Jul 31, 2019

One man in his time plays many parts


ஒன்னுல மந்திரி, இன்னொன்னுல ஏட்டையா
And one man in his time plays many parts
- Shakespeare in 'As you like it'





A poor player struts and frets his hour upon the stage, and then is heard no more:
- Shakespeare in 'Macbeth'





Jul 30, 2019

மணிக்கொடியில் ஒரு முஸ்லிம் எழுத்தாளர் ‘ம ஆலி சாஹிப்’


வரப்பு குறும்பூ பற்றி தி.ஜா அடிக்கடி கவனப்படுத்துவார்.

சிறுத்து,மலர்ந்து கிடக்கிற நீல, வெள்ளை மற்றும் மஞ்சள் என்று விதவிதமான பூக்கள். அவை என்ன நேர்த்தியாக, ஒரு ஒழுங்குடன் அமைந்திருக்கின்றன. அவற்றை யாரும் கவனிப்பதில்லை. பெண்கள் தலைக்கு வைத்துக்கொள்வதில்லை. பூஜையிலும் அவை இடம் பெறுவதில்லை. யாரையும் நின்று பார்க்க வைக்காத, யார் கண்ணையுமே உறுத்தாத இந்த குறும்பூக்களின் சௌந்தர்யம்.
ம ஆலி சாஹிப் என்ற எழுத்தாளர் பற்றி கேள்விப்பட்டிருக்க முடியுமா? ஒரு முஸ்லிம். புதுமைப்பித்தன், ந.பிச்சமூர்த்தி, கு.ப.ரா, மௌனி, சி.சு.செல்லப்பா, ந,சிதம்பர சுப்ரமண்யம், கி.ராமச்சந்திரன், சிட்டியெல்லாம் எழுதிய மணிக்கொடியில் கூட ம ஆலி சாஹிப் ஒரு கதை எழுதியுள்ளாராம். அசோகமித்திரன் இவரைப்பற்றி குறிப்பிட்டுள்ளார்.

அசோகமித்திரன் தன் எட்டு, ஒன்பது வயதில் ஆனந்த விகடனில் இவர் கதையொன்றை படித்திருக்கிறார். அவரை மிகவும் சங்கடப்படுத்திய கதை.
குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி நோயாளியாக படுக்கையில் இருக்கும் தன் தகப்பனை ஒரு சிறுமி பொறுப்பாக கவனித்துக்கொள்கிறாள். வேளாவேளைக்கு உணவு கொடுத்து அன்போடு பாதுகாக்கிறாள். அந்த வீட்டில் அந்த குடிகார நோயாளி தகப்பனும் அந்த மகளும் தான் இருக்கிறார்கள். அவன் முற்றிய வியாதியால் படுக்கையிலேயே இறந்து விடுகிறான். பாவம் பிணம் எனத் தெரியாமல் அந்த குழந்தை அதற்கு உணவளிக்க முயற்சி செய்கிறாள். தகப்பனும் சிறுமியும் முஸ்லிம். கதையை எழுதியவர் கூட முஸ்லிம். ம ஆலி சாஹிப் தான் அவர்.
ஜெமினி ஸ்டுடியோவில் பின்னால் இவர் கதை இலாகாவில் வேலை பார்த்திருக்கிறார். அங்கே, வேலைக்கு சேர்ந்த முதல் நாளிலேயே அசோகமித்திரன் இந்த ம ஆலி சாஹிப்பை சந்திக்க வாய்த்திருக்கிறது.
மணிக்கொடி கி.ராமச்சந்திரனும் கூட ஜெமினி கதை இலாகாவில் வேலை பார்த்தவர் தானே.

அசோகமித்திரன் கதைகளில் வருகிற கோஹினூர் கட்டடம் மறக்கவே முடியாதது. இவருடைய மேஜையிருந்த அதே கட்டடத்தில் தான் அந்த முஸ்லிம் எழுத்தாளருக்கும் மேஜை ஒதுக்கப்பட்டிருந்திருக்கிறது.

