Jun 26, 2022

கறார் ஹாஸன்

கறார் கமல் ஹாஸன்


ஆர்ட் டைரக்டர் ஜேகே சொன்னார்.
"கமல் சார் 'இந்த இடத்தில் ஒரு ஏரோப்ளேன் வேணும்'னு இன்ஸ்ட்ரக்ஸன் குடுத்தா
உடனே, உடனே 'சரி சார்ன்னு சொல்லனும். 'அது எப்டி சார்? சிரமம்'ன்னு சொல்ல முடியாது."
(முப்பது வருடங்களுக்கு முன் 1992ல்)

சரி தானே.
ஷேக்ஸ்பியர் சொன்ன மாதிரி
When Caesar says 'Do it' , it is performed.

கஸ்டம்ஸ் அன்ட் சென்ட்ரல் எக்ஸைஸ் துறை நாடகங்களில் 
லியோ என்ற ஆஃபீசர் நல்ல நடிகராக பெயர் வாங்கியவர்.
சொந்த ஊர் பழனி.
சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைக்காதா? என்று முயற்சி செய்தார்.

தன் முயற்சியில் மேஜர் சுந்தர்ராஜனை அணுகியிருக்கிறார்.
சினிமா வாய்ப்பு அசாத்தியமானது என்பதை சம்பவம் ஒன்றை சுட்டிக்காட்டி சுந்தர்ராஜன் விளக்கியிருக்கிறார்.

கமலை வைத்து படம் இயக்க 
ஒரு வாய்ப்பு மேஜருக்கு கிடைத்திருக்கிறது.
'அந்த ஒரு நிமிடம்'

ஊர்வசி கதாநாயகி என்று fix ஆகியிருக்கிறது. கமல் ஒப்புதலுடன்.

இயக்குநர் மேஜர் 'அந்த ஒரு நிமிடம்' படத்தில் மற்ற கதாபாத்திரங்களில் நடிப்பவர்கள் பட்டியல் ஒன்றை தயார் செய்து கொண்டு வந்து கமலை சந்தித்திருக்கிறார்.

கமல் ஹாசன் அந்த பட்டியலில் எடுத்த எடுப்பிலேயே முதலாவதாக ஒரு பெயரை அடித்து விட்டார்.
அந்த பெயர் 'மேஜர் சுந்தர் ராஜன்'

"நீங்க இந்த ரோலுக்கு வேண்டாம் அண்ணே. நல்லாருக்காது. சத்யராஜை தான் fix பண்ணனும்."

மேஜருக்கு இப்படி கமல் 
தன் பெயரை நடிகர்கள் பட்டியலில் இருந்து நீக்கியது பெரும் அதிர்ச்சி என்பதை சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

தான் இயக்கப் போகும் படத்தில் பெரிய நடிகரான தனக்கே இடம் இல்லையென்றால் எப்பேர்ப்பட்ட அவமானம்?

கமலிடம் கெஞ்சி மன்றாடித்தான்
 ஒரு வழியாக அந்த ஒரு நிமிடத்தில் நடிக்க வாய்ப்பு மேஜரால் பெற முடிந்திருக்கிறது.

இந்த சம்பவத்தை கஸ்டம்ஸ் ஆஃபீசர் லியோவிடம் சொல்லி " லியோ,
நல்ல வேலையில் இருக்கிறீர்கள். ஏன் சினிமாவில் நடிக்க ஆசைப்படுகிறீர்கள்.
உங்களுக்கு ஏந்தம்பி இதெல்லாம்..ஐய்யய்யே"
என்றாராம் மேஜர்.

சக்கப் போடு போடும் விக்ரம் படத்தில் மேஜர் மகனைப் பார்த்த போது, 
 1987ல் பழனியில் 
மட்டன் கடையொன்றில் 
சந்தித்த போது லியோ சொன்ன 
மேஜர் சமாச்சாரம் நினைவுக்கு வந்தது.

