Share

Jan 29, 2020

வ’ச’ந்திகளை பரப்பாதீர்


எவ்வளவோ அதிர்ச்சி காணவும் கேட்கவும் கிடைக்கிறது.
எம்.ஜி.ஆர் யாதோன் கி பாராத் தமிழ்ல
டபுள் ராக்கெட்ல நடிச்சாரு.
சிவாஜி ஆராதனா படத்த நடிச்சுக்குடுத்தாரு.
சரி. இது எதுக்கு இப்ப.
”ஜோசப்” மலையாளப்படம்.

ஜோஜு ஜார்ஜ் என்ற நடிகர் அதில் நடிக்கவில்லை. வாழ்ந்திருப்பார். வாழ்ந்து செத்திருப்பார்.
இப்போ ஒரு வ’ச’ந்தி கேள்விப்பட்டேன். அது வெறும் வ’ச’ந்தியாவே இருந்தா சரி. 
People are quick to believe the bad news.
It is whispered பாலா இந்த படத்தை எடுக்கப்போவதாக.
ஜோஜு ஜார்ஜ் நடித்த பாத்திரத்தில் ஆர்.கே. சுரேஷ்.
நான் தான் சொல்லிட்டேனே. இது வ'ச'ந்தியாவே இருக்கட்டும்.
Gossip dies when it hits the wise person's ears.
அப்படியில்லீங்க. நீங்க கேள்விப்பட்ட விஷயம்
உண்மை தாங்கிறீங்களா?
மலையாளப்படங்கள மலையாளப்படமாவே
வாழ விட்டா என்ன?

Two intelligent teen age girls,

வாலிப சுதந்திர மீறல்
When it's two intelligent teen age girls,
it's quirky,funny and rebellious.
Great Dancer Balaasaraswathy and
Outstanding singer M.S.Subbulakshmi
in their teens.

இந்த புகைப்படம் பாலசரஸ்வதி பற்றி அவருடைய மகளின் கணவர் டக்ளஸ் எம். நைட் எழுதியுள்ள நூலிலேயே உள்ளது.  
டக்ளஸ் தன் நூலில் இந்த புகைப்படத்திற்கு முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார்.
“பாலசரஸ்வதி அவர் கலையும் வாழ்வும்” என்ற நூல்.
தமிழ் மொழிபெயர்ப்பாக க்ரியா ராமகிருஷ்ணன் வெளியிட்டிருக்கிறார். 
புகைப்படத்தின் கீழ் உள்ள குறிப்பு :
பதின்ம வயது தோழிகள் எம். எஸ். சுப்புலட்சுமியும் பால சரஸ்வதியும்
கட்டுப்பாடு மிகுந்த குடும்பங்களிலிருந்து வந்த இந்த இருவரும் தங்கள் சுதந்திரத்தை வலியுறுத்தும் நோக்கத்தில் இந்தப் படத்தை ரகசியமாக எடுத்துக்கொண்டார்கள்.
மேற்கத்திய உடையணிந்தும், சிகரெட் பிடிப்பது போன்ற பாவனையுடனும்.


குசு வந்த சிங்

சந்தோஷம் என்பது ஒவ்வொரு காலத்திற்கும்
  வெவ்வேறாக இருக்கும்.

 குஷ்வந்த் சிங் 90 வயது வாக்கில் தெளிவாகச் சொன்னார்:
 ’குசு விடுவது தான் ஆகச்சிறந்த ஆனந்தம்.
நீண்ட, திருப்தியான குசு விடுகிற பாக்கியம்!
 I do not desire sex;
instead I pray for a long, satisfying fart.
Farting is one of the greatest joys of life.
 Farting now tops my list of life’s pleasures.’

     Art is fart.
 இது ஒரு புறமிருக்க குஷ்வந்த்சிங்குக்கு Fart is art.

குசு வந்த சிங்.

..

     மலச்சிக்கல் உள்ள ஒருவன்
ஒரு பாலத்தின் கீழே உட்கார்ந்து
முக்கி, முக்கி பார்த்திருக்கிறேன்.
ஒரு புழு பூச்சி கூட வரவில்லை.

அந்த நேரம் பாலத்தின் மேல் வந்து ஒருவன் உட்கார்ந்திருக்கிறான். இவன் நிமிர்ந்து பார்க்கவும் அவன் விட்டை போடவும் சரியாய் இருந்திருக்கிறது.

மலச்சிக்கல்காரன் தலையிலேயே தான் பாலத்தின் மேல் இருந்தவன் பேண்ட பீ விழுந்திருக்கிறது.

