Share

Dec 18, 2012

M.D.ராமநாதன்



M.D.ராமநாதன் பாடும்போது......


ஓவியத்தில் ஒரு கோபுரத்தின் உயரத்தைக் காட்ட வேண்டுமானால் அந்த கோபுரத்தின் பக்கதில் ஒரு தென்னை மரத்தை வரைந்து விட்டால் போதும். எம்.டி.ராமநாதன் பாவத்தோடு பாடும்போது இப்படி இசை சித்திரமாக விரியும்.
 
youtubeல் Why this கொலவெறி தாண்டி Gangnam style செம ஹிட் ஆகி இருக்கிற வேளையில் M.D.ராமநாதன் பற்றி எழுதுகிற பிடிவாதம்..

டைகர் வரதாச்சாரியின் சீடன் M.D.ராமநாதன். டைகர் மாறுகண் கொண்டவர். ராமநாதன் எந்த அளவுக்கு குருவை உள்வாங்கி செரித்துக்கொண்டார் என்றால்,அவருடைய மாறுகண் கூட இவருக்கும் வந்து விட்டது.The best example of a true devotee to Guru! The relationship was so noble that the student inherited even the squint in the eyes.
தேவச பாகவதரின் மகனாக பாலக்காடு மஞ்சப்பராவில் பிறந்து பிசிக்ஸில் பி.எஸ்.சி பட்டம் பாலக்காடு விக்டோரியா கல்லூரியில். கலாசேத்ராவில் இசையில் பட்டம். முதல் பேட்சில் இவர் ஒரே மாணவர் தான்.
டைகர் வரதாச்சாரியின் இசை ஞானத்தை  முழுவதுமாக உறிஞ்சிக்குடிப்பதைக் கண்டு (கிட்டத்தட்ட கொள்ளை)செல்லமாக ராமநாதனை “திருடன்!” என்றே சொல்வார். A Fitting recognition of merit!
இவருடைய வாய்ப்பாட்டு ஸ்லோ டெம்போ.
Speed is a hindrance and never a help.
Be very relaxed, and much will happen.
-         - Osho
சஹானா, யதுகுல காம்போதி, ஸ்ரீ, கேதாரம் இதெல்லாம் இவர் பாடக்கேட்க பிரபல வாய்ப்பாட்டுக்காரர்கள் தவம் இருப்பார்கள்.
இவர் ஒரு ம்யூசிக் தெரபிஸ்ட் என்று சொல்லப்படுவதுண்டு. ரத்தக்கொதிப்பு குணமாகி விட்டதாக இவர் பாடல்களைக் கேட்ட ஒரு ரசிகர் சொன்னதுண்டு.
மயிலை கபாலீசுவரர் மீது ‘பரமகிருபாநிதே’ என்றும் ‘சம்போ மஹாதேவா’ என்றும் கீர்த்தனைகள் இயற்றியிருக்கிறார்.
பாகேஸ்வரி ராக ’சாகர சயனா’ இவர் இயற்றியது.
இந்திய அரசாங்கம் எம்.டி.ராமநாதனுக்கு பத்மஸ்ரீ பட்டம்1974ல் வழங்கி கௌரவித்தது. சங்கீத நாடக அகாடமி விருது, இந்தியன் ஃபைன் ஆர்ட்ஸ் சொசைட்டியின் சங்கீத கலாசிகாமணி விருது வாங்கியவர்.
 முத்துசாமி தீட்சிதரின் நாட்டை ராக ’மஹா கணபதிம்’
ஸ்ரீ வரத தாசாவின் அடானா ராக ’ஹரியும் ஹரனும்’ இவர் பாடியதை கேட்பது ரசானுபவம்.
தியாகய்யரின் ஹிந்தோளம் ‘சாமஜ வரகமனா’ ஓராயிரம் தடவை ஒரு நூறு பேர் பாடக்கேட்டிருக்கிறேன்.ஆனால் எம்.டி ராமநாதன் பாடுவது மட்டும் ஒரு புது அனுபவம் தான்.
தியாகய்யரின்  சஹானா ’கிரிபை நெல’ இவர் பாடி மட்டுமே கேட்கவேண்டும். ஆத்மீக அனுபவம்.
காபி தில்லானா தரும் ஆசுவாசம்.
1984ல் இவர் மறைந்த போது வயது 61.
...........

M.D.ராமநாதன் பற்றிய கவிதை
ராமநாதன் பாடும்போது
(இசை மேதை M.D.ராமநாதனுக்குச்
சமர்ப்பணம்)
ராமநாதன் பாடும்போது
ஏதோ பனிமூடிய பூமியில்
புதைந்து போன
புராதன நகரத்தெருக்களில் திரியும் ரசிகன்
இப்போதும் வற்றாது தவழ்ந்தோடும் மனித
சப்தத்தின்
தெளிந்த நீர்ச்சுனையைக் கண்டடைகிறான்.

