Share

May 12, 2013

எஸ்.எஸ்.ராஜேந்திரன்

  
பெரியகுளம் தலைமை தபால் நிலையத்தில் நான் வேலை பார்த்துகொண்டிருந்த போது ஒரு நாள் இலட்சிய நடிகர் S.S. ராஜேந்திரனின் உடன் பிறந்த தம்பி பாஸ்கர் தபால் ஆபீஸ் வந்து என்னிடம் "தம்பி , இன்று மதியம் 12 மணிக்கு வீட்டிற்கு வந்து விடுங்கள். அண்ணன் மதுரையிலிருந்து கிளம்பி இங்கே வருகிறார் .போன் இப்ப வந்தது ." என்றார். எனக்கு சந்தோசம். சென்னையிலிருந்து மதுரைக்கு ஏதோ நிகழ்ச்சிக்காக வந்தவர் பெரியகுளத்தில் இருக்கும் அப்பாவையும் தம்பியையும் பார்க்க S.S.R வருகிறார். அவரை சந்திக்க எனக்கு ஒரு வாய்ப்பு.
மதியம் 12 மணிக்கு ஆபீஸ் PERMISSIONபோட்டு விட்டு பாஸ்கர் வீட்டுக்கு போய் விட்டேன்.  எஸ்.எஸ்.ஆருடைய தகப்பனார் சேடபட்டி சூரிய நாராயண தேவருக்கு அப்போது வயது ஒரு 75 இருக்கும். என்னிடம் நன்றாக பேசுவார்.

ஓவியர் ட்ராட்ஸ்கி மருதுவின் தம்பி திலகர் மருது என் பால்ய நண்பன். ஓவியர் மருது ஒரு முறை பெரியகுளம் வந்திருந்த போது எஸ்.எஸ்.ஆருடைய இன்னொரு தம்பி கதிர் வேல் (போலீஸ் அதிகாரியாக இருந்தவர்) மகன் பாண்டியனுடன் என் அறைக்கு வந்து என்னிடம் பேசிக்கொண்டிருந்திருக்கிறார்.
உண்மையில் ஓவியர் மருது வின் அப்பா மருதப்பனும் ( இவர் ஒரு ஞானி ) நானும் மதுரையில் தல்லாகுளத்தில் ரோட்டில் சந்தித்தால் கூட இரண்டு மணி நேரம் பேசி கொண்டிருப்போம். அவர் தான் எனக்கு என் பதினெட்டு வயதில், ரஸ்ஸல் எழுதிய “WHY I AM NOT A CHRISTIAN” நூலை படிக்க கொடுத்தவர். மருது வீட்டில் ஒரு நூலகம் உண்டு. "இயேசுவின் மரணம் காஷ்மீரத்திலே " என்ற ஒரு விசித்திரமான நூல் கூட அவரிடம் இருந்து வாங்கி நான் படித்திருக்கிறேன். S.S.R க்கு இவர் சித்தப்பா. அதனால் தான் பெரியகுளத்தில் பாஸ்கர் எனக்கு அறிமுகம். ஓவியர் மருதுக்கு S.S.R அண்ணன் முறை.

விஷயத்திற்கு வருகிறேன். பாஸ்கர், அண்ணன் S.S.R வரப்போகிறார் என்ற பதற்றத்தில் இருந்தார்.  நான் பாஸ்கர் கேட்பதற்காக HITS OF S.S.RAJENDRAN ஆடியோ கேசெட் கொடுத்திருந்தேன். கேசெட்டை போட்டு கேட்பதற்காக என் டேப் ரெக்கார்டரையும் கொடுத்திருந்தேன். எஸ்.எஸ்.ஆருக்காக டி.எம்.எஸ் பாடிய பாடல்கள் தனி சிறப்புடையவை. அந்த பாட்டு எல்லாம் கேட்கும் போதே எஸ்.எஸ்.ஆர் அதற்கு பாவத்துடன் வாயசைப்பதை உணர முடியும். "ரொம்ப நல்லா இருந்தது. இது மாதிரி ஒரு டேப் ரெக்கார்டர் ஒண்ணு வேணும் " என்று சூரிய நாராயண தேவர் சொல்லிகொண்டிருந்தார். சூரிய நாராயண தேவர் குழந்தை போல.
ஒரு போன் வந்தது அப்போது . பாஸ்கர் ஏமாற்றத்தோடு என்னிடம்
" அண்ணன் அவசரமாக சென்னை திரும்பி போகிறாராம். அடுத்த முறை பெரியகுளம் வருகிறேன் என்று சொல்லி விட்டார் தம்பி " என்றார்.
அன்று தவறிபோனவாய்ப்பு ! காலம் ஓடி விட்டது.
அதன் பிறகு இன்று வரை இலட்சிய நடிகரை நான் பார்த்ததில்லை! பார்க்க வாய்ப்பு கிடைத்ததே இல்லை.