இவனுக்கு மேலிருந்து பேண்டவன் மேல்
கோபம் வரவில்லை.

பேல மறுக்கும் தன்னுடைய குண்டியை
ஓங்கி ஓங்கி அடித்து அடித்து
மேலே பார்த்து
 “ அது அல்லவோ குண்டி, அது அல்லவோ குண்டி..குண்டின்னா குண்டி அதுவல்லவோ குண்டி!” என்று பாராட்டினானாம்.

’வானத்தில் திரியும் பறவைகளைப் பற்றி
மட்டும் பாடாதீர்கள்.
மலத்தில் நெளியும்
புழுக்களையும் பாடுங்கள்.’

- ஐம்பது வருடத்திற்கு முந்தைய ஒரு புதுக்கவிதை.

Jan 22, 2020

Why do people Move?




Why do people Move? What makes them uproot and leave everything
they have known for a great unknown beyond the horizon ?
The answer is the same the world over:
People move in the hope of a better life.
- Yann Martel’s ”Life of Pi”
இந்த ’லைஃப் ஆஃப் பை’ நாவல் பற்றி 2005ல திருப்பூர் சென்ட்ரல் லயன்ஸ் க்ளப்ல
நான் உரையாற்றியிருக்கிறேன்.
பின்னால படமா வந்ததே.
என்ன? வீடு மாத்திரது கூட எவ்வளவு உளைச்சல்.
செழியனோட ’டு லெட்’ பார்க்கல. எனக்கு பிரமிக்க அந்த படத்தில் என்ன இருக்கிறது?
வீடு மாற்றுவது சம்பந்தமா எவ்வளவு துயரம் இருக்கோ அவ்வளவையும் அளவுக்கதிகமா அனுபவிச்சிருக்கேன்.சொல்லொணா துயரத்த பாத்திருக்கேன். அதனால அந்த படம் பாக்க தோணவே இல்ல.
அடுத்த ஒன்னாம் தேதி வேற வீடு மாறுகிறேன்.
Shifting is a nightmare.
பூனை தன் குட்டிகளை தூக்கிக்கொண்டு தவித்து அலைவதை போல என்பார் கி.ரா.
2015 செப்டம்பர் சென்னை வந்த நான் குடியேறிய வீட்டிலிருந்து அக்டோபர் முதல் தேதியே வேறு வீடு மாற வேண்டியிருந்தது.The Worst suffering.
இதோ இப்போது நான்காவதாக வீடு மாற்ற வேண்டியிருக்கிறது. இந்த ஆலப்பாக்கம் வீடு சற்று ஆசுவாசமானது தான். குடும்ம சூழ்நிலை நிர்ப்பந்தம். இங்கிருந்தும் கிளம்ப வேண்டியுள்ளது.
இங்கு இனி வேலைச் சூழல் இல்லாமல்
முடிந்து போய் விட்டது.
இளைய மகனோடு மருமகளுக்காக பேரக்குழந்தைக்காகவும் வேறு வீடு செல்ல வேண்டியாகிறது.
 கிட்டத்தட்ட ரிட்டயர்ட் லைஃப்.
என்றாலும் சராசரி மனித வாழ்வு அல்ல.                                                                                          நிறைய படிக்க வேண்டியிருப்பவனுக்கு ஓய்வு எங்கிருக்கிறது.
புதிய சூழலுக்கு தயாராவது எனக்கு புதிதல்ல. Recurring event.
உற்சாகத்தை இழந்து விடக்கூடாது. சுகி எவ்வரோ?
ரே ப்ராட்பரி கவிதையொன்று.
I don't know exact verbatim.
நினைவில் இருந்து இங்கே எழுத முயல்கிறேன்.
"Shock, wonder,
Meeting,parting
எல்லா நகரத்திலும்,
கூட்டம் கூடுகிற இடங்களிலும்
கைக்கெட்டும் நெருக்கத்தில்
காணக்கிடைக்கும்
தற்செயல் எனும் ஆச்சரிய ஓடை
கைகளை ஓடைக்குள் செலுத்தும் போது
அற்புதங்கள் அகப்படும்.வசப்படும்.”
...

