒரு பாடல்.


(இது ஒரு ஆங்கிலப் பாடலின் காப்பி. 

Joan Regan's 1960 popular song 


"Listen well when I tell you a story,

Of a boy and a girl in the spring,

As the first flowers burst into glory,

And I heard, every bird started to sing.

Papa, He loves Mama,

Mama, she loves Papa,") 


ஆர்.எஸ்.மனோகர், மணிமாலா, மாஸ்டர் பிரபாகர் இடம்பெற்ற பாடல். 

அந்த காலத்தில் ரொம்ப ஹிட் ஆன பாடல்.


இதில் மாஸ்டர் பிரபாகருக்கு வரிகள் – 

'அப்பா பக்கம் வந்தா, அம்மா முத்தம் தந்தா.'

இந்த குழந்தை குரல் பாடியவர் வசந்தா ராணி.


அந்த காலத்தில் குழந்தை பாடல்கள் பாடியவர் என்றால் எம்.எஸ்.ராஜேஸ்வரி தான்.


வசந்தா ராணி பாடிய அப்பா பக்கம் வந்தா, அம்மா முத்தம் தந்தா மறக்க முடியாத குரல்.


வசந்தாராணி ராமண்ணாவின் ”மூன்றெழுத்து” (1968) படத்தில் நடித்தார். 


நல்ல நகைச்சுவை நடிப்பையும் இவரிடம் காண முடிந்தது. நாகேஷை “டேய் கூத்தாடியத்தான்” என்று கலாட்டா செய்வார். அசட்டு பாத்திரம்.


 அப்பாவாக ஓ.ஏ.கே தேவர் ஐயராக நடித்திருப்பார். ஐயர் பாஷை ஓ.ஏ.கே தேவர் பிரமாதமாக தன் கணீர் குரலில் பேசுவார். ’மதராஸ் டூ பாண்டிச்சேரி’(1966)யில் 

ஐயர் ஓட்டல் முதலாளியாக 

விசிறியால் விசிறிக்கொண்டே வருவார்.


மூன்றெழுத்தில் மாடிப்படியேறும் ஓ.ஏ.கே தேவரின் பின்னால் வசந்தா ராணி போய்க்கொண்டு

 “ மெல்லப்போ மெல்லப்போ மெல்லிடையாளே மெல்லப்போ” பாடும்போது 

தேவர் நின்று திரும்பி ’உன்னை போய் பெத்தனே’ என அர்த்தப்படும் படி 

தன் வயிற்றில் இரண்டு அடி அடித்துக்கொள்வார். திரும்பி மீண்டும் அவர் படியில் நடக்கும்போது 

“ ஆக மெல்ல நட மெல்ல நட” பாடுவார் கிறுக்குப்பெண்.


வசந்தி, வசந்தா என்று அன்று அறியப்பட்டவர்

வசந்தா ராணி பின்னால் தற்கொலை செய்து கொண்டார்.


.

’அச்சச்சோ’ சித்ரா வசனம் பாலச்சந்தரின் அரங்கேற்றம் (1973).

“இந்த படம் நல்லாருக்காதுன்னு  தான்

 நான் சொன்னேன். 

ஏன் நல்லால்லேன்னு 

பாத்துட்டு வந்துடுவோம்னு 

அம்மா தான் சொன்னா”


வசனம் பேசும் போது ’அச்சச்சோ, அச்சச்சோ' சொல்லி பிரபலமான சித்ரா.


நான் அவனில்லை(1974)யிலும் வருவார் அச்சச்சோ சித்ரா.

இந்த நடிகையும் தற்கொலை செய்து இறந்தார்.


Life leaves you to step out of it when you choose.

Mar 26, 2021

தூய உம் வரவாலே

 


திருச்சி செயின்ட் ஜோசப்ஸ் காலேஜ் மற்றும் 

உயர் நிலைப்பள்ளி வளாகத்தில் 

கம்யூனிட்டி சென்டர் திறப்பு விழா. 


முதல்வர் கலைஞர் மு. கருணாநிதி

 திறந்து வைத்தார். 

அமைச்சர்கள் சி. பா. ஆதித்தனார்,

 ப. மாதவன், கே. வி. சுப்பையா ஆகியோர் கல்லூரியின் முன்னாள் மாணவர்கள். 

விழாவில் கலந்து கொண்டு மாணவ வாழ்க்கை பற்றிய நினைவில் சிலிர்த்தார்கள்.


 கல்லூரியின் முன்னாள் மாணவர் 

நடிகர் எஸ். ஏ. அசோகன் கூட விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தார். 

கல்லூரி பள்ளி மாணவர்கள் திரைப்பட நடிகரை காண்பதில் அதிக உற்சாகம். 


அசோகனின் கல்லூரி வாசம் மட்டுமின்றி,

 பள்ளி படிப்பும் கூட செயின்ட் ஜோசப்ஸ் தான். 


பள்ளிச் சிறுவனான நான் தமிழக முதல்வரை வரவேற்று வாழ்த்துப் பா எழுதுமாறு பணிக்கப்பட்டேன். 

'தூய உம் வரவாலே மகிழ்ந்தோம் 'என்று அதில் ஒரு வரி. 

அதைப் பார்த்த ஒரு ஃபாதர் 

அது ஆகாது என்றார்.' உம் வரவாலே மகிழ்ந்தோம்'என்றால் போதும். 

தூய என்ற உன்னத வார்த்தையை கருணாநிதிக்காக பயன்படுத்துவது 

பெரும் அபத்தம் என்று புருவத்தைத் தூக்கி அதனை நீக்கினார். 


கல்லூரி முதல்வர் சி. கே. சுவாமி. 

கலைஞர் அன்று திறந்து வைத்த கட்டிடம் முழுமையாக இல்லாமல் பாதியாக. கட்டிட வேலை இன்னும் பாக்கி. 


கல்லூரி முதல்வர் அது பற்றி பேசும் போது குறிப்பிட்ட ஒரு விஷயம் "கட்டிடம் கட்ட ஏ. எஸ். ஜி. லூர்து சாமி பிள்ளை (அப்போதெல்லாம் காங்கிரஸ் தலைவர்கள் பெயரோடு ஜாதியையும் சேர்த்துக் கொள்வார்கள்.இவர் முன்னாள் எம். பி. அடைக்கலராஜின் தந்தை. ) கொஞ்சம் உதவி செய்தார். நம்முடைய தமிழக முதல்வர் கருணாநிதி. கருணை உண்டு. நிதியும் உண்டு. கட்டிடம் முழுமையடைய உதவுவார்" 


ஒரு வசதியான கிறிஸ்தவ நிறுவனம் நிதியுதவி கேட்பது கலைஞருக்கு ருசிக்கவில்லை. அதோடு காங்கிரஸ் தலைவர் பெயரும் ரசிக்கும்படியாக இல்லை. போர்க்குணம் மிகுந்த கலைஞர் பேசும் போது இதற்கு பதிலளித்தார். "காங்கிரஸ்காரர்கள் எங்களிடம் ஆட்சியை இப்படி இந்த அரைகுறை கட்டிடம் போலத் தான் ஒப்படைத்து விட்டுப் போனார்கள். நாங்கள் செப்பனிட்டுத் தான் சரி செய்தோம். இப்போதும் பாருங்கள். நான் பாதியாய் உள்ள கட்டிடத்தைத் தான் திறந்து வைக்க வேண்டியிருக்கிறது. யாரோ காங்கிரஸ் தலைவர் பெயரை கல்லூரி முதல்வர் குறிப்பிட்டார்.  காங்கிரஸ்காரர் அரைகுறையாக கட்ட நிதி தந்திருக்கிறார். காங்கிரஸ்காரர்களுக்கு எல்லாமே அரை குறை தான். அவரிடமே மீதியையும் கட்டித்தர நிதி கேளுங்கள். "


அன்று முதியவரான தமிழர் தந்தை சி. பா. ஆதித்தனார் பேசிய நெகிழ்ச்சியான செய்தியொன்று 

" இந்த கல்லூரியில் நான் படித்த போது ஒரு ஃபாதர் எனக்கு பேராசிரியராய் இருந்தார். 