ராமநாதன் பாடும்போது
இறந்து கொண்டிருக்கும் பூமியிலிருந்து
பறந்துயரும்
கடைசி விண்வெளிவீரன்
வேறொரு நட்சத்திரத்தில் இலை விரித்து
முளைக்கும்
உயிரின் தளிரைக் கண்டடைகிறான்

-        - சச்சிதானந்தன் எழுதிய கவிதை
  மலையாளத்திலிருந்து மொழிபெயர்க்கப்பட்டு 1991ல் மீட்சி 35வது இதழில்       வெளியானது

.......

http://rprajanayahem.blogspot.in/2012/07/blog-post_31.html

http://rprajanayahem.blogspot.in/2009/09/blog-post_29.html

3 comments:

  1. MD ராமனாதனின் கச்சேரியைக் கேட்கும் போது மேடைக் க்சசேரி பந்ததி என்பது உருவானதற்கு முன்பு கர்னாடக சங்கீதத்தை எல்லோரும் இப்படித்தான் பாடியிருப்பார்களோ என்று தோன்றும்.அவரது சாரீரம் அற்புதமான ஒன்று.மைக்கே தேவையில்லை என்ற அளவுக்கு கணீரென்ற குரல். ராகத்தை அனுபவித்துப் பாடுவார். அதன் ஒவ்வொரு அம்சத்தையும் கொஞ்சங் கொஞ்சமாக நமக்கு அளிப்பார்.கிரிபை நெல என்ற கீர்த்தனை தியாகய்யர் உருக்கமான நிலையில் இயற்றியது. ராமனாதனிடம் அதே உருக்கம் இருக்கும். ராமனாதனின் இசையில் மனதைப் பறி கொடுத்தவர்கள் அவரை விட்டு என்றுமே விலகியது கிடையாது.அவர் மாதிரி இன்னொரு வித்வான் தோன்ற நெடுஙகாலம் ஆகலாம்.

    ReplyDelete
  2. ராஜநாயஹம்: MD ராமநாதனின் இசையை அனுபவிப்பது தேர்ந்த இசை ரசிகர்களுக்கும் ஆரம்பத்தில் கொஞ்சம் சிரமமாக இருக்கும். எனக்கும் இருந்தது. என்ன இது......சவுக்கத்திலும் சவுக்கம்... என்று ஒதுங்கியே இருந்தேன். தில்லியில் என் நண்பனொருவன் கட்டாயப்படுத்தி, இந்த மேதையின் கச்சேரியை கேட்கவைத்தான். அன்றிலிருந்து இன்றுவரை நான் ஒரு ‘வரத தாச பைத்தியம்’ மேலே ஒரு கிருதி ‘ஹரியும் ஹரனும்’ வரத தாசன் என்று போட்டிருக்கிறாய். அது இவர் தானென்பதும் தெரிந்திருக்கும். இவர் இயற்றிய எல்லா கிருதிகளும் வரத தாச என்ற முத்திரையைப்பெற்றிருக்கும். வரதாச்சாரியின் தாசன் என்பதையே அது குறிக்கும்.

    ஒரு கச்சேரியில் பவமான சுதடு என்று மங்களம் பாட ஆரம்பித்தார். எல்லோரும் எழுந்து போக ஆரம்பித்தனர்....... பஸ்ஸைப்பிடிக்கும் அவசரம். கையால் அமரச்செய்தார். அதன்பிறகு கச்சேரிமுடிய அரைமணி நேரமாயிற்று. அந்த அரைமணி நேரத்துக்கு என் சொத்தையே எழுதி வைக்கலாம்! எத்தனை ராகமாலிகைகள்!
    நான் தில்லி கர்நாடக சங்கீத சபா செயலரானபின் நட்பு நெருக்கமாயிற்று.. மூன்று முறை கச்சேரிக்கு வந்தபோது என் வீட்டிலேயே தங்கினார். அவர் இரண்டுமணி நேரம் விஸ்தாரமாக ஸ்ரீ ராகம் பாடி, எந்தரோ மஹானுபாவுலு பாடியதை கேட்காதவர்களுக்கு மோட்சம் கிட்டுமா.....தெரியவில்லை. பக்கவாத்யம் லால்குடி, உமையாள்புரம். ஆமாம் அதை உணர்ந்தால் தான் சாயுஜ்ய பதவி!

    ReplyDelete
  3. எந்தரோ மஹானுபாவுலு

    ReplyDelete