விக்ரமில் கமல் பல வாரிசு நடிகர்களை பயன்படுத்தியிருக்கிறார்.
ஜெயராம் மகன் கவனிக்கும்படி தெரிகிறார்.
சங்கர் கணேஷ் மகனை பார்க்க முடிகிறது.

டெல்லி கணேஷ் மகன் , கத்திச் சண்டை ஆனந்தன் மகன் கூட படத்தில் 
Spray செய்யப்பட்டுள்ளார்கள். அங்கங்க, அங்கங்க 
அள்ளி தெளிச்சி..
கொல கொலயாம் முந்திரிக்கா..
கண்டு பிடி.. கண்டு பிடி..

Jun 25, 2022

புரட்சி


Time Machineல ஏறிப்போனா என்னெல்லாம் கண்ணுல படுது.


தேங்கா டயலாக்: 
எல்லாம் அமஞ்சிக்கற்து தான்,
வாச்சிக்கற்து தான்..

..

2008ல் நான் எழுதிய பாரதி தாசன் பதிவில் புரட்சி கலைஞர் பட்டம் பற்றி
1990ல் புதுவை பல்கலைக்கழகத்தில் பேசியதை குறிப்பிட்டிருக்கிறேன்.

http://rprajanayahem.blogspot.com/2008/12/blog-post_04.html?m=1

புதுவை பல்கலை கழகம் சார்பில் பாரதி தாசன் நூற்றாண்டு விழாவில் பார்வையாளனாக கலந்து கொண்டேன் . ஜால்ரா சத்தம் சகிக்க முடியவில்லை . பாரதியை விட பாரதி தாசன் பெரிய கவிஞர் , பாரதியை தாண்டி விட்டார் என்ற ரீதியில் புலவர்கள் ,பேராசிரியர்கள் பேசினார்கள் . 'பாவேந்தர் என்று பாரதி தாசனை சொல்லவேண்டாம் . ஏனென்றால் அவர் ஒருவர் தான் புரட்சிகவிஞர் . புரட்சி கவிஞர் அவர் ஒருவர் தான் என்பதால் அவரை புரட்சிகவிஞர் என்று தான் சொல்லவேண்டும் ' என்று ஒருவர் எல்லோரையும் மிரட்டினார் .

நான் எழுந்து மேடைக்கு சென்று பேசினேன்
 " இன்று புரட்சி என்ற வார்த்தை மிகவும் கொச்சைபடுத்தபட்டு விட்டது . புரட்சி தலைவர் , புரட்சி தலைவி ..இப்படி ..    

  அந்தகாலத்திலே எம்ஜியார் எக்ஸ்ராவா நடிச்ச காலத்திலே எம்ஜியார் யாருன்னே தெரியாமல் இருந்த காலத்திலேயே புதுமைப்பித்தன் எழுதிய
 'திருக்குறள் செய்த திருக்கூத்து' என்ற கதையில் ' புரட்சிதலைவர்' என்ற வார்த்தையை உபயோகப்படுத்தியிருக்கிறார். கிண்டலாகத்தான்! 

இப்ப கூட 'புரட்சி கலைஞர் நடிக்கும் கரிமேடு கருவாயன்'னு போஸ்டர் ஓட்டறான். 
'யார்ரா புரட்சிகலைஞர்'ன்னு கேட்டா
 'அந்த கருவாயன் தான் புரட்சிகலைஞர்' சொல்றான். 

புரட்சி என்ற வார்த்தை இன்று Cliché ஆகிவிட்டது.

 அதனால பாரதிதாசனை பாவேந்தராகவே வைத்துக்கொள்ளுங்கள்.
புரட்சிகவிஞர் வேண்டாம் " என்றேன்.

..