அவருக்கு ஆஸ்த்மா வியாதியிருந்தது.

 அதனால் மிகவும் சிரமப்பட்டார். 

அவருடைய மாணவனான நான்

 அந்த வியாதியின் தன்மை பற்றிக் கேட்டேன். 

அவர் சொன்னார் 'இந்த கொடுமையான நோய் உனக்கு வரவே கூடாது'. 

எவ்வளவு நல்ல மனசு பாருங்கள். அவருக்கு உள்ள ஆஸ்த்மா எனக்கு வரக்கூடாது என்று மனதார நினைத்தார். எவ்வளவு பெரிய மனசு. 

எனக்கு மிகப் பெரிய ஆசி. 

இன்று இந்த முதிய வயதில் எனக்கு ஏதேதோ வியாதிகள் வந்திருக்கிறது. என்னன்னவோ. ஆனால் ஆஸ்த்மா மட்டும் எனக்கு இல்லை. "


...

Mar 25, 2021

தேர்தல் பிரச்சாரத்தில்

 தேர்தல் பிரச்சாரத்தில் தேறிய 

ஒரு சமீபத்திய காட்சி 


எடப்பாடி பேசுகிறார். 

வேட்பாளர் செல்லூர் ராஜூ உற்சாகமாக,                        வாயகல ஆனந்த சிரிப்புடன் கும்பிட்டுக் கொண்டு. 


எடப்பாடி மக்களுக்கு அளிக்கும் வாக்குறுதிகளுக்கு கும்பிட்ட கைகளால்  கை தட்டி, 

பின் குஷியாகி விசில் அடிக்க 

வாய்க்கு விரல்களை 

கொண்டு போய், கண்ணியமாக விசில் சிக்னல்      மட்டுமே செய்கிறார். 

அடுத்த முறை எடப்பாடியின் பேச்சால் குஷியாகி, கும்பிட்ட கைகளை தட்டி தட்டி, மேலும் இம்முறை வாயில் விரல் வைத்து, 

கூடியுள்ள கூட்டத்திடம் 'இதுக்கு நீங்க விசில் அடிக்கனும், அடிங்க விசிலு ' என்ற சிக்னல் செய்கிறார். 

இடையில, இடையில எடப்பாடிக்கு 

இத சொல்லுங்க,

 இதயும் சொல்லுங்க என்பதாக 

கள்ளக்குரலில் prompt 

செய்து கொண்டுமிருக்கிறார். 


செல்லூர் ராஜூ, ராஜேந்திர பாலாஜி,

 திண்டுக்கல் சீனிவாசன்..


.. 

Mar 18, 2021

Coincidence in a surprising way


திருப்பூரில் வேலை வாங்கிக் கொடுத்தவர் அப்போது அங்கே பாங்க் மேனேஜராக இருந்த சரவணன் மாணிக்கவாசகம். 

தானே ராஜா, தானே மந்திரி என்று வாழ்ந்து விட்டு எப்படி இனி கை கட்டி வேலை பார்க்கப் போகிறேன் என்ற கலக்கம் சொல்லி முடியாது. 

பதற்றம் அதிகமாய் இருந்தது. 


பெரும் பொருளாதார வீழ்ச்சி வீழ்த்தி விட்ட நிலையில் வேறு வழியுமில்லை. 


சரவணன் பேங்க் கிளம்பும் போது ஒரு போன். 

எங்கள் இருவருக்கும் நண்பன் பேசியிருக்கிறான். 

"சரவணா, என்னய்யா இது. தோழர் (என்னைப் பற்றி தான் குறிப்பிடுகிறான்) எப்படிய்யா கை கட்டி வேலை பார்ப்பான். கனவுலயும் நடக்காதுப்பா. 

கோபத்தில சட்டுனு எவனாயிருந்தாலும் கைய நீட்டிடுவானேய்யா. நம்பவே முடியல "


சரவணன் மையமாக 'இல்லண்ணே, தோழரோட நெலம. வேற வழியில்ல' 


'என்னமோய்யா, அவனப்பத்தி ஒனக்கு தெரியாததா?" 


சரவணன் மீண்டும் விளக்கம் சொல்லி முடித்து திருப்பூர் டிராபிக்கில் இருபது நிமிடத்தில் 

காரில் பேங்க் சேர்ந்த பின் ஒரு போன் கால். 

அதே நண்பன் தான். "யோவ் சரவணா, தோழர் வேலைக்கு சேர்ந்திருக்கிற கம்பெனிக்கு இப்ப நீ போன் போட்டுக் கேட்டுப் பாருய்யா. இன்னேரமே தோழர் நிச்சயமா கோபத்தில எவனயாவது அடிச்சிருப்பான்யா!" 


பஞ்சம் பிழைக்கப் போயிருந்த திருப்பூர் வாழ்க்கையை எதிர் கொள்ள மனதை எவ்வளவு திடப்படுத்தினாலும் தேம்பி அழும் நிலை. 

கோபத்தை வெளிப்படுத்தி விடக் கூடாது என்ற சங்கல்பத்தை ஏற்படுத்திக் கொண்டேன். 

ஆனால் என் கோபம் impulsive act.                     கலக்கமும் பயமும் பதற்றமும் நிரந்தரமான விஷயம். 


.. 


ஆஃபிஸில் மூன்றாவது கேபினில் இருந்த போது ஒரு போன் கால். அது முதல் கேபினில் இருந்த ஒருவருக்கு. நான் அந்த கால் அங்கே போகும் படி டிரான்ஸ்பர் செய்தேன். அந்த நபர் மற்றொரு போனில் பேசிக்கொண்டிருந்தார். அவரிடம் 'உங்களுக்குத் தான்' என்று சைகையால் தெரிவித்தேன். 

அந்த ஆள் மற்றொரு போனில் தொடர்ந்து பேசி வைத்து விட்டு என்னிடம் 'நான் ஒரு போனில் பேசிக்கொண்டிருக்கும் போது எப்படி இன்னொரு கால் டிரான்ஸ்பர் செய்யலாம்' என்று கோபமாக சத்தமிட்டு, சங்கு சக்கர சாமி வந்து திங்கு திங்குன்னு ஆட ஆரம்பிச்சிட்டார். 

மனதை உறைய வைத்துக் கொண்டு கண்ணை மூடி அவமானத்தை ஜீரணித்தேன். 


ஒரே வாரம். செய்தித்தாளில் பரபரப்பு செய்தி. 

அந்த நபர் புகைப்படத்துடன். கடன் கொடுத்த ஒரு முதிய கிழவியை கொலை செய்து விட்டார். கொலை செய்து சாக்கில் பிணத்தைப் போட்டு மறைத்து, பிடி பட்டு கைது. 


.. 


எதிர் கேபினில் இருந்து ஒருவர் "சார், இங்க வாங்க" என்று கூப்பிட்டார். தோரணையில் அது வெட்டிப் பேச்சுக்குத் தான் என்று தெரிந்தது. 

அதோடு எனக்கு வேலையுமிருந்தது. 

"எனக்கு வேலை இருக்கு " என்றேன். 


அந்த ஆளுக்கு கௌரவப் பிரச்சினையாகி விட்டது. 