இந்த விஷயங்களை ஓவியர் மருது இங்கே திருப்பூரில் ஒரு நிகழ்ச்சிக்கு இரண்டு வருடம் முன் வந்திருந்த போது நான் மத்திய அரிமா சங்க மேடையிலேயே பேசினேன். எம்.எல்.ஏ. கோவிந்தசாமி அவர்கள் மருது பற்றி நான் பேசிய விஷயங்கள் பிரமிப்பாய் இருப்பதாக குறிப்பிட்டார்.


எஸ் எஸ் ஆர் திமுக உடைந்த போது திமுக வில் தான் இருந்தார். அவர் மகன் ராஜேந்திர குமார் அதிமுக வில் உடனே சேர்ந்து விட்டார்.
அப்போது எம்ஜியாரை தாக்கி எஸ் எஸ் ஆர் ஒரு அறிக்கை விட்டார்.
 http://i1.ytimg.com/vi/T8zinD5mwmc/hqdefault.jpg

" அன்றைய தினம் 'ராஜா தேசிங்கு' படத்தில் என்னுடன் திருமதி பத்மினி அவர்கள் நெருங்கி நடிக்கக்கூடாது என்பதற்காக எம்ஜியார் செய்த சூழ்ச்சிகளை நாடு மறக்குமா?"

துக்ளக் சோ வுக்கு இந்த மாதிரி விஷயம் கிடைத்தால் நையாண்டிக்கு கேட்க வேண்டுமா ?
" எஸ் எஸ் ஆர் சார் ! கேட்கவே பதறுகிறதே.நெஞ்சு கொதிக்கிறது . இப்படியெல்லாம் அநியாயமா ? எப்பேர்ப்பட்ட அநீதி இது? இதையெல்லாம் இந்த நாடு மறந்தால் இந்த நாட்டிற்கு விமோசனம் ஏது? இந்த நாடு நன்றி கொன்ற நாடு ஆகிவிடாதா ?" என்று செமையாக கலாய்த்திருந்தார்.

எஸ் எஸ் ஆர் அவர்களுக்கும் எம்ஜியார் அவர்களுக்கும் பெரிய பனிப்போர் நடந்திருக்கிறது.

எம் ஆர் ராதா - எம்ஜியார் துப்பாக்கி சூடு நடந்த அந்த நேரத்தில் விஜய குமாரியின் தங்கை திருமணம் நடந்ததாம். அந்த திருமண நிகழ்வில் உரையாடலின் போது எஸ் எஸ் ஆர் சொன்னாராம் ' இப்போ கூட எம்ஜியாரிடம் துப்பாக்கி கொடுத்து யாரை யாவது சுட சொன்னா அவர் எம் ஆர் ராதாவை சுட மாட்டார் . எஸ் எஸ் ஆரை தான் சுடுவார் '

 

ஐம்பதுகளில் இருந்து திரை ,திமுகஅரசியல் இரண்டிலும் எஸ் எஸ் ஆர் முக்கிய பங்கு வகித்தவர்.

திண்டுக்கல் பாராளு மன்ற உறுப்பினர்  ராஜாங்கம் இறப்பதற்கு முந்திய தினம் மதுரை திலகர் திடலில் நடந்த கூட்டத்தில் பேசும்போது சொன்னார்.  
' எனதருமை நண்பன் எஸ் எஸ் ராஜேந்திரனை திரையுலகில் இருந்து விரட்டியதே இந்த எம்ஜியார் தான் .'
இரவுகூட்டம் முடிந்த அன்று சில மணி நேரங்களிலேயே ராஜாங்கம் மாரடைப்பால் இறந்து விட்டார்.