ஒவ்வொரு வாரமும் நான்கைந்து நாட்கள் ஜெமினி வாசன் தன் கதை இலாகாவினருடன் கலந்து உரையாடுவார்.ஆஸ்பெஸ்டாஸ் கூரை கொண்ட ஒரு அறை அது. கதை இலாகாவில் இருந்த ம ஆலி சாஹிப் உட்பட எல்லோரும் உரத்து பேசுவார்கள். வெற்றிலை பாக்கு, புகையிலை போடுவார்கள். டிபன் சாப்பிடுவார்கள். நண்பர்கள் விவாதம் நடத்துவது போல தோற்றம் தர இருப்பார்கள். ஜெமினி ஸ்டுடியோ சிக்கன நடவடிக்கையின் போது கதை இலாகா கலைந்து போகும்படியாயிருந்திருக்கிறது.
மாதச்சம்பளம் இனி இல்லாமல்  என்ன செய்ய முடியும், எங்க போவேன், என்ன செய்வேன் என்ற கவலையோடு     ம ஆலி சாஹிப் தன் மேஜையை காலி செய்யும்போது அசோகமித்திரன் அங்கே இருந்திருக்கிறார்.
வெளியே போன பின்னாலும் அந்த மணிக்கொடி எழுத்தாளர் எந்த வேலையிலும் பொருந்தக்கூடியவராய் இல்லையே என்ற துயரம் அசோகமித்திரனை ஆக்கிரமித்திருக்கிறது.
பொதுவாகவே ஜெமினி ஸ்டுடியோவில் சில வருடங்கள் யார் வேலை பார்த்தாலும் வெளி இடங்களில் வேலை பார்க்க தகுதியில்லாத அளவுக்கு அந்த நிறுவனம் அவர்களை மாற்றி விடும் என்று ஒரு சூழல் இருந்திருக்கிறது.

Jul 29, 2019

புணர்ச்சி இயல்பு விகாரம்


புணர்ச்சி இயல்பு விகாரம்
இந்த வார்த்தை தொனி ஏதோ Sexual Perversion என்பது போல அர்த்தம் தருகிறதோ.
ஒரு ஃபாரின் ஜோக். இன்டியனைஸ், டமிலைஸ் செய்திருக்கிறேன்.
வாழ்க்கை வெறுத்துப்போன ஒரு கிழவி ஒரு பாலத்தின் மேல் தற்கொலை முயற்சியில் இருந்திருக்கிறாள். குதித்து தற்கொலை செய்யப்போகிறாள். பாலம் நல்ல உயரம். கீழே தண்ணீர் சுத்தமாக கிடையாது. குதித்தால் நொடியில் மரணம் நிச்சயம். உடனே,உடனே பிணமாகிப்போவாள்.
ஒரு சின்ன பயல் “ இருங்க, பொறுங்க” என்று கத்திக்கொண்டே அவளை நோக்கி ஓடி வந்திருக்கிறான்.
கிழவி அவனைப் பார்த்தவுடன் நினைத்திருக்கிறாள்
‘யாரோ மனிதாபிமானி போல இருக்கு. ச்சே..சாக விடமாட்டான் போல இருக்கே’
அந்த அயோக்கிய பையன் பக்கத்தில் வந்தவுடன் மூச்சிறைக்க, அந்த கிழவியிடம் “நீங்கதான் தற்கொலை பண்ணிக்கப்போறீங்களே, உங்கள நான் ஒரு டொக்கு போட்டுக்கறேனே” என்று கேட்டிருக்கிறான்.
Kinky sex rogue.
சின்னப்பெண்ணான போதிலே,குமரியாய் இருந்த காலத்திலேயே, ஸ்திரிலோலர்களை கண்ட போதெல்லாம் கூந்தலை விரிச்சிப்போட்டு, ஒத்த முலைய பிச்சி வீசி, சிலம்ப உடச்சி “அத்தனையும் மாணிக்கப்பரல்டா” என்று ஆவேசமானவளாக்கும் அந்த கிழவி.

அந்த பழக்கம் சுடுகாடு வரைக்கும் இருக்குமல்லவா?
அயோக்கிய பயல் டொக்கு என்றவுடன் கிழவி பதறிப்போய் கூப்பாடு போட்டிருக்கிறாள்.
“ ச்சீ போடா பொறுக்கி, எனக்கு கற்பு தான்டா பொக்கிஷம்”
அயோக்கிய பையன் தன் முயற்சியில் சற்றும் மனம் தளராமல் “சரி, பரவால்ல. நான் கீழ பாலத்துக்கு அடியில போய் வெயிட் பண்றேன்.”
ஒன்னாம் நம்பர் வெங்கம்பய.

தமிழ் இலக்கணத்தில் ’புணர்ச்சி இயல்பு விகாரம்’ வருகிறது.
தமிழ் இலக்கணம் என்றாலே எனக்கு படிக்கிற காலத்தில் பயம்.
கணக்கு, தமிழ் இலக்கணம் இரண்டுமே எனக்கு பிடிக்காத பாடங்கள்.
கணக்கு பள்ளி வாழ்க்கையோடு முடிந்து விட்டது.