" சார், இனிமே இந்த கேபினுக்குள்ள நீங்க நொழஞ்சா கால வெட்டுவேன் சார் "என்று சீரியஸா கோபமாக சத்தமா ஒரு சவுண்டு. 


அவமானத்தால் துடித்துப் போனேன். 


ஒரு பத்து நாள். அந்த நபர் காலில் 

கட்டு விரியன் கடித்து, சீரியஸாகி.. விதி முடிஞ்சவனத் தான் கட்டு விரியன் கடிக்குமாமே. 


ஆஸ்பத்திரி, படுக்கைன்னு ஆறு மாதம் படாத பாடு பட்டு  அந்த ஆளு பொழச்சிட்டாலும் பழைய ஆளாயில்ல. 


...

Mar 17, 2021

'மணல் கோடுகளாய்..' பற்றி பத்மஜா நாராயணன்

 R. P. ராஜநாயஹம் "மணல் கோடுகளாய்.." 

நூல் பற்றி 

பத்மஜா நாராயணன் 


Autobiography begins with a sense of being alone. It is an orphan form.

........John Berger


இப்படிக் கூறித் தான் ஆரம்பிக்க வேண்டியிருக்கிறது திரு.ராஜநாயஹத்தின் மணல் கோடுகளாய் நூலைப்பற்றி. ஒவ்வொருவருக்கும் அவரவர் வாழ்வில் எத்தனையோ மறக்கமுடியாத சம்பவங்கள் நிகழ்ந்திருக்கும். அதை ஒரு சமயம் நகைச்சுவையாகவும், ஒரு சமயம் ஏற்றுக்கொண்ட மனப்பான்மையுடனும், ஒரு சமயம் விரக்தியுடனும் அனைவரும் அசைபோட்டு பார்ப்பதுண்டு. அவ்வாறு உரக்க அசை போட்ட நினைவுகள்தான் இந்த நூல். இதை வாசிக்கும் பொழுது இதை எழுதியவர் எத்தகைய  வாசிப்பாளராகவும் திறமை உள்ளவராகவும் இருந்திருக்கிறார் என்பதை நினைக்கும் பொழுது பிரமிப்பாக இருக்கிறது. வாழ்க்கை ஒவ்வொருவரிடமும் ஒருவகையில் விளையாடிக் கொண்டே இருக்கிறது. அதன் விளையாட்டு இப்படியாகத்தான் 

திரு.ராஜநாயஹத்துடன் நிகழ்ந்திருக்கிறது. 

இதை வாசிக்கும் பொழுது பல சமயங்களில்

 க. சிவக்குமாரின் எண்ணம் வருவதைத் தவிர்க்க முடியவில்லை. அதற்கு முதல் காரணம் சுய எள்ளல் மற்றும் வாழ்க்கைச் சூழலில் சிக்கி தவிக்கும் நிகழ்வுகளும் தான். 


இது என்னவோ அவருடைய சுயசரிதையின் 

ஒரு முன்னோட்டம் போல்தான் எனக்குத் தோன்றுகிறது.   வாழ்வில்  மறக்க இயலாத நிகழ்வுகள்  இல்லாவிட்டால் அதற்கு வாழ்க்கை என்ற பெயரே இல்லை. 

அதை அழகுபட எழுத 

மிகச் சிலருக்குத்தான் முடியும். 

அந்த மிகச் சிலரில்

 ஒருவர்தான் ராஜநாயஹம். 


 மணல் கோடுகள் அழிந்துவிடும். ஆனால் இவை கல்மேல் செதுக்கப்பட்ட கோடுகள். காவியங்கள்.


....

Mar 16, 2021

ப. சிங்காரம்

 ப.சிங்காரம்


ப. சிங்காரத்தை 1989 துவக்கத்தில் சந்தித்தேன்.

மணிக்கொடி சிட்டி தான் அவருடைய எழுத்து பற்றி என்னிடம் கவனப்படுத்தினார். 


 நானும்  சரவணன் மாணிக்கவாசகமும் சேர்ந்து 

அவரை பார்க்கப் போயிருந்தோம். 


 'புயலிலே ஒரு தோணி ' 'கடலுக்கு அப்பால் 'நாவல்களை படித்து மலைத்து போய்விட்டோம். 


மதுரை Y.M.C.A யில் அப்போது அவர் தங்கியிருந்தார். 


ஆப்பிள், ஆரஞ்சு, திராட்சை என பழங்கள் வாங்கி அவருக்கு கொண்டு போயிருந்தோம். 


 அவருடன் அவர் அறையில் வேறு 

இரு இளைஞர்கள் தங்கியிருந்தனர். 

ப. சிங்காரம் எங்களை சந்தித்த நிலையில் 

மிகவும் நெகிழ்ந்திருந்தார். 

அவர் கண்ணில் தெறித்த அன்பு விஷேசமானது. 


அவர் தன் நாவல்கள் பற்றி சாதாரணமாக தான் பேசினார். 


நவீன தமிழ் இலக்கியம், எழுத்தாளர்கள், பத்திரிகைகள் தனக்கு அன்னியம் என்றே சொன்னார். ஆச்சரியமாயிருந்தது.

'நான் தினத்தந்தியில் வேலை பார்த்தவன். எனக்கெப்படி உங்கள் இலக்கிய உலகம் பற்றி தெரியும்.'


அவருடன் Y.M.C.A வால் தங்க வைக்கப்பட்டிருந்த இருவரும் அலட்சியமாக இருந்தனர். 

சிநேக பாவமே அவர்களின் நடவடிக்கைகளில் இல்லை. பொதுவாக ஹாஸ்டல் அறைகளில் உடனிருப்போர் இணக்கமாக அமைவது சிலருக்கு கொடுத்து வைப்பதில்லை. அதிலும் இவர் மகத்தான படைப்பாளி. கேட்க வேண்டுமா? வயதிலும் அந்த ரூம் மேட் களுக்கு மிகவும் மூத்தவர். 


பின்னால் Y.M.C.A நிறுவனம்

 கட்டிடம் புதுப்பிக்க  வேண்டியிருக்கிறது என காரணம் காட்டி நிர்ப்பந்தமாக வெளியேற்றியதையும், 

இவர் விருப்பமின்றி நாடார் மேன்சனில்

 அந்திம காலத்தில் தங்கியிருந்ததையும்

இப்போது எண்ணிப் பார்க்க வேண்டியுள்ளது .


... 


காலச்சுவடு கண்ணன்  ப .சிங்காரத்தின் வாசகர் கடிதம் சி.சு . செல்லப்பாவின் 'எழுத்து ' இதழ் ஒன்றில் வெளியாகியிருந்ததை வெளிச்சத்திற்கு கொண்டு வந்த போது ஆச்சரியமாக இருந்தது. 


இதை தொட்டு நான் அதற்கு எதிர்வினையாக எழுதியிருந்த கடிதம் காலச்சுவடில் பிரசுரமானது.


பொதுவாக நான் பத்திரிக்கைகளுக்கு வாசகர் கடிதம் எழுதியதே இல்லை. இது கூட விஷய முக்கியத்துவம் கருதி தான். 


புயலிலே ஒரு தோணி நாவல் தமிழுக்கு கிடைத்த மிகப்பெரிய பொக்கிஷம்.


அவரை சந்திப்பதற்கு முன் அந்த நாவலில் உள்ள விஷயங்கள் பற்றி, (அதோடு வேறு பல குறிப்புக்களுமாக )ஒரு நோட் புத்தகத்தில் நான் எழுதியிருந்த குறிப்புகளை பார்த்து விட்டு கோணங்கி

 ' இதை அப்படியே புத்தகமாக போடலாம் ' என சிலாகித்தான். அந்த நோட் புத்தகம் தொலைந்து விட்டது.


