Jul 31, 2012

சப்தஸ்வரங்களும் நாரதரும்

மீள் பதிவு  21-09-2009ல் எழுதப்பட்டது
 


நாரதர் ஒரு நாள் தியாகப் பிரும்மம் முன் தோன்றினார்.'ஸ்வரார்ணவம் ' என்ற சங்கீத இலக்கண நூலை தியாகராஜருக்கு அளித்து விட்டு பின் மறைந்தே போனார். கர்நாடக சங்கீதத்துக்கு நூற்றுக்கணக்கான கீர்த்தனைகள் 'ஸ்வரார்ணவம்' கிடைக்கப் பெற்ற தியாகராஜா மூலம் அதன் பின் கொடையாக கிடைத்தன. இது ஐதீகம்.



சங்கீதம் ஐந்தாவது வேதம்.கந்தர்வ வேதம்.சாஸ்திரீய சங்கீதம் நாரதருக்கே கூட அத்தனை எளிதாக கைகூடி விடவில்லை. Not a cakewalk for Him even. Classical Music is not an easy accomplishment. ரொம்ப அவமானப் பட்டிருக்கிறார்.
         


மிகவும் பெருமையாக வீணை வாசித்துக்கொண்டிருந்தார் நாரதர். பனி சூழ்ந்து வீணையை மீண்டும் எடுக்கவே முடியவில்லை. ஹனுமான் பாடிய ராமகீர்த்தனை தான் பனியை உருகவைத்து வீணையை திரும்பவும் நாரதர் கையில் எடுக்க வகை செய்தது.

 
 சங்கீத கலாநிதி நாரதருக்கு சங்கீத ஞானம் அவ்வளவாக இல்லாத ஹனுமான் பாடிய கீர்த்தனை தான் உதவியது என்பது ருசிக்கவில்லை.நாரதருக்கு கொஞ்சம் வருத்தம் தான்.


ஒருமுறை சிவன்,பார்வதியோடு சங்கீத சாம்ராட் நாரதர் ஒரு சின்ன ' வாக் ' போகும்போது எதிரே சப்தஸ்வரங்களும் கை வேறு, கால் வேறு, தலை வேறு பிய்ந்த நிலையில் பார்க்க நேர்ந்து விட்டது.
ஏழு ஸ்வரங்களும் தேம்பியழுதவாறு பார்வதியிடம் முறையிட்டன " எங்கள் கதியை பார்த்தீர்களா? நாரதன் எங்களை அக்கறையின்றி அலட்சியமாக கையாண்டு விட்டதால் இப்படி சின்னா பின்னப் பட்டுபோய் விட்டோம். தேவி! நீங்கள் ஒரு வார்த்தை சொல்லி அருளினால் நாங்கள் முழு உருவம் பெறுவோம்."
 பார்வதி நாரதரை முறைத்து " என்ன நாரூ! இதெல்லாம்.. ?" என்று கடிந்து கண்டித்து விட்டு சப்தஸ்வரங்களையும் ஆசீர்வாதித்து ஒவ்வொரு ஸ்வரமும் முழு உருவமாக மீண்டும் வழி வகை செய்தாள் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்.

    (தாராசுரம்" கோயில் தரும் சப்தஸ்வரங்கள் !) 

தும்புருவுடன் சங்கீத சவாலுக்குப்போனபோது கூட போட்டி என்பதால் நாரதர் சங்கீதத்தை பதற்றத்துடன் கையாள நேர்ந்து விட்டது. அப்போதும் சப்தஸ்வரங்கள் படுகாயப் பட்டு சிதைந்து குற்றுயிரும் குலையுயிரும் ஆகிப் போனதை கண் கூடாக நாரதரே காண வேண்டிய துர்பாக்கியம் ஏற்பட்டுப் போனது.
 

அவமானத்தால் குன்றிப் போய்விட்ட நாரதரை மகாவிஷ்ணு தான் " கொஞ்சம் பொறுப்பா பாடனும்ப்பா நாரூ! சரி சரி விடு.இனியாவது சாஸ்த்ரீய சங்கீதத்தை ஒழுங்கா நல்லா பயிற்சி செய்து ஆலாபனையிலிருந்து கவனமா செய்யப் பாருப்பா. "என்று தேற்றினாராம்.

பிறகு நாரதர் மனிதனாகவே பிறக்கிறார்! எங்கே? பிருந்தாவனத்தில்.
 

கிருஷ்ணாவதார யுகம்.கிருஷ்ணனின் கைடன்சில் முறைப்படி முழுமையாக லாங் ட்ரைனிங் மூலம் தான் சாஸ்த்ரீய சங்கீதத்தில் விற்பன்னர் ஆகி அங்கீகாரம் பெற முடிகிறது.

.. ..... ...........................


ஒரு பிரபல வித்துவான் கச்சேரி நடக்கையில்,திஜாவின் நண்பரும் குபராவின் சிஷ்யர்களில் ஒருவரும் ஆகிய சுவாமிநாத ஆத்ரேயன் அவர்கள் பாபநாசம் சிவன் அருகில் அமர்ந்திருந்தாராம்.

சிவன் சொன்னாராம் "கீர்த்தனைகளுக்கும் ஜாதகம் உண்டு "சுவாமிநாத ஆத்ரேயனுக்கு முதலில் புரியவில்லை. பாபநாசம் சிவன் என்ன சொல்லவருகிறார்? சிவன் தொடர்ந்தாராம் " இந்த கீர்த்தனை எந்த வேளையில் இயற்றப் பட்டதோ பாவம். இந்த வித்துவான் வாயில் என்ன பாடு படுகிறது பாருங்கள்! "

உண்மை தான். ஹம்சத்வனியை இப்போது ஹிம்ச த்வனியில் பாடுகிறவர்கள் இருக்கத்தானே செய்கிறார்கள்.



சுப்புடு சொல்வார் : ரொம்ப சபாக்களில் காரியதரிசிகள் அரங்குக்கு வெளியே தான் நிற்பார்கள் . "உள்ளே நடக்கும் அக்கிரமங்களுக்கு நான் பொறுப்பு இல்லை " என்பது போல.


http://rprajanayahem.blogspot.in/2009/11/blog-post.html

http://rprajanayahem.blogspot.in/2009/11/blog-post_2432.html


http://rprajanayahem.blogspot.com/2008/12/blog-post_02.html


http://rprajanayahem.blogspot.in/2008/11/blog-post_7994.html


http://rprajanayahem.blogspot.com/2008/11/blog-post_5186.html


http://rprajanayahem.blogspot.in/2008/08/blog-post_06.html


2 comments:

  1. பார்வதி நாரதரை முறைத்து " என்ன நாரூ! இதெல்லாம்.. ?" என்று கடிந்து கண்டித்து விட்டு

    Even Naradhar will laugh at this !!! class:)

    Rgds

    ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.