சில நாளில் பத்திரிகை செய்தி ” ராஜாங்கம் சமாதியில் ராஜேந்திரன் கண்ணீர் "


திண்டுக்கல் இடைதேர்தலில் அண்ணா திமுக வுக்கு முதல் வெற்றி .

தொடர்ந்து அடுத்து மூன்று வருடங்களில் திமுக அரசு டிஸ்மிஸ் செய்யப்பட்டு மிசா கொடுமைகளில் சிக்கிய போது எஸ் எஸ் ஆர் திமுக தலைவர் பதவியில் இருந்து கருணாநிதி விலக வேண்டும் என்று போர்க்கொடி தூக்கினார். செயற்குழுவில் கலந்து கொள்ள அழைக்கப்பட்டு கடுமையாக தாக்கப்பட்டார். பின்னால் ம.தி.மு. க விற்குப் போய்விட்டு மீண்டும் தி.மு.கவிற்குத் திரும்பிய  மு கண்ணப்பன் தான் எஸ் எஸ் ஆரை விரட்டி விரட்டி தாக்கினார். அவருடைய கார், மூக்கு கண்ணாடி நொறுக்கப்பட்டது .இந்த இடத்தில் கொஞ்சம் திரும்பிப்பார்க்க வேண்டும் .எம்ஜியார் கட்சியை விட்டு விலக்கப்பட்டதற்கு திமுக கூறிய காரணம் ' பொதுக்குழுவில் பேசவேண்டிய விஷயங்களை பொதுக்கூட்டத்தில் பேசினார்'
- பொதுக்குழுவில் எம்ஜியார் பேசியிருந்தால் உயிர் பிழைத்திருப்பாரா?

கோர்ட்டில் வக்கீல் எஸ் எஸ் ஆரிடம் ' அன்பகத்தில் அன்று நடந்த சம்பவம் நினைவிருக்கிறதா ?' என கேட்ட போது எஸ் எஸ் ஆர் ' மறக்க முடியுமா'
என்கிறார் . கோர்ட்டில் அமர்ந்திருந்த கருணாநிதி கண்ணாடியை கழட்டி கண்களை துடைத்து கொள்கிறார்.

திமுக விலிருந்து எஸ்.எஸ்.ஆர் விலக்கப்பட்ட போது வந்த பதிவு தபாலில் கூட அவர் ' எஸ்.எஸ் ராஜேந்திரன், தி.மு.க’ என்று தான் ஒப்பமிடுகிறார்.

வேறு வழியில்லாமல் அண்ணா திமுக வில் இணைந்து விட்டார்!

பின்னர் ஆண்டிப்பட்டி யில் பொதுத்தேர்தலில் எம் எல்ஏ வாக அதிக வாக்கு வித்தியாசத்தில் ( அகில இந்திய அளவில் ) எம்ஜியார் செல்வாக்கில் வெற்றி பெறுகிறார்.
எம்ஜியார் அடுத்த தேர்தலில் அமெரிக்கா வில் நோயாளியாய் இருந்த போது இவருக்கு சீட்டு மறுக்கப்பட்ட போது சேடப்பட்டி தொகுதியில் அதிகாரப்பூர்வ வேட்பாளரை ( சேடபட்டி முத்தையா)எதிர்த்து படு தோல்வியடைந்து டெபாசிட் இழக்கிறார்.இந்த அளவில் எஸ் எஸ் ஆரின் அரசியல் வாழ்வு கிட்டத்தட்ட முடிவடைந்து விட்டது.

ஆனால்அதன் பிறகு திருநாவுக்கரசு கட்சி, அதன் பின் அந்த கட்சி அண்ணா திமுக வில் இணைந்த போது போய் கூட்ட நெருக்கடியில் தள்ளாடி கீழே விழுந்து வேதனையுடன் ' நேரம் , நேரம் ' என்று வாய் விட்டு சொன்னது,
2006 சட்ட மன்றத் தேர்தலில் மீண்டும் ஜெயலலிதாவை சந்தித்து அண்ணா திமுகவில் இணைந்தது எல்லாம் பேச வேண்டிய விஷயங்கள் அல்ல.