Jan 21, 2020

காரணச் செறிவு




திருவல்லிக்கேணியில் ஞானக்கூத்தன் இரங்கல் கூட்டத்தில்                         பாலகுமாரனின் பேச்சில் ஒரு ஆச்சரியப்படத்தக்க தகவல் ஒன்று கிடைத்தது. 
அவர் நெக்குருகி நெகிழ்ந்து சொன்னார். “ நான் இன்று சுவையாக எழுதுகிறேன் என்றால் அது ஞானக்கூத்தன் போட்ட பிச்சை.”
நிறைய நாவல்கள் எழுதிய பாலகுமாரனிடம் ஆதங்கத்துடன் “கவிதையெழுதுவதை விட்டுட்ட பார்த்தியா” என்பாராம் ஞானக்கூத்தன்.
பாலகுமாரனின் கவிதைவரிகள் உடனே நிழலாடியது.
“ சவுக்கடி பட்ட இடத்தை நீவிடத்தெரியாக்குதிரை
கண் மூடி வலியை வாங்கும் இதுவுமோர் சுகமென்று
கதறிட மறுக்கும் குதிரையைக் கல்லென்று நினைக்க வேண்டாம்”
பாலகுமாரன் மிகவும் தளர்ந்து கையில் ஊன்றுகோலுடன் வந்திருந்தார்.எழுத்துலக கமலஹாசனாக கொண்டாடப்பட்டவர்!
மிகவும் தளர்ந்து போய் இருந்த அவர் பேசுவதற்காக மேடை ஏற வேண்டி இருந்த வேளை,
தள்ளாடிய பாலகுமாரனை
நான் அவர் கை பிடித்து நடத்தி
மேடையில் ஏற்றி அமர வைத்தேன்.
ஞானக்கூத்தன் பதினைந்து வருடங்களுக்கு முன் திருப்பூர் வந்திருந்தார். சென் ட்ரல் லயன்ஸ் கிளப்பில் அழகான உரை நிகழ்த்தினார்.
அன்று அவர் அங்கு சொன்னதை இந்த திருவல்லிக்கேணி இரங்கல் கூட்டத்தில்
நான் நினைவு கூர்ந்தேன்.
“ராஜநாயஹம் கவிஞர் அல்ல. ஆனாலும் கவிஞர் ஞானக்கூத்தனின் மாணாக்கன் என்று சொல்லிக்கொள்ள முழு உரிமை இவருக்கு உண்டு.”

பாலகுமாரனும் ந.முத்துசாமியும் மறைவதற்கு சில மாதம் முன் ஒரு உணவுக்கூடத்தில் சந்தித்துக் கொண்டார்கள்.

அடுத்தடுத்து சில மாதங்களிலேயே இருவரும் அடுத்தடுத்து மறைய இருந்த தருணம் அது.
இருவருமே TAFE ல் வேலை பார்த்தவர்கள்.
இருவரும் உணர்ச்சி வசப்பட்ட நிலை.
பேராசிரியர் செ.ரவீந்திரன் கூட அப்போது முத்துசாமியுடன் இருந்திருக்கிறார்.
வர்த்தக எழுத்தாளர் பாலகுமாரன் மனம் விட்டு நெகிழ்ந்து முத்துசாமியை கனப்படுத்தி சொல்லியிருக்கிறார்.
“ முத்துசாமி மட்டும் இல்லேன்னா நான் TAFE ல கடைசி வரை க்ளார்க்காவே தான் இருந்திருப்பேன்.”
....
புகைப்படம் உதவி : ரவிவர்மா.
கூத்துப்பட்டறை நடிகர்.
பின்னால் சிரித்துக்கொண்டு நிற்பவர்

புத்தக கண்காட்சியில் ஒரு சில நிமிடங்கள்


ஞாயிற்றுக்கிழமை (19.01.2020)
புத்தக கண்காட்சியில்
ஒரு சில நிமிடங்கள்
பத்மஜா நாராயணன், லீனா மணிமேகலை,
ஷோபா சக்தி, கோணங்கியுடன்.
கோணங்கி ‘என் பேட்டி பாத்தியா?’
மீடியா வெளிச்சத்துல விழுந்துட்டான்.
அதில் சந்தோஷமும் அவனுக்கு இருக்கிறது.
” என் புது நாவல் வந்திருக்கு தெரியுமா?”
ஷோபா சக்தி என்னுடைய லேட்டஸ்ட் பதிவு பற்றியெல்லாம் சொல்லி                                   “ அண்ணன், பாத்தீங்களா..உங்களை எப்போதும்                                                     படித்துக்கொண்டே தான் இருக்கிறேன்.”
மூன்றாவது முறையாக சந்திக்கிறேன். விகடன் விருது விழா ஒன்றில், எலியட்ஸ் பீச் ஸ்பேசஸில் ஒரு தடவை ஏற்கனவே ஷோபா சக்தியை பார்த்ததுண்டு.
கவிஞர் மஹி ஆதிரனை ( டெபுடி சூப்ரிண்ட் ஆஃப் போலீஸ்) பத்மா நாராயணன் காட்டி “ மஹி தான் என்னை பத்து வருடங்களுக்கு முன் ராஜநாயஹத்தை படிக்க சொன்னவர்.”
பத்து வருடமாக நான் நன்கறிந்திருந்த மஹி ஆதிரனை நேரில் முதல் முறையாக பார்த்தேன். சிலிர்ப்பாய் இருந்தது.
இப்போது கமுதியில் இருக்கிறார்.
மஹி ஆதிரன் அவசரமாக கிளம்பி விட்டார்.
அவர் இந்த புகைப்படத்தில் இல்லை என்பது வருத்தமாக இருக்கிறது.
லீனா மணிமேகலையை அன்று தான் பார்த்தேன்.

