Aug 8, 2018

அவர் தான் கலைஞர். பார். அவர் தான் கலைஞர்!


தமிழகத்தில் பாராளுமன்றத்தேர்தலில் எம்.ஜி.ஆருக்கு பலத்த அடி. சிவகாசி, கோபிச்செட்டிபாளையம் தவிர அனைத்து தொகுதிகளிலும் தி.மு.க. காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்று விட்ட நிலை.எம்.ஜி.ஆருக்கெதிரான மு.கருணாநிதியின் மகத்தான முதல் வெற்றி. இந்திராகாந்தி மீண்டும் பிரதமரானவுடன் எம்.ஜி.ஆர் ஆட்சி டிஸ்மிஸ்.
தலைப்பு செய்திக்கு பொருத்தமாக ஏதாவது எழுதவேண்டும் என்று மதுரை ஏ.ஏ. ரோட்டில் தி.மு.க தோழர்கள் என்னிடம் கேட்டனர்.தி.மு.க.மன்றத்தின் முகப்பில் ஒரு போர்டு. அதில் அவ்வப்போது ஏதேனும் எழுதிப் போடுவது மன்றத்தாரின் வழக்கம்.
எம்.ஜி.ஆரை கிண்டல் செய்வது போல வாசங்கள் ஏதேனும் சொல்ல முடியுமா? நான் யோசிக்காமலே என் நினைவில் தெளிவாய் இருந்த ஒரு கவிதையின் வரிகளை அவர்களிடம் எழுதிப்போடச் சொன்னேன். ”உங்கள் தலைவர் முன்னரே எழுதிய கவிதையொன்றின் ஒரு நான்கு வரிகள் தான் இவை. இதனை மன்றத்தின் போர்டில் எழுதுங்கள். எழுதி அவர் பெயரை போடுங்கள்.”அந்த வரிகள்
“ மான் போட்ட கணக்கை வேங்கை அழித்து விடும்.ஏன் போட்டாய் தப்புக்கணக்கென்று வேங்கையை வேடன் வீழ்த்திடுவான்.இது தான் உலகு”
ஏ.ஏ. ரோட்டில் பலரும் நின்று நின்று இந்த மு.க.வின் கவிதை வரிகளை எம்.ஜி.ஆர் அரசு டிஸ்மிஸ் ஆன அன்று வாசித்து சென்றார்கள். அந்த அரசியல் சூழலுக்கு மிகப்பொருத்தமான வரிகள் கருணாநிதி முன் எப்போதோ எழுதியவை. கரகரத்த குரலில் அவர் சொல்வது போலவே இருக்கிறதல்லவா?
………………………………………………………….



முதல் முறை முதல்வராய் மு.க இருந்த போது அவர் கவிதை வாசித்த ஒரு கவியரங்கம். குன்றக்குடி அடிகளார் தலைமை.
தமிழக முதல்வர் கவிதை வாசித்தார்.“எனக்கிருக்கும் எத்தனையோ வேலைகளில் இதுவும் ஒன்று என கிறுக்கும் என்னை ஈங்கழைத்தார் பெருந்தவக்கிறுக்கர்” என்று ஆரம்பித்தவுடன் ஆரவாரம் எப்படியிருந்திருக்கும்?
ஒரு சம்பவம் ஒன்றை விவரித்தார். வள்ளியை தேடி முருகன் மலையேறுகிறான். அப்போது எதிர்ப்பட்ட முதியவர்கள் சிலரிடம் வள்ளியெங்கே என்று கேட்கிறான். மலையுச்சிக்கு சென்றால் காணலாம் என வயதானவர்கள் சொல்கிறார்கள்.
மலையுச்சிக்கு செல்கிறான் முருகன். மு.க சொல்கிறார். “கண்டவிடமெல்லாம் வள்ளிக்கிழங்கு! கிழங்களின் குறும்பு தான் என்னே! வள்ளியெங்கே என்று கேட்டால் கிழங்கினை காட்டி விட்டு சென்று விட்டார்களே!”
இந்த கவியரங்கத்திலோ அல்லது வேறு கவியரங்கம் ஒன்றிலோநிலா, தென்றல் ஆகிய தலைப்பில் கவிதை வாசிக்க வேண்டிய இருவர் வரவில்லையாம். மு.க. வின் கிண்டலான எதிர்வினை: “கவியரங்க விழா பகலில் நடப்பதால் நிலா வரவில்லை. கவியரங்கம் குளிர் சாதன அறையில் நடப்பதால் தென்றலும் இங்கே நுழையவில்லை”

ஒரு விண்ணப்பம்.
அவருடைய போராட்டமான அரசியல் வாழ்வுக்காகவும், எவரோடும் ஒப்பிட முடியாத தன்மைக்காகவும்
பாரதரத்னா விருது கருணாநிதிக்கு உடனே, உடனே வழங்கப்படவேண்டும்.அது தகுதியும் நீதியுமாகும்.
இலக்கியத்திற்கான நோபல் பரிசு கருணாநிதிக்கு கொடுக்கப்படவேண்டும் என்று சொன்னால் தான் அபத்தம்.

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.