மதுரை அமெரிக்கன் கல்லூரியில் ஆங்கில இலக்கியம் படித்த காலத்திலும் முதல் இரண்டு ஆண்டுகள் தமிழ் இலக்கணம் விரட்டிக்கொண்டு வந்தது. விளக்கெண்ணெய் குடிப்பது போல இலக்கணம் படிக்க வேண்டியிருந்தது. வெறுப்பில்லை. பயம். என்ன படித்தேன் என்பதெல்லாம் எதுவுமே நினைவில் இல்லை.

படிக்கிற காலத்துக்குப்பின்னால தமிழ் இலக்கணம் பற்றி நினைத்து பார்க்க நேரம், அவசியம் இருந்ததே இல்லை. ரெண்டு மூணு நாளா 'புணர்ச்சி இயல்பு விகாரம்' போல வேறு சில ஞாபகம் வருகிறது. 'கூறு கெட்ட'ன்னு திட்டுறத போல' ஈறு கெட்ட எதிர் மறை வினையெச்சம்', அப்புறம் தேன்மாவு, புளிச்ச மாவு கணக்கா 'தேமா' , 'புளிமா' ..

சாலமன் பாப்பையா வகுப்பு போரடிக்கும். வகுப்பிற்கு வெளியே அவரிடம் பேசுவது ரொம்ப ஜாலி.தமிழ் டிபார்ட்மெண்ட்டின் ஜென்ட்டில் மேன் பாப்பையா.






Jul 27, 2019

கூலிக்கு மாரடிப்பு


வாஹினி ஸ்டுடியோவில் கேண்டீன் முன் பகுதியில் ஒரு ஷூட்டிங். நல்ல ஏழைகளாக பண்டரிபாய், ஜெயப்ரதா இருவரும் தரையில் அமர்ந்து கொண்டு நடிக்கிற காட்சி. தெலுங்குப் படம். 

நிறை கர்ப்பிணி தோற்றத்தில் இருந்த ஜெயப்ரதாவுக்கு பண்டரிபாய் அம்மாவாய் நடித்தார் போல.
கர்ப்பிணிப்பெண்ணாக பிரசவ வேதனையில் துடிக்கிறார். பண்டரிபாய் தெலுங்கில் நெஞ்சே பதைபதைக்கும் விதமாக ‘யாராவது எங்களுக்கு உதவி செய்ய ஆள் இல்லையா? கர்ப்பிணி பெண்ணை ஆஸ்பத்திரியில் சேர்க்க வேண்டுமே. துடிக்கிறாளே. நான் என்ன செய்வேன்.’ – தேம்பி தேம்பி அழுகிறார்.

டைரக்டர் ‘கட்’ சொன்ன அந்த நொடியில் பண்டரிபாய் குலுங்கி குலுங்கி சிரிக்கிறார். அடக்க முடியாமல் சத்தமிட்டு சிரிக்கிறார்.

ஷாட்டுக்கு முன் ஏதோ சிரிக்கும்படியான ஏதோ விஷயம். வார்த்தைகளாலோ அல்லது காட்சியாகவோ பார்த்திருக்கிறார்.
நடிக்க வேண்டி வந்தவுடன் காரியத்தில் கண். நடித்து முடிந்தவுடன் ஷூட்டுக்கு முந்தைய அந்த விஷயத்தை நினைத்து வாய் விட்டு சிரிக்கிறார்.
அவர் நடிக்கும்போது அழுததை பார்த்தால் ’கட்’ சொன்னவுடன் சிரிக்க முடியும் என்பதே நினைத்தே பார்க்க முடியாத அசாத்தியம்.

சாவகாசமாக பண்டரிபாய் எழுந்து பக்கத்தில் ஒரு செட்டில் நடந்து கொண்டிருந்த ராஜேஷ் கன்னா இந்திப்படத்தின் ஷாட் ப்ரேக்கில் இருந்த ஹேமாமாலினியிடம் போய் கலகலவென்று உற்சாகமாக பேச ஆரம்பித்து விட்டார்.

