Apr 5, 2020

ஆதிநாராயண விஸ்வரூபம்


இன்று ஒரு இளம் இயக்குநருடன் மொபைலில் பேசிய போது என் அடி மனதில் இருந்து அவருடைய தந்தை மேலெலும்பினார்.
அந்த இளம் இயக்குநர் பெயர்
கார்த்திக் ஆதிநாராயணன்.
சீனு ராமசாமியிடம் அசிஸ்டெண்ட் டைரக்டராக பணியாற்றியவர்.
கார்த்திக் என் எழுத்தின் மீது அபிமானம் கொண்டவர்.
ராஜநாயஹம் எழுதியவற்றின் தனித்தன்மை, Sarcasm பற்றி பேசினார். ஆழ்ந்து வாசித்திருக்கிறார் என்பதை அவர் பேச்சு மூலம் அறிய முடிந்தது.
அவருடைய அப்பா ஆதிநாராயணன் ஒரு போலீஸ் ஆஃபிசராக இருந்தவர்.
அப்பா பற்றி கார்த்திக் இப்படி சொன்னவுடனேயே போலீஸ் அதிகாரி ஆதிநாராயணன் கேள்விப்பட்ட பெயராக இருக்கிறதே என்று நினைத்தேன்.
அடுத்த நொடியே என் sub conscious mind ல் இருந்து ஆதிநாராயணன் விஸ்வரூபம் எடுத்து நின்று விட்டார்.

Memory is my fate.
ஒரு சர்ச் லைட்டை ஒரு சிறுவன் கல்லெறிந்து உடைத்து விட்டான். சர்ச்சுக்கு சம்பந்தப் படாதவன்.
சர்ச் பாதிரியார் அந்த சர்ச்சுக்கு வருகிற இரண்டு கிறிஸ்தவ தி. மு. க இளைஞர்கள் மீது போலீஸில் கம்ப்ளைன்ட் கொடுத்து விட்டார். அவருக்கு இந்த இருவர் மீது பகை இருந்திருக்கிறது. பழி வாங்கத் தான் புகார் கொடுத்திருக்கிறார்.
அந்த இருவரும் என்னிடம் வந்து போலீஸிடம் இருந்து காப்பாற்ற வேண்டினார்கள்.
நான் நன்கு விசாரித்தேன். கல்லெறிந்த சிறுவன் யாரென்று கண்டு பிடிக்க முடிந்தது. அவன் தன் தவறுக்காக மன்னிப்பு கேட்டான்.
அந்த திமுக இளைஞர்களை இந்த புகாரில் இருந்து மீட்க முடிவெடுத்தேன்.
நத்தம் ரோட்டிலிருந்த எஸ். பி. (மதுரை நார்த்) ஆஃபிஸில் ஸ்பெஷல் ஆஃபிசராக இருந்த என் நண்பர் பட்டாபியிடம் என் வேனில் அழைத்து சென்றேன்.
விஷயத்தை விளக்கிச் சொன்னேன்.
பட்டாபி போலீஸ் அதிகாரி என்பதை விட அற்புதமான மனிதர்.
அவர் என்னுடன் கிளம்பி போலீஸ் ஸ்டேசன் வந்தார். சப் இன்ஸ்பெக்டரிடம் முழு உண்மையை என்னுடன் சேர்ந்து விளக்கினார்.
பிரச்னை முடிந்தது என்று தான் நினைத்தேன்.
ஆனால் ஒரு அதிகாலை நேரத்தில் அந்த தி. மு. க இளைஞர்கள் என் வீட்டிற்கு வந்து புலம்பி கண் கலங்கினார்கள்.
போலீஸ் அவர்களின் வீட்டுக்கு தேடி வந்து விட்டார்கள். இவர்கள் ராத்திரியிலிருந்து தலை மறைவாக இருக்கிறார்கள். தூக்கமில்லை.
அப்போது என் வேன் டிரைவர் வந்து விட்டான். ஒரு ட்ரிப் தூத்துக்குடிக்கு போக வேண்டியிருந்தது. அதை கேன்சல் செய்தேன். நத்தம் ரோட்டுக்கு வண்டியை விடச் சொன்னேன்.
பட்டாபியோடு அப்போது ஆதிநாராயணனும் இருந்தார். ஏற்கனவே அவர் அறிமுகம் எனக்குண்டு.
விஷயத்தைக் கேட்டதும் பொங்கி விட்டார்.
போனை எடுத்தார். போலீஸ் ஸ்டேஷனுக்கு கால் போட்டார். போனை எடுத்த ரைட்டரிடம் 'சப் இன்ஸ்பெக்டரிடம் போனை கொடு' என்றார்.
எஸ். ஐ. லைனில் வந்ததும் அவர் பெயர் சொல்லி ஏகாரத்தில் ஆரம்பித்து ' ஏம்ப்பா, பட்டாபி நேர்ல வந்து சொல்லியும் ஏன் இப்படி செய்ற? ராஜநாயஹம் எனக்கும் தான்யா ஃப்ரெண்டு.
அந்த பாதிரியாரு சொந்த பகைக்காக தான் இப்படி செஞ்சிருக்கான்னு விவரமா சொன்னப்ப மாடு மாதிரி தலய ஆட்டியிருக்க. அப்பறம் ஏன் கேஸை போட்டு இழுக்கிற. ம். யோவ் ஏய்யா இவ்வளவு தான் எங்களுக்கு மரியாதயா? நம்மல்லாம் ஒரே பேட்ச்ல எஸ். ஐ ஆனவங்க. நீ எப்படியா பொது ஜனங்கள மதிப்ப? ஒழுங்கா கேஸ முடி '
"இந்த விஷயத்துல உண்மை இல்லன்னா ராஜநாயஹம் வந்திருக்க மாட்டாப்ல. பட்டாபியும் வந்திருக்க மாட்டாப்ல.
நானும் வந்திருக்க மாட்டேன்"
ஆதிநாராயணன் கோபமாகத் தான் போனை வைத்தார்.
பிரச்னை சுமுகமாக முடிந்தது.
பட்டாபி, ஆதிநாராயணன் போன்ற அற்புதமான காவல் அதிகாரிகள்.
என் வாசகரின் தந்தை எனக்கு அன்று அறிமுகமுள்ள ஆதிநாராயணனின் மகன்.
விட்ட குறை. தொட்ட குறை.
இந்த நிகழ்வை நான் சொன்னதும் ஆதிநாராயணன் மகன் கார்த்திக் இப்போது எல்லோரும் சொல்லும் வார்த்தையை நெகிழ்ந்து சொல்ல வேண்டியிருந்தது.
" உலகம் ரொம்ப சின்னது சார் "
தன் தந்தை D. S. P. ஆதிநாராயணன் 2010ல் இறந்து விட்டார் என்ற செய்தியை கார்த்திக் சொன்னார்.
....

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.