Aug 5, 2019

ந.முத்துசாமியும் இந்தி எதிர்ப்பு போராட்டமும்


வருடம் 1965. இந்தி திணிப்புக்கெதிரான போராட்டம். இந்தி எதிர்ப்புக்கு ஆதரவு தெரிவிக்கும்  தி.மு.க கூட்டம்.
கோகலே ஹால். திரளான கூட்டம்.
எம்.ஜி.ஆர் தான் முன்மொழிந்து பேசுகிறார்.
வழி மொழிந்து பேசியவர்
இருபத்தொன்பது வயது ந.முத்துசாமி!
என்.வி.நடராஜன் அப்போது ‘திராவிடன்’ பத்திரிக்கை நடத்திக்கொண்டிருந்தார். அதில் முத்துசாமி சார் ‘மாணவ உலகத்தின் மகத்தான பணி’ என்று ஒரு கட்டுரை எழுதியிருந்தார்.
அதையே தான் அன்று கோகலே ஹாலில் முத்துசாமி பேசினார்.
இதை போன வருடம் என்னிடம் சொல்லிக்கொண்டிருக்கும் போது ரசம் எடுத்துக்கொண்டு மாமி வந்தார். நான் எதுவும் சாப்பிட மறுப்பேன் என்பதால் மாமி என்னிடம் கேட்பதில்லை.

சார் ரசத்தை வாங்கி குடித்து விட்டு ”குஞ்சலி, ரசம் பிரமாதம்”
நான் “ரசம் உங்களுக்கு ரொம்ப பிடிக்குமோ சார்”
முத்துசாமி சார் தன் தொடையில் வைத்திருக்கும் வலதுகையை பாம்பு படம் எடுப்பது போல் இருந்த நிலையிலேயே ஆட்டி, தலையையும் சிறிது இரு பக்கமும் ஆட்டுகிறார். அப்படி இல்லை என்று அர்த்தம்.
அதன் பின் பதில் “ சுவாரசியமா இருக்கில்லையா?”
என்ன ஒரு அழகான விளக்கம்.
சுவாரசியத்திற்காகவே தினமும் கொஞ்சம் தாமதமானாலும் குரல் கொடுப்பார் ”குஞ்சலி, ரசம்”
பள்ளியில் படிக்கிற காலம். மாயவரம் சலாமத் ஸ்டோரில் முத்து சாமி சார் எப்போதும் நிற்பார். இவருடைய தாய் மாமா கிட்டா (மூர்த்தி) கூட அங்கே நிற்பார்.
அடுத்து தன் பால்ய நினைவுகளை பேச ஆரம்பித்தார். அஞ்சாறு வயதில் நடந்தவை.
மூன்று உபயோகங்கள் கொண்ட ஒரு உபகரணம் ஒன்று. அதைக்கொண்டு ஆணி புடுங்கலாம். சுத்தியலாகவும் உபயோகப்படும். வெட்டுவதற்கும் பயன்படும். செம்பனார் கோவில் சிதம்பரநாத முதலியார் என்ற அப்பாவின் நண்பரின் கடை. அப்பாவோடு முத்துசாமி அந்தக்கடைக்கு தானும் போய் வாங்கி வந்த நினைவை சொல்கிறார்.
இன்னொரு முறை அப்பாவிடம் ஏலத்தில் டேபிள் வாங்கிக்கொண்டு வரச்சொன்னார். அப்பா வாங்கி வந்தார்.
முத்துசாமியின் அடுத்த வார்த்தை ” எனக்கு ஏழு வயசு இருக்கச்ச அப்பா செத்துப்போயிட்டார்”
....

ஓவியங்கள்

 R.P.ராஜநாயஹம் ( நன்றி: T சௌந்தர்)
ந.முத்துசாமி ( நன்றி: விகடன் தடம்)

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.