அந்த சமயத்தில் “அண்ணி என் தெய்வம்” என்று ஒரு படம் சொந்தமாக தயாரித்துக்கொண்டிருந்தார். அந்த படம் வெளிவந்ததா இல்லை பாதியில் நின்று விட்டதா என்று தெரியவில்லை. பண்டரிபாய்க்கு பெருநஷ்டமாகத்தான் இருந்திருக்கும்.
அதில் நடித்த எம்.எஸ்.வசந்தி தன்னுடன் நடித்த நடிகரை திருமணம் செய்து கொண்டார்.
அந்த நடிகர் பின்னால் திருமுருகன் என்ற பெயரை அலெக்ஸ் பாண்டியனாக மாற்றிக்கொண்டு ”ஆண்களை நம்பாதே” என்று ’மண்வாசனை’பாண்டியனை கதாநாயகனாக வைத்து இயக்கினார்.
”காதல் காயங்களே” பாட்டில் கதைப்படி காதல் தோல்வியிலிருக்கும் பாண்டியனை விட சோகமாக (வம்படி சோகம்) நடித்திருந்தார்.
ஸ்டெல்லா புரூஸ் கதை தான் ’ஆண்களை நம்பாதே’ என்று ஞாபகம்.
 ”ஒரு முறை பூக்கும்” நாவல் என ராஜா ஹசனும் மணிஜியும் கூறுகிறார்கள்.

ஸ்டெல்லா புரூஸ் நான் படித்ததேயில்லை.

Jul 26, 2019

வேண்டியதை வாரிக்கொள்ள வாருங்க


சூலமங்கலம் சகோதரிகள் பக்தி பாடல்கள் பிரபலம்.
கந்தசஷ்டி கவசம் பாடியவர்கள்.
பெரியப்பா எங்கள் குடும்ப நிகழ்வுகளில் கலகலப்பாக கிண்டல் செய்து அடிக்கும் Wit. ”டேய் தொர, சூலமங்கலம் சகோதரிகள் யார் தெரியுமாடா? உங்க பெரியம்மாவும் அம்மாவும் தான்டா.”
குழந்தைகள் எல்லோரும் பெரியம்மாவையும் அம்மாவையும் பார்த்து பீறிட்டு சிரிப்போம். பெரியம்மாவும் அம்மாவும் வெட்கப்பட்டுக்கொண்டு இந்த ஜோக்கிற்கு சிரிப்பார்கள். சூலமங்கலத்திற்கும் எங்களுக்கும் ஸ்னானப்ராப்தி கூட கிடையாது.
அப்பா,பெரியப்பா இருவரும் சுங்க இலாகா அதிகாரிகள்.

’எதையும் தாங்கும் இதயம்’ எஸ்.எஸ்.ஆர் விஜயகுமாரி நடிப்பில். சூலமங்கலம் ராஜலக்ஷ்மி பாடல்களில் மாஸ்டர் பீஸ் “ உனக்கும் எனக்கும் வெகு தூரமில்லை,நான் நினைக்காத நேரம் இல்லை” கவிஞர் எம்.கே ஆத்மநாதன் எழுதி டி.ஆர் பாப்பா இசை.

சௌந்தர்ராஜனுடம் இணைந்து சூலமங்கலம் ராஜலக்ஷ்மி பாடிய கே.வி.மஹாதேவன் இசையில் கண்ணதாசனின் “ஒரே ஒரு ஊரிலே ஒரே ஒரு ராஜா, ஒரே ஒரு ராஜாவுக்கு ஒரே ஒரு ராணி”
”திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் திருத்தணி மலை மேலே எதிரொலிக்கும்” என்று சுசிலாவுடன் ராஜலக்ஷ்மி பாடியது பூவை செங்குட்டுவன் எழுதியது. குன்னக்குடி வைத்தியநாதன் இசை.

எப்பேர்ப்பட்டவர்களையும் தூக்கி குப்பையில் போட்டு விடும் குருவி மண்டையன் ராஜலக்ஷ்மி குரலின் தனித்துவம் பற்றி “ இந்த பொம்பள குண்டியால பாடுது” என்பான். மதுரை வக்கிரம்.

ஒரு வேடிக்கை. மகிழம்பூவில் (1969) எல்.ஆர். ஈஸ்வரிக்கு பாடக்கொடுத்திருக்க வேண்டிய (வித்வான் வே.லட்சுமணன் எழுதிய) பாடலொன்றை சூலமங்கம் ராஜலக்ஷ்மி பாடியிருந்தார்.
D.B.ராமச்சந்திரன் இசை.
“வேண்டியதை வாரிக்கொள்ள வாருங்க
அன்பு வெள்ளம் பாயும் ஓடையில நீந்துங்க
எட்ட எட்ட போனா என்ன சுகம் கிடைக்கும்
கிட்ட வந்து தொடுங்க
மொத்தமாக கிடைக்கும்

பள்ளம் பார்த்து பாயும் வெள்ளம் போலவே
பாவை என்னை பார்த்து இன்பம் காணுங்க
கண்ண வச்சு பாத்து புண்ணியப்படாது
என்ன வச்சு பாத்தா கசங்கி விடாது.”