ஒரு விஷயம். இப்போது காணக்கிடைக்கும்

 ப. சிங்காரத்தின் புகைப்படங்கள்

 அய்யனார் ஆனந்த் (பௌத்த அய்யனார்) முயற்சியின் காரணமாக நமக்கு கிடைத்தவை.


http://rprajanayahem.blogspot.com/2020/03/blog-post_22.html?m=0


https://rprajanayahem.blogspot.com/2020/03/blog-post_18.html?m=0

... 


மீள் 2008


ஜி. நாகராஜன்

 G. நாகராஜன் 


நாங்கள் பார்க்க முடியாமல் போன, 

இறந்து போன மனிதரை பற்றிய

 எங்கள் தேடல் அன்று ...


G .நாகராஜன் மதுரை திண்டுக்கல் ரோட்டில் மேலமாசி வீதியை ஒட்டி குடியிருந்த பல வீடுகள் கொண்ட ஒட்டுகுடித்தன வீட்டுக்கு

 நானும் சரவணன் மாணிக்கவாசகமும் போயிருந்தோம்.


அப்போது G .நாகராஜன் மறைந்து ஒரு வருடம் இருக்கும்.


கொஞ்சம் தெரியாத மாதிரி ' இங்கே G.நாகராஜன்னு ஒரு புரபஸர் இருக்கிறாரல்லவா.’

அங்கிருந்த பெண்கள் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டனர்.


ஒரு வயதான பிராமண பாட்டி உடனே சொளவை கீழே வைத்து விட்டு உடனே எங்களை கூர்ந்து பார்த்தார். எழுந்து வந்தார்.


'யார் நீங்க ?'


'அவரோட மாணவர்கள் '.(' சும்மா..Harmless lie )


'பாடமெல்லாம் நன்னா நடத்துவான். இறந்துட்டானே. தெரியாதோ?'


'அப்படியா பாட்டி? '


'வருஷம் ஆறது.. 'ம்ம் .. பாப்பார கள்ளன்.. துஷ்டன்.. '


எனக்கு ' மனுஷன் மகத்தான சல்லிபயல் ' என்று G.நாகராஜன் சொன்னது ஞாபகம் வந்தது.


பாட்டி ' இனி பேசி என்ன ... '


அப்புறம் மீனாக்ஷி நிலையம் செல்லப்பன் ' இந்த கடைக்குள்ள கால் வைக்க கூடாது இனிமே ' என்று கடுமையாக G.நாகராஜனை எச்சரித்ததை பற்றி எங்களிடம் சொன்னார்.


தெற்கு மாசி வீதி 'விழிகள் ' அலுவலகம் சென்றோம். அங்கே இப்போது சினிமாவில் நடிக்கும் நாடக  மு. ராமசாமி இல்லை. அவர் தான் 'விழிகள் ' ஆசிரியர்.


அங்கேயிருந்த கூத்து ராமசாமி அவரை பற்றி சொன்னார். எல்லாம் இப்ப சுந்தர ராமசாமி 'நினைவோடை'யில் எழுதியுள்ள மாதிரி சமாச்சாரங்கள். 


 நெல்லை S.வேலாயுதம் அவர்களை சந்திக்க சொன்னார்.


எழுத்தாளர் டைலர் கர்ணனை பார்க்க சொன்னார். கர்ணனை தேடினோம்.பார்க்க முடியவில்லை.


வேலாயுதம் சோம சுந்தரம் காலனியில் இருந்தார். அப்போது படிக்க கிடைக்காத "நாளை மற்றுமொரு நாளே " நாவல் அவர் தான் படிக்க கொடுத்தார்.


நண்பர்கள், மனைவி, அப்போது ஒரிசாவில் இருந்த சகோதரன் எல்லோரும் அவரை மறுதலித்த துயர கதைகளை சொன்னார்.


நெல்லை வேலாயுதம் மகன் தன் மூலமாக புத்தகங்களை நாகராஜன் இவருக்கு தெரியாமலே புத்திசாலிதனமாக கடத்திய கதை சொன்னார்.


சரவணன் மாணிக்கவாசகம் இறுக்கமானவர்.உணர்வுகளை, அதிர்ச்சியை வெளிக்காட்ட மாட்டார். நான் தான் நிலையிழந்து புலம்பி தீர்த்தேன்.


மதுரை டவுன் ஹால் ரோடு. ஒரு பேராசிரியர்  'விழிகள் ' மு.ராமசாமியுடன் பேசிகொண்டிருக்கிறார். ஒரு அழுக்கான நலிந்த மனிதர் ' ராமசாமி ' என்று இவரை அருகில் வந்து விளிக்கிறார்.

ராமசாமி அவரை உடனே கண்ட படி திட்ட ஆரம்பிக்கிறார். உடனே அவர் அங்கிருந்து அகன்று நடக்க ஆரம்பிக்கிறார். 

இந்த பேராசிரியர் சிவக்கண்ணன்

 'அவர் யாருங்க?' வினவுகிறார்.

'G.நாகராஜன் '

சிவக்கண்ணன் பதறி விடுகிறார். 'என்ன சொல்றீங்க .... நாகராஜனா ... அவரையா இப்படி திட்டினீர்கள்? அவரா இப்படி பிச்சைக்காரன் மாதிரி இருக்கிறார்? '


இந்த நாடக ராமசாமி, இப்போது சினிமா நடிகர் ராமசாமி ( பல ராமசாமிகள். இவரை விழிகள் ராமசாமி என்ற பெயரால் அப்போது அறிந்திருந்தோம். புதுவையில் எதிர்வு நிகழ்வில் நான் சந்தித்திருக்கிறேன் )


சென்னை வந்த பின் எலியட்ஸ் பீச் ஸ்பேசஸில் கூட மு. ராமசாமி அவர்களை  பார்த்தேன். 


இவர் தான் நாகராஜனின் கடைசி காலத்தில் அவரை கவனித்து போஷித்தவர். அவருடைய கடைசி கிரியைகளுக்கும் செலவு செய்தவர் என்று ’கூத்து’ ராமசாமி சொன்னார். நெல்லை எஸ்.வேலாயுதமும் அப்படித்தான் சொன்னார்.


கி.ரா சொன்ன ஒரு விஷயம் . ' G.நாகராஜன் குளிக்க மாட்டார். ஆனால் அவர் மேல் துர்நாற்றம் வீசி நான் பார்த்ததேயில்லே.'


எல்லோரோரையும் சித்திரவதை செய்த நாகராஜன் ஒருவரிடம் வாலாட்டினதில்லை. ஜெய காந்தன். அவரிடம் காசு கூட கேட்க மாட்டாராம். Trouble Makerஎன்று பிரபலமானவர் எந்த தொந்தரவும் இவரிடம் செய்ததில்லை.


சந்தேக கேசில் பிடிபட்டு தப்பிக்க முயன்று அனுபவித்த வியாகுலத்தை

'ஓடிய கால்கள் ' என்ற சிறுகதையாக நாகராஜன் எழுதினார்.


மறுதலிப்பு, Rejection. 

மனித வாழ்வின் மகத்தான துயரம்.


ஒரு நாவல், ஒரு குறுநாவல்,ஒரு சிறுகதை தொகுப்பு.

இவை மூன்றுமே இலக்கிய அந்தஸ்து பெற்றுவிட்டன எனும் போது நாகராஜனின் சாதனை மலைக்க வைக்கிறது. அவருடைய கட்டுரைகளும் தான்.