2015ல் விஜயகுமாருடைய புரட்சி கலைஞர் பட்டம் பற்றி எழுதியிருக்கிறேன்.

http://rprajanayahem.blogspot.com/2015/01/blog-post_31.html?m=0

'படங்களில் தன் பெயருக்கு முன்னால் “புரட்சிகலைஞர்” பட்டம் போடப்படவேண்டும் என்று விஜயகுமார் வற்புறுத்திய காலம் உண்டு.
 அதிமுகவில் இணைந்து " அண்ணா நீங்க நினைச்சபடி நடந்திடுச்சி, புரட்சித்தலைவர் கையில் நாடிருக்கு" என்ற பாட்டுக்கு நடித்தார்.
சி.என்.முத்து டைரக்ட் செய்த ‘சொன்னது நீ தானா’ என்ற படத்தில் புரட்சிகலைஞர் பட்டம் போடப்படவில்லை என்று விஜயகுமாருக்கு வருத்தம். 

1980களில் இந்தப்பட்டம் விஜயகாந்துக்கு போய்விட்டது.'

பட்டம் யாரும் வழங்கவில்லை. அவர்களாகவே போட்டுக்கொண்டது.

ரவிச்சந்திரனுக்கு நான்கு சுவர்களில் 'திரையுலக இளவரசன்'  டைட்டில். கலை நிலவு என்று சொந்த படம் மஞ்சள் குங்குமம் படத்தில் போட்டுக்கொண்டார். 
'கலை நிலவு' முன்னதாக ஒன்றிரண்டு படத்தில் ஜெமினி கணேசன் டைட்டிலில்.
( ஜெமினி இறந்த போது காலச்சுவடு பத்திரிகையில் நான் 'கலை நிலவு' என்று தலைப்பிட்டு இரங்கல் எழுதினேன்)
விஜயகுமாருக்கு சீனியர் என்பதால் கொஞ்சம் அவருக்கு முன்னதாக புரட்சி கலைஞர் என்று ரவிச்சந்திரன் போட்டுக்கொண்டார்.
விஜயகுமாரை அடுத்து விஜய்காந்த்.



....

'புரட்சி கலைஞர் ரவிச்சந்திரன்' title picture referred by Aathmaarthi RS 
ஆத்மார்த்தி

Jun 22, 2022

குமுதம் ப்ரியா கல்யாணராமன்

"சார் வணக்கம் ஃபேஸ்புக்ல நீங்க எழுதறது எல்லாம் படிச்சிட்டு வரேன் பிரமாதமா இருக்கு சார் corona kku அப்புறம்  குமுதத்தில் எழுதனும்  சார்"

ப்ரியா கல்யாணராமன்

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு
17.04. 2020 அன்று
 R.P. ராஜநாயஹத்திற்கு 
ஃபேஸ்புக் மெஸ்ஸஞ்சரில் ப்ரியா கல்யாணராமன் அனுப்பிய செய்தி.


ராஜநாயஹம் response : 
"உங்கள் அன்புக்கும் அபிமானத்திற்கும் என் நன்றி சார். நிச்சயம் சார். ப்ரியா கல்யாணராமன் என்னிடம் இப்படி சொல்வது மிகவும் சந்தோஷமாய் இருக்கிறது"

இரண்டு வருடங்களாக 
என் இயல்புபடி இது குறித்து வாளாவிருந்தேன். நான் தொடர்பு கொள்ளவேவயில்லை.

இப்போது  20.04. 2022 அன்று "உங்கள் தொலைபேசி எண் வேண்டுமே"
என்று மீண்டும் ப்ரியா கல்யாணராமன்.

மொபைலில் தொடர்பு கொண்டார்.

மீண்டும் துவங்கவிருக்கும் 'குமுதம் தீராநதி'யில் R.P. ராஜநாயஹம் இலக்கிய கட்டுரைகள் எழுத வேண்டும்.

 ஆறு பக்கங்கள் எழுதினாலும் பிரசுரிக்கப்படும்.
தலைப்பு தாருங்கள். குமுதம் தீராநதியில் நீங்கள் எழுதுவது பற்றி நன்றாக விளம்பரப்படுத்துவோம்"

என் பதில் : ம்ஹும். மாட்டேன்.
குமுதத்தில் எழுதுவதற்கு தான் ராஜநாயஹத்தை அழைக்கப் போவதாக இரண்டு வருடங்கள் முன்னரே செய்தி அனுப்பியிருந்தீர்கள்"

ப்ரியா கல்யாணராமன் : 'நிச்சயமாக குமுதத்திலேயே எழுத உங்களை அழைப்பது விஷயமாக தகவல் தருகிறேன்.'