நாற்பதாண்டு கால நட்பு


’நாற்பதாண்டு கால நட்பு; என்ற வார்த்தையை முன்னாள் தி.மு.க தலைவர் பயன்படுத்தினார். அ.தி.மு.க ஸ்தாபக தலைவருடன் தனக்குடனான நட்பு நாற்பதாண்டு கால நட்பு என்று அவர் சொன்னபோது நாற்பதாண்டு காலம் என்பது எண்ணிப்பார்க்க ரொம்பவே மலைப்பாக இருந்தது.
இப்போது எனக்குமே அப்படி நாற்பதாண்டு கால நட்பு சாத்தியப்பட்ட போது ’ஐயய்யோ, காலம் தான் எவ்வளவு குறுகியது’ என்று ஆச்சரியமாயிருக்கிறது.
’சினிமா எனும் பூதம்’ நூலை
ரவி என்ற A.K. ராமச்சந்திரனுக்கும்
சரவணன் மாணிக்க வாசகத்திற்கும்
சமர்ப்பணம் செய்திருக்கிறேன்.
நாற்பதாண்டு கால நட்பு.

இன்று ரவிக்கு பிறந்த நாள்.
’அதே கண்கள்’ படத்தில் ”பொம்பள ஒருத்தி இருந்தாளாம், பூதத்தைப் பார்த்து பயந்தாளாம்” பாட்டில் வருகிற வார்த்தைகள்
“சொட்டிஜா சொட்டிஜா சொட்டிஜா, சொன்னவா சொன்னவா சொன்னவா சொன்னவா, தாக்கெரஸ் தாக்கெரஸ், ஜாவா டக்குனகோ டக்குனகோ” சௌராஷ்ட்ரா மொழி!
நான் காலேஜில் படிக்கும்போது என் நண்பன் A.K.ரவியிடம் அர்த்தம் கேட்டிருக்கிறேன்.
அவன் சொன்னது இன்னும் நினைவில் இருக்கிறது.
சொட்டிஜா – விட்டுப்போ
சொன்னவா – விடமாட்டேன்(டி)
தாக்கெரஸ் – பயமாருக்கு
ஜாவா டக்குனகோ – போடி, பயப்படாதே
அன்றும் இன்றும்
அற்புதமான, உன்னதமான ஒரு நண்பன் ரவி.


35 வருடங்களுக்கு முன் எடுத்த போட்டோவில் எனக்கு பின்னால் சிரித்துக்கொண்டு ரவி.
ஆனந்தமான, கொண்டாட்டமான,
சுக சௌகரிய வாழ்க்கை ரவியுடையது.
மிக மோசமான பொருளாதாரா சரிவு, பள்ளங்களை கண்டவன் நான்.
மதுரை அமெரிக்கன் கல்லூரியில் படிக்கும்போது எனக்கு கிடைத்த நட்பு.
வகுப்பு தோழன்.
ரவி பிறந்த நாள். ஜனவரி 21.
என்னுடைய பிறந்தநாள் ஆகஸ்ட் 21.
இருவருமே கும்ப லக்னம்.
பிறந்த தேதியை வைத்து, லக்னத்தை வைத்து ஜோதிடம் சொல்வது எவ்வளவு அபத்தம் என்பதற்கு மாறுபட்ட எங்கள் இருவரின் வாழ்க்கையே உதாரணம். ஜோதிடமே பொய் தான்.
நானும் ரவியும் சேர்ந்திருக்கும் புகைப்படம் தினமணி மூலம் ஒரு முறை பிரபலமானது. என்னை தொடர்ந்து படிப்பவர்கள் அறிவார்கள்.
https://rprajanayahem.blogspot.com/…/10/untoward-incident.h…

Jan 14, 2020

கோதை நாச்சியார்


இரண்டு வருடங்களுக்கு முந்தைய
‘ஆண்டாள் அரசியல் விவகாரத்தின் போது
 என் எதிர்வினை.