மைனராக நடித்த ஆர்.எஸ்.மனோகருக்காக Vamp roleல் குமாரி பத்மினி குலுக்கி, மினுக்கி, முலை பிதுக்கி, ஆடி பாடி நடித்த பாடல்.

 சூலமங்கலம் ராஜலக்ஷ்மி இப்படி பாடியதன் அபத்தம் அன்று கவனத்திற்கு வந்திருக்குமா என்று தெரியவில்லை.


http://rprajanayahem.blogspot.com/2019/07/blog-post_12.html




Jul 25, 2019

காட்சி துகள் – பழைய சில



- டி.பி.முத்துலட்சுமி “ மாப்பிள்ளை பாடிக்கிட்டே அழுகுறாரு.”

வி.கே.ராமசாமி “பாடிக்கிட்டே அழுவுறவன இப்பத்தான் பாக்குறேன்.”


- மனோரமாவின் ’கெக்ககெக்கக்கே’ கொணட்டல் சிரிப்புக்கு
கேமராவை பார்த்து நாகேஷ் ரீயாக்‌ஷன்
“பரவாயில்ல பொம்பள மாதிரியே சிரிக்கிறா”


- சூரக்கோட்டை ஜமின்தார் என்ற நாகேஷின் புளுகு வெளுத்துப்போன பின் ரமாப்ரபா சங்கு சக்கர சாமி திங்கு திங்குன்னு ஆடுன கதையா கொந்தளித்து பின் சலித்துப்போய் வெறுப்புடன் நாகேஷை பார்த்து 
“முகத்த பாரு, ராஜ களை” என்று முகம் சுளிக்கும் போது நாகேஷ் தன் முகத்தை கேமராவுக்கு  திருப்பி காட்டுவார். 


- ஐயா தெரியாதய்யா ராமாராவ் ஒரு தேனிக்கூட்டின் மீது கல் போடுவார். ஏ.கருணாநிதியை தேனிக்கள் கொட்டும்.
ஏ. கருணாநிதி தவித்துப்போய் புலம்புவது “ இது தேனி இல்ல. தேளுக்கு ரெக்க மொளச்ச மாதிரி இருக்கு”


- ‘காதல் என்பது எதுவரை’ பாட்டில் ஜெமினி ரெண்டு யானைகள் மீது மாறி மாறி அனாயசமாக தாவி உட்கார்வார். சாம்பார்னு பேர் வாங்கின ஜெமினி கணேசன்.


- ’உடம்பு இப்ப எப்படி இருக்கு’ என்ற கேள்விக்கு எம்.ஆர்.ராதா உடன் கையால் தன் தொடையில் தட்டி சொறிந்து கொண்டே
அடித்தொண்டை கட்டை குரலில் அழுத்தமாக
“ தேறிக்கொண்டே வருகிறது”









Jul 24, 2019

டொனால்ட் ட்ரம்ப்போட சாயல் தான் போரிஸ் ஜான்சன்.

ட்ரம்ப்போட சாயல் தான் போரிஸ் ஜான்சன்.

வெள்ளையம்மா, வந்துதுடிம்மா ஈரானுக்கு ஆபத்து.

'இரண்டு கைகள் நான்கானால்'- ட்வின்ஸ் 
ட்ரம்ப், ஜான்சன் கோரஸ் சவால் கூப்பாடு.

ஊட்டி மஞ்சூர் ஷூட்டிங்


ஊட்டி மஞ்சூரில் ஒரு பைலட் மூவி ஷூட்டிங்.

ஜூலை 21, 22 தேதிகளில் ஹெட் கான்ஸ்டபிள் ரோலில் ராஜநாயஹம்.
அருள் டி. சங்கர் 'எமன்' படத்தில் பிரமாதமாக வில்லனாக நடித்தவர். இவர் பிரதான பாத்திரத்தில் நடித்த பைலட் மூவியில் தான் நான் ஹெட் கான்ஸ்டபிள். 




பின்னால் தெரிகிற விஞ்ச் ரஜினியால் பிரபலமான 'முள்ளும் மலரும்' விஞ்ச்.
கெத்தை என்ற இந்த ஊர் நிலச்சரிவால் அழிந்து போய் விட்டதாம். இரண்டு பேர் மட்டுமே உயிர் பிழைத்திருக்கிறார்கள்.