காலச்சுவடில் அதை சு.ரா எழுதியிருந்தார். தலைப்பு

 ” நண்பர் ஜி.எம்”


மதுரை காலேஜ் ஹவுஸ் லாட்ஜில் இரண்டு குழந்தைகளை அறையில் பூட்டி வைத்து விட்டு பெற்றோர் வெளியே போயிருப்பார்கள். டவுன் ஹால் ரோட்டில் யானை வருகிறது. காலேஜ் ஹவுஸில் இருப்பவர்கள் கூட யானையைப் பார்க்கச்செல்கிறார்கள். குழந்தைகள் யானையைப்பார்க்க வேண்டும் என்று வாய் விட்டு அழுகின்றனர். காலேஜ் ஹவுஸில் தங்கியிருக்கும் கதை சொல்லியை பார்க்க வரும் ’ஒருவர்’ அந்த அறையின் கதவை உடைத்து குழந்தைகளை விடுதலை செய்து யானையைப் பார்க்க அனுப்புகிறார்.


சுந்தர ராமசாமியிடம் நான் சொன்னேன் “ கதவை உடைத்து குழந்தைகளை யானையைப்பார்க்க அனுப்புபவர் ஜி. நாகராஜன் தானே?”

நான் சொன்னது சரி தான் என்றார் சு.ரா.


அசோகமித்திரனின் “விரல்” கதையில் கதவிடுக்கில் சிக்கிய விரல்   நசுங்கிப் போகிற குடிகாரர் கூட

ஜி. நாகராஜன்.


திலீப் குமாரின் “ ஐந்து ரூபாயும் அழுக்குச் சட்டைக்காரரும் “ கதையில் வருகிற அழுக்குச் சட்டைக்காரர் ஜி. நாகராஜன்.


கோணங்கி கூட நாகராஜன் பற்றி ஒரு கதை எழுதினான். அந்த சிறுகதை தலைப்பு 'மதுரைக்கு வந்த ஒப்பணைக்காரன்'. 

கோணங்கியின் மற்றொரு கதை 'சபிக்கப்பட்ட அணில்'. இதிலும் ஜீ. நாகராஜன் காணக்கிடைப்பார். 


 

"தீவிரமான தேடலில் அந்நியமாகிப்போன வாழ்வுக்கு முன்னுதாரணமாக 

காலத்திற்கு முன்னே பிறந்து 

காலத்திற்கு முன்னே செத்து போவான் 

சிரஞ்சீவி கலைஞன் ஜி.நாகராஜன் "

- விக்கிரமாதித்தன் 


http://rprajanayahem.blogspot.com/2020/03/blog-post_18.html?m=0


http://rprajanayahem.blogspot.com/2019/05/blog-post_3.html?m=0


...


மீள் 2008


https://m.facebook.com/story.php?story_fbid=3014572045422908&id=100006104256328


மணிக்கொடி கி. ராமச்சந்திரன்

 'மணிக்கொடி கி. ரா என்றறியப்பட்ட 

 கி. ராமச்சந்திரன் என்ற A. K. ராமச்சந்திரன்' 



'அசோகமித்திரனின் திரையுலக கதாபாத்திரங்கள்' 

என்ற என் வித்தியாசமான மாறுபட்ட ஒரு கட்டுரை                    2004 ம் ஆண்டு 'கனவு' சிறு பத்திரிகையில் வெளியான போது 

மணிக்கொடி சிட்டி "மணிக்கொடி கி. ரா பற்றி இப்போது  நீங்கள் எழுதியிருப்பது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. 

உங்கள் தலைமுறையினர் யாரும் இவரை அறிந்து இராத நிலையில் நீங்கள் இவ்வளவு தெரிந்து வைத்திருப்பது வியப்பளிக்கிறது. அவரை கனப்படுத்தியிருக்கிறீர்கள்." என்று எனக்கு கடிதமே எழுதியிருந்தார். 

அப்போது சிட்டிக்கு 94 வயது. 

நடுங்கும் விரல்களால் அவரே எழுதுவார். 

படிக்க சிரமமாக இருக்கும் பவித்ர கையெழுத்து. 


மணிக்கொடியில் ‘சொத்துக்குடையவன்’,

 ஹாஸ்ய பத்திரிக்காசிரியன் போன்ற பல கதைகளை எழுதியவர் 

A.K.ராமச்சந்திரன் என்ற கி.ரா. 


ஒவ்வொரு மணிக்கொடி இதழும் 

வெளி வருவதற்கு கி.ராமச்சந்திரனின் 

ஒரே மோதிரம் அடகு வைக்கப்படும்.


பின்னாளில் இவர் ஜெமினிஸ்டுடியோ 

கதை இலாகாவில் வேலைக்கு சேர்ந்தார். ஔவையார் படத்தில்,வஞ்சிக்கோட்டை வாலிபன் படத்தில் இவர் பெயரை டைட்டிலில் பார்க்கலாம்.


க.நா.சு தன் ‘இலக்கியச் சாதனையாளர்கள்’ நூலை இவருக்கும் சேர்த்து சமர்ப்பணம் செய்திருக்கிறார். 


அந்த நூலில் மணிக்கொடி கி.ரா. பற்றி

 க.நா.சு சொல்வது

 ‘ கி.ராமச்சந்திரனின் சொந்த வாழ்க்கை 

அவ்வளவு சுத்தமானதல்ல.

 அந்தக் காலத்தில் ஒரு சாமியார் 

ஒருவர் இருந்தார். 

ஒரு சாரார் அவரை கயவன், அயோக்கியன் என்றும், அவர் மகான், சித்தர் என்று மறுசாராரும் அபிப்பிராயம் கொண்டிருந்தனர். 

அந்த சாமியாரிடம் மணிக்கொடி கி.ராமச்சந்திரனுக்கு மிகுந்த ஈர்ப்பு இருந்தது’


கி.ராமச்சந்திரனே கூட கடைசியில் ஒரு சாமியாராகவே மாறிவிட்டார்!தி.ஜானகிராமன் ஒரு முறை அவரை சாமியாராக சந்திக்க நேர்ந்து, பின் க.நா.சுவிடம் உயர்வாக 

‘கனிந்த சாமியாராகத்தான் ராமச்சந்திரன் தெரிந்தார்’ என கூறியிருக்கிறார்.

 அதன் பின்னாலொரு தடவை க.நா.சு வீட்டிற்கு வந்து கி.ரா பூஜையெல்லாம் செய்தாராம்.


புதுமைப்பித்தன்,கு.ப.ரா.,மௌனி,ந.பிச்சமூர்த்தி,

சி.சு.செ, சிதம்பர சுப்ரமணியன் ஆகியோர் மரணம் பற்றியெல்லாம் நமக்குத்தெரியும்.

சிட்டி தன் 96 வயதில் 2005ல் மறைந்தார்.


ஆனால் மணிக்கொடி கி.ராமச்சந்திரன் 

மாயமாய் மறைந்து விட்டார். 

என்ன ஆனார், 

அவருடைய மரணம் எப்படி, எப்போது சம்பவித்தது என்று யாருக்குமே தெரியாது.

Unsung, unhonoured, unwept. 


'கி.ராமச்சந்திரன் மிகவும் துன்பத்துக்குட்பட்டவர். புதுமைப்பித்தன், கு,ப.ரா,

சி.சு.செல்லப்பா,தி.ஜா ஆகியோர் வாழ்க்கையிலும் சிக்கல்கள் இருந்தன.

நாம் அறிவது, அறியக்கூடியது மிக மிகக் குறைவு. நடந்ததைப் பற்றி க.நா.சு கூறுவது போல என்றென்றுமாக கருத்து தெரிவிக்கக்கூடாது' என்று தான் அசோகமித்திரன் சொல்லக் கூடியவர்.


