Oct 16, 2017

கோழி மிதிச்சு குஞ்சுக்கு சேதமா?


அப்பா சென்ட்ரல் கவர்ன்மென்ட் ஆஃபிசராய் இருந்தால்  ஆச்சிக்கென்ன? வசவு கிழித்து விடுவாள்.

சிவகாசியில் தீப்பெட்டி ஆஃபிஸ் சாவி காணாமல் போய்விட்டது என்று அப்பா சஸ்பெண்ட் ஆகியிருந்த போது செய்துங்கநல்லூருக்கு போய் இருந்தோம். அப்பாவை ஆச்சி இஷ்டத்துக்கு வேலை வாங்குவாள்.
“ ஏலே! சின்னவனே, அந்த வரட்டியெல்லாம் எடுத்துட்டு வா”
’சின்னவனெ’ - அப்பாவை இப்படி. பெரியப்பாவை ‘ பெரியவனெ’
’சின்னவனே, மாடு போட்ட சாணிய எடுத்து அந்த கூடையில வை’
’கழனித்தண்ணிய மாட்டுக்கு வையேம்ல’
’சின்னவனெ, அந்த கன்னுக்குட்டிய பிடிச்சி கட்டுல’
செய்துங்கநல்லூர் சாராயக்கடை ராஜநாயஹம் பிள்ளை அவருடைய வேகமும், பரபரப்புமான காலம் முடிந்து கட்டிலில் எல்லாவற்றையும் வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பார்.
’சின்னவனே, கிழடுக்கு இந்த மோர குடிக்க குடு.’
ஆச்சி பால் கறந்தவுடன் எனக்கு அந்த பச்சைப்பால குடிக்க கொடுப்பாள்.

 மாடுகள் ஏராளமாய் இருந்ததுண்டு. சங்கரன்கோவிலுக்கு வாக்கப்பட்டுபோன அத்தைக்கு சீதனமாக மாடுகளும் போனதாம்.
ஒரு நாள் ஆச்சி புதிதாய் கன்று போட்டு பத்து நாள் ஆன பசுவை கறக்க அதிகாலை ஆயத்தமானாள்.
கன்னுக்குட்டிய ராத்திரியே அப்பாவை பசுவிடம் இருந்து பிரித்து கட்டச்சொல்லியிருந்தாள்.

’பால கறக்கனும். அந்த பெரிய பித்தள சொம்புல தண்ணி எடுத்துட்டு வால’
மாட்டுத்தொழுவத்துக்கு ஆச்சி போய் கொஞ்ச நேரத்தில் வசவு கிழிக்க ஆரம்பித்து விட்டாள்.
“ இவன பெத்த வயித்துல பெரண்டையத் தான் வச்சி கட்டனும். கூறு கெட்ட பய.. நானும் என்னால ஆன மட்டும் சொல்லிப்பாத்துட்டேன். செத்த மூதி..சவத்துப்பய..காலணாவுக்கு பெறமாட்டான்.”
கன்றுக்குட்டியை மாட்டை ஒட்டியே அப்பா கட்டிப்போட்டிருக்கிறார். கன்று அவ்வளவு பாலையும் ஒரு சொட்டு விடாமல் குடித்து விட்டது.
அப்பா வெள்ளந்தியாக வந்து பித்தள சொம்ப நீட்டினார் ‘ எம்மா, பால் கறக்க தண்ணி கேட்டியே… இந்தா’
ஆச்சி வெடித்தாள் “ ம்.. ஒன் பூழல்ல ஊத்து ...”

…………………………………………………..



No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.