ஆனால் உண்மையிலேயே
' நாடு மறக்குமா ' என்று சுட்ட வேண்டிய நிகழ்வு ஒன்று.
ராஜ மான்ய ஒழிப்பு தீர்மானம் பாராளுமன்றத்தில் எஸ் எஸ் ஆர் வயிற்று வலி (!)காரணமாக ஒட்டு போடாததால் ராஜ்ய சபாவில் தோல்வியடைந்த நிலையில் 1971ல் இந்திரா காந்தி இந்திய பாராளுமன்றத்தை கலைத்துவிட்டு இடைதேர்தலை அறிவித்த நிகழ்வைத்தான்!

................



 

May 1, 2013

P.B.ஸ்ரீனிவாஸ்

            https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgq71ax95MuB9oSn0zLWOPSQbYX2zTHE3CYsXnS0ieWnjB29x3bn3MILoK-G1fPr2K1_tiXSVKxIGZ6GbsxAwPZd2eAGEetjtSEIWDSCXJC4QHDYQ7M1K3uA0Eif8R_Ye9si1RtinNoRts/s200/PB+Sreenivas.jpg


’பாடும் குரலில் உள்ளது பேச்சின் கவிதை’ எனும் பைரனின் உறுதிப்பாடு தான் இவர் பாடல்களில் வெளிப்பட்டது.
கர்னாடக சங்கீத அறிவு என்பதே கொஞ்சமும் இல்லாமல் அவர் குரல் வெளிப்படுத்திய சுநாதம், சுஸ்வரம் எல்லையற்ற ஆச்சரிய சாதனை.
 கனிவு, இனிமை, மென்மை, சுகம், சுத்தம், நேர்த்தி என்று நம் நெஞ்சில் தேன்மழையாய், பொழிந்த,தென்றலாய் வருடிய சுகிர்த கானம் P.B.ஸ்ரீனிவாஸின் பாடல்கள்.
PBS என்பதை விரித்தால் Play Back Singer.
பல மொழிகளில் பாடியவர். முன்பு எப்போதும் ஒரு எம்.ஜி.ஆர் பாணி தொப்பியுடன் இருந்தார். சென்ற பல ஆண்டுகளில் மைசூர் தலைப்பாகை. 
அப்போதும் இப்போதும் சட்டை பாக்கெட்டில் நிறைய பேனாக்கள். பாடல்கள் இயற்றக்கூடிய சாகித்ய கர்த்தா.

பாடிய எல்லாப்பாடல்களுமே பின்னனிப் பாடகருக்கு மாஸ்டர் பீஸ் என்று அமைந்து விடுவது பூர்வ ஜென்ம சுகிர்தம்!
 ஒரு கால கட்டத்தில் மார்க்கெட் இழந்து ஸ்டுயோக்களில் சும்மா சுற்றிக்கொண்டிருந்தார் என்பது சினிமாவின் அபத்த சூழல்.
அவர் மகத்தான சாதனை நிகழ்த்திய 1960களில் கூட இவர் கொடி தான் முழுக்கப் பறந்தது என்று கிடையாது. ஆனால் பாடக்கிடைத்த வாய்ப்புகள் முழுக்க பசும்பொன்னாக பரிமளித்தது. இத்தனைக்கும் தமிழ் உச்சரிப்பு சுத்தம் என்று சொல்ல முடியாது. மழலையான அழகு!
’கண் படுமே கண் படுமே நீ வெளியே வரலாமா’ பாடல் ’Gun படுமே Gun படுமே’ என்று கூட காதில் விழுந்திருக்கிறது.

பல்லவிகளில் அவர் குரல் தெளிந்த நீரோடையாய் வெளிப்பட்டது. சில பாடல்களில்  சரணங்களில் அவர் குரல் நுழையும். அப்போது அந்தப் பாடல் உடனடியாக உச்ச மேன்மையை எய்தி விடும். An Angel’s Lyrical Call!
“ தன் கண்ணனைத் தேடுகிறாள்!
மனக்காதலைக் கூறுகிறாள்.
இந்த அண்ணனை மறந்து விட்டாள்……
இந்த மன்றத்தில் ஓடி வரும் இளம் தென்றலைக் கேட்கின்றேன்!”