"மானசரோவர் நாவலில் கோபால் கதாபாத்திரம் 

கி. ராமச்சந்திரன் தானே? "என்று நான் கண்டு பிடித்துக் கேட்ட போது அசோகமித்திரன் பிரமித்து சொக்கிப்போய் சொன்னார் 

" அடடே, அட ராமச்சந்திரா, எப்படி, எப்படி ராஜநாயஹம் உங்களால் இதையெல்லாம் கண்டு பிடிக்க முடிகிறது? நீங்கள் என்னை மீண்டும், மீண்டும் வியப்பில் ஆழ்த்துகிறீர்கள்! "


'அசோகமித்திரனின் சீடன் ராஜநாயஹம்' என்று என் மீது ஒரு முத்திரை உண்டு.


http://rprajanayahem.blogspot.com/2012/07/blog-post_17.html?m=0

"அரசியல் பிழைத்தோர்" நூல் பற்றி சிவகுமார் கணேசன்

 R. P. ராஜநாயஹம் "அரசியல் பிழைத்தோர்" நூல் பற்றி 

சிவகுமார் கணேசன் 


அரசியல் பிழைத்தோர்

R.P.ராஜநாயஹம் 

எழுத்து பிரசுரம் 


கண்ணதாசன்,மதுரை முத்து,கலைஞர்,எம்ஜி ஆர், ஈவிகே சம்பத் அன்பழகன்,நெடுஞ்செழியன்,

முக அழகிரி, மு க முத்து, காளிமுத்து, ஜேப்பியார் காமராஜரை தோற்கடித்த  சீனிவாசன் இவர்களோடு,பிரபலமாகாத மதுரை கம்மாக்கரை கண்ணுசாமி தேவர், தாமரைக்கனியை பெரிய ஆளாக்கி அரசியல்வாதிகளுக்கு நேரெதிராக அரசியலில் லட்சங்களை தொலைத்த இவரது மாமனார் சந்திரன் பற்றி நாமறிந்த நாமறியாத தகவல்களை விவரிக்கும் அரசியல் கட்டுரைகளின் தொகுப்பு.


வெற்றிகொண்டான் குறிப்பாக தீப்பொறி ஆறுமுகம் பேசுவதையெல்லாம் பழனியில்,சுற்று வட்டாரக் கிராமங்களில் ஓடி ஓடிக் கேட்டதெல்லாம் இப்போது இந்தப் புத்தகத்தை வாசிக்கையில் நினைவுக்கு வருகிறது.ஒங்களுக்கு வௌக்கஞ் சொல்லியே நான் ஓஞ்சு போயிட்டேன் என்று அடிக்கடி பொய்யாகச் சடைந்து கொள்ளும் தீப்பொறி ஆறுமுகத்துக்கு நடிகர்களுக்கு ஈடான நட்சத்திர அந்தஸ்து இருந்தது என்று ராஜநாயஹம் சார் சொல்வது உண்மைதான்.


1965ல் இந்தி எதிர்ப்பு போராட்டத்திற்கு தலைமை தாங்கி, அன்றைய தினத்தந்தியில் தலைப்புச் செய்தியில், புகைப்படத்தில் இடம் பெற்ற மாணவர் தலைவர் ரவிச்சந்திரன் திமுகவில் கண்டு கொள்ளப்படாமல் போனது, அத்தனை தலைவர்கள்  இருக்க அண்ணா மறைவுக்குப் பின் கலைஞர் முதலமைச்சர் ஆனது,எமர்ஜென்சிக்கு பிறகு தேசிய அளவில் கருணாநிதியின் மாறிய பிம்பம். நம்மை வாழ விடாதவர் வந்து நம் வாசலில் வணங்கிட வைத்து விடும் என்று எம்ஜிஆரின் பாடல் வரிகள் தீர்க்கதரிசனமாய், அவரை எதிர்த்த அத்தனை பேரும் அவரிடமே சரணடைந்தது பற்றியெல்லாம் படிக்கும் போது ஆச்சர்யமாக இருக்கிறது.


காமராஜரையும்,அவரைத் தோற்கடித்த சீனிவாசனையும் வானொலிப் பேட்டி எடுத்த சிட்டியிடம் கலைஞர் சொல்கிறார்.என்ன சார் இப்படி செய்திட்டீங்க.காமராஜரைப் பேட்டி எடுத்துட்டு அடுத்து பெ.சீனிவாசனப் பேட்டி எடுக்கறீங்க.இவனுக்கு என்ன யோக்கியதை இருக்குன்னு இவனையெல்லாம் பெரிய ஆளாக்கறீங்க?.கருணாதியின் முன் ஜாக்கிரதையையும், தீர்க்கதரிசனத்தையும் இந்தச் சம்பவம் சுட்டுவதாக கூறும் ராஜநாயஹம்,இந்தப் புத்தகத்தையே கலைஞருக்குத்தான் சமர்ப்பணம் செய்திருக்கிறார்.


திருவாருர் தங்கராசு மாநாட்டில் எம்ஜிஆர் கலந்து கொள்ளாததற்கு ஆளாளுக்கு ஒரு காரணம் சொல்லிக் கொண்டிருக்க,காரணத்தை திருவாருர் தங்கராசே சொல்கிறார்.படித்துப் பாருங்கள்.


அண்ணன் காட்டிய வழியம்மா, அந்த சிவகாமி மகனிடம் சேதி சொல்லடி என்னைச் சேரும் நாள் பார்க்கச் சொல்லடி ,நலம்தானா? உடலும் உள்ளமும் நலந்தானா?நீங்கள் அத்தனை பேரும் உத்தமர் தானா சொல்லுங்கள் என்று கண்ணதாசன் எழுதிய திரைப்படப் பாடல்களின் பின்னணியிலுள்ள அரசியல்  செய்திகள் சுவாரஸ்யமாயிருக்கின்றன.


நேற்று,நெருங்கிய உறவினர் ஒருவரின் விசேஷத்திற்கு பழனி சென்றிருந்தேன். விசேஷத்தில் என் கையில் இருந்த புத்தகத்தை, பார்க்கலாமா? என்று வாங்கிய என் உறவினர் அப்படியே அதில் மூழ்கி விட்டார்.புறப்படும்போது பாதி முடிச்சாச்சு என்று சிரித்தார். படிச்சுட்டு கொடுங்க என்றதற்கு நீ  மதுரை போகணும். அடுத்த முறை வரும் போது வாங்கிக்கறேன் என்று  திருப்பித் தந்தார். கையில் எடுத்தால் கீழே வைக்க முடியாதபடி அவ்வளவு சுவாரசியமானது நேரில் பேசுவது போல இருக்கும் R.P.ராஜநாயஹம் சாரின் எழுத்து .


புத்தகத்தைப் பெற தொடர்புக்கு 9840065000


...

"மணல் கோடுகளாய்" மீதான சிவகுமார் கணேசன் பார்வை

 "மணல் கோடுகளாய்"  மீதான 

சிவகுமார் கணேசன் பார்வை 


மணல் கோடுகளாய்……

R.P.ராஜநாயஹம்

யாவரும் பப்ளிஷர்ஸ்


பாதுகாப்பான அரசாங்க உத்தியோகத்தை ராஜினாமா செய்து விட்டு அழைத்தால் வருவேன் என்ற திரைப்படம் வழியாகத் திரைப்படத் துறைக்கு வந்து,பாக்யராஜிடம் அஸிஸ்டென்டாக இருந்து,சொந்தத் தொழில்கள் பார்த்து, பிறரிடம் வேலை செய்து மதுரை, திருச்சி, பழனி,பாண்டிச்சேரி,சென்னை என மாறிக் கொண்டேயிருந்து யார் யாரிடமோ கேட்டு கடைசியில் அத்தனை சாமி ஒண்ணா சேர்ந்து ஆன முத்துசாமி அரவணைத்த,செய்துங்க நல்லூர் சாராயக்கடை ராஜநாயகம் பிள்ளையின் பேரனான R.P.ராஜநாயஹம் தன் வரலாறு கூறும் வாழ்க்கைச் சம்பவங்களின் தொகுப்பு.