இன்ஸ்பெக்டருடனும் சப் இன்ஸ்பெக்டருடனும்  ராஜநாயஹம்

இன்ஸ்பெக்டராக நடித்த அஜீத்தை நீங்கள் ’கோ’ படத்தில் போலீஸ் கமிஷனராய்  பார்த்திருப்பீர்கள்.

மலையாள படங்களிலும் நடித்திருப்பவர்.
சப்-இன்ஸ்பெக்டராய் நடித்த அருள் பிரகாஷ் தான் ரஜினிக்கு டூப் ஆக ’எந்திரன் 1’, ’எந்திரன் 2’ படங்களில் நடித்தவர். கூத்துப்பட்டறை முழு நேர நடிகர்.








Jul 16, 2019

படியாது


என்னுடைய பழைய சகா ஒருவரின் மாமனார் பற்றி இவருக்கு ரொம்ப ரொம்ப ஆவலாதி. உறவினர்களிடமெல்லாம், சினேகிதர்களிடமும் கூட எப்பவும் திட்டிக்கொண்டே இருந்து கொண்டிருந்தார்.

மாமனார் பக்கா பிசினஸ் மேன்.  பணம் சம்பாதிக்கிற புத்திசாலித்தனம் நிறைந்தவர். அதனால Shylock வகையறா தான்.

மருமகன் நல்ல பணக்காரர். அப்பா சொத்தின் செல்வாக்கில் சொகுசாக வாழ்ந்து கொண்டிருந்தார்.
மாமனாரிடம் கொஞ்சங்கூட பண்போ, நாகரீகமோ, நடவடிக்கைகளில் மேன்மை, இயல்பில் சிறப்பு எதையுமே இவரால் காண முடியாமல் போயிற்று.
சொந்த ஊருக்கு போய் இருந்த போது மாமனாரின் அப்பாவை சந்தித்திருக்கிறார்.
மாமனாரின் அப்பா தொன்னூறு வயதெல்லாம் தாண்டியவர். நிறைய பிள்ளைகள். நிறை வாழ்வு வாழ்ந்து விட்ட முதியவர்.
சகாவின் மாமனார் தான் அவருக்கு மூத்தமகன்.
முதியவரிடம் அவர் மகன் பற்றி தன் மனக்குறைகளை மொத்தமாக கொட்டியிருக்கிறார். குமுறி தீர்த்திருக்கிறார்.

எல்லாவற்றையும் காது கொடுத்து கேட்டு விட்டு பெரியவர் கேட்டிருக்கிறார்.
”நீங்க கல்விக்காக எத்தன வருஷம் செலவழிச்சிருக்கீங்க?”
சகா காலத்தில் எல்.கே.ஜி., யு.கே.ஜி கிடையாது. ஒன்னாப்புல இருந்து தான் கல்வி.
கணக்கு போட்டு பார்த்து விட்டு சொல்லியிருக்கிறார்
“ பதினஞ்சு வருஷமுங்க.”
முதியவர் “ என் மகன் கல்விக்காக மூணு வருஷம் தாங்க செலவழிச்சான். அவன் அவ்வளவு தாங்க”

Jul 13, 2019

இரங்கல் எப்போதும் அபத்தம்


கீட்ஸ் மறைந்த போது ஷெல்லி அதிர்ந்து போனான். அடுத்த வருடமே அவனும் மறையப்போகிறான் என்பது பெருந்துயரம். அதை அறியாமலே கீட்ஸ் பற்றி கதறி ஒரு இரங்கல் கவிதை எழுதினான்.
ஒவ்வொரு பேராவிலும் புலம்பினான்.
A lengthy elegy.

I weep for Adonais – he is dead!
Oh weep for Adonais…
Most musical of mournars, weep anew…
Thy youngest, dearest one has perished..
He will awake no more, oh, never more..
Ah, woe is me..
Grief returns with the revolving year…

கீட்ஸ் இருபத்தாறு வயதை கடக்கு முன் எலும்புருக்கி நோயால்.

ஷெல்லி முப்பது வயது நிறையுமுன் கடலில் மூழ்கி.
உடல் எரியூட்டப்பட்ட போது
பைரன் அங்கே இருந்தார்.


ஆத்மாநாமுக்கு இளைய வயதில் கிணற்றுக்குள் ஏற்பட்ட துர்மரணம் எல்லோரையும் அதிர வைத்த ஒன்று. 

Both Shelley and Athmanam were born to be drowned.