“ வான் பறக்கும் கொடியினிலே, மீன் பறக்கும் மதுரையிலே
தான் பறந்து ஆட்சி செய்யும் தளிர் மணித் தென்றல்……”
பொதிகை மலை உச்சியிலே புறப்படும் தென்றல்”

“ நாளை வருவான் நாயகன் என்றே நல்லோர்கள் சொன்னாரடி!
நாயகன் நானும் ஓலை வடிவில்……………..
ஆடையைத் திருத்தி, மாலைகள் தொடுத்து ……..
செந்தூர் முருகன் கோவிலிலே ஒரு சேதியை நான் கேட்டேன்! ”

“ பட்டு வண்ணச் சேலை கட்டி முத்தம் சிந்தும் நெல்லம்மா!
பருவம் வந்த பெண்ணைப் போலே நாணம் என்ன சொல்லம்மா!....
ஆறோடும் மண்ணில் எங்கும் நீரோடும்..”

ஏ.எம்.ராஜா இவருக்கு சீனியர். இசையமைப்பாளராகவும் பல ஹிட் பாடல்கள் தந்தவர். ஆனால் குரலின் தரம் என்பதைப் பொறுத்தவரை, தங்கம் போல உரசிப்பார்த்தால் பி.பி.ஸ்ரீனிவாஸை விட மச்சம் கம்மியானவர்.
காதல் பாடல்கள், டூயட் பாடல்கள் ஸ்ரீனிவாஸ் குரலில் குழைவும் தண்மையும் இணைந்து ஜ்வலித்தன.
”காற்று வந்தால் தலை சாயும் நாணல்!
காதல் வந்தால் தலை சாயும் நாணம்.”
”பூஜைக்கு வந்த மலரே வா
பூமிக்கு வந்த நிலவே வா”

காதல் சோலா பாடல்கள்
“காலங்களில் அவள் வசந்தம்
கலைகளிலே அவள் ஓவியம்”

”காதல் நிலவே கண்மணி ராதா
நிம்மதியாக தூங்கு
கனவிலும் நானே மறுபடி வருவேன்
கவலையில்லாமல் தூங்கு ”

“ நேற்று வரை நீ யாரோ நான் யாரோ
இன்று முதல் நீ வேறொ, நான் வேறோ ”

“உன்னழகைக் கண்டு கொண்டால்
பெண்களுக்கே ஆசை வரும்”


தத்துவப்பாடல் என்றால்
’புரியாது, புரியாது வாழ்க்கையின் ரகசியம் புரியாது
அறிந்தவர் வாழ்வில் துயரேது”

”சின்னச்சின்னக் கண்ணனுக்கு என்ன தான் புன்னகையோ…
பூவிருக்கும் நெஞ்சினிலும் முள்ளிருக்கும் பூமியடா!
பொல்லாத கண்களடா, புன்னகையும் வேஷமடா!
நன்றி கெட்ட மாந்தரடா, நானறிந்த பாடமடா!...”

’சுமை தாங்கி’ என்ற ஒரே படத்தில் இரண்டு தத்துவப்பாடல்கள்!
”மனிதன் என்பவன் தெய்வமாகலாம்
வாரி வாரி வழங்கும்போது வள்ளலாகலாம்”

”மயக்கமா, கலக்கமா
மனதிலே குழப்பமா
வாழ்க்கையில் நடுக்கமா”

பல வருடங்களுக்கு முன் சென்னை அமெரிக்கன் சென்டெரில்  ஹாலிவுட் நடிகை கோல்டி ஹான் நடித்த  Steven Spielburg இயக்கிய The Sugarland Express என்ற நகைச்சுவை படம் என்னால்  இன்று வரை மறக்க முடியாது. ஏனென்றால் எனக்கு மிகவும் பிடித்த சினிமா பின்னணி பாடகர்  பி பி ஸ்ரீநிவாஸ்  தற்செயலாக எனக்கு அடுத்த சீட்டில் அமர்ந்துThe Sugarland Express’படத்தை பார்த்தார் என்பதால்.

 "காதல் நிலவே !கண்மணி ராதா! நிம்மதியாக தூங்கு" பாடல் என் Favorite song! கல்லூரி காலங்களில் ,அதன் பின் கூட பல திருமண மேடைகளில் ஆர்கெஸ்ட்ராவில் ஒரு நூறு தடவையாவது பாடியிருக்கிறேன். அமெரிக்கன் கல்லூரி மரத்தடி, வைகையாற்று மணல், பூங்காக்கள் இவற்றில் 'நண்பர்களுக்காக இந்த பாடலை சிலநூறு தடவை பாடியுள்ளேன். இந்த "காதல் நிலவே " பாடல் எங்காவது கேட்கும்போது என் ஞாபகம் வருகிறது  என நண்பர்களும் உறவினர்களும் இன்றும் கூட சொல்கிறார்கள்.

