Jun 18, 2024

இத கேளுங்க


1988ம் ஆண்டில் ஒரு எழுத்தாளரின் முதல் சிறுகதை தொகுப்பு காவியா வெளியீடு. 
கோவை வேலாயுதம் என்னிடம் அதன் முதல் பிரதியை  நல்ல தொகைக்கு நான் வாங்க வேண்டும் என்று கேட்டுகொண்டார். 

கோவை ரெட் கிராஸ் பில்டிங்கில் நடந்த அந்த புத்தக வெளியீட்டு விழாவில் அந்த நூலின் 
முதல் பிரதியை பத்து மடங்கு தொகை கொடுத்து காவியா சண்முக சுந்தரத்திடம் இருந்து பெற்றுக்கொண்டேன். 
அந்த நிகழ்வில் புவியரசு, சிற்பி ஆகியோர் 
கலந்து கொண்டனர். 
கூட்டம் முடிந்ததும் பலரும் 
என்னை சூழ்ந்து கொண்டனர். 

காவியா சண்முக சுந்தரம் அன்று பெங்களுர் பஸ் ஏறும்போது சொன்னார் ." இந்த விழாவுக்கு வந்ததில் எனக்கு மகிழ்ச்சியான விஷயம்                                                        ராஜநாயஹம் என்ற நல்ல மனிதரை
 சந்தித்தது தான் "

அந்த சிறுகதை எழுத்தாளர் நெகிழ்ந்து போய் அவருடைய முதல் சிறுகதை தொகுப்பின்
 முதல் பிரதியை நான் வாங்கி 
அந்த நிகழ்ச்சியில் உரை நிகழ்த்தியதையும் பாராட்டி ஒரு கடிதம் எழுதினார்.

அதன் பிறகு இந்த எழுத்தாளர் தன்னுடைய இரண்டாவது சிறுகதை நூல்
 கோவை வேலாயுதம் வெளியிட இருப்பதாக சொன்னார். 

மணிக்கொடி சிட்டி ( சி என் அண்ணாதுரையின் வகுப்பு தோழர் ) அவர்களிடம் தன் சிறுகதை தொகுப்புக்கு முன்னுரை வாங்கி தர சொன்னார். 

நான் அதற்காக பழனியிலிருந்து வந்து கோவையிலிருந்த சிட்டியிடம் அந்த எழுத்தாளரை ஆட்டோவில் அழைத்து போய் அறிமுகப்படுத்தி அவரது இரண்டாவது சிறுகதை தொகுப்புக்கு அவரை முன்னுரை தர சொல்லி வேண்டினேன். 

எனக்காக அவருக்கு நான் கேட்டுகொண்டதற்காக முன்னுரை எழுதி தந்தார்.

விஜயா பதிப்பகம் வேலாயுதத்தையும் நான் தான் சிட்டிக்கு அறிமுகப்படுத்தினேன். 

ஒரு விஷயம். சாஷ்டாங்க நமஸ்காரம் எப்படி செய்ய வேண்டும் என்பதை அன்று தெரிந்து கொண்டேன். வேலாயுதம் சிட்டியின் காலில் விழுந்த வேகம் .. வேலாயுதம் உடம்பில் பலமாக அடி பட்டிருக்குமோ என நான் ஒரு நிமிடம் கவலைப்படும் படியாக இருந்தது. 
அந்த அளவிற்கு பெரியவர்களுக்கு மரியாதை எப்படி செய்ய வேண்டும் என ஒரு Demonstration!வலிந்து செய்வதல்ல. வெகு இயல்பாக. 

பின்னர் அந்த எழுத்தாளர் எனக்கு மீண்டும் ஒரு கடிதம் நான் சிட்டியிடம் முன்னுரை வாங்கி கொடுத்த சிறுகதை தொகுப்பு பற்றி எழுதினார். 