A slip between the cup and lip?
அப்படியான பிரமையெல்லாம் இல்ல.

2016ம் ஆண்டில்
சாவித்திரி, சரோஜாதேவி,
T.R. ராஜகுமாரி பற்றி குமுதம் ஸ்பெஷலில் எழுதியிருக்கிறேன்.
குமுதம் கிசு கிசு சிறப்பிதழிலும் ஒரு கட்டுரை நான் எழுதி வெளியானது.

http://rprajanayahem.blogspot.com/2021/09/blog-post_4.html?m=0

https://www.facebook.com/100006104256328/posts/2750190265194422/

http://rprajanayahem.blogspot.com/2016/10/kumudam-kisu-kisu-special_11.html?m=0

http://rprajanayahem.blogspot.com/2016/10/tr.html?m=0


Jun 15, 2022

என்ன பலகாரம்?!

கணையாழி ஆகஸ்ட் 1991 இதழில் நான் எழுதிய இதன்  ஒரு பகுதி ‘புலவர் பிரபஞ்சன்’ என்ற தலைப்பில் பிரசுரமானது.

கேக் கொண்டு வந்த சினிமா நடிகர் பார்த்திபனிடம் பின்னால் கி.ரா கடிதத்தில் கேட்ட  கேள்வி. ‘அது என்ன பலகாரம்?’ 
என்ன தான் காஸ்ட்லியான கேக் என்றாலும் பார்த்தவுடனே கண்டு பிடிக்க முடியும். 

கி.ரா எப்படில்லாம் காதில் பூ சுத்திருக்காரு. 
எல்லா கிராமங்களுக்கும் கேக்
 1970லேயெ வந்துடுச்சி. கேக் தெரியாத கிராமத்தானே கிடையாது.

கோவில்பட்டியிலேயே பேக்கரி கேக் உண்டு. இடைச்செவல் கிராமம் பக்கத்தில் தான்.                          பாண்டிச்சேரி போன்ற பெரு நகரத்துக்கு வந்து மூன்று வருடம் கழித்து ’அது என்ன பலகாரம்?’ என்று வியந்து கேட்பது ரொம்ப ஓவர் தானே?

பிரபஞ்சன் பின்னால் ஒரு எட்டு ஒன்பது வருடங்களில் தி.ஜாவின் பெருமைகளை 
புரிந்து கொண்டார். 
தி.ஜாவை மிஞ்ச ஆளேயில்லை என்று 
வானளாவ ஜானகிராமனை
 புகழ ஆரம்பித்தார்.

……………………

கி.ரா அறியாத பலகாரமும்,புலவர் பிரபஞ்சனும். (1991)
- R.P.ராஜநாயஹம்

 சென்ற ஜுலை மாத கணையாழியில் 
பிரபஞ்சன் பேட்டியில் தி.ஜாவின் பெண் கதாபாத்திரங்களை Utopian characters ஆக மட்டையடி அடித்திருப்பது ஏற்க முடியாத விஷயம்.

 பெண்மையின் மேன்மையையும், உன்னதத்தையும் தன் பெண் கதாபாத்திரங்களின் பலம், பலவீனத்துடன் தெளிவாக சித்தரித்தவர் தி.ஜானகிராமன். 

’தாங்க முடியாத மன உளைச்சலுக்குத் தான் ஆட்படும்போது தி.ஜாவின் மோகமுள்ளை ஒரே இரவில், ஒரே மூச்சில் எத்தனையோ தடவை படித்துள்ளதாக’ சொல்லும் பிரபஞ்சன்
 தன்னுடைய பார்வை முரண்பாடுகளை 
பரிசீலிக்க வேண்டும்.