பி பி ஸ்ரீநிவாஸ் பாடிய "காதல் நிலவே !கண்மணி ராதா! நிம்மதியாக தூங்கு" பாடல் என் Favorite song என்பதை நான் அவரிடமே அன்று அமெரிக்கன் சென்டரில் படம் ஆரம்பிக்கும் முன் சொன்ன போது புன்னகையுடன் ரொம்ப சந்தோசமாக " Thank You!Thank You!"என்றார்.


ரொம்ப காலம் முன்னதாக பி.பி.ஸ்ரீனிவாஸின் மகன் ஒருவர் ஒரு பத்திரிக்கையில் குறிப்பிட்ட ஒரு விஷயம்.
பி.பி.எஸ் மகன் கன்யாகுமரியில் அதிகாலை இருட்டில் விவேகானந்தர் பாறைக்கு செல்வதற்காக  படகில் செல்கிறார். கடல் நடுவில் நல்ல இருட்டில், ஏகாந்த அமைதியான சூழலில் விவேகானந்தர் பாறையிலிருந்து பி.பி.எஸ் பாடிய பக்திப்பாடலொன்று அப்போது ஒலித்திருக்கிறது. இவருக்கு சிலிர்ப்பு. “ அந்த நேரத்தில் அவருக்கு மகனாகப் பிறந்தவன் நான் என்ற பெருமிதம் எனக்கு ஏற்பட்டது!”

அவருக்கு தமிழ்த் திரை வாய்ப்புகள் முடிந்து விட்ட பின்னும், ஃபீல்ட் அவுட் என்ற நிலையிலும் அவருடைய பாடல்கள்
இனிக்கும் இளமை படத்தில் “ மாலை மயங்கினால் இரவாகும்
இளம் மங்கை மயங்கினால் உறவாகும்”

”தென்றலே நீ பேசு” – கடவுள் அமைத்த மேடை

”தோல்வி நிலையென நினைத்தால்
மனிதன் வாழ்வை நினைக்கலாமா?” – ஊமை விழிகள்

’நாளைய செய்தி’ என்ற பிரபு நடித்த படத்தில் ஒரு பாடலின் சரணத்தில்
“ உந்தன் கருங்கூந்தலை ஒரு பாய் போலவே
நீ விரித்தாலென்ன? சுகம் கொடுத்தாலென்ன?”

இயக்குனர் செல்வராகவனின் ’ஆயிரத்தில் ஒருவன்’ படத்தில் ”பெம்மானே”

விஜய் டி.வி. நிகழ்ச்சி ஒன்றில் இவர் அரங்கில் நுழையும்போது ’காலங்களில் அவள் வசந்தம்’ பாடலின் பின்னனி இசை ஒலிக்கிறது. முதுமையின் தளர்ச்சி தெரிய நடந்து வருகிறார். அரங்கில் அமர்ந்திருக்கும் மற்றொரு முதியவர் எம்.எஸ்.விஸ்வநாதன் எழுந்து இவரை நோக்கிச் செல்கிறார். இருவரும் நேருக்கு நேர் நெருங்கிய நிலையில் இசையமைப்பாளர் விஸ்வநாதன் சாஸ்டாங்கமாக பின்னனி பாடகர் பி.பி.ஸ்ரீனிவாஸின் காலில் விழுந்து நமஸ்கரிக்கிறார்.
சத் குரு!
அந்த நிமிடத்தில் என் கன்னத்தில் இருபக்கமும் கண்ணீர் வழிந்து கொண்டிருந்தது.

Once in a while, A consistency comes forward that is both sublime and foolish!
இந்த வார்த்தைகளை 'அரசியல்' துவங்கி எந்த துறையிலும் கலை,இலக்கியம், இசை, நடிப்பு என்று எந்த துறையிலும் குறிப்பிடத்தக்க சாதனை புரிந்த பலரைப் பற்றி எண்ணி பார்க்கும்போது சொல்ல வேண்டியிருக்கும்.
இந்திய த்திரை  பின்னணி பாடகர்களில்
 
முழுமையான பி பி ஸ்ரீநிவாஸ்,கிஷோர்குமார் பாடல்கள் பற்றி மட்டுமே மேற்கண்ட மேற்கோளை பிரயோகிக்க முடியாது.

