Share

Feb 21, 2016

Not every friendship is meant to last a lifetime


’வால்மீகத்தில் ஒரு சுலோகம் இருப்பதாகச் சொல்வார்கள், நட்பு கொண்டாடுவது லேசு – அதைப் பரிபாலனம் செய்வது அவ்வளவு சுலபம் இல்லை’ என்று கி.ரா எங்கோ, எப்போதோ எழுதியிருந்தார்.

”புது சினேகம் என்பது சரியாக வேகாத சோறு போல” என்பார் தி.ஜானகிராமன்.

”நாய் கிட்ட கொஞ்சம் பழக ஆரம்பிச்சா மூஞ்சிய நக்குமாம்” – இது ’என் தங்கை’ படத்தில் வேலைக்காரியாக நடிக்கும் எம்.என்.ராஜம் பேசும் டயலாக். எம்.ஜி.ஆர், ஈ.வி.சரோஜா, நரசிம்ம பாரதி நடித்த படம் ’என் தங்கை’.

கூடா நட்பு என்பது கிடக்கட்டும்.
நல்ல நட்பு எல்லாம், நல்லவர்கள் நட்பு எல்லாம் கூட எப்படி எப்படியோ சிதைந்து போய் விடுகிறது.கிட்டத்தட்ட நாற்பத்தைந்து வருடங்களுக்கு முன் (’கசடதபற’ பத்திரிக்கைக் காலம்) ஞானக்கூத்தன் அறையில் ந.முத்துசாமி, அசோகமித்திரன், எஸ்.வைத்தீஸ்வரன் ஆகிய ஜாம்பவான்கள், இன்னும் பலரும் கூடி பேசுவது வழக்கம்.
ஞானக்கூத்தனும் ந.முத்துசாமியும் மாயவரத்திலேயே வகுப்புத் தோழர்கள். அசோகமித்திரனின் ’தண்ணீர்’ நாவலுக்கு முத்துசாமி சார் முன்னுரை எழுதியிருக்கிறார்.

வெங்கட் சாமிநாதன் “ ஜெயகாந்தன், கே.பாலசந்தர் இருவருமே பாமரத்தனத்துக்கு கௌரவமான கலைப்பூச்சு” என்று எழுதியிருந்தார்.

ஒரே ஒரு முறை ஞானக்கூத்தன் அறைக்கு வந்த ஜெயகாந்தன் சீற்றத்துடன்
 “ வெங்கட் சாமிநாதன் என்ன பெரிய சுன்னியா?” என்று கொந்தளித்து விட்டுப் போய் விட்டார். அப்போது ந.முத்துசாமி அங்கு இல்லை. மறு நாள் அங்கு வந்த முத்துசாமி “என்னய்யா? அந்தாளு இப்படி இங்க வந்து பேசிட்டுப்போயிருக்காரு. இத தட்டிக்கேக்காம விட்டிட்டீங்க?” என்று கேட்டிருக்கிறார்.
 முத்துசாமி சாரின் ஆதங்கம் - ‘ஒரு ஸ்டார் வந்தவுன்ன எல்லாரும் விழுந்துட்டாங்க.. சாஸ்டாங்க நமஸ்காரமே பண்ணிட்டாங்க!’

இதில் ஆரம்பித்த Polimics! சங்கிலியாய் தொடர்ந்த கடும் சர்ச்சையில் வெங்கட்சாமிநாதன், அசோகமித்திரன், ந.முத்துசாமிக்கு இடையிலான நல்ல நட்பு முற்றிலுமாக அன்று முறிந்து போய் விட்டது.

என்ன? ஏது என்பதெல்லாம் முத்துசாமி சாருக்கு இன்று ஞாபகம் இல்லை.சில வருடங்களுக்கு முன் வெ.சா.வின் மனைவி இறந்த விஷயத்தைக்கூட தனக்குச் சொல்லவில்லை என்று முத்துசாமி வருத்தப்பட்டார்.
செல்லப்பாவின் ’எழுத்து’பத்திரிக்கையில் வெங்கட் சாமிநாதன் எழுதிய கட்டுரைகள் மூலம் தான் ’நாடகம்’ பற்றிய தெளிவு தனக்கு ஏற்பட்டதாக  இப்போதும் சொல்பவர் முத்துசாமி.

 இப்போது சமீபத்தில் சென்ற நவம்பரில் வெங்கட் சாமிநாதன் மறைந்த போது கூத்துப்பட்டறையில் டிசம்பர் மாதம் ஒரு இரங்கல் கூட்டத்திற்கு முத்துசாமி சார் ஏற்பாடு செய்திருந்தார். க்ரியா ராமகிருஷ்ணன் கலந்துகொள்வதாக இருந்தார். ஆனால் சென்னை வெள்ளத்தில் இந்த இரங்கல் கூட்டமும் அடித்துச்செல்லப்பட்டு விட்டது. கூட்டம் நடத்தமுடியாமல் போனதில் முத்துசாமி சாருக்கு மிகவும் வருத்தம்.
Not every friendship is meant to last a lifetime. What does 
last forever is the pain when that person is gone.

