Share

Apr 18, 2017

புனஷ்காரம்! அனுஷ்டானம்!


இரண்டாவது மாடியில் குடியிருக்கிறோம். இதுவரை வாழ்நாளில் பார்க்காத கடுமையான தண்ணீர் தட்டுப்பாடு. கடந்த இரண்டு வாரமாக அடிப்படை விஷயங்களுக்கே,பாத்திரங்கள் கழுவ, துணி துவைக்கக் கூட படும் துயரம் சொல்லி முடியாது. சொல்லொணாத் துயரம்.
குடும்பமே பொறியில் அகப்பட்ட எலியின் நிலை.

ஈவு இரக்கமற்ற வீட்டு சொந்தக்கார அம்மணி.
வீடு காலி செய்வது என்ன அவ்வளவு சுலபமான விஷயமா?

காலையில் குளிப்பதற்காக கூத்துப்பட்டறைக்கு போகவேண்டியிருந்தது.

ஸ்ரீ ஐயப்பா நகர் மெயின் ரோட்டில் கொய்யாப்பழம், சப்போட்டாப்பழம் ஒரு தள்ளு வண்டியில் வைத்து பழக்காரர் ஒருவர் கிளம்ப ஆயத்தமாகிக்கொண்டிருக்கிறார்.
அரைக்கிலோ கொய்யாப்பழம், அரைக்கிலோ சப்போட்டாப்பழம் வாங்கினேன்.

ஐம்பது ரூபாயை கொடுத்தேன். முதல் போணி. தள்ளுவண்டிக்காரர் ரொம்ப பக்திமான். ஐம்பது ரூபாயை வானத்தில் உயர்த்தி ஒரு முறை சுற்றினார். மீண்டும் ஐம்பது ரூபாயை கண்களில் ஒற்றினார். பின் மீண்டும் வானத்தைப் பார்த்து உரக்க கூவினார்: “ முருகா! முதல் போணி.”
பழங்களை என் கையில் அவர் கொடுக்கும் போதும் “ முருகா!” என்றார்.

 இந்த வியாபாரியை குஷிப்படுத்த உடனே,உடனே முடிவு செய்தேன்.

பழங்களை கையில் வாங்கியவுடன் நான் கண்மூடி வானத்தைப்பார்த்து
“ ஆண்டாளே! பெருமாளே!” என்று கூவினேன்.
பின் பழங்களை கையில் வைத்து இன்னொரு கையையும் இணைத்து கும்பிட்டு நல்ல சத்தமாக ஒரு கூப்பாடு – “ ஆண்டாளே! பெருமாளே! இன்னைக்கு இவருக்கு அமோகமா வியாபாரம் நடக்கணும். ஆண்டாளே! ரங்கமன்னாரே!”

பக்கத்தில் நடந்து கொண்டிருந்தவர்கள் ஆண்கள்,பெண்கள், பள்ளிக்கூட குழந்தைகள் கூட நின்று எங்கள் வியாபார பரிமாற்றத்தை, கூட்டுப் பிரார்த்தனையை கவனித்தார்கள். அடுத்த தள்ளுவண்டி வியாபாரிகள் கூட.
“ இதுல இவ்வளவு விஷயமா இருக்கு! ”


............

http://rprajanayahem.blogspot.in/2012/09/blog-post_21.html

http://rprajanayahem.blogspot.in/2008/06/blog-post_23.html
 

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.