Share

Aug 31, 2020

எம். என். நம்பியார்

 நம்பியார் 'இளமைக்கால புகைப்படம் ஒன்று' பார்த்திருக்கிறேன். 

நம்பியார் பதின்பருவ வாலிபனாக வேட்டி கட்டிக்கொண்டு நிற்கிறார். 

சிவாஜி பன்னிரண்டு வயது சிறுவனாக கன்னத்தில் கை வைத்துக்கொண்டு. 

கூடவே டவுன் பஸ் கண்ணப்பாவும் சின்னப்பையனாக. 

அந்த புகைப்படம் கண்ணப்பா தான் 

எனக்கு காட்டினார். 

மறக்கவே முடியாத புகைப்படங்களில் அதுவும் ஒன்று.


 


எம்.ஜி.ஆர் இரண்டாவது திருமணத்தில் 

கலந்து கொண்ட நடிகர் நம்பியார்.


திரையுலகில் இருவரும் பிரபலமாவதற்கு முன்


இருவரும் எங்கோ ஒரு மலையேறி நீண்ட தூரம் போக வேண்டியிருந்த போது வெய்யிலில் நல்ல நிறமான நம்பியாரின்  உடல் முழுவதும் red patches ஏற்பட்டதை பார்த்து எம்.ஜி.ஆர் பதைத்திருக்கிறார். இது அவருடைய சுய சரிதை 

நான் ஏன் பிறந்தேனில் சொல்லியிருந்தார்.


எதற்கு இதை சொல்ல வேண்டியிருக்கிறதென்றால் இருவரும் சினிமாவில் பிரபலமாகும் முன்னரே

 நல்ல நண்பர்கள்.


 


நம்பியார் நடிக்க வந்த ஆரம்ப காலங்களில் நகைச்சுவை பாத்திரங்கள் செய்தார். 

அப்புறம் வில்லன். வில்லன் என்றால் சாதாரண வில்லன் இல்லை. 

கொடூரமாக வில்லன் பாத்திரத்தில் கொடி கட்டியவர்.


வில்லனாக நடிக்கும்போதே மிஸ்ஸியம்மாவில் காமெடி செய்திருக்கிறார். ரொம்ப பின்னால் ’தூறல் நின்னு போச்சி’


அவருக்குள் இருந்த காமெடியன் பின்னாளில் கூட தலை காட்டிக்கொண்டிருந்தார். கே.சங்கர் இயக்கிய ஒரு பக்தி படத்தில் நிறைய ஸ்லாப்ஸ்டிக் காமெடி செய்திருந்தார்.


வில்லனாக மக்கள் மத்தியில் எந்த அளவுக்கு பெயர் பெற்றார் என்பதற்கு ஒரு உதாரணம்.


எம்.ஜி.ஆர் 1967 தேர்தல் பிரச்சாரம்.

 பரங்கி மலை தொகுதி. ஒரு முதிய பெண்மணி ஒரு குண்டு சோடாவை எம்.ஜி.ஆருக்கு தருகிறார். அதே வேகத்தில் ” கண்ணு, இந்த நம்பியார நம்பாதே, அவன் பார்வையே சரியில்லப்பா. 

அவன் நல்லவனே இல்ல. 

கவனமா இருந்துக்கப்பா.” என்று சொன்னவுடன் எம்.ஜி.ஆர் அந்த வயதான அம்மாவை உணர்ச்சி வசப்பட்டு தழுவிக்கொண்டார். அந்த புகைப்படம் அவருடைய மிக பிரபலமான புகைப்படம். சில நாளில் எம்.ஜி.ஆரை அவருடைய வீட்டிலேயே வைத்து எம்.ஆர்.ராதா சுட்டார்.


நம்பியார் ஒரு வில்லனாக செய்த சாதனைக்கு அந்த கிழவி நிகழ்வு ஒரு சிறந்த விருது போல.


இன்னொன்று


சுகுமாரன் நம்பியார் திருச்சியில் தேர்தலுக்கு நின்ற போது அதிமுகவினர் ஒரு பிரச்சாரம் செய்தார்கள்.


ஒவ்வொரு பகுதியாக செல்லும் போது பெண்களிடம் “ நம்ம தலைவர படங்கள்ள ரொம்ப தொந்தரவு பண்ணுவாருல்ல நம்பியார். அவரோட மகன் தான் இங்க ஓட்டு கேட்கிறார். அவரே அப்படி. இவருக்கு நீங்க ஓட்டு போடலாமா?” என்று கேட்டு சுகுமாரனுக்கு எதிராக பிரச்சாரம் செய்தனர்.


Popular MGR was popular but infamous Nambiar. 


நம்பியாரின் வில்லன் நடிப்பு அவருடைய வாரிசின் அரசியல் வாழ்வில்  கூட இப்படி பாதித்தது.


சுகுமாரன் பள்ளி இறுதி வகுப்பு படிக்கும்போது வேட்டைக்காரன் படம் எடுக்க 

ஒரு வகை உதவி செய்தார்.


எம்.ஜி.ஆருக்கும் நம்பியாருக்குமான கௌபாய் உடைகள், கௌபாய் நடவடிக்கைகள் பற்றி ஃபாரின் மேகசின்ஸ், ஆங்கில படங்களில் உள்ள காட்சிகளை வைத்து விளக்கி உதவியவர். எம்.ஜி.ஆர் இதற்கு ரொம்ப சந்தோஷப்பட்டார். நம்பியாரே இதை ஒரு பேட்டியில் சொல்லியிருக்கிறார்.


 


”நம்பியாருக்கும் எம்பியாருக்கும் கத்தி சண்ட 

எந்த படத்தில?”


இப்படி தான் அப்ப எங்க பக்கத்து வீட்டு அஞ்சு வயசு ராதாக்ரிச்சு அடிக்கடி கேட்டுக்கிட்டே இருப்பான்.


ரெண்டு பேருக்கும் கத்தி சண்டை இல்லாத படங்களுக்கு வர மாட்டேன் என்று 

பெற்றோரிடம் அடம் பிடிப்பான்.


 


இருவரும் கத்தி சண்டை போடும்போது  இரட்டையர்கள் போல தோன்றும்.


குழந்தைகள், சிறுவர்கள்  மனதில் ஆழமாக எம்.ஜி.ஆர் போலவே தவிர்க்கமுடியாமல் நம்பியாரும் அன்று ஆக்ரமித்தார்.


எம். ஜி. ஆர் படங்களில் மட்டுமல்ல. 


ஸ்ரீதர் இயக்கிய 'நெஞ்சம் மறப்பதில்லை' நம்பியாரின் முக்கிய கதாபாத்திரம். 

'சிவந்த மண்' திவான். 


கே. எஸ். ஜியின் 'உயிரா மானமா' 


நம்பியார் பிரமாதமாக நடித்த படங்கள் பட்டியல் போட்டு முடியாது. 


இன்று எல்லோர் மனதிலும் 

நம்பியார் வில்லன் நடிகர் என்றாலும்

 அவர் ரொம்ப நல்லவர் என்று

 ஒரு saintly image ஏற்பட்டிருக்கிறது.


ஐயப்ப சாமிகளின் குருநாதர்.


https://m.facebook.com/story.php?story_fbid=2817468261799955&id=100006104256328

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.