’தன்னை நம்பி வந்த மனைவியை பட்டினி போட்டு விட்டு ஒருவன் இலக்கியம் படைத்தால் அந்த இலக்கியம் கறை படிந்த இலக்கியம்’ என்கிறார்.

 முன்பொரு முறை பாரதி மீது பணக்கார பாலகுமாரன் இந்த மாதிரி 
ஒரு கமெண்ட் அடித்தார். 
இப்போது பிரபஞ்சன்.

பாரதி, புதுமைப்பித்தன் துவங்கி ஜி. நாகராஜன் வரை,  கலைஞனின் தனிப்பட்ட வாழ்க்கை முறை பற்றி முகம் சுளித்து தீர்ப்பிட யாருக்கும் 
இங்கே யோக்கியதை கிடையாது.
 கலைஞன் இவர்களுடைய சமூக, பண்பாட்டு மதிப்பீடுகளுக்கு கட்டுப்பட வேண்டிய அவசியமில்லாதவன். 
டேல் கார்னகி, எம்.ஆர்.காப்மயர் தியரிகளைப் போன்ற அபத்தங்களை  உளற வேண்டாம்.

வட்டார இலக்கியம் போலியானது என்பது சரி. இது குறித்த அபாய எச்சரிக்கையை முதலில் செய்தவர் வண்ண நிலவன். 
மானாவாரி பயிர், திவசம், கம்மங்கூழ் இப்படி சில  வார்த்தைகளோடு வறுமையை மிக்ஸ் பண்ணி ’ரெடிமேட்’ கரிசல் இலக்கியம் செய்வதை வண்ணநிலவன் சாடினார்.

கி.ராவின் இலக்கிய அந்தஸ்தை இது கேள்விக்குள்ளாக்காது. 
கி.ராவின் சாதனை ‘கதவு’ மட்டும் தானா?  நாவலுக்கு என்று இருந்த வடிவத்தை உடைத்ததோடு தமிழின் முதல் சரித்திர நாவலையும் எழுதியவர் கி.ரா.
 சமீப காலங்களில் முழுக்க முழுக்க வட்டார வழக்கிலேயே கரிசல் காட்டு கடுதாசி 
கட்டுரை துவங்கி, 
தொடர்ந்து தன் மொழி நடையில் 
அவர் செய்து வரும் மரபு மீறல் புதிய முயற்சி. 

எந்த மொழி இலக்கியமானாலும்
 மரபு மீறல்களாலேயே 
வளமடைந்திருப்பது 
சரித்திர உண்மை.

கி.ராவிடம் ஆட்சேபகரமான விஷயங்களும் இல்லாமல் இல்லை.
 ஈசல் போல் கரிசல் எழுத்தாளர்கள் பெருகுவதைக் கண்டு அவர் புளகாங்கிதமடைவது ஏற்புடையதன்று. 
பூமணி, கோணங்கி விதிவிலக்கு.

மற்றொன்று ஆரம்ப காலத்தில் கி.ரா.வுக்கு ஏற்பட்டு விட்ட நகர வாசனையேயில்லாத கிராமத்து அப்பாவி என்ற பிம்பத்தை தொடர்ந்து காப்பாற்ற அவர் செய்யும் பிரயத்தனங்கள்!

புதுவையில் தன்னைப் பார்க்க வந்த ஒரு சினிமாக்காரன் கொடுத்த ‘கேக்’ பற்றி,
 பின்னர் அவனுக்கு எழுதிய கடிதத்தில்
 ‘அது என்ன பலகாரம்?’ என்று மிகையாக அதிசயப்பட்டு விசாரித்திருக்கிறார். 
அந்த நடிகனே இதை குமுதத்தில் எழுதி
 அவரை ரொம்ப இன்னொசண்ட் என்று புகழ்ந்திருந்தான். 

கி.ராவின் சமீபத்திய இலக்கிய முயற்சிகளை ஆபாசத்தின் எல்லை என்று பிரபஞ்சன் கடுமையாக தாக்குவது சரியா? 

