Jun 3, 2021

ராஜன் குறை பின்னூட்டத்திற்கு ராஜநாயஹம் பதில்

 ராஜன் குறை : ராஜநாயஹம், இவ்வளவு விஷயம் தெரிந்த நீங்கள் கூட "ஐம்பெரும் தலைவர்கள்" என்று எழுதுவது வியப்பாக இருக்கிறது. 

தி.மு.க வரலாற்றில் அப்படி ஒரு சொல்லாட்சிக்கு பொருள் கிடையாது. 

மும்முனை போராட்டத்தில் சென்னையில் நிகழ்ந்த மறியலுக்கு தலைவர்களாக அறிவிக்கப்பட்டு கைதான ஐவரை அப்படி ஒரு நாளிதழ் குறிப்பிட்டது; அவ்வளவுதான். அதே மூம்முனை போராட்டத்தில் கல்லக்குடியில் வரலாறு படைத்தவர் கலைஞர். தி.மு.க துவங்கியது முதல் கலைஞர் செய்த பங்களிப்பு இயல்பாகவே அவரை அண்ணாவிற்கு அடுத்த தலைவராக நிலைநிறுத்தியது. எழுத்து, பேச்சு, களப்பணி, கட்சி அமைப்பு உருவாக்கம், நாடகம், சினிமா என அவருடைய பன்முக ஆற்றலே, கடும் உ‌ழைப்பே அவரை தலைவராக்கியது. இதையெல்லாம் ஆதாரபூர்வமாகவே படித்தறிய முடியும். நன்றி.


R. P. ராஜநாயஹம் பதில் : ராஜன் குறை சார், 

2008 ல் இது எழுதப்பட்டது. 

கலைஞர் யோக்யதை என்பது 

இந்த ஐம்பெரும் தலைவர்கள் யாரும் நெருங்கவே முடியாதது என்பதை நான் declare செய்தவன். இதில் உள்ள ரிஸ்க் தெரிந்தும் அப்படி சொன்னவன். ஸ்தாபக தலைவரை விடவும் கலைஞர் மகத்தானவர் என்று தயக்கம் இல்லாமல் சொல்வேன். 


இந்த 'அரசியல் பிழைத்தோர்' நூலையே கலைஞருக்கே சமர்ப்பணம் செய்திருக்கிறேன். 


இந்த ஐம்பெரும் தலைவர்களில் 1950களிலேயே சம்பத், நெடுஞ்செழியன், மதியழகன், என். வி. நடராசன் ஆகியோர் யாருமே கலைஞர் என்ற மலைச்சிகரத்தின் பக்கத்தில் மடு போன்றவர்கள். 

'இந்த ஐம்பெரும் தலைவர்கள்' என்ற 'செத்த சொல்லாட்சி' யை ஊதிப்பெரிதாக்கியவர்கள் யாரெல்லாம் என்றால் 1969ல் காங்கிரஸாரும் 1973ல் அதிமுகவினரும் தான். (கலைஞர் முதல்வரான போதும், எம். ஜி.ஆர் கட்சி துவங்கிய போதும்) 

ஆனால் வரலாறை எழுதும் போது ஐம்பெரும் தலைவர்கள் என்ற வேடிக்கை பற்றி எப்படி குறிப்பிடாமல் இருக்க முடியும்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.