’என்னை அழித்தாலும் என் எழுத்தை அழிக்கமுடியாது’ என்பது ஆத்மாநாமின் சூளுரை. உயிரோடு இன்று இருந்திருந்தால் அந்த கவிஞனின் பேனா எத்தனையோ ஓவியங்களான கவிதைகளை எழுதியிருக்கும். முப்பத்து மூன்று வயது அற்பாயுள்.
’எதிர்த்து வரும் அலைகளுடன் நான் பேசுவதில்லை.
எனக்கு தெரியும் அதன் குணம்.
பேசாமல்
ஒதுங்கி வழி விட்டு ஒதுங்கி விடுவேன்
நமக்கு ஏன் ஆபத்து என்று
மற்றொரு நாள்
அமைதியாய் இருக்கையில்
பலங்கொண்ட மட்டும்
வீசியெறிவேன் கற்பாறைகளை
அவை மிதந்து செல்லும்
எனக்கு படகாக’
– ஆத்மாநாம் நம்பிக்கை
ந.முத்துசாமியின் நண்பர் சி.மணி எழுதிய ஆத்மாநாம் இரங்கல் கவிதை கீழே.

அடக்கம்
ஆத்மாநாம்,
நீ தான் முக்கியம் எனக்கு,
உன் கவிதைகளை விட. இவை
எப்போதும் இருக்கும்; ஆனால்
உனக்கு பதிலியாகாது. இவற்றோடு
பழகுவதும் வேறுவகை.
உன் கவிதைகளை விட
உன் வாழ்க்கைப் போராட்டங்கள்
உக்கிரமானவை.
கவிதையில் மூழ்கிய மாதிரி
கிணற்றில் குதித்து மூழ்கினாய்.
ஒரு வித்தியாசம்,
இவை இரண்டும்
வெவ்வேறு அடக்கம்.
..............

Jul 12, 2019

பெரியப்பாவும் தண்டவாளமும்


”உங்க பையன் தண்டவாளத்தில தல வச்சி படுத்திருக்கான்.”
என்ற பதற்றமான வார்த்தைகளுக்கு பதிலாக
வி.கே.ராமசாமி ஏதோ ஒரு படத்தில் கொஞ்சம் கூட அலட்டிக்கொள்ளாமல் சர்வசாதாரணாக பதில் சொல்வார். ”தலவாணி ஒன்னு வச்சுக்கிட்டு படுக்கச் சொல்லு.”