ஆண்டாளே

We have an awful time to be alive.

பி.ஜே.பி mindset வெளிப்படையாக Sex workerக்கு எதிரானது.
விளிம்பு நிலை மனிதர்களை கொண்டாடும்
மனநிலை கிடையாது.
கெட்டார் தம் வாயில் எளிதில் கிளைத்து விடும். பட்டார் தம் நெஞ்சை விட்டு பல நாள் அகலாது.

கண்ணன் தூது வந்த போது விதுரன் வீட்டில் தங்கினான் என்பதற்காக துரியோதனன் கொந்தளித்து
 “ protocol தெரியாதா? நீ எப்படி உன் வீட்டில் கண்ணனை  உபசரிக்கலாம். சக்கரவர்த்தியாகிய என் வீட்டில் தானே கிருஷ்ணன் சாப்பிட வேண்டும்? தேவடியாள் மகனே “ எனும்போது விதுரன் தன் வில்லை முறித்துப்போடுகிறான்.

திட்டமிட்டு அரசியல் செய்து விதுரன் குடிசைக்கு போய் அதிதி நாடகமாடிய கல் நெஞ்சக்காரன் கண்ணனே உடைந்து போய்,
விதுரனை “தாசி மகன்” என்று துரியோதனன் சொன்னதற்காக கண்ணீர் விடுகிறான்.

பி.ஜே.பிக்காரர்களும், வைரமுத்துவும்  “ நதிமூலம், ரிஷிமூலம் பார்க்கக்கூடாது” என்பதை
சௌகரியமாக மறக்கிறார்கள்.
Proud people breed sad sorrows.

ஒரு இஸ்லாமியக் கவி பாடினாள் ‘தேவடியாள் என் தாயாக வேண்டும். நான் தேவடியாள் வீட்டு நாயாக வேண்டும்’
எப்பேர்ப்பட்ட உன்னத மனநிலை.
 இவர்கள் இகழும் இஸ்லாத்திலிருந்து இப்படியும் ஒரு குரல் வந்துள்ளது.

சீதா, சீதா என்று மீண்டும் மீண்டும் சொல்லும்போது தாசி என்று மாறும்.
தாசி, தாசீ எனும் போது சீதா என்று ஒலிக்கும்.

தமிழில் ஆண்டாள் தான் first ever feminist.
Women liberator.

இந்த விஷயங்களெல்லாம் நிச்சயமாக ஹெச்.ராஜாவுக்கும் பி.ஜே.பிக்கும் சிலாக்கியமானதல்ல.

’என் தடமுலைகள் மானிடவர்க்கென்று பேச்சுப்படில் வாழ்கிலேன்’ என்றவள் ஆண்டாள்.
”இனித்தான் எழுந்திராய் ஈதென்ன பேருறக்கம்.” குறியீடாக பெண்ணினத்தை தட்டி எழுப்பியவள்.
திருப்பாவை படித்தாலும், பாடக்கேட்டாலும் சிலிர்க்கும்.

ஆண்டாள் எப்பேர்ப்பட்ட மகத்தான கவிஞர்.
Literature will take over the function of religion in the future.

தெய்வ நம்பிக்கை இப்போது இல்லையென்றாலும் எந்த அதிர்ச்சி ஏற்பட்டாலும்
என் வாயில் உடனே
“ஆண்டாளே, ரங்கமன்னாரே”
என்ற வார்த்தைகள் வரும்.
தொட்டில் பழக்கம்.
நான் சாகும்போது கூட அனிச்சையாக
 “ஆண்டாளே” என்று சொல்லி உயிர் விட நேரலாம்.

....

ஜாதி அரசியல்

Obsession is the single most wasteful human activity,
because with an obsession you keep coming back and
back and back
to the same question and never get an answer.
- Norman Mailer

ஆண்டாள் பிரச்னை மத அரசியலாகத்தானே இருந்தது.

பாரதிராஜா எழுந்து வைரமுத்துவுக்கு ஆதரவு தெரிவிக்கிறார்.
Nepotism.

