Share

Jun 12, 2012

விமலாதித்த மாமல்லன்

22-02-2002 ல் திருச்சி தமிழ் நாடு ஒட்டலில் சுந்தர ராமசாமியை சந்தித்து பேசிக்கொண்டிருந்த போது(தளைய சிங்கம் மரணம் பற்றி) சுரா சொன்னார்.‘வாங்க, கஸ்டம்ஸ் ஆபீஸ் போவோம். நரசிம்மன் என்று ஒரு நண்பரை பாக்கனும்’.

என் தகப்பனார், பெரிய தகப்பனார் இருவருமே Retired Suprintendent of customs.திருச்சியில் தான் ஓய்வு பெற்றவர்கள். அதோடு என் உடன் பிறந்த சகோதரனும்  அப்போதும் இப்போதும் கஸ்டம்ஸ் சூப்ரிண்ட் தான்.

நானும் சுராவும் ஆட்டோவில் ஏறினோம். கஸ்டம்ஸ்  ஆபீஸ் வந்தவுடன் நான் ஆட்டோவுக்கு பணம் கொடுத்தேன். சுரா ‘நான் தான் கொடுக்கவேண்டும்’ என்று பதறினார்.பிடிவாதமாக நானே பணம் கொடுத்தேன். சென்ட்ரல் எக்சைஸ் பிரிவில் இன்ஸ்பெக்டர் நரசிம்மன் இருப்பதாக விசாரித்து தெரிந்து கொண்டு,ஆபீஸ் மாடியேறிய போது சுரா புதிரை அவிழ்த்தார்.
 “ நரசிம்மன் யார் தெரியுமோ?விமலாதித்த மாமல்லன் தான்.”
மாமல்லன் கதைகள் ‘இலை,வயிறு, அறியாத முகங்கள்,போர்வை,வலி,முடவன் வளர்த்த வெள்ளைப் புறாக்கள்,சிறுமி கொண்டுவந்த மலர்,முதல் குடிமகன் விஜயம்,பலாமரமும் ரோடு இஞ்ஜினும் எல்லாம் படியேறும்போதே முழுமையாக ஒரு ப்ளாஷ் பேக். தர்மு சிவராமுவுடன் மாமல்லனின் கைகலப்பு,
மணிக்கொடி சிட்டி என்னிடம் ‘சென்னை இலக்கியக் கூட்டங்களில் தடாலடி மாமல்லன்’ பற்றி நான் பிரமிக்கும்படி சொன்னவை...

மாடியேறி அவர் செக்சனில் ஒருவரிடம் சுரா” இன்ஸ்பெக்டர் நரசிம்மனை பார்க்கவேண்டும்’’ என்றார். “அவர் இல்லை’’அசுவாரசியமாக பதில் வந்தது.
அவரை பார்க்கவேண்டுமே” சரியான பதில் இல்லை.
 கேபினில் ஒரு சூப்ரண்ட் இருந்தார்.வெளியே சில இன்ஸ்பெக்டர்கள். நான் உடனே சுராவை ஒரு நாற்காலியில் உட்கார வைத்தேன். சூப்ரண்ட்டிடம் போனேன். நான் இன்னார் மகன் என்று சொன்னேன்.சூழ்நிலை உடனே கலகலப்பாகி விட்டது. என் அப்பா, பெரியப்பா, பற்றி ... என் சகோதரன் அப்போது ராமேஸ்வரம் சூப்ரிண்ட் ஆக இருப்பது பற்றி... கஸ்டம்ஸ் இன்ஸ்பெக்டர்களும் என்னை சூழ்ந்து கொண்டார்கள்.

நான் சொன்னேன்.” சார் நரசிம்மன் ஒரு முக்கிய எழுத்தாளர்.’’
”தெரியும்,தெரியும்.விமலாதித்த மாமல்லன்”
ஒரு இன்ஸ்பெக்டர்  சொன்னார்” பாரதி” பற்றிய டாகுமெண்டரி படத்தில் நரசிம்மன் பாரதியாக நடித்திருக்கிறாரே!’’

அம்ஷன்குமார் எடுத்த பாரதி படம்.

இந்த மத்திய அரசு அதிகாரிகளுக்கு சுரா பற்றி எளிமையாக விளக்கத்துவங்கினேன்.” சார், அந்தகாலத்தில் மகாகவி பாரதி போல இந்த காலத்தில் இவர். பெயர் சுந்தர ராமசாமி.”
 இப்போது அதிகாரிகள் சுந்தர ராமசாமியின் கையைப் பற்றி குலுக்கினார்கள். “ சுந்தர ராமசாமி பற்றி நிறைய நரசிம்மன் சொல்லியிருக்கிறார் சார்.அடிக்கடி உங்களைப் பற்றி பேசுவார் சார்” சுந்தர ராமசாமியிடம் மாறி மாறி  சந்தோசமாக சொன்னார்கள். உடன் மாமல்லனுக்கு தகவல் தொலைபேசி மூலம் சொன்னார்கள். சுரா  தமிழ் நாடு ஓட்டலுக்கு வரச்சொன்னார்.

(விமலாதித்த மாமல்லனைப் பார்க்க கஸ்டம்ஸ் ஆபீஸுக்கு சுராவுடன் சென்ற போது நடந்த இந்த சுவாரசிய நிகழ்வைப் பற்றி கோவையில் 2007ல் நடந்த சுரா-75 புதுமைப்பித்தன் -100 பாரதி - 125 விழாவில் நான் மேடையில் பேசும்போது குறிப்பிட்டேன்!)

மீண்டும் ஆட்டோவில் கிளம்பி ஓட்டலுக்கு திரும்பினோம்.
அங்கு மாமல்லன் வந்தார். நான் அந்த நேரம் டிவி பேட்டியொன்றில் அசோகமித்திரன் சொன்னதை அவர் மாதிரியே அவர் பேசுவது போலவே சொன்னேன்.
’உங்களுக்கு ப்பின் வந்த, பிடித்த எழுத்தாளர்கள் பற்றி சொல்ல முடியுமா?’
அசோகமித்திரன்: நிறைய பேர்..நிறைய பேர்...நன்னாவே எழுதறா..வண்ண நிலவன்! ஆ.. விமலாதித்த மாமல்லன்னு ஒருத்தர்..  பிரமாதமா எழுதறார்!”

சுந்தர ராம சாமி உடனே “ ராஜநாயஹம்! இன்னொரு தடவை அசோகமித்திரன் மாதிரி பேசுங்களேன்.”
இன்னொரு முறை பேசிக்காட்டினேன்.

தொடர்ந்த உரையாடலின் போது மாமல்லன் ’அக்ரஹாரத்தில் கழுதை’ பிரஞ்சு படம்‘ பல்தசார்’தழுவல் என்றார்.
( ராபர்ட் ப்ரஸ்ஸன் படம் பல்தசார் )
கொஞ்ச நேரத்த்ல் அங்கு சுந்தர ராமசாமியைப் பார்க்க இமையம் மனைவியுடன் வந்தார். இன்னும் கொஞ்ச நேரத்தில் மனுஷ்யபுத்திரன், சல்மா இருவரும் வந்தார்கள்.

அப்புறம் பின்னால் ஒரு நாள் மாமல்லன் வீடு- கஸ்டம்ஸ் க்வார்ட்டர்ஸ்- மாடியில்-கருமண்டபத்தில் போய்ப் பார்த்தேன்.
பிரமிளுடன் நடந்த சண்டை பற்றி கேட்டேன். மாமல்லன்” எதுக்கு சார் அது இப்ப! அவனே போய்ட்டான்..”

நான் வீட்டில் இருந்து கிளம்பி என் சைக்கிள் எடுக்கும்போது மாமல்லன் மாடியிலிருந்து  “என்ன இது?” என்று நான் வாங்கிப் போய் இருந்த ‘கொஞ்சமான’ பலகாரப்பையை காட்டி கேட்டார். எதுக்கு இதெல்லாம் என்று அர்த்தம். நான்‘ இருக்கட்டும்’. சைக்கிளை அழுத்தினேன்
அவருடைய மூன்றாவது தொகுப்பு “ உயிர்த்தெழுதல்” தொகுப்பு அவர் அப்போது தந்த பின் தான் படித்தேன்.  எனக்கு மிகவும் பிடித்திருந்தது.(காலச்சுவடில் வந்த விமர்சனத்தில் எனக்கு கொஞ்சமும் உடன்பாடில்லை.)
 தமிழ் இலக்கிய கழகத்தில் அந்த நூல் பற்றி
ஒரு கருத்தரங்கம் நடத்த ஏற்பாடு செய்தேன். மாமல்லன் வரவேண்டும் என்று பலரும் விரும்பினார்கள். ஆனால் மாமல்லன் வரவில்லை.போனில் பேசிய போது “வேண்டாம் சார்” என்றார்.அந்த நிகழ்ச்சி எப்படி நடந்தது என்று மீண்டும் போன் செய்து சொன்னேன்.
4 comments:

  1. Nallarukku Sir.I met him last week sunday in KEni Meeting.

    ReplyDelete
  2. மாமல்லனை பற்றி மரியாதை கூடுகிறது.அவரின் எழுத்துக் கலையை படித்து கொண்டிருக்கிறேன்

    ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.