Sep 3, 2019

மனமும் குணமும் மாறாது



1990
புதுவையில் அசோகமித்திரன் கலந்து கொண்ட ஒரு இலக்கியக்கூட்டம். மறைந்த டாக்டர் ச.வீரப்பிள்ளை வீட்டில். அசோகமித்திரன் படைப்புகள் பற்றிய அந்த கூட்டத்திற்கு கி. ரா எந்த பந்தாவும் இல்லாமல் ஒருவருடைய மொபட்டில் பின்னால் உட்கார்ந்து தான் வந்தார். அசோகமித்திரன் அவரை பார்த்த பார்வையில் அன்பு, கனிவு, நன்றி எல்லாம் மிளிர்ந்ததை காண முடிந்தது. கிராவிடம் வாத்ஸல்யம்.  தஞ்சை ப்ரகாஷ் வந்து சூழலை கலகலப்பாக்கினார்.
அ.ராமசாமி கூட வந்திருந்தார்

நான் அப்போது சில மாதங்களுக்கு முன் வெளியிட்டிருந்த தி. ஜா நினைவு மதிப்பீட்டு மடலைப்பற்றி 'சரியான நேரத்தில் செய்தீர்கள்' என்று நெகிழ்ந்து பாராட்டினார்.

கொஞ்ச நேரத்தில் வெளியூரில் இருந்து வந்த தமிழ் பேராசிரியர் அசோகமித்திரன் படைப்புகள் பற்றிய தன் கட்டுரையை உடனே வாசிக்க ஆரம்பித்தார். (இவரும் கூட திஜா மதிப்பீட்டு மடலுக்காக பாராட்டி ஒரு போஸ்ட் கார்டு அனுப்பியிருந்தவர் தான்.) 

நீளமான புலமைத்தனம் கொண்ட கட்டுரை. நீண்ட காலமாக வாசித்துக்கொண்டிருக்கிற உணர்வை விதைத்தார். முடித்தார். எழுந்தார். ' அவசரமாக கிளம்ப வேண்டியிருக்கிறது' போய் விட்டார்.

அசோகமித்திரன் பேச்சை கேட்காமலேயே போகிறாரே என்ற ஒரு சங்கடம் ஏற்படவே செய்தது.  அவர் கிளம்பிய பின் இலக்கிய கூட்டம் தொடர்ந்து நடந்து முடிந்தது.

அசோகமித்திரன் தன் இயல்பு தன்மையாக பேராசிரியர் கட்டுரை பற்றி "என்ன ஒரு உழைப்பு" என கண்ணை அகற்றி அடுத்த வார்த்தை சொல்லு முன்னர் தஞ்சை பிரகாஷ் உரிமையுடன் கையுயர்த்தி "சும்மா இருங்க" என்று எதிர்ப்புக்குரலுடன் எழுந்து நின்று விட்டார். எல்லோருடனும் சேர்ந்து அசோகமித்திரனும் சிரித்து விட்டார்.

"தஞ்சை பிரகாஷ் பற்றி  நான் நினைத்து வியக்காத நாளே கிடையாது. நிஷ்காம்ய கர்மம் என்று ஒன்று சொல்வார்கள். அப்பதத்துக்கு எனக்கு அவரைத்தான் நினைக்கத் தோன்றுகிறது" - அசோகமித்திரன் கணையாழியில் 2000 ஆண்டு ஜனவரியில் இப்படி எழுதினார்.

2017

கூத்துப்பட்டறை நாடகம் கில் ஆலன் இயக்கத்தில் ரோஜா முத்தையா ஹாலில் டாக்டர் செ. ரவீந்திரன் ஒளியமைப்பில் நடந்தது.

புதுவையில் கட்டுரை வாசித்து விட்டு அவசரமாக வெளியேறிய அதே restless பேராசிரியர் கூத்துப்பட்டறை நாடகம் பார்க்க வருகை.

அவரை வெளியில் சந்தித்த போது கூல் ட்ரிங்க்ஸ் வாங்கி கொடுத்தேன்.
பணி ஓய்வு பெற்று விட்டார்.  எனக்கு அசோகமித்திரன், தஞ்சை பிரகாஷ் ஞாபகம் வந்தது.

ஹாலில் வந்து உட்கார்ந்தார். நாடகம் ஆரம்பித்து ஒரு கால் மணி நேரத்தில் எல்லோரும் கவனிக்கும்படியாக எழுந்து அவசரமாகவே வெளியேறி விட்டார்.

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.