 " இந்த தொகுப்பை பதிப்பாளர் வேலாயுதம் 
ஆறு மாதம் கழித்து தான் தன்னால் வெளியிட முடியும் என்று சொல்கிறார். 
என்னுடைய பத்தாண்டு கால தவம் இந்த சிறுகதைகள். 
நீங்கள் இதற்கு ஒரு தொகை அவருக்கு
 அனுப்பி வைத்தால் அவர் உடனடியாக வெளியிடுவார். 
இந்த உதவியையும் நீங்கள் செய்தால்
 என் இலக்கிய வாழ்வு செழிக்க முடியும் " 
- இப்படி..இப்படி. 

நான் அப்போது உடனே ஒரு நல்ல தொகை விஜயா வேலாயுதம் அவர்களுக்கு அனுப்பி
 அந்த இரண்டாவது சிறுகதை தொகுப்பை 
உடன் வெளியிட சொன்னேன்.
வேலாயுதம் ' இந்த இலக்கியவாதிகள் உலக நடப்பு தெரியாதவர்கள். ராஜநாயஹம், நீங்கள் இப்படி அந்த எழுத்தாளருக்காக இந்த தொகையை அனுப்பியது உங்கள் தாராள மனசு தான். 
எனக்கு வருத்தம் தான் .' என்றார். 
நான் ' பாவம் அந்த எழுத்தாளர். அவர் சிறுகதைகள் உடனே வர உதவுங்கள் என கெஞ்சுகிறார் ' என்று முடித்து கொண்டேன்.

அந்த எழுத்தாளரின் அந்த தொகுப்பு
" நன்றி
திரு சிட்டி
திரு ராஜநாயஹம் "
என்ற குறிப்பு முன்பக்கத்தில் அச்சிட்டு 
அப்போது எனக்கு பிரதி தரப்பட்டது .

அந்த எழுத்தாளர் நாற்பது வயதுக்கு மேல் திருமணம் செய்துகொண்டவர். 
அந்த திருமணத்திற்கு வாழ்த்து சொல்லி ஒரு மணி ஆர்டர் அனுப்பி வைத்தேன்.

புதுவைக்கு நான் சென்ற பின் வேலாயுதம் 
அந்த எழுத்தாளர் புத்தகம் வெளிவர
 நான் கொடுத்த தொகையை பல மாதங்கள் கழித்து திருப்பி அனுப்பி விட்டார்.

நான் பல வருடம் கழித்து 2003 ல் திருப்பூர் வந்த பின் நான் வேலாயுதம் அவர்களிடம் தொலை பேசியில் பேசி திருப்பூரில் செட்டில் ஆகியுள்ள விஷயம் சொல்லி விட்டு அந்த குறிப்பிட்ட எழுத்தாளர் எப்படி இருக்கிறார் என விசாரித்து விட்டு, எழுத்தாளரின் தொலை பேசி எண்ணையும் வாங்கி 
அந்த எழுத்தாளருக்கு போன் செய்து
 " நான் R .P . ராஜநாயஹம் பேசுகிறேன் " என்றேன்.
நல்ல எழுத்தாளர் தான் அவர். 
அவர் பதில் என்ன தெரியுமா ?
" ராஜநாயஹம்..... ராஜநாயஹம்..... நீங்க .. நீங்க ... நீங்க .. ..என்னிடம் பழகியிருக்கீங்க இல்ல ...."

 அவருடைய மூளையை கடுமையாக கசக்க ஆரம்பித்தார்.தவித்தார் ..தத்தளித்தார் ...
தக்காளி வித்தார் .. 
ராஜநாயஹம் யாரு ..தனக்கும் அவருக்கும் 
என்ன சம்பந்தம் என்று கண்டு பிடிக்க 
ரொம்பவே சிரமப்பட்டு விட்டார் பாவம். 

வேறு யாராய் இருந்தாலும் 
அவர் இப்படி நடந்து கொண்டவுடன் 
போனை உடனே கட் செய்திருப்பார் தானே? 
நான் அப்படி செய்யவில்லை. 
அதன் பிறகு கூட ஒரு பதினைந்து நிமிடம் 
அவரை பேச விட்டு கேட்டு கொண்டிருந்தேன்.( இலக்கியவாதிகள், எழுத்தாளர்கள் பலர் எப்போதும், போன் நாம் போட்டால் வள வள வள என்று நிறைய பேசுவார்கள் )

..........

மீள் 2008

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.