அவர் சொல்வதன் Subtext :
“ நாங்கள்ளாம் தேவர் ஜாதி.
நாங்க சிங்கம்டா.
ஆயுதத்த கீழ வச்சிருந்தோம்.
திரும்ப எடுத்தோம்னா நாறிடும்டா. எங்களுக்கெல்லாம்
எந்திரிச்சிச்சுன்னு வச்சுக்க..
மடக்கறதுக்கு இந்தியாவிலேயே
ஆளு கிடையாதுடா..”

’வேதம் புதிது’ படத்தில் பாலுத்தேவரை சின்னப்பையன் கேட்பானே. “ பாலு உங்க பேரு. தேவர் என்ன பட்டமா?”

என்னா படம் காமிச்சாரு அன்னக்கி.
இன்னக்கி இப்படி ஜாதிய சொல்லி மிரட்டுறாரு.

மதவெறி ஹெச்.ராஜாவை இப்படி
ஜாதி அரசியலாலா கண்டிப்பது?

Comedy of Errors.

திருமாவளவன் இதற்கு எதிர்வினையாக பாரதிராஜாவை கண்டித்தாரா?

“ ஹெச்.ராஜாவை உள்ள தூக்கி போடுங்க”ன்றார்.
ஹெச்.ராஜா பரமசிவன் கழுத்துல இருக்கற பாம்புன்றதால தான இந்த சண்டியர்த்தனம்.

அந்த சண்டியர்த்தனத்தை பாரதிராஜா எதிர்க்கிற வல்லமை பெற்றவரா?
ஜாதி அரசியல் சரியான கவசம் என நினைத்து விட்டார்.

“Convictions are more dangerous foes of truth than lies.”
― Friedrich Nietzsche

நாற்பத்தைந்து வருடங்களுக்கு முன் எம்.ஜி.ஆர் மதுரை திமுக மாநாட்டில் ’அலை ஓசை’ பத்திரிக்கையை தூக்கி வீசி “ராணுவத்தை சந்திக்கத் தயார்” என்று மத்திய அரசுக்கு சவால் விட்ட அபத்தம் மாதிரி தான் பாரதிராஜாவின் சவடாலும்.

எம்.ஜி.ஆரோடு பாரதிராஜாவை
ஒப்பிட்டு விட்டேன் என்பதல்ல.
 ’ராணுவத்தை சந்திக்க தயார்’ என்ற
வார்த்தைகளோடு தான்
 பாரதிராஜாவின் Subtextஐ ஒப்பிடுகிறேன்.

.....