 நக்கீரன் பத்திரிக்கையில் 
பிரபஞ்சன் அடித்த கூத்தை விட 
எதுவுமே ஆபாசம் கிடையாது.

‘மரப்பசு’ நாவல் குறித்த தன் அபிப்ராயமாக ‘தி.ஜானகிராமனுக்கு ஆயிரம் பெண்களோடு படுக்க ஆசை’ என்று எழுதிய வக்கிரம்,

எஸ்.வி.சேகர் ஏதோ ஒரு பத்திரிக்கையாசிரியரான போது, அலட்சியப்படுத்த வேண்டிய உப்பு பெறாத இந்த விஷயத்தை பெரிதாக எடுத்துக்கொண்டு, மணிக்கொடி ஆசிரியர் பி.எஸ்.ராமையாவையும் ‘எழுத்து’ சி.சு.செல்லப்பாவையும், குமுதம் எஸ்.ஏ.பி. அண்ணாமலை அப்புச்சியோடு தோளோடு தோளாக நிறுத்தி வைத்து ‘இவர்களெல்லாம் பத்திரிக்கையாசிரியர்களாக இருந்த செந்தமிழ் நாட்டில் இன்று எஸ்.வி. சேகர் பத்திரிக்கையாசிரியரா? என்று புலம்பிய அபத்தம்,

’1989 இல் தி.மு.க.வின் சட்டசபைத் தேர்தல் வெற்றி, ஐயர்களின் தோல்வி’ என்று கொக்கரித்த எகத்தாளம்.

ஆக இந்த பேட்டை ரௌடித்தனம் தான் 
இன்று கி.ரா.வின் மேலேயும் 
நிர்த்தாட்சண்யமாக பாய்ந்திருக்கிறது.

கடைசியாக ‘Ego’ பற்றி 
பிரபஞ்சன் வருத்தப்படுவது வேடிக்கை தான்.
 ஏனென்றால் இந்த கற்றோர் காய்ச்சல்,
 வித்துவச் செருக்கெல்லாம் 
புலவர் பிரபஞ்சனிடமும் இருக்கிறது.

………………………………..

https://m.facebook.com/story.php?story_fbid=3061918680688244&id=100006104256328

https://m.facebook.com/story.php?story_fbid=3148275495385895&id=100006104256328

http://rprajanayahem.blogspot.in/2008/06/blog-post_09.html

http://rprajanayahem.blogspot.in/2017/01/blog-post_19.html

Jun 5, 2022

சாவித்திரியும் அமலாவும்


குமுதத்தில் தன் நிறைவேறாத காதல் பற்றி ரகுவரன் வெளிப்படையாக 'ஒருதலையாக அமலாவை மிகவும் காதலித்தேன்.இதை நாகார்ஜுனனிடமே சொல்லியிருக்கிறேன்.' என்று சொல்லியிருந்தார்.
https://www.youtube.com/watch?v=LVK5FMmzCto

அந்த 80களில்அமலா நிறைய பேரை பாதித்திருக்கிறார். பலருக்கும் crush இருந்திருக்கிறது. தலைமுறை தாண்டி இன்றும் இளைஞர்கள் பலரும் அமலாவின் வசீகரம் பற்றி பேசுகிறார்கள்.

நானும் அமலா புகைப்படங்கள் பல சேர்த்து வைத்திருந்திருக்
கிறேன். ஏதாவது ஒரு ஸ்டுடியோவில் அமலா புகைப்படம் பார்த்தால் அன்று உடனே வாங்கிவிடுவேன்.
நடிகைகள் மீது ரசிகர்களுக்கு இருக்கும் பிரமிப்பு,கிறக்கம் எல்லாம் கிடையாது.