’அசோகமித்திரனுடன் சமாதானமாகப்போக வழியில்லையா?’ என்று ஏக்கத்துடன் முத்துசாமி சாரிடம் கேட்டேன்.
முத்துசாமி சார் பதில் ’நாங்க இப்ப என்ன சண்டையா போட்டுகிட்டிருக்கோம்? நட்பு கெட்டுப்போச்சி… பேச்சு வார்த்தை கிடையாது.. அவ்வளவு தான்.’
………………………….’நடை’ பத்திரிக்கை 1960களின் கடைசியில் சி.மணி செலவு செய்து நடத்தினார். மிக பிரமாதமான வடிவில் வெளி வந்தது. முத்துசாமி சாரின் ‘காலம் காலமாக’ நாடகம் 1969ல் நடையில் தான் பிரசுரமானது.
 எட்டு இதழ்கள் தான் வந்தது.
 நடை எட்டாவது இதழில் இதழின் வெற்றுத்தாள்களை நிரப்ப அந்த நேரத்தில் ஏதோ ஒரு content ஐ போட்டார் முத்துசாமி. வி.து.சீனிவாசன் எப்படி இந்த மாதிரி செய்யலாம் என்று பிரச்னையை கிளப்பி விட்டார்.
சி. மணி நடை பத்திரிக்கையையே நிறுத்தி விட்டார்.
சி.மணி இறக்கும் வரை முத்துசாமியுடன் நட்பு நீடித்திருக்கிறது.
.......................


27.03.1983ல் க்ரியாவில் ’நடை’ இதழ்களின் பழைய நான்கு பிரதி, ’கசடதபற’ ஒரு ஐந்து பிரதிகள் விலைக்கு கிடைத்தது. அன்று அங்கு எஸ்.வி.ராஜதுரை, சி.மணி, க்ரியா ராமகிருஷ்ணன் ஆகியோரை சந்தித்தேன். சி.மணி தன்னுடைய ‘வரும் போகும்’ கவிதைத்தொகுப்பில் கையெழுத்திட்டு தந்தார்.

2003ல்திருச்சியில் இருந்து திருப்பூருக்கு போக நேர்ந்த போது ‘ பார்த்துப் பார்த்து சேர்த்திருந்ததெல்லாம் கழுதைப்பொதியாக சேர்ந்திருக்க, லக்கேஜை குறைக்க வீட்டின் கொல்லையில் பழைய கணையாழி, நடை, கசடதபற, ஞானரதம், ’மேலும்’ இதழ்களையெல்லாம் கொல்லைப்புறத்தில் வைத்து விட்டு திரும்பிப்பார்க்காமல் ஜாமான்கள் ஏற்றிய வேனில் குடும்பத்துடன் கிளம்பினேன். திரும்பிப்பார்த்தால் இலக்கிய இதழ்கள் எல்லாம் குழந்தைகள் போல ”எங்களை விட்டு விட்டுப்போகிறாயே” என்று கதறுவது போல காதில் கேட்குமே.
Sometimes you have to let go of what you can't live without.

சென்னைக்கு சென்ற செப்டம்பர் மாதம் குடும்பத்துடன் வர நேர்ந்த போது ஒரு ஆயிரம் புத்தகங்கள்,
காலம் காலமாக சேர்த்து வைத்திருந்த இரண்டு சூட்கேஸில் இருந்த நூற்றுக்கணக்கான கர்னாடக சங்கீத, இந்துஸ்தானி சங்கீத இசை கேசட்கள் எல்லாவற்றையும் தூக்கி வீசிவிட்டு கிளம்ப நேர்ந்து விட்டது.( " தேர்ந்த இசைத்தொகுப்புகளைச் சேகரம் பண்ணி வைத்திருப்பவர் ராஜநாயஹம்” என்று கி.ராஜநாராயணன் 'கதை சொல்லி’பத்திரிக்கையில் எழுதியிருக்கிறார்.)

You never really know a man until you stand in his shoes and walks around in them
- a popular quote of Atticus in " To kill a mocking Bird "
( 1962 movie)


க. நா.சு சொல்வது போல “எல்லாமே ரொம்ப முக்கியம் தான். ஆனால் எதுவுமே அவ்வளவு முக்கியமில்லை.”

……………………………………………………………………

 http://rprajanayahem.blogspot.in/2009/03/blog-post_13.html

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.