…………………………………………………………………………..
Prathivadi Bhayankara Sreenivas

(22 September 1930 – 14 April 2013)






Apr 26, 2013

எம்.ஜி.வல்லபன்



எம்.ஜி.வல்லபன் பத்திரிக்கையாளர். சினிமாப் பாடலாசிரியர். ”மீன் கொடி தேரில் மன்மத ராஜன் ஊர்வலம் போகின்றான்” பாடலை எழுதியது வல்லபன் தான். ’ஃபிலிமாலயா’ சினிமாப்பத்திரிக்கையாசிரியராயிருந்தார். அதில் ரொம்பப் பரபரப்பான சந்திரபாபுவின் ’மாடி வீட்டு ஏழையின் கதை’யை எடிட் செய்து எழுதியவர்.

ஃபிலிமாலயாவின் எடிட்டராயிருக்கும்போதே பின்னால் ’தைப்பொங்கல்’ என்ற ஒரே ஒரு படத்தை இயக்கினார்.
எம்.ஆர். ராதிகா, பட்டாளத்து விஜயன், ராஜேஷ் ஆகியோர் நடித்த படம்.
”பனி விழும் பூமலரில் பாவை நீ கண் மலர்ந்தாய்” என்ற பாடல் ராஜேஷுக்கும் ராதிகாவுக்கும். இளையராஜா இசை.
தயாரிப்பாளர் சரியில்லாத மனிதர்.
’தைப்பொங்கல்’ படம் utter flop!
மிக மோசமான இயக்கம். இத்தனைக்கும் வல்லபன் மீது அப்போது ரொம்ப எதிர்பார்ப்பு இருந்தது.

...............

’ராசுக்குட்டி’ படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்த சமயத்தில்  பாக்யா’ ஆஃபிசில் அந்தப் பத்திரிக்கையில் அப்போது வேலை பார்த்துக்கொண்டிருந்த எம்.ஜி. வல்லபனைப் பார்த்த போது சொன்னேன்.
” உங்களுக்கும் எனக்கும் ஒரு சின்ன சம்பந்தம் இருக்கிறது.”
அவருக்குப் புரியவில்லை. நீங்கள் எடுத்த ’தைப்பொங்கல்’ படத்தில் ராதிகாவின் வீட்டில் தியாகராஜ பாகவதரின் பாடல் ரேடியோவில் ஒலிப்பது போல வரும் காட்சியில் பயன் படுத்தப்பட்ட கேஸட் என்னுடையது தான்! அதை நீங்கள் திருப்பித்தரவில்லை.” என்று சிரித்தவாறு சொன்னேன். அவருக்கு முகத்தில் தெளிவு ஏற்பட்டு “ஆமாம்! எனக்கு நினைவிருக்கிறது. அதை டப்பிங்கில் உபயோகப்படுத்திய பின் தொலைந்து போய் விட்டது.” என்றார்.

அந்த நேரத்தில் MKT ஆடியோ கேஸட்டை இழந்தது ரொம்ப வருத்தமாகத்தான் இருந்தது. தைப்பொங்கல் படத்தின் டப்பிங்கில் பயன்படுத்துவதற்காக அந்தப் படத்தில் நடித்த மற்றொரு நடிகரிடம் நான் இந்தக் கேஸட்டைத் தரும்போது ரொம்ப ஸ்டிரிக்டாக ’கட்டாயம் பத்திரமாகத் திருப்பித் தந்து விட வேண்டும்’ என்று கறாராகச்சொல்லியிருந்தேன்.
 காடையைக் காட்டில் விட்டால் திரும்பப் பிடிக்கவா முடியும்?







Apr 18, 2013

அப்பா.. என் அப்பா

    
                                      அப்பா.... ....
என் அப்பா செத்துப்போய் விட்டார்....
                                      ஏப்ரல் 9ம் தேதியன்று...............

இறப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன் எடுக்கப்பட்ட புகைப்படம் இது.