அந்தக்கால நடிகைகளில் சாவித்திரியைப் பார்த்தால் ஏதோ இதமான கிளர்ச்சி மனதில் ஏற்படும். பெண்மையின் வசீகரம்.
 நான் பொது இடங்களுக்கு செல்லும்போது சாவித்திரி போல 
ஒரு பெண் தென்படுகிறாரா என்று                  ஒரு பார்வை பார்த்திருக்கிறேன்.

அது போல அமலா.
அபூர்வ தேவதை!

எங்கள் காலத்தில் அமலாவை
 பாலிவுட் கொண்டு சென்று விடுமோ என்ற கவலையில் “அமலாவை இந்தி திரையுலகிற்கு செல்லாமல் தடுப்பது எப்படி?” என்று தமிழ் வாணன் ஏதாவது புத்தகம் எழுதி வைத்து விட்டு போயிருக்கிறாரா என்று கூட விசாரணை செய்ததுண்டு.

என்.டி. ராமாராவ், ஜமுனாவுடன் புகைப்படத்தில் இடது ஓரத்தில் சிரிக்கும் சாவித்திரி இப்போது பார்க்க அமலா போல.
அமலாவிடம் நிச்சயமாக சாவித்திரி சாயல் இருக்கிறது.

.........................

https://m.facebook.com/story.php?story_fbid=2744241435789305&id=100006104256328

Jun 4, 2022

My scarf has many tales


Believe it or not

வீடு மாற்ற 
இன்று
ஒழுங்கு வைக்கும் போது
சிக்கிய Scarf தோளில்.

இது நாற்பத்தி ஐந்து வருடங்களாக என்னிடம் இருக்கிறது.
My scarf has  many tales.

கீட்ஸ் பற்றி
ஸாலிஞ்சர் ரொம்ப குட்டியாக எழுதிய சின்ன கவிதை
"John Keats,
John Keats,
John,
Please put your scarf on."

'ஜான் எங்கே ?
ஜான்!'
என்று அக்ரஹாரத்தில் கழுதை இயக்குனரான
 ஜான் ஆபிரஹாமை விளித்து
 பாலச்சந்திரன் சுள்ளிக்காடு
மலையாளத்தில் பிரபலமான
 ஒரு கவிதை எழுதியதற்கு 
கீட்ஸ் பற்றி சாலிஞ்சர் கவிதை முன்னோடி. நிச்சயமாக சுள்ளிக்காடு படித்திருக்கலாம்.



https://m.facebook.com/story.php?story_fbid=3337229939823782&id=100006104256328

சென்னையில் ஆறாவது வீடு. இல்லாதவனுக்கு பல வீடு..



'நெஞ்சில் ஓர் ஆலயம்' கல்யாண்குமாருடன் 


ஸ்ரீதர் எத்தனை படங்கள் தந்தவர்.
இந்த 'நெஞ்சில் ஓர் ஆலயம்' Classic.

முதல் முறையாக இந்த புகைப்படம் இப்போது தான் இங்கே பகிரப்படுகிறது. கண்ணில் தற்செயலாக தட்டுப்பட்டது.
Reminiscence

இன்னும் இரண்டு நாட்களில்
 வீடு மாற்றம். ஒழுங்கு வைக்கும் போது பழைய ஆல்பத்தில் காணக்கிடைத்த புகைப்படம்.

சென்னை வந்து ஆறு வருடங்கள் ஒன்பது மாதங்கள் ஆகிறது.
இப்போது மாறுவது ஆறாவது வீடு.
(13.09.2015  - 03.06.2022)

இப்போது போவது
அப்பார்ட்மெண்ட்
 பதினான்காவது மாடியில் ஃப்ளாட். எப்போதும் போல வாடகை வீடு தான்.
இல்லாதவனுக்கு பல வீடு..

" ஏற்றிய தீபம் நிலை பெற வேண்டும்.
எங்கிருந்தாலும் வாழ்க,
உன் இதயம் அமைதியில் வாழ்க"

https://m.facebook.com/story.php?story_fbid=3337249053155204&id=100006104256328

https://m.facebook.com/story.php?story_fbid=3262234770656633&id=100006104256328