இவரது வயலில் விவசாய வேலை பார்த்து மொதலாளி மொதலாளி என்று விசுவாசமாய் இருக்கும் மாரியப்பனுடன் நகர்வலம் போகும் போதுதானா

 சப் இன்ஸ்பெக்டர் வெள்ளைச்சாமி வர வேண்டும். மாரியப்பனாவது,காளியப்பனாவது எடுத்த ஓட்டம் வீட்டில் வந்துதான் முடிகிறது. பின்னாலேயே ஓடி வந்த மாரியப்பன், போலீஸ்னா எனக்கு ரொம்ப பயம் மொதலாளி.அடி பிச்சிப் போடுவானுங்க. மொதலாளி போலீஸ்னா எனக்கு ரொம்ப பயம் பாத்துக்கிடுங்க.இந்தப் போலீஸ்காரப் பயலுகள எனக்கு லல்லுசா பிடிக்கவும் செய்யாது பாத்துக்கிடுங்க என்று சொல்வதைக் கேட்டு அப்படிச் சிரித்தேன்.


ஒன்றாம் வகுப்பு படிக்கும் பேரனைத் தூக்கி வைத்துக் கொண்டு திருச்செந்துர் பேருந்தில் பேரன் சிரமப்பட்டதற்காக, 'என்னல அவன் வண்டி ஓட்டுதான்' என்று ஓட்டுநரைத் திட்டும், சன்னதம் வந்தது போல் சாமி கும்பிடும்,

'பவுண்டு வீட்டுக்காரன ஜெயிலுக்கு அனுப்பு முருகா.அவன் நல்லவனே இல்ல பாத்துக்க' என்று தண்டிக்க வேண்டும், பந்தலைப் பிரித்ததற்காக கல்யாணம் செய்து வைக்கச் சொல்லி அடம் பிடித்த பேரனை இடுப்பில் வைத்துக் கொண்டு ஊரிலுள்ள எல்லோரிடமும்

 எனக்கும் என் பேரனுக்கும் கல்யாணம் என்று சொல்லி, பந்தலைத் திரும்பப் போட வைக்கும், சொல்லியபடி யாருக்கும் சிரமம் தராமல் இறந்து விடும் ஆச்சி, ராஜநாயஹத்தின் வார்த்தைளில் அழியாச் சித்திரமாக நம்முள் பதிந்து விடுகிறார்.


மிகப் பெரிய இழப்புகளை, சரிவுகளை, உடன் இருந்தவர்கள் கழுத்தறுத்ததை, அவமானங்களை, துரத்தும் வறுமையை நாமெல்லாம் சொன்னால் பெரும்பாலும் புலம்பல்களாகத்தானே 

இருக்க முடியும். ஆனால் தங்கள் வாழ்க்கையில் நடந்த பிரச்சனைகள், சம்பவங்கள்,முக்கியமாக தாங்கள் எப்படித் தோற்றோம் என்பதை சிரிக்க சிரிக்கச் சொல்ல இவர்களால் முடியும் என்று இவரைப் பற்றி கி.ரா.அய்யா சொல்வது உண்மை என்பதை வாசிக்கும் அனைவருமே உணர முடியும்.


ஆனாலும், அவரது பிரியமான ஆச்சி இறந்த போதும், அவரது அம்மா இறந்த செய்தி கிடைத்தும் குழந்தைகளிடையே பாடல் பாடி வகுப்பெடுக்கிறாரே அப்போதும், 

திருப்பூர் பனியன் கம்பெனியில்

 வேலைக்கு பையனை ஒப்படைக்கும் போதும் அவருக்கும் வாசிக்கும் நமக்கும்  தொண்டை அடைக்கிறது. கண்கள் கசிகிறது.


ராஜநாயஹம் பற்றி, அவரது வாழ்வு பற்றி, 

அவரது புலமை பற்றி தமிழ் கூறும் நல் உலகின் ஆகச் சிறந்த ஆளுமைகளின் கருத்துகள்

 பின் பகுதியில் இணைக்கப்பட்டுள்ளன. 


அத்தனை துயரங்களும் மறைந்து 

உங்கள் வாழ்வில் நல் ஒளி வீசீட்டும் சார். 

அதையும் எழுதுங்கள்.

 வாசிக்கக் காத்திருக்கிறோம்.


...


https://m.facebook.com/story.php?story_fbid=3008816672665112&id=100006104256328

Mar 12, 2021

"மணல் கோடுகளாய்" பற்றி சரவணன் மாணிக்கவாசகம்



மணல் கோடுகளாய் ..- R.P. ராஜநாயஹம்:


ஆசிரியர் குறிப்பு:


பெரிதும் கவனம் பெற்ற "சினிமா எனும் பூதம்" நூலாசிரியர்.  மதுரை அமெரிக்கன் கல்லூரியில் ஆங்கிலஇலக்கியம் படித்தவர். கலைத்துறையில் சினிமா, கூத்துப்பட்டறை போன்ற தளங்களில் பணியாற்றியுள்ளார். நடிப்பு பயிற்சியாளராகவும், எழுத்தாளராகவும் திகழும் இவர் பரந்த வாசிப்பும், இலக்கியம், சங்கீதம், சினிமா மட்டுமன்றி பல Topicகளில் சரளமாகப்பேசும் , எழுதும் திறமையும் வாய்ந்தவர். தன்அனுபவச் சிதறலாய் இந்தக் கட்டுரைத்தொகுப்பு.


அனுபவங்கள் அந்தந்த வயதுக்கேற்றாற் போல் அமைவதில்லை, அந்தந்த வாழ்க்கைக்குத் தகுந்தாற்போல். செல்வமும், செல்வாக்கும் நிறைந்த குடும்பத்தில் இருந்து வந்தவர் இவர். அதே போன்ற குடும்பத்தில் மணமுடித்தவர்.  வறுமை எத்தனை வழியில் என்றாலும் வரும். செல்வம் பிறப்பில், திருமணத்தில் இல்லை அதிர்ஷ்டத்தில். அதில் கடைசி மட்டுமே இவருக்குப் பாக்கிஇருக்கிறது.


அப்பாவைப்பெற்ற ஆச்சியுடனான நெருக்கம் இவர் பலமுறை எழுதியது. மொத்தமாகப் படிக்கையில் சிறுவயதில் கொள்ளும் உறவுகள், எதிர்பார்ப்பும், ஏமாற்றமும் இல்லாததாலேயே பசுமரத்தாணி போல் பதிந்துவிடுகின்றன எனத் தோன்றுகிறது.


பத்துவயதில், நான்கு நாள் நட்பும் அப்போது சொல்லிக் கொடுத்த நாட்டுப்பாடலை இப்போதும் நினைவுகூர்வதும் இவரது Uniqueness. ஞாபகசக்தியே இவருக்கு வரம், அதுவே சிலசமயங்களில் சாபம்.


நீதிபோதனை வகுப்பில் புத்தகத்தின் நடுவே சரோஜாதேவி புத்தகம் படித்தது, மதுரை விளாங்குடி டூரிங் தியேட்டரில் பார்த்த படங்கள்,  திரையுலக, மெட்டட்டோர் வேன் சொந்தமாக வைத்திருந்த அனுபவங்கள், பிராந்திக்கடை அனுபவங்கள்,  ஆயில் ஏஜன்ஸி அனுபவங்கள், கெமிக்கல் பேக்டரி அனுபவங்கள் குறித்து இன்னும் சொல்லாதவற்றைச் சொல்வதற்கும், இவையல்லாது முகநூலில் ஏற்கனவே பகிர்ந்த அனுபவங்களும், பகிராத அனுபவங்களும் என்று இன்னும் சொல்வதற்கு இவருக்கு ஏராளமாகவே இருக்கின்றன.