Jan 10, 2020

Go with the flow

பஞ்ச பாண்டவர் எத்தனை பேர் என்பது கேள்வி.
ஒருத்தன் ’கட்டில் காலு’ போல ’மூனு பேர்’னு சொல்லி ’ரெண்டு விரலை’ நீட்டி ஆட்டிக்காட்டினான்.
இதில் எத்தனை தப்பு?
அவன் விளக்கமாக ’கட்டில் கால்’
எனும்போதே தப்பு.
நாலுன்னு சொல்வான்னு பாத்தா கட்டில் காலு போல மூனு பேர் என்கிறான்.
அதை இன்னும் விரிவாக தன் இரண்டு விரல்களை விரித்து செயல்முறை விளக்கம்.
அப்ப ரெண்டு பேர்ங்கிறான்.
நாட்டில் பல பல Citizenship act ’பப்பள பள பள’ விளக்கங்களை கேட்கும்போது
இந்த 'கட்டில் கால் போல மூனுபேர்னு சொல்லி ரெண்டு விரலைக்காட்டுறது' தான் ஞாபகத்துக்கு வருகிறது.
மக்கள் பாவம்.
'ஆடு வளக்கறவன நம்பாது.
அறுக்கறவன தான் நம்புமாம்'னு சொலவடை.
கொஞ்சம் விபரமானவர்களாக தங்களை நினைத்துக்கொள்ளும் படித்த நடுத்தர வர்க்கத்தவர்களுக்கு ’வேடிக்க பாக்கற வேல’ தான் அதிகபட்ச சாத்தியம்.
இவர்களுக்கு ஓஷோ சொல்லியிருக்கிற விஷயம் ஒன்றை சுட்டிக்காட்டினால் மேலும் குற்றவுணர்வின்றி விச்ராந்தியாக இருப்பார்கள்:
” நீ எதுவும் செய்ய வேண்டாம்
என்று அஷ்டவக்கிரர் கூறுகிறார்.
எது நடந்து கொண்டிருக்கிறதோ அது நடந்து கொண்டிருக்கிறது.
அதனோடு நீ ஐக்கியமாகி விடு.
சும்மா பார்த்துக்கொண்டிருப்பதன் மூலம் சாட்சித்தன்மையில் இருப்பதன் மூலம்
நீ முக்தி பெறுகிறாய்.
எந்தப்பயிற்சி முறைகளிலும் சிக்கி விடாதே.”
Even if you feel guilty, go with the flow.
In the future, the priest is not needed,
neither is the psychoanalyst needed.
Both those professions are anti-human;
But they can go
only if man is freed of guilt;
otherwise they cannot go.
Even if you feel guilty, go with the flow.
- Osho
அடைய வேண்டிய அந்தஸ்தை இழந்து, தகுதிக்கேற்ற அங்கீகாரத்தையும் இழந்து பொருள்,பொன் இழந்தவர்கள்
தங்களைப் பற்றிய சுய தரிசனமாக
‘வலிமையின்றி சிறுமையில் வாழ்வான் காலம் வந்து கை கூடுமப்போதிலோர் கணக்கிலே புதிதாக விளங்குவான்’ (கண்ணன் என் அரசன்) என்ற பாரதியின் வரிகளை வாய்விட்டுச்சொல்லிக்கொள்ளலாம்.
பொறுமையா உன் வேலைய செஞ்சிக்கிட்டே இரு.
உன் மதிப்பு புரியும்போது பெரும்புகழ் கிடைக்கும்.
”கண்டதெல்லாம் கடிய விலையானால் இந்திராணிப் பட்டு
இருந்த விலையாகும்.”
’ஒவ்வொரு நாள் காலையிலும் நம்பிக்கைகளை அரற்றியவாறு அறுந்து தொங்கும் மனதின் நாண்களை இழுத்துக் கட்டினாலும் மாலைக்குள் அது தொய்ந்து போய்விடுகிறது’ என்று சுந்தர ராமசாமி ‘குழந்தைகள் பெண்கள் ஆண்கள்’ நாவலில் சொல்லும் யதார்த்தம் இன்றைய லோகாயுத சிக்கல்கள் மூலம் தெளிவுபடுகிறது.
வீட்டு வாசலில் கோலம் போடுவதற்கு கூட
சாஸ்திரம் இருக்கிறது,
போடுகிற கோலம் தெற்கு நோக்கி முடியக்கூடாதாம்.
ஆனால் இன்று தலையாய முக்கியப்பிரச்னைகளில் கூட ’அள்ளித்தெளித்த அவசரக்கோலம்’.

கோலம் விஷேச அரசியல் அந்தஸ்து பெறுகிறது.
’புளித்த மாவு’ கூடத்தான் இலக்கிய அந்தஸ்து அடைந்தது.
மிச்சல் ஃபூக்கோ சொல்வதை சொல்லி முடிக்கலாம்: “ஒன்றை எழுத ஆரம்பிக்கும்போது
அதன் முடிவில் என்ன சொல்லப்போகிறீர்கள் என்பது உங்களுக்குத் தெரிந்திருந்தால்
அதை எழுதுவதற்கான தைரியம் தான்
உங்களுக்கு வந்து விடுமா?
முடிவு என்னவென்று தெரியாமல் இருக்கும்போது தான்                                                      இந்த விளையாட்டுக்கு அர்த்தமுண்டு.”

Jan 5, 2020

காலேஜுக்கு குதிரையில


”ராஜநாயஹம் காலேஜுக்கு குதிரையில வருவான்”
- ட்ராட்ஸ்கி மருது

நான் மதுரை அமெரிக்கன் கல்லூரியில் படிக்கும் போது இப்படியும் செய்திருக்கிறேன் என்பதை இன்று நினைவு கூர ஓவியர் மருது இருக்கிறார்.