1940களில்
செய்துங்க நல்லூர் வீட்டுக்கு அருகிலேயே ரயில்வே ஸ்டேஷன். வீட்டின் எதிர் புறம் கொஞ்ச நடை தூரத்தில், எரனூறு அடியில் திருச்செந்தூர் போகிற ரெயில் பாதை.
என் பெரியப்பா பள்ளியில் படித்துக்கொண்டிருந்த சமயம். துறுதுறுப்பாக இருப்பார். கடைசி வரை அந்த துறுதுறுப்பும் சுறுசுறுப்பும் அவரிடம் இருந்தது. (அப்பா, பெரியப்பா இருவரும் பாளையங்கோட்டை செயின்ட் சேவியர்ஸில் படித்தவர்கள். இருவரும் பின்னால் கஸ்டம்ஸ் அண்ட் சென்ட்ரல் எக்சைஸ் அதிகாரிகள்.)
டவுசர் போட்ட பையனாய் பெரியப்பா எங்க ஆச்சியை ரொம்ப பயமுறுத்துவாராம். கோபம் வந்து விட்டால் உடனே ஓடிப்போய் ரயில் தண்டவாளத்தில் தலை வைத்து விடுவார். ஆச்சி என்ன வேலையில் இருந்தாலும் அப்படியே போட்டு விட்டு பதறிக்கொண்டு ஓடிப்போய் “ஏலே மாசி, சொன்னா கேளுலே, வேணாம்லே, எந்திலே, ரயில் வர்ற நேரம்ல. ஓம் மேல ஏறிரும். மாசி எந்தி.. எந்தில..அய்யோ..ஏம்ல இப்படி எசளி பண்ணுத.. என் கண்ணுல..எந்தில..” என்று மன்றாடி, கெஞ்சி கூத்தாடி தண்டவாளத்தில் இருந்து சிரமப்பட்டு தூக்கி சமாதானப்படுத்தி இழுத்துக்கொண்டு ”இனிமெ இப்படி செய்யாதலே” என்று புலம்பிக்கொண்டே வீட்டுக்கு அழைத்து வருவாராம்.
ஒவ்வொரு தடவையும் பெரியப்பா இப்படி கோவிக்கும் போதெல்லாம் வேதாளம் முருங்க மரம் ஏறிய கதயா, தலைய இரு பக்கமும் ஆட்டிக்கொண்டே உதட்ட பிதுக்கிக்கொண்டு ஓடிப்போய் தண்டவாளத்தில் படுக்க, ஆச்சி பதறிக்கொண்டு நான் என்ன பண்ணுவேன், எனக்கு என்னன்னோ வருதே, இவன பெத்த வயித்துல பெரண்டய அள்ளி வச்சி கட்ட..” என்று பின்னாலேயே போய் சமாதானப்படுத்தி..என் அப்பாவும் அத்தையும் கூட அம்மை கூட ஓடி, ’அண்ணே, எந்திண்ணே’ என்று அழுவார்களாம்.
பெரிய பெரியப்பா செல்லத்துரை (இவர் பெயர் தான் எனக்கு. தொர) மட்டும் முகத்தில் சலனமில்லாமல் திண்ணையில் நின்று கொண்டிருப்பார். (ரெண்டு பெரியப்பாவுக்கும் ஒரு வயது தான் வித்தியாசம். ஒரே வகுப்பில் தான் பள்ளியிறுதி வரை படித்தார்கள். பெரிய பெரியப்பா பின்னாளில் மாநில அரசு அதிகாரியாக இருக்கும்போது திருமணமாகும் முன்னரே விக்கிரம சிங்கபுரத்தில் இருபத்தியொரு வயசில் இறந்து போனார். சித்தப்பா ஒருவர் எட்டு வயசில் பாலகனாக இறந்து போனார்.)
தாத்தா ராஜநாயஹம் பிள்ளை   ஒரு நாள் பெரியப்பா மீண்டும் தண்டவாளத்த பாத்து ஓடினப்ப, ஆச்சியிடம் ” ஏட்டி, நீ தான் அவன செல்லங்கொடுத்து இப்படி கெட்டு குட்டிச்சுவராக்கற.. அவன் தண்டவாளத்தில கெடக்கட்டும். கொற மாயம் பண்ணுதான்.சொன்னா கேளு.. போகாத.. அவன் ரயில் வர்றத பாத்ததும் தானா எந்திரிச்சி வருவாம் பாரு” என்று சமையல் கட்டிலேயே நிற்கச்சொல்லி விட்டார். ஆச்சி பரிதவிப்பு நீங்கவில்லை. தாத்தா எங்க ஆச்சி கைய கெட்டியா பிடிச்சிக்கிட்டாராம். ரயில் கூவுற சத்தம் கேட்டுருக்கு. “கைய விடும்ய்யா..என் பிள்ள..என் பிள்ள” 
ஆச்சி தவித்திருக்கிறாள்.
தண்டவாளத்தில் படுத்திருந்த பெரியப்பா தலய தூக்கி, தூக்கி வீட்ட பாத்து ’அம்மய இன்னும் காணுமே’ என்று தவித்திருக்கிறார். செய்துங்க நல்லூரில் ரயில் வந்து விட்ட சத்தம் கேட்டிருக்கு. இன்னும் அஞ்சே நிமிசத்தில வண்டிய எடுத்துடுவான். பெரியப்பா தண்டவாளத்தில் தலய வக்க, தலய தூக்கி பாக்க, தலய வக்க, தலய தூக்கி பாக்க…

ரெயில் திரும்ப கூவிடுச்சி..ஸ்டேஷனில் இருந்து ரெண்டே நிமிஷத்தில் இந்த பகுதிக்கு வந்துடும்.

பெரியப்பா தலய தூக்கி கிளம்பி விட்ட ரயில பாத்தார். தண்டவாளத்தில இருந்து எழுந்தார். தலய ஆட்டிக்கொண்டே, கோபம் குறையாமல் உதட்ட பிதுக்கிக்கொண்டே தான் வீடு நோக்கி வந்திருக்கிறார்.
நடுவழியில வரும்போதெ திருச்செந்தூர் ரயில் இவரை கிண்டல் செய்வது போல இன்னொரு முறை கூவியதாம்.
பெரியப்பா ரயிலை திரும்பிப்பார்த்தும் உதட்டை பிதுக்கி ’போ’ என்று தலையை ஆட்டி விட்டு வீட்டுக்கு வந்து சேர்ந்திருக்கிறார்.

'தாங்குவார் கோடி இருந்தா தளர்ச்சி கேடு ரொம்ப உண்டு.'