Individual Choice என்ற தலைப்பில் வரும் கட்டுரை இவரது தைரியமான, நேர்மையான எழுத்துக்கு ஒருபதச்சோறு. இரண்டாம் பகுதியில் எனக்கு ஒப்புதல் இல்லை. ஆனால் கட்டுரை சொல்வது போல் தனிவிருப்பை யாரும் கேள்விகேட்க முடியாது. நான் சொல்வது முதல்பகுதி குறித்து. படித்துப் பாருங்கள்.


Child is the Father of the Man போன்ற கட்டுரைகள் மற்றும் குழந்தைகளைப்பற்றி இவர் எழுதும் எல்லாக் கட்டுரைகளும் அறிவின்தளத்திலிருந்து முற்றிலும் விலகி முழுக்கமுழுக்க உணர்வின்தளத்தில் எழுதியவை. உணர்வுத்தளத்தில் எழுதும் எழுத்துக்கள் தி.ஜா எழுதியது போல் பண்ணையார்வீட்டு அம்மா எண்ணெய் குளியலுக்காக நகைகளைக் கழட்டி வைத்து உட்கார்ந்திருப்பதைப்போல் தனியழகு.


ஜோதிடம் கட்டுரையைப் படித்ததும் நினைவுக்கு வந்தது, நான் கல்லூரியில் படிக்கையில்  இவர் என் ஜாதகத்தை அலசி, எனக்கு விபரீத ராஜயோகம் வருவதாகச் சொன்னது. 


மணல் கோடுகள் அனுபவத்தின் காலடித்தடங்கள். அப்படி செய்திருக்கலாம் இப்படி செய்திருக்கலாம் என்பது ஐம்பதைக் கடந்த பெரும்பான்மையினருக்குத் தோன்றும். If ifs and buts were candies and nuts we'd all have a very Merry Christmas. இவரது இந்த நூல், தன் அனுபவங்களைப் பார்வையாளன் கோணத்தில் அதிகம் Judgemental  இல்லாமல் சொல்லிக் கொண்டே போவது.


புத்தகங்களில் கற்பனை கதாபாத்திரங்களுடன் உணர்வுபூர்வமாக நெருங்கி, அவர்கள் சிரிக்கையில் சிரித்து, வேதனைப்படுகையில் வேதனைப்பட்டு அவர்கள் இறந்தால் மனக்கிலேசம் அடைந்து யாருடனும் பேசப்பிடிக்காத வாசகர்களை எனக்குத் தெரியும்.  ஆனால் தன்அனுபவ எழுத்துக்கள் படிக்கும் பொழுதே இது புனைவல்ல என்று நினைவுறுத்திக் கொண்டே இருப்பவை. அதுவே நெருங்கிய நண்பரின் நூலாக இருந்து, அவர் கடந்துவந்த பாதை கற்களாலும், முட்களாலும் நிறைந்திருந்தால்.......

எதுவும் சொல்வதை விட சொல்லாமல் இருப்பதே நல்லது. " காண்பதெல்லாம் மறையுமென்றால் மறைந்ததெல்லாம் காண்பமன்றோ ?"

#தமிழ்கட்டுரைநூல்கள் 


பிரதிக்கு;


B4books யாவரும் பப்ளிஷர்ஸ்

90424 61472

முதல்பதிப்பு பிப்ரவரி 2021

விலை ரூ 190.



Mar 7, 2021

பேராசிரியர் க. அன்பழகன்


கட்சியில் ஈ. வி. கே சம்பத் போர்க்கொடி தூக்கிய போது 'உனக்காவது சொத்து சுகம் இருக்கு, சம்பத். எங்களுக்கு என்ன இருக்கு? ' 

- இப்படி கேட்டவர். 


ஸ்தாபக தலைவர் மறைந்த பின் அவர் மறுகினார் 'என்னை விட வயதில் குறைந்த கருணாநிதியை எப்படி தலைவனாக நான் ஏற்பது?' 


எம். ஜி. ஆர் கட்சியில் கலகம் விளைவித்த போது அன்பழகன் 

'தி. மு. க என்ற பூமாலையில் ரோஜாப்பூ

 எம். ஜி.ஆர் தான் '


ஆனால் அதன் பின்னர் எப்போதுமே கருணாநிதியோடு நீங்காது நிலையாக மாறாமல் நின்றவர் அன்பழகன். 


கருணாநிதியை தலைவராக ஏற்றால் 

என் பொண்டாட்டி கூட மதிக்க மாட்டாளே என்று குழம்பியவர், எம். ஜி.ஆர் கணக்கு கேட்டதற்கு காட்டிய ஆவேசம். 

' என்ன கணக்கு? என் பொண்டாட்டி கூட என்னிடம் கணக்கு கேட்டதில்லை. நீ என்ன கேட்பது? 

இனி வேட்டிய அவுத்து தான் காட்டணும் '


' இரண்டு கதாநாயகர்கள், ஒரு கதாநாயகி, துப்பாக்கி வெடிக்கவில்லை. இதில் என்ன புரட்சி? '

அப்போது எதிர்க்கட்சி வரிசையில் இருந்த 

எம். ஜி. ஆரை கேட்டார். அவர் மீது செருப்பு வீசப்பட்டது.

' சட்ட சபை செத்து விட்டது 'என்று சொல்லி விட்டு          எம். ஜி.ஆர் வெளிறிய முகத்துடன் வெளியேறினார். 


எம். ஜி. ஆரை கடுமையாக சாடிய மற்றவர்கள் தான் கருணாநிதி முதுகில் குத்தி விட்டு 

எம். ஜி.ஆர் பின்னால் போய்ச் சேர்ந்தார்கள். 


கட்சியில் முரசொலி மாறன் பெரும் சக்தி படைத்தவராக, தலைவரின் நிழல் என்பது போக, நிழல் தலைவராக நின்ற போதும் அன்பழகன் கௌரவம் கருதி ரோஷப்பட்டதேயில்லை. 


ஒருவித VRS மன நிலையில் அன்பழகன் தி. மு. க வில் இருக்கிறார் என்று கூட கிண்டல் செய்யப்பட்டிருக்கிறார். மனிதர் அசைந்து விடவில்லை. 


அவருடைய இரண்டாவது திருமணம் பற்றி

 சர்ச்சை எழுந்ததுண்டு. 


எம். ஜி. ஆரை மக்கள் 'வாத்தியார்' என்றார்கள். 

போல, அன்பழகனுக்கு தி. மு. க வினர் 'பேராசிரியர்' பட்டம் கொடுத்தார்கள். 


ஜெயலலிதா சென்ற முறை சட்ட சபையில் இவருக்கான

' பேராசிரியர் 'பட்டத்தை இகழ்ந்து

' ட்யூட்டராக இருந்தார்' என ஏளனமாக ஏகடியம் பேசிய போது 

அன்பழகன் பதிலடி "அன்று யாரெல்லாம்

 என்ன செய்து கொண்டிருந்தார்கள் என்று ஆராய்ந்து பார்க்கலாமா? "


தளபதி ஸ்டாலின் - மாவீரன் அழகிரி 

கலக காட்சிகளிலும் 

மிகு‌ந்த ஜாக்கிரதையாக இயங்கியவர். 


அவருடைய மேடைப்பேச்சில் எப்போதும் தனித்தன்மை இருந்தது.


..