ஞாபக அடுக்கில் இருந்து இதை எடுத்து நானும் பார்க்கிறேன்.
A blundering boy.
அவர் காலேஜ் ஆஃப் ஆர்ட்ஸில் படித்தவர்.
கோரிப்பாளையம், நரிமேடு தான் ட்ராட்ஸ்கியின் பால்யம் துவங்கிய இடம்.
கோரிப்பாளையம் கங்காணி மருதப்பன்
அவருடைய அப்பா.
அமெரிக்கன் கல்லூரி சுவாரசியங்களை அண்ணனுக்கு சொல்ல அன்று எவ்வளவோ பேர்.
திலகர் மருது என் மிகப்பெரிய ரசிகன்.
என் கல்லூரி கால சாகசம் இப்படியெல்லாம் கூட என்பதை அருண்மொழி மரண நிகழ்வின் போது ட்ராட்ஸ்கி மருது சொல்லியிருக்கிறார்.
ராஜா சந்திரசேகர் என்னிடம் கேட்டார்.” காலேஜுக்கு குதிரையில வருவீங்களாமில்ல”
ப்ரகதிஷ் ரவிச்சந்திரன் என்னைப்பற்றி ட்ராட்ஸ்கி மருது ‘காலேஜுக்கு குதிரையில வருவான்’ என்று சொல்லும் போது தானும் அங்கே அப்போது இருந்ததாக தெரிவித்தார்.
இரண்டு வருடங்களுக்கு முன் மருதுவின்
தங்கை மகன் திருமணத்திற்கு போயிருந்த போது அங்கே கல்லூரி சீனியர் ஒருவர்
’ராஜநாயஹம் இளமை குறும்பு’ ஒன்றை எல்லோர் முன்னும்
போட்டு உடைத்து விட்டார்.
நான் கூட ட்ராட்ஸ்கியின் வித்தியாசமான திருமணப் பத்திரிக்கையை ரொம்ப வருடங்கள் பத்திரமாக வைத்திருந்தேன்.
அந்த கல்யாண பத்திரிக்கை
சிக்கனமான
இரண்டே வரியில்-
“எனக்கு திருமணம். தங்களை அன்போடு அழைக்கிறேன்.”
அண்ணன் ட்ராட்ஸ்கியின் அப்பா என் சினேகிதர் என்று நான் எப்போதும் பெருமிதத்தோடு சொல்வேன்.

Jan 2, 2020

சுராஜ் வெஞ்சாரமூடு, சௌபின் ஷாஹிர்

மலையாள நடிகர் சுராஜ் வெஞ்சாரமூடு நடித்த இரண்டு படங்கள் பார்த்த போது திகைப்பாய் இருக்கிறது.
ஆண்ட்ராய்ட் குஞ்சப்பன்- பாஸ்கரன்
டிரைவிங் லைசன்ஸ் - குருவில்லா
இரண்டு படங்களிலும் நடித்திருப்பது ஒரே ஆளா?
பாஸ்கரனாக நடித்திருப்பதும், பிரேக் இன்ஸ்பெக்டர் குருவில்லாவாக வருவதும்.
இது தான் Transformative acting.
நம்ப முடியாதபடி ஆளே மாறியிருக்கும் விஷயம்.
சௌபின் ஷாஹிர்
கும்பளாங்கி நைட்ஸ்,
அம்பிலி,
ஆண்ட்ராய்ட் குஞ்சப்பனிலும் தான்.
சௌபின் ஷாஹிர் தனித்துவமான அற்புத நடிகன்.
எப்பேர்ப்பட்ட நடிகர்கள்.
சௌபின் ஷாஹிர், சுராஜ் வெஞ்சாரமூடு

இவர்கள் தான் கலைஞர்கள். நடிகர்கள்.
வெகு இயல்பான நடிகர்களான இவர்கள் அடுத்தடுத்த படங்களில் சாதிக்க இனி கடும் சவால் மிக்க பாத்திரங்களை எங்கனம் கண்டடைவர்?
An actor need to be vulnerable.
இந்த ஆண்ட்ராய்ட் குஞ்சப்பன் படத்தில் வரும் அப்பாவும் பிள்ளையும் பாத்திரங்களுக்கு இங்குள்ள
ஜாம்பவான்களை பொருத்திப் பார்க்க முடியவில்லை.
பழைய நடிகர்களை கூட நினைத்துப்பார்த்தால்..
ம்ஹும். மிடில.
சான்ஸே இல்லை.
சுராஜ் மலையாளத்தில் காமெடி நடிகராம்.
ஒரு நகைச்சுவை நடிகரால் ஆண்ட்ராய்ட் குஞ்சப்பனில் பாஸ்கரனாக நடிக்க முடிகிறது.
Though this be madness,
yet there is a method in it.
- Shakespeare in Hamlet
தமிழ் நகைச்சுவை நடிகர்கள் யாராலும் பாஸ்கரன் பாத்திரத்தை நினைத்துப் பார்க்க முடியுமா?
டிரைவிங் லைசன்ஸ் குருவில்லாவாக நிற்க முடியுமா?
கம்மட்டி பாடம் வினாயகன். இன்னொரு கலைஞன்.
மலையாள நடிகர்கள் தரையில் கால் பதித்து இயங்குகிறார்கள்.