தாயன்பை விடவும் தகப்பனின் ஆளுமையும் அன்பும் மகத்தான எல்லையை தொடக்கூடியது.

எதிர்மறையாக சுகுமாரன் எழுதிய அப்பா பற்றிய கவிதை நினைவுக்கு வருகிறது.
புதுமைப்பித்தனுக்கு மறுமணம் செய்துகொண்ட அப்பாவுடன் சீரான உறவு இருந்ததில்லை. 

ஜெயகாந்தன் அப்பா ஆஸ்பத்திரியில் இறந்த செய்தியை சாவகாசமாக வீட்டுக்கு வந்து சாப்பிட்டு விட்டு ஓரு தூக்கம் போட்டு எழுந்து அத்தையிடம் சொன்னதும் ,பின் சில மாதங்களுக்கு பின் இரவு தூக்கம் விழித்து "அப்பா அப்பா " என்று கதறி அழுதார் என்பதும் நினைவுக்கு வருகிறது .

 "அப்பா" ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமாக தோற்றமளிக்கிறார். மறக்க முடியாத மற்ற சில அப்பாக்கள்

1.கநாசு வின் அப்பா 

2 . சுந்தர ராமசாமியின் அப்பா.

3. அசோகமித்திரனின் அப்பா (அப்பாவின் மரணம் பற்றி எவ்வளவு எழுதியிருக்கிறார் !)

4. ந. முத்துசாமியின் ஏழாவது வயதில் மறைந்த அப்பா



5. காலச்சுவடு கண்ணனின் அப்பா ( அப்பாவுக்கு சலிக்காமல்,தொடர்ந்து,விடாமல் கண்ணன் திவசம் கொடுத்துக்கொண்டே,கொடுத்துக்கொண்டே ..திவசம் கொடுத்துக்கொண்டே இருக்கிறார் என்று பலரும் சலிக்கிறார்கள்.இருக்கட்டுமே. எனக்கு சந்தோசம் தான் .அப்படிப்பட்ட அப்பா! அப்படி ஓரு அபூர்வமான பிள்ளை கண்ணன்!)

பலவருடங்களுக்கு முன் புதுவையில் பிரபஞ்சன் ஓரு நாவல் -" மகாநதி " எழுதும்போது என்னிடம் சொன்னார். அப்போது அவருக்கு அப்பாவுடன் பேச்சு வார்த்தை கிடையாது. மனஸ்தாபம் !பாரதி வீதி அப்பா வீட்டில் பிரபஞ்சன் மாடியில் குடும்பத்துடன் குடியிருந்தார். "மகா நதி " நாவல் அவருடைய அப்பாவைப்பற்றி ! அப்பா மதுக்கடைகள் நடத்தியவர். ஆனால் ஒரே மனைவி தான் அவருக்கு.பிரபஞ்சனின் அம்மா ! புதுவை கலாச்சார சூழலில் மதுக்கடை முதலாளிகள் பல தாரங்கள் உள்ளவர்களாய் இருப்பது தான் இயல்பு. அப்பா எப்படி பல திருமணம் செய்யாமல் இருந்தார்! இந்த ஆச்சரியம் தான் தன்னை " மகாநதி " நாவலை எழுத தூண்டியதாக பிரபஞ்சன் புதுவையில் என்னிடம் கூறினார்.

.....................


Persona என்ற இங்க்மார் பெர்க்மன் படத்தில் ஒரு வசனம்.“ Life is trickled in everywhere and you are forced to react.”

பாரதி சொன்னது – “ மூட நெஞ்சே
தலையிலிடி விழுந்தால் சஞ்சலப்படாதே
ஏது நிகழினும் நமக்கேன் என்றிரு
கவலைப்படுதலே கருநரகம்
கவலையற்றிருத்தலே முக்தி ”
நெஞ்சம் துவளாதிருத்தல் சுகம் என்றும் பாரதியால் எழுதி விட முடிகிறது.

……

A few dark clouds appear on my horizan.
Make my bed softly for I am sick.

Am I too old to hunt up another job? A horse! a horse! my kingdom for a horse!
………..........................







 The thankless position of the father in the family -- the provider for all, and the enemy of all.The most unsung, unpraised, unnoticed, and yet one of the most valuable assets.....





The storm of feelings that accompanies my father’s death. The grief